ஒருமையும் முழுமையும்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

உங்கள் படைப்புக்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். சென்ற 2017ல் நான் கல்லூரிப்படிப்பை முடித்தபோது உங்கள் தளம் அறிமுகமாகியது. அன்றில் இருந்து இன்றுவரை உங்கள் கட்டுரைகள், கதைகளை வாசிக்காத ஒருநால் கூட இல்லை. ஆனால் சென்ற ஆகஸ்ட் வரை வெண்முரசு வாசிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. வெண்முரசை தொடவேண்டும் என்று நினைப்பேன். சரி போகட்டும் என்றுவிட்டேன். எனக்கு மெச்சூரிட்டி வரவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் சென்ற ஆகஸ்டில் சட்டென்று ஏதோ தோன்றி வாசிக்க ஆரம்பித்து இப்போது முடிக்கப்போகிறேன். முடித்துவிட்டு எழுதலாமென நினைத்தேன். இப்போது எழுதுவது இதுவரை வாசித்தபோது வந்த ஒரு பெரிய தவிப்பையும் தனிமையையும் நீக்கிக்கொள்வதற்காகத்தான்.

வெண்முரசை நான் வாசிக்க ஆரம்பித்தபோது அது ஓர் உற்சாகமான கதையாக இருந்தது. முதலில் எனக்கு ஆச்சரியமளித்தது தொன்மங்களுக்கும் கதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான். இந்த வேறுபாட்டை யோசித்ததே இல்லையே என்று நினைத்துக்கொண்டேன். தொன்மங்கள் என்றால் சிவன் – தாட்சயணி கதை. கதை என்றால் அம்பை- பீஷ்மர் கதை. ஆனால் அந்தக்கதைகளெல்லாம் ஒன்றை ஒன்று சரியாக சந்திப்பதையும் ஒரு தொன்மம் இன்னொரு கதைக்கு வேறொரு அர்த்தம் அளிப்பதும் மிக ஆச்சரியமாக இருந்தது.வெண்முரசில் இருந்து நான் பெற்றுக்கொண்டது என்றால் இதுதான். கதைகளை தொன்மங்கள் எப்படி தாங்கி நிற்கின்றன என்பது. கதைகள் தொன்மங்களாகின்றன. தொன்மங்கள் மறுபடி கதைகளாகின்றன. யயாதி கதையாக இருக்கிறார். ஆனால் மகாபாரத கதாபாத்திரங்களுக்கே அவர் தொன்மமும் ஆக இருக்கிறார்

வெண்முரசு முழுக்க எல்லா தொன்மக்கதைகளுக்கும் அதற்குமேல் ஒரு கதையர்த்தம் அளிக்கப்பட்டுள்ளது. பாற்கடல் கடைவதுகூட அப்படித்தான் விளக்கப்பட்டுள்ளது. அல்லது இப்படிச் சொல்லலாம். தொன்மம் என்றால் புராணம். கதையாக வருவதெல்லாம் இதிகாசம். இதிகாசம் என்பது புராணம் அல்ல. அதில் வரலாறு உள்ளது இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் செயல்படுகின்றன. ஒன்றுக்கு இன்னொன்று கூடுதல் அர்த்தம் அளிக்கிறது. வெண்முரசு முழுக்க எப்படியும் நூறு தொன்மங்களாவது கதைகளுடன் பிணைக்கப்பட்டிருக்கும். தொன்மங்களுக்கு ஒரு கற்பனைவீச்சு உள்ளது. கதைகளில் நேரடியான வாழ்க்கை உள்ளது. வெண்முரசு இரண்டையும் பின்னிக்கொண்டே செல்லும் வடிவம் கொண்டது. எழுத எழுத பின்னிக்கொண்டே போவதற்கான புதிய புதிய வழிகளை நீங்கள் கண்டைந்துகொண்டே இருக்கிறீர்கள். அதுதான் இந்த நாவல்வரிசையிலுள்ள சாதனை

நான் வாசிக்க வாசிக்க அடையும் வியப்பு என்னவென்றால் இதிலுள்ள யூனிட்டி தான். நான் இலக்கியத்தில் இதையெல்லாம் கிளாஸிக் கேரக்டரிஸ்ட்ஸ் என்று வாசித்திருக்கிறேனே ஒழிய இப்படி எல்லாம் உணர்ந்ததே இல்லை. நாவல் தொடங்கியதுமே முதற்கனலிலேயே எரிபுகுந்த தாட்சாயணியின் கதை வந்துவிடுகிறது. அவமானப்படுத்தப்பட்ட பெண்மை. அதன் தீயை காண்கிறோம். அந்தப்புள்ளி கடைசிவரை தொடர்கிறது. அம்பை, அம்பிகை, அம்பாலிகை, சத்யவதி, மாத்ரி, குந்தி, காந்தாரி என்று தீக்குள் சென்றுகொண்டே இருக்கிறார்கள். தீயின் மகளாக திரௌபதி வருகிறாள். தீயின் வெப்பம் கொண்டவளாக தபதி வருகிறாள். இப்படி எல்லாமே அற்புதமாக ஒன்றையொன்று நெருக்கமாக காட்டுகின்றன. இப்படி ஒருகதையில் இன்னொரு கதையை கண்டடைந்துகொண்டே இருப்பதைத்தான் வெண்முரசு வாசிப்பின் மிகச்சிறந்த அனுபவம் என்று சொல்கிறேன்

ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி முடியும் என்று முன்பே கண்டுவிட்டு ஒட்டுமொத்தமாகத்தான் ஆரம்பம் முதலே உருவாக்கி வருகிறீர்கள். ஈகோ என்பதன் அடையாளமாக வரும் குந்தி சிறுமியாகவே அப்படித்தான் இருக்கிறாள். அப்படியே வளர்ந்து முழுக்க ஈகோ அழிந்து காட்டுக்குச் செல்கிறாள். அதேபோல ஆரம்பம் முதலே பெருந்தன்மையான அன்னையாகவே காந்தாரி வருகிறாள். எல்லா கதாபாத்திரங்களுக்கும் இருக்கும் அற்புதமான யூனிட்டியும், அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாக தெளிவாக அமைக்கப்பட்டிருப்பதும் எண்ணி எண்ணி வியப்படையச்செய்கின்றன

இப்போதைக்கு என்னுடைய வியப்பை மட்டும்தான் பதிவுசெய்திருக்கிறேன். இன்னும் எழுதவேண்டுமென்றால் நிறைய யோசிக்கவேண்டும். நிறையவே தொகுத்துக்கொள்ள வேண்டும்.

என்.ஆர்.கதிர்வேல்

முந்தைய கட்டுரையட்சன் [சிறுகதை]
அடுத்த கட்டுரைகொதி, வலம் இடம்- கடிதங்கள் 3