மீண்டும் மலபார்
அன்பு ஜெயமோகன்,
“மீண்டும் மலபார்” என்ற தலைப்புடன் கூடிய உங்கள் கட்டுரையை வாசித்த கையோடு எழுதுகிறேன். “மலபாருடன் என் உறவு என்பது மிக ஆழமாக வேரூன்றியது” என்ற உங்கள் சொந்த வரலாற்றுக் கூற்றினுள் ஒரு பொது வரலாறு புதையுண்டிருக்கிறது.
அல் பிருனி (973-1045, உஸ்பெக்கிஸ்தான்) என்ற யாத்திரிகர் மலையாளத்தை அல்லது மலையோரத்தை அல்லது மலைவாரத்தை மலபார் என்று எழுதும்பொழுது அவர் ஒரு புலத்தைக் குறிக்கிறார். அவருக்குப் பின்வந்த பயணிகள் மலபாரிகள் (Malabars) என்று மக்களைக் குறித்து எழுதியிருக்கிறார்கள்.
ரொபேட் நொக்ஸ் (1640-1720, இங்கிலாந்து) ஏறத்தாழ 20 ஆண்டுகள் கண்டியில் சிறையிருந்தவர். வன்னியரின் ஆட்சிக்குட்பட்ட அனுராதபுரம் ஊடாக, “அடிக்கடி வானத்தை நோக்கி கைகளை எறிந்து தம்பிரானே! தம்பிரானே!” என்று கும்பிடும் மலபாரிகளின் துணையுடன் தான் தப்பிப் பிழைத்ததாக தனது நினைவுத்திரட்டில் (An Historical Relation of Ceylon, 1681) அவர் எழுதுகிறார்.
அதே விதமாகவே இபின் பத்துத்தா (1304- 1477, மொறக்கோ) ஈழத்தமிழரை மலபாரிகள் என்று குறிப்பிடுகிறார். இலங்கையைச் சேர்ந்த பெளத்த துறவி அநகாரிக தர்மபாலா (1864-1933) கூட ஈழத்தமிழரை மலபாரிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஈழத்தமிழரையும் தென்னிந்திய மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மலபாரிகள் என்று இனங்காட்டுகிறார் மார்க்கோ போலோ (1254-1324, இத்தாலி).
ஈழத்தமிழரின் தோற்றுவாய் பெரிதும் சேரநாடே என்பதில் ஐயமில்லை. சேரநாடு கேரளமாக மாறமுன்னர், தமிழ் மலையாளமாகத் திரியமுன்னர் இவர்கள் புலம்பெயர்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. பொது ஊழி பிறக்க முந்திய காலந்தொட்டு 16ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இலங்கையை அடிப்படுத்தும்வரை சோழ, பாண்டியப் படையெடுப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தன. 18ம் நூற்றாண்டில் இலங்கையைத் தம்வசப்படுத்திய பிரித்தானியர் தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து இலட்சக் கணக்கான மக்களை மலையக பெருந்தோட்டப் புலத்தில் குடியமர்த்தினார்கள்.
அந்த வகையில் எம். ஜி. ஆர். கண்டியில் பிறந்ததும், ஈழத்தமிழரைப் பார்த்து “நீங்கள் மலையாளிகள் போலக் கதைக்கிறீர்களே!” என்று தமிழக நண்பர்கள் வியப்பதும் தற்செயலானவை அல்ல. சாப்பாட்டு வகைகளை வைத்து மக்கள் புலம்பெயரும் மார்க்கத்தை தடம்பிடிக்கலாம் என்று சொல்வார்கள். ஒருதடவை (1987ல்) திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தை அண்டிய ஓர் உணவகத்தில் மீன்குழம்பு, சொதி, சம்பலுடன் இடியப்பம் சாப்பிட்ட மகிழ்ச்சி எனக்கு தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை!
மணி வேலுப்பிள்ளை 2020-01-22
அன்புள்ள ஜெ
மீண்டும் மலபார் கட்டுரையை இந்த தொற்று காலகட்டத்தில் வாசிக்க ஒரு வகையான சோர்வு வந்து அழுத்திக்கொள்கிறது. வேலை வேலை என்று வாழ்ந்துவிட்டோம். எப்போதுவேண்டுமென்றாலும் பயணம் செய்யலாமே என்ற மிதப்பு இருந்தது. இன்றுதான் பயணம் என்றால் எந்த அளவுக்கு அரிய விஷயம் என்பதே நினைவுக்கு வருகிறது. எவ்வளவு இழந்துவிட்டோம் என நினைத்து ஏங்குகிறேன். நான் பல ஆண்டுகள் கேரளத்தில் பயணம் செய்தவன். இன்றைக்கு கேரள மண் கனவுபோல ஆகிவிட்டது. எல்லாம் சீராகும். அப்போது எதையும் நினைக்காமல் பயணம்செய்யவேண்டும்
ஜெயச்சந்திரன் என்