எழுத்தின் இருள்
அன்புள்ள ஜெ
இரண்டுவகையான எழுத்துக்கள் உண்டு. ஒருவகையான எழுத்து ஆசிரியன் வெளியே பார்த்து எழுதுவது. அது ஒருவகையில் வேடிக்கைபார்த்து எழுதுவது. அவனுக்கு கதாபாத்திரங்களெல்லாமே ‘பிறர்’தான். அந்தவகையான எழுத்தின் மாடல்களை வணிக எழுத்தில் நிறையவே பார்க்கலாம். நாம் அந்தவகையான எழுத்துக்குத்தான் பழகியிருக்கிறோம்
இப்படி வெளியே பார்த்து எழுதுபவர்கள் கதாபாத்திரங்களை கொஞ்சம் கொஞ்சமாக டைப் ஆக ஆக்கிக்கொள்வார்கள். வழக்கமான கதாபாத்திர மாதிரிகளுடன் கொஞ்சம் வேறுபாட்டை கலந்து எழுதுவார்கள். அந்த வேறுபாட்டை கவனப்படுத்துவார்கள். நீங்கள் பாலகுமாரனைப்பற்றிய கட்டுரையில் இதைச் சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நாஞ்சில்நாடன், பாலகுமாரன் – இலக்கியம், வணிகஎழுத்து
இந்த வேறுபாடுகளை மட்டுமே நாம் கவனிப்பதனால் இவர்கள் விதவிதமான கதாபாத்திரங்களை அப்ஜெக்டிவாக எழுதியிருப்பதாக நினைத்துக்கொள்கிறோம். உண்மையில் இவர்களின் கதாபாத்திரங்கள் டைப் கேரக்டர்கள் என்பதும், அந்த டைப் என்பது ஏற்கனவே இருப்பது என்பதும் நமக்கு தெரிவதில்லை.
ஆனால் அந்த வாசிப்பிலிருந்து நாம் டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கிக்கோ அல்லது நகுலனுக்கோ சென்றால் அதிர்ச்சி அடைகிறோம். டாஸ்டாயெவ்ஸ்கியின் எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுபோலவே பேசுகிறார்கள் என்று தோன்றும். டால்ஸ்டாயின் எல்லா கதாபாத்திரங்களுக்குள்ளும் அவரே இருக்கிறாரோ என்று தோன்றும். ஆனால் அதுதான் இலக்கியம் என்று புரிய மேலும் வாசிக்கவேண்டியிருக்கும்
கதாபாத்திரங்களை காட்டுவது இலக்கியத்தின் வேலை அல்ல. அதற்குள் செல்வதுதான் இலக்கியத்தின் வேலை. ஆசிரியன் கதாபாத்திரங்களுக்குள் செல்ல ஒரே வழி அவனே அந்தக் கதாபாத்திரமாக நடிப்பதுதான். அங்கே எல்லாமே ஆசிரியனின் அகம்தான். ஒரு கதாபாத்திரத்திற்கும் இன்னொன்றுக்குமான வேறுபாடு தூலமானது அல்ல, நுட்பமானதுதான். இதை வார் ஆண்ட் பீஸ் வாசிக்கும்போது அறியலாம்.
வாசகன் அந்த வழியே சென்று அவனும் கதாபாத்திரமாக நடிக்கிறான். கொடியவனாகவும் கீழானவனாகவும் அவனே நடிக்கிறான். ஆகவே வாசிக்கையில் வாசகன் எல்லா கீழ்மைகளையும் கொடூரங்களையும் அவனே அனுபவிக்கிறான். அதன் வழியாக வெளியேறுகிறான்
இதைத்தான் கதார்ஸிஸ் என்று சொல்கிறார்கள். இதுதான் இலக்கியம் நமக்கு அளிக்கிறது. இங்கே ஒன்று உண்டு. எவ்வளவு கீழ்மகனாக நாம் இலக்கியத்திலே நடித்தாலும் நாம் கீழ்மகன் அல்ல. ஏனென்றால் நமக்கு நாம் எவர் என்பதும் தெரியும். இலக்கியத்தில் நுழைந்து எல்லா கீழ்மைகளையும் செய்து, அனுபவங்களை மட்டும் அடைந்து, பழியே ஏற்காமல் வாசகன் வெளியேறிவிடுகிறான். இதுதான் இலக்கியவாசிப்பின் இயல்பு.
டாஸ்டாயெவ்ஸ்கியின் Humiliated and Insulted நாவலில் Prince Valkovsky நீண்ட உரை ஒன்றை ஆற்றுகிறார். சுயநலம், பழிபாவத்துக்கு அஞ்சாத தன்மை ஆகியவற்றை நியாயப்படுத்தும் உரை அது. அதை அங்கே டாஸ்டாயெவ்ஸ்கியே ஆற்றுகிறார். அவருடைய வாழ்க்கையில் அவர் அதை எங்கேயாவது சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். பிறகு அவருடைய வாழ்க்கையை வாசித்தபோது இளம்வயது டாஸ்டாயெவ்ஸ்கி ஒரு அறிவார்ந்த அயோக்கியனாகவே அவருடைய சமகாலத்தவரால் கருதப்பட்டிருந்ததை அறிந்தேன். அது இயல்புதான், அதுவும் அவர்தான்
நீங்கள் எழுதிய எழுத்தின் இருள் என்ற கட்டுரையை வாசித்தபின் இதை எழுதுகிறேன். இதை நானே சிறுகுறிப்பாக முன்பு எழுதியிருக்கிறேன். ஆழமாக எழுத்தில்செல்லும் எழுத்தாளர்கள் எல்லா கதாபாத்திரங்களிலும் தாங்களே நடிக்கிறார்கள். ஆகவே எல்லா தீமையையும் கீழ்மையையும் அவர்கள் அவர்களுக்குள்ளே இருந்தே எடுத்துக்கொள்கிறார்கள். அந்த தீமையையும் கீழ்மையையும் அவர்கள் உலகவாழ்க்கையில் எடுத்துக்கொள்ளாமலிருக்கலாம். அவர்களுக்குள் அதை நிகழ்த்துகிறார்கள்
அதைத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் இதெல்லாமே ஆன்மிகத்திலும் உண்டு அல்லவா? புத்தர் தியானம் செய்யும்போது அவரைச்சுற்றி பாம்புகளும் டெவில்களும் நிற்பதைப்பற்றிய ஒரு படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஞானி அவற்றை கடந்துவிட்டான் எழுத்தாளன் கடப்பதில்லை என்று வேண்டுமென்றால் சொல்லாலாம்
ஆர்.ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ
ஒரு வரி என்னை அதிரவைத்தது. புக்கோவ்ஸ்கியை படிப்பவன் நேர்மையானவனாக இருந்தால் அவனுக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படாது. ஏனென்றால் அவனுடைய அகத்தில் ஏற்கனவே அவன் கண்ட கீழ்மையையும் கொடுமையையும்தான் அவர் எழுதியிருப்பார். இது உண்மை. நான் 26 வயதானவன். எனக்கு வாழ்க்கை அனுபவமே இல்லை. ஆனால் எல்லா கீழ்மையும் எனக்கு ஏற்கனவே தெரியும். எதுவுமே என்னை பெரிதாக நிலைகுலைய வைப்பதில்லை. ஆச்சரியமாக இருந்தது உங்களுடைய அந்த வரி
தமிழ்ச்செல்வன் மாணிக்கவாசகம்