மரபு -கடிதங்கள்

அன்பு ஜெயமோகன்,

“மரபை விரும்புவதும், வெறுப்பதும்” உரையை செவிமடுத்த கையோடு எழுதுகிறேன். மரபு சார்ந்த விவரங்களையும், விழுமியங்களையும் விளக்கியுரைத்த விதமும், தமிழிலும் பிறமொழிகளிலும் தோன்றிய ஆக்கங்களை ஒப்புநோக்கிய விதமும், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வெளியுலகிலும் செல்லுபடியாகும் விழுமியங்களை எடுத்துரைத்த விதமும் வியக்கத்தக்கவை.

அதேவேளை படைப்புகளை வடிகட்டி வாசித்தும், பார்த்தும், கேட்டும் புரிந்துகொண்ட பிறகு உணர்வும் மொழியுமே உள்ளத்துள் எஞ்சுகின்றன. பரிவட்ட நச்சுயிரியை தனிமையில் எதிர்கொள்ள நேர்ந்துள்ள  இக்காலகட்டத்தில் மேன்மேலும் உணர்வும் மொழியுமே உள்ளத்துள் மீந்து மிகுந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக உங்கள் உரையில் இடம்பெறும் எண்ணிறந்த விவரங்கள் அந்த உணர்வுக்கும் மொழிக்கும் இடம்விட்டு ஒதுங்கி விடுகின்றன. தேர், தொன்மம், ஆழ்மனப்படிமம், பண்பாடு, விழுமியம் போன்ற சொற்கள் நிலையூன்றி விடுகின்றன. அவற்றோடு சேர்ந்து அவற்றை எடுத்தாண்ட எழுத்தாளரை அல்லது பேச்சாளரைப் பற்றிய நல்லெண்ணம் நிலைத்துவிடுகிறது.

“நீ இந்த நூலை வாசித்தாயா? அந்த உரையைக் கேட்டாயா?” எனறு வினவும் நண்பர், நண்பியரிடம் “ஓம், சிறந்த நூல், சிறந்த உரை. மேலும் எவ்வளவோ தமிழையும் ஆங்கிலத்தையும் படித்து மகிழ்ந்தேன்” என்றுதான் சொல்லி வருகிறேன். உங்கள் உரைகளை செவிமடுக்குந் தோறும் ஐ. நா.வின் முதலாவது தலைமைச் செயலாளரின் கூற்று திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகிறது:

ஒருவர் அறிவிலும், உணர்விலும், ஒழுக்கத்திலும் முதிர்ச்சி அடையும் வண்ணம் அவருக்குக் கற்பிக்கத்தக்க ஒழுக்காற்றுக் கோவையில் முதலாவது கட்டளை, சொல்லுக்கு மதிப்புக்கொடு என்பதே. சமூகத்தில் அல்லது மனித குலத்தில் ஏதாவது வளர்ச்சி ஏற்படவேண்டும் என்றால், சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பது – அதனைக் கண்ணும் கருத்துமாய், களங்கமற்ற மெய்ப்பற்றுடன் கையாள்வது – இன்றியமையாத ஒன்றாகும் (Dag Hammarskjold).

மணி வேலுப்பிள்ளை

அன்புள்ள ஜெ

மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி ஒரு சீண்டக்கூடிய தலைப்பு. உண்மையில் அந்தத் தலைப்புதான் என்னை அப்பேச்சை கேட்கவைத்தது. இன்று இரண்டரை மணிநேரம் விரிவான தயாரிப்புடன் ஓர் உரை என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதுவும் செய்திகளாகச் சொல்லாமல் சிந்திக்கவேண்டிய அடிப்படைகளைப் பேசுவது மிக அபூர்வம். மதம் சார்ந்து பேசுபவர்கள்கூட இருக்கலாம். இலக்கிய அழகியல் சார்ந்து பேசுபவர்கள் அரிதினும் அரிது.

இந்த கட்டண உரையை நேரில் கேட்காமலாகிவிட்டதே என வருத்தம். வந்திருக்கமுடியும். ஏதோ சின்ன விஷயத்தால் தவறவிட்டுவிட்டேன். நேரில் இன்னும் ஆழமான அனுபவமாக இருந்திருக்கும். நாம் இணையத்தில் கொஞ்சம் கவனச்சிதறல் அடைகிறோம். நேரில் அத்தனைபேர் முன்னிலையில் உங்கள் முகத்தைப்பார்த்து இதைக் கேட்கும்போது அது கூர்மையான கவனத்தை அளிப்பதாக இருந்திருக்கும்

கட்டண உரை நல்ல கான்செப்ட். நான் நன்றாகத் தயாரித்துக்கொண்டு வந்துதான் பேசுவேன் என்ற உறுதியை அது வாசகர்களுக்கு அளிக்கிறது. அந்த உறுதிப்பாடு இருந்தால் வாசகனும் கூர்ந்து கவனிப்பான்

சரவணன் குமாரசாமி

முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 3
அடுத்த கட்டுரைஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை