பிறழ்வெழுத்து
அன்புள்ள ஜெமோ,
வணக்கம்.
பிறழ்வெழுத்து கட்டுரையைத் தங்கள் தளத்தில் வாசித்தேன். அக்கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டதால் நான் பயனடைந்தேன்.
சமூகப்பிறழ்வு மனப்பிறழ்வு என்று பிறழ்வுகளைப் பிரித்து ஒரு தெளிவை உண்டாக்கியதற்காகவும், ‘மெய்யான பிறழ்வின் உண்மைத்தன்மையாலேயே தன் பெறுமதியைப் பிறழ்வெழுத்து அடைகிறது’ என்ற சிந்திக்கவைத்த அழகிய கருத்துக்கும் என் நன்றி!
பிறழ்வெழுத்து விஷயத்தில் சில தகவல்களையும் பார்வைகளையும் இங்கே முன்வைக்கிறேன்.
புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சிறுகதையை அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். அக்கதையை மையமாக வைத்து, இப்படிப்பட்ட கதையை எழுதியவர் ஓர் இலக்கிய மேதையாக இருக்கமுடியுமா என்று 1951-52 காலகட்டத்தில் சிங்கப்பூரின் ‘தமிழ்முரசு’ நாளிதழில் சுமார் 9 மாதகாலம் விவாதம் நடந்துள்ளது. மறுத்தும் ஆதரித்தும் சுமார் 40 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951-52’ (தருமு பப்ளிகேஷன்ஸ், சிங்கப்பூர், 2006) என்கிற தலைப்பில் முனைவர் எம்.எஸ்.ஶ்ரீலக்ஷ்மி அச்சர்ச்சையின் பின்புலம், அன்றைய மலாயா இலக்கியச் சூழல், சர்ச்சையின் நோக்கும் போக்கும் எவ்வாறு இருந்தது, அதன் விளைவாக மலாயா இலக்கியச் சூழல் எவ்வாறு மாற்றம்பெற்றது என விரிவாக ஆராய்ந்து ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.
அந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய வெங்கட் சாமிநாதன், ‘..இந்த விவாதங்களில் பங்குகொண்ட ஒருவராவது புதுமைப்பித்தன் விபரீத ஆசை என்ற ஒரே ஒரு கதை எழுதவில்லை. நூறு கதைகள் முடிவுறாத நாவல் என்றெல்லாம் 700 பக்கங்களுக்கு அவரது புனைகதை உலகம் விரிகிறது என்று சொல்லவில்லை. இது எப்படி நிகழ்ந்துள்ளது, எப்படி நிகழவிடப்பட்டது என்பது தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஓரிடத்தில், ‘ஒரு மேதையின் பரிணாமங்கள் என்னவாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில், ஒரு சமூகத்தில் அப்போது நிலவும் சில தேவைகளுக்கு அப்பரிமாணங்கள் குறுகிவிடுகின்றன அல்லது ஒரு சிறிய விஷயம் பெரிதாக்கப்படுகிறது. மற்றதெல்லாம் இல்லாததாகி விடுகிறது’ என்றும் எழுதியிருக்கிறார்.
பிறழ்வெழுத்து இலக்கியம்தானா என்றும் அதை எழுதுபவர் இலக்கியவாதியா என்றும் என்றும் கடும் விவாதங்களுக்கு உள்ளான காலம் மலையேறி இன்று ‘அதுவும் ஒரு வகை எழுத்துதான். அதை எழுதுபவரும் எழுத்தாளர்தான்’ என்ற ஏற்பு, ஒழுக்கவாதிகள் தவிர்த்த பிற, இலக்கிய வாசகர்களிடம் பரவலாகிவிட்டதாகக் கருதுகிறேன். ஆனால் பிறழ்வெழுத்துக்கான நிராகரணமும் தூஷணமும்தான் குறைந்துள்ளதே தவிர அது மைய நீரோட்ட வகைமையாகத் தமிழிலும் சரி பிற மொழி உலக இலக்கியங்களிலும் சரி இதுவரை கருதப்படவில்லை என்பது என் பார்வை. மேதைகளும் அபூர்வமாகத் தொட்டுப்பார்க்கும் ஒன்றாகவே இன்றும் தொடர்கிறது.
பிறழ்வெழுத்தின் அழகியல் தட்டையான சித்தரிப்பைக் கொண்டிருப்பதாகத் தாங்கள் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். அடிப்படையில் இலக்கியத்திற்கு அதன் அழகியலே ஆதாரம் என்ற உணர்வு வாசகர்களிடையே வலுவாக நீடிப்பதே பிறழ்வெழுத்து அவர்கள் பார்வையில் இலக்கியத்தன்மையை அடையத் தடையாக உள்ளது என்று சொல்லலாம். மேலும் மனப்பிறழ்வைப் பேசுவதற்குப் போதிய பகைப்புலத்தைத் தராமல் ஒரு பிறழ்வெழுத்து அமையும்போது அது இலக்கிய அனுபவத்தைத் தருவதற்கான போதாமையுடன் அமைந்துவிடுவது. அந்தப் போதாமையினாலேயே ஆதார உயிர்விசையான காமம்கூட வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியாகவும், அருவருப்பு உணர்ச்சி வெறும் அதிர்ச்சி மதிப்பாகவும் சுருங்கிவிடுகின்றன. ஆகவே சிறுகதை என்னும் புனைவு வடிவம் பிறழ்வெழுத்துக்குப் பொருத்தமானதல்ல என்ற முடிவை நோக்கி நகர்கிறேன்.
தென்கிழக்காசியாவின் நாவல்கள் குறித்து அண்மையில் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் (ஆங்கிலத்தில்) நடந்த ஓர் உரையாடலில், நாவல் என்பதை வரையறுக்குமாறு பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டபோது, பிலிப்பைன்ஸ் எழுத்தாளர் கிளென் டயஸ், ‘வெளியுலகத்தைச் சாராமல் தனக்குள்ளேயே ஓர் உலகத்தை அமைத்துக்கொள்வது நாவல்’ என்றொரு வரையறை தந்தார். அது மிகவும் கவர்ந்தது. வாசகர் ஒரு நாவலில் அந்த உலகத்திற்குள்ளேயே தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழத்தொடங்குவதால் அங்கு எழுத்தாளர் உள்ளே நுழைந்து ‘அது வேறு உலகம் ஐயா. அதன் தர்மங்களும் வேறு’ என்று கூவவேண்டிய அவசியம் இல்லாமற்போகிறது. ஆனால் சிறுகதைக்குள் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு ‘உலக’ங்களிலிருந்தும் தங்கள் தர்மங்களுடன் வரும் வாசகர்கள் ஒரு மனப்பிறழ்வெழுத்தை வாசிக்கும்போது அது அவர்களுக்கு விலகலையும் நிராகரிப்பையுமே அளிக்கிறது. அந்த நிராகரிப்பு உடனே எழுத்தாளரின் மீதும் பாய்கிறது.
‘விபரீத ஆசை’யை முன்வைத்து தமிழ்முரசில் 1951-52 காலகட்டத்தில் வந்த அத்தனை கட்டுரைகளிலும் ‘கந்தசாமி வாத்தியார்’ என்ற புனைபெயரில் ‘சுப நாராயணன்’ எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்ட ஆய்வு நூலிலும் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. விபரீத ஆசை கதையைத் தொடக்கத்திலிருந்து விளக்கிக்கொண்டு போகும் அவர், நம் அனைவருக்குமே பல உடல்களைத் துய்க்கவிரும்பும் மிருக இச்சை உண்டு என்று ஒப்புக்கொள்ளவைத்து வியாக்கியானம் செய்துகொண்டுபோய், இறுதியில், ‘கதையின் முடிவில் நாம் காண்பன மூன்று பிணங்கள். வாழ்வின் புதிர்மயமான துன்பக் கயிற்றில் மாட்டிக்கொண்டு தற்கொலை புரிந்துகொண்ட மூன்று தெய்வக்குழந்தைகள்!’ என்று முடிக்கும்போது ஆஹா.. புதுமைப்பித்தன் எவ்வளவு பெரிய மேதை என்று அனைவருக்குமே சிந்திக்கத்தோன்றும்.
கந்தசாமி வாத்தியார் மேலும், ‘இந்தக் கதையை ஒரு நாவலாக விவரித்து எழுதினால் எல்லாருக்கும் புரியும்தான்’ என்றும் அக்கட்டுரையில் எழுதியிருக்கிறார். அது அந்தக் கதைக்கு மட்டுமானதல்ல, பிறழ்வெழுத்து என்ற வகைமைக்கே பொருத்தமான கருத்து என்று நினைக்கிறேன். எழுதப்பட்ட சமகாலத்தில் தடை, ஒதுக்கல், எதிர்ப்பு போன்றவற்றுக்கு ஆளாகி பின்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறழ்வெழுத்துகள் – தங்கள் கட்டுரையில் சுட்டப்பட்டிருக்கும் புனைவுகள் உட்பட – அனேகமாக அனைத்துமே நாவல்களாகவோ நாடகங்களாவோ விரிவான வடிவத்தில் அமைந்திருப்பது தற்செயலாக இருக்கமுடியாது.
இங்கே இன்னொரு விஷயம். சில பிறழ்வெழுத்துகளுக்குக் ‘காலப்போக்கில்’ ஏற்பு உண்டாகிவிட்டது என்பதால் அவற்றை எழுதியவர்களைத் தம் காலத்துக்கு முந்தியவர்கள் என்று கருதுவதும் குறைபாடுள்ள கருத்தே. கந்தசாமி வாத்தியார் போல பலரும் தொடர்ந்து வியாக்கியானங்கள் அளிப்பதாலும் அவை விவாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் ஆளாவதாலும்தான் அந்த ஏற்புகள் நிகழ்கின்றன. இலக்கிய விமர்சனத்தின் அரிய பங்கு ‘காலப்போக்கில்’ என்ற சொல்லுக்குள் புதைந்துவிடுவது சோகமே.
விரிவான வடிவமாகவும், போதிய பகைப்புலம் அளிக்கவல்லதாகவும், தனக்குள்ளேயே உலகத்தை அமைத்துக்கொள்வதாகவும் விளங்கும் நாவல்களுக்கும் பிறழ்வெழுத்து என்று வரும்போது மேலதிக வியாக்கியானங்கள் தேவைப்படுகின்றன. மேதைகளுக்கும் பிறழ்வெழுத்து தொடர்ந்து போக்குக்காட்டுகிறது. பிறழ்வெழுத்துக்கான இலக்கிய வடிவம் இன்னும் கண்டடையப்படவில்லையோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. கவிதையில் பாடலில் நாடகத்தில் நிகழ்கலைகளில் ஓவியத்தில் சிற்பத்தில் இப்பிறழ்வுகள் வடிக்கப்பட்டால் உரைநடையைக் காட்டிலும் எளிதாகப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும்படுகிறது என்றொரு பார்வை எனக்குண்டு. அவ்வகையில் உரைநடை வடிவம் எங்கோ உடைபட்டுத் திறந்துகொள்வதற்காக நூற்றாண்டுகளாகக் காத்திருக்கிறது போலும்.
சிறுகதை என்கிற வடிவத்தில் பிறழ்வெழுத்தைக் கொணரும் முயற்சி உலகளவில் நன்றாகவே தோற்றுவிட்டது, பிறழ்வெழுத்து என்று வரும்போது உரைநடை இலக்கியம் இன்னும் போதாமைகள் நிறைந்ததாகவே உள்ளது ஆகிய என் பார்வைகள் குறித்து தங்கள் கருத்துகளை அறியவிரும்புகிறேன்.
நன்றி
சிவானந்தம் நீலகண்டன்
சிங்கப்பூர்
https://sivananthamneela.wordpress.com/
பிகு : பிறழ்வெழுத்து குறித்து யோசிக்கும்போதெல்லாம் தவறாமல் தங்கள் ‘ஒரு கணத்துக்கு அப்பால்’ சிறுகதை என் நினைவில் மீளும். காமம் என்ற உயிர்விசையின் மகத்துவத்தையும் அதை நாம் வெறும் உடலிச்சையாக ஆக்கிவைத்திருப்பதன் வீழ்ச்சியையும் ஒரேநேரத்தில் காட்டிய கதை. தட்டையான அழகியலும் சில இடங்களில் அபாரமான தெறிப்புகளும் என்று ஒரு விருப்பவிலக்க உறவுடன் நினைவிலெழும் கதையாகவே அது நீடிக்கிறது.
சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்
சுந்தர ராமசாமி,பிள்ளைகெடுத்தாள்விளை -கடிதங்கள்
கலையின் உலை
காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்
சுதந்திரமும் கனவும்
என்ன பிரயோசனம்?
நாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்
================================