அன்புள்ள ஜெ
“மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?” உரையை கண்டிப்பான ப்ரொபஸரின் வகுப்புக்கு செல்லும் ஒரு சோம்பேறி மாணவனின் ஆயாசத்துடன் தான் கேட்கதுவங்கினேன், தலைப்பை பார்த்தவுடன் இந்த உரை கடினமான இலக்கிய மற்றும் கலை கோட்பாடுகளை கொண்டிருக்கும், எனக்கு அவற்றை புரிந்துகொள்வதற்கான பயிற்சி இல்லாததால் உரையின் நுணுக்கமான கூறுகளை உள்வாங்க மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும் என அனுமானித்திருந்தேன்.
ஆனால் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை பார்ப்பதை விட அதிகமான ஈடுபாட்டுடன் உரையின் இரண்டு பாகங்களையும் கேட்டு முடித்தேன், பல திறப்புகளை அளித்தது இந்த உரை, இதே போல மேலும் உரைகள் நிகழவேண்டும்.
உரை எளிதாக அணுகக்கூடியதாக அமைந்ததற்கு ‘பாதாதிகேச’ அணுகுமுறையே முதல்காரணம், இரண்டாவது இந்த உரையை கேட்பதற்கான முன்தகுதியாக திறந்தமனதையும், தேடலையும் அவற்றின் இருப்புக்கான பொருண்மை சான்றாக ரூபாய் 300ஐ தவிர வேறு எந்த பயிற்சியையும் கோராமலிருந்தது.
உரை எளிதில் அணுகக்கூடியதாக இருந்தாலும் உள்வாங்கி கிரகிக்க நிறையநேரமும், கருத்துழைப்பும் தேவைப்படும். மீண்டும் மீண்டும் பலமுறை திரும்ப வரவைக்கும் reference புத்தகங்களை போன்றது இந்த உரை.
தொடர்பாக ஒரு கேள்வி, பாதாதிகேச அணுகுமுறையில் இந்த கேள்வி பாதத்திலிருந்து அல்லது அதற்கும் கீழிருக்கும் நடைமுறை யதார்த்தத்திலிருந்து வருகிறது என்றே வைத்துக்கொள்வோம். “மரபை பகிர்ந்துகொள்வது எப்படி?”
மரபு என்பது பொருண்மை அற்ற ஒன்றாததால் மனமிருந்தால் எளிதில் பகிர்ந்துகொள்ளலாம், எவ்வளவு கொடுத்தாலும் தீராததாகையால் மரபிற்கு உரிமைபேணுபவர்கள் பகிர்வதில் தாராளம் காட்டலாம், அனால் பொருண்மை அற்றது என்ற அதே காரணத்தால் நீங்கள் சொல்வது போல மரபின் கூறுகளை யாருடையது என அடையாளப்படுத்தவோ அல்லது ஆதிக்கமரபு/ஒடுக்கப்பட்டவர்களின்மரபு என வகைப்படுத்துவதோ கூட கடினம், ஆனால் இந்த சிக்கல்கள் அனைத்தும் மரபை ஆய்வு நோக்கிலோ அல்லது மெய்தேடலின் பாகமாகவோ அணுகுபவர்களுக்கு மட்டுமே, தினசரி வாழ்க்கையில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, அங்கே சாதியும் மரபும் வேறு வேறு அல்ல, அங்கே பகிர்தல் என்பது கொடுக்கல் வாங்கல் என்று மாறுகிறது, கொடுக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் நிலை பற்றியோ மரபின் மீதான உரிமை பற்றியோ எந்த ஐயமும் இல்லை, பெற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பவர்களுக்கும்கூடதான். அப்படி அவரவர் நிலை பற்றி ஏதேனும் ஐயம் இருந்தால் கூட 40 வயது தாண்டியவுடன் பெரும்பாலானவர்கள் விளையாட்டு முடிந்து வகுப்பறைக்கு திரும்பும் மாணவர்கள் போல அவரவர்களுக்கான இருக்கையில் சரியாக வந்து அமர்ந்துகொள்கிறோம்.
இந்த நிலையில் மரபை பகிர்வதற்கான அழைப்பை விடுப்பது கொடுக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு எளிது, சுயமரியாதை கொண்ட பிறருக்குதான் வாங்கிக்கொள்ள தயக்கம், அதற்கு மாற்றாக மரபை புறக்கணிப்பது அதன்மீதான காழ்ப்பில் தான் பெரும்பாலும் முடிகிறது. தயக்கத்தை களைவது எப்படி?
நவீன தமிழ் இலக்கிய மரபை எடுத்துக்கொண்டால் சென்ற தலைமுறை வரை பெரும்பான்மையான முன்னோடிகள் பிராமணர்கள், சிறந்த கர்னாடக இசை கலைஞர்கள் இன்றும்கூட பெரும்பான்மையானவர்கள் பிராமணர்கள், சுதந்திரத்துக்குபிறகு இந்தியாவை வடிவமைத்தவர்களில் கணிசமானவர்கள் உயர்சாதியினர், சென்ற இரு தலைமுறைகளுக்கு முன் வரை சிறந்த கல்வி ஆசிரியர்கள் உயர்சாதியினர்கள், அவ்வளவு ஏன் இன்று யூடியூபில் கிடைக்கும் ஆரோக்கியமான தரமான உணவுகுறிப்புகள் கூட பெரும்பான்மையானவை அக்ராஹார சமையல்கட்டிலிருந்து வருகின்றன.
இந்த நிலையில் “இது நாங்கள் உனக்கு கொடுத்தது” என்று உயர்சாதியில் பிறந்த ஒரு கீழ்மனம் கொண்ட ஒருவன் ஒரு தலித் இலக்கிய வாசகரை நோக்கியா அல்லது அக்ராஹார சமையல் குறிப்பை பார்த்து குழந்தைகளுக்காக ஆரோக்கியமான பருப்பு உசிலி சமைக்க கற்றுக்கொள்ளும் தலித் சகோதரியை நோக்கியோ சொல்வானேயென்றால் சொல்ல என்ன பதில் உள்ளது?
இப்படி சொல்லலாம் “தலைமுறை தலைமுறையாக இந்த நிலத்தில் வியர்வையும் இரத்தமும் சிந்தி உணவை விளைவித்தவர்கள் நாங்கள், அந்த உணவை உண்டு செரித்து இசையாகவும், இலக்கியமாகவும், ஆன்மிக தரிசனமாகவும் வேறு பலதாகவும் விளைவித்தவர்கள் நீங்கள், நாங்கள் விளைவித்த தானியங்களை எங்களிடம் நியாமான விலைகொடுத்து வாங்கியதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம், நாங்களும் புத்தகங்களை நியாமான விலைகொடுத்து வாங்கியதாக நம்பிக்கொண்டிருக்கிறோம், ஆகவே கணக்கு சரியாக இருக்கிறது”
இந்த பதில் சரியானது என நினைக்கிறீர்களா? ஆமெனில் இந்த தரப்புக்கு முன்னோடிகள் உண்டா? சரியல்ல என்றால் காரணத்தை விளக்க முடியுமா?
அன்பும் வணக்கங்களும்
ஷங்கர் பிரதாப்
பிகு
பதில் நேரடியாக வரவில்லை எனினும் உங்களுடன் ஒரு விவாதத்தை நடத்திக்கொண்டு இருக்கிறேன், உங்கள் தரப்பை முன்னரே நீங்கள் எழுதியவற்றில் இருந்து விரித்தெடுத்து கொள்கிறேன், உதாரணமாக இந்த கட்டுரை “அடிமைகளும் கலையும்“
அன்புள்ள ஷங்கர்
இந்தக் கேள்வி அடிப்படையானது, அடிக்கடி காதில் விழுவது. ஆனால் இதற்கான விளக்கம் இடதுசாரி சிந்தனையாளர்களாலேயே மிக விரிவாக நூறாண்டுகளுக்கு முன்னரே பதிலளிக்கப்பட்டுவிட்ட ஒன்று இது.
ஒரு சமூகத்தின் கலாச்சார வெற்றிகள், அறிவார்ந்த சாதனைகள், தொழில்நுட்ப திறன்களை நிகழ்த்துபவர்கள் ஒரு சாரார். அவர்கள் அச்சமூகத்திலிருந்து திரண்டுவரும் சிறுபான்மையினர். எல்லாச் சமூகத்திலும் அப்படித்தான்.
ஆனால் அவர்களை பேணி நிலைநிறுத்துவது அந்த மொத்தச் சமூகமும்தான். அந்லையில் அந்த சமூகத்தின் அத்தனைபேருக்கும் அந்த கலாச்சார வெற்றிகளில், அறிவார்ந்த சாதனைகளில், தொழில்நுட்ப திறன்களில் முழு உரிமை உண்டு. அவை அந்தச் சமூகத்தின் அத்தனைபேருக்கும் நலம் பயப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக, தொடர்பே அற்ற ஒரு வினா எழுப்பப்படுகிறது. அந்த கலாச்சார வெற்றிகளில், அறிவார்ந்த சாதனைகளில், தொழில்நுட்ப திறன்களில் அச்சமூகத்தின் அத்தனைபேரும் நேரடியாகப் பங்குபெற முடியுமா? அத்தனைபேரும் அவற்றை புரிந்துகொள்ள முடியுமா?
கோவிட் தடுப்பூசிமேல் அத்தனை வரிகட்டுபவர்களுக்கும் உரிமை உண்டு. ஆகவே அதை அனைவருக்கும் அளிக்கவேண்டும். ஆனால் அதை தயாரிப்பதில் அத்தனை பேரின் கருத்தும் கேட்கப்படவேண்டும் என்றோ அத்தனை பேருக்கும் அதன் ஆய்வுநெறிகளும் தொழில்நுட்பமும் புரியும்படி விளக்கப்படவேண்டும் என்றோ சொல்லமுடியுமா?
ஒவ்வொரு அறிவுத்துறைக்கும் அதற்குரிய சொல்லாடல் உண்டு. அதற்குரிய தர்க்கமுறைமை உண்டு. அத்துறையில் முன்னோடிகள் உருவாக்கிய அறிவுத்தொகை உண்டு. அத்துறையில் நுழையும் எவரும் அச்சொல்லாடலை, தர்க்கத்தை, அறிவுத்தொகையை கற்றே ஆகவேண்டும். கற்பவர்களுக்கே அத்துறை இடமளிக்கும்.
அவ்வாறன்றி ‘அத்தனைபேருக்கும்’ உரியதாக அத்துறை ஆகுமென்றால் அது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும். அது இயல்வதே அல்ல. எவருக்கேனும் அதைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுமென்றால், அதில் நுழைவதற்கு செயற்கையான தடைகள் இருக்குமென்றால் அது அநீதி. கற்கவிரும்புபவர்களுக்கு, அவர்களின் அடித்தளப் பின்னணியால் சில பின்னடைவுகள் இருக்குமென்றால் அதற்குரிய தூண்டுதலும் சலுகைகளும் அளிக்கப்படவேண்டும். அச்சலுகைகள் மறுக்கப்படுவதென்றால் அதுவும் அநீதி.
எல்லா சமூகத்திலும் பேணப்படும் வர்க்கம் ஒன்று உண்டு.[ privileged class] அப்படி ஒன்று இல்லாத சமூகம் இதுவரை பூமிமேல் அமையவில்லை.சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் அந்த பேணப்பட்ட வர்க்கம் பிறப்படிப்படையில் அமைந்தது. இப்போது பொருளியல் அடிப்படையில் அமைகிறது.
யோசித்துப் பாருங்கள் நேற்று புரோகிதச் சாதியினரும், அறிவுத்தளச் சாதியினரும், தொழில்நுட்பச் சாதியினரும் இருந்த இடத்தில் இன்று இதழாளர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் உயரதிகாரிகளும் இருக்கிறார்கள். இச்சமூகம் அவர்களுக்கு பெரும்செல்வத்தை அளித்துப் பேணுகிறது.
இன்று ஒரு கல்லூரிப் பேராசிரியர் பெறும் சம்பளம் ஒரு நல்ல தொழில்நுட்ப உழைப்பாளரை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அல்லவா? அதெல்லாம் இங்குள்ள உழைக்கும் மக்களின் வரிப்பணம்தான். ஒரு மருத்துவர் வாழும் வாழ்க்கையை இங்கே எந்த உழைப்பாளியாவது கற்பனைசெய்ய முடியுமா? இன்று அவர்கள்தான் பேணப்படும் வர்க்கம்.
இந்த பேணப்பட்டவர்க்கமே அறிவுச்செயல்பாடுகளில் இயல்பாக ஈடுபடுகிறது. கலைகளையும் அறிவியலையும் வளர்க்கிறது. நேற்றைய அறிவுத்தள வெற்றிகள், தொழில்நுட்ப வெற்றிகள் ஆகியவற்றை அன்றைய பேணப்பட்ட வர்க்கம் நிகழ்த்தியது. அதில் எப்படி அடித்தள மக்களுக்கு உரிமை உண்டோ அதே உரிமை இன்றும் உண்டு.
அன்றும் இன்றும் பேணப்பட்ட வர்க்கம் மேட்டிமை மனநிலை கொண்டுதான் இருக்கிறது. அறிவு அளிக்கும் ஆணவம் அது. அவர்களிடம் அந்த ஆணவத்தை ஏற்கமாட்டோம் என்று சொல்ல அடித்தளத்தோருக்கு உரிமை உண்டு. கூடவே உங்கள் சாதனைகள் எங்களுடையவும்கூடத்தான் என்று சொல்ல உரிமை உண்டு.
அத்துடன் இன்னொன்றும் உள்ளது. பேணப்பட்ட வர்க்கத்தின் சாதனைகள் எவையும் அவர்களிடமிருந்து மட்டுமே தோன்றுவதில்லை. அவை அவர்களால் தொகுக்கப்படுகின்றன, வரையறைசெய்யப்படுகின்றன, கூர்மையாக்கப்படுகின்றன, பயனுறச்செய்யப்படுகின்றன. ஆனால் எப்போதும் அவற்றுக்கான கச்சாப்பொருள், மூலப்பொருள் மக்கள் வாழ்க்கையிலேயே இருக்கும். அந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்தத்தில், பெரும்பாலும் அடித்தளத்தில் இருந்து சென்றதாகவே இருக்கும்.
செவ்வியல் இசை என்றால் அது நாட்டார் மெட்டில் இருந்தே சென்றிருக்க முடியும். இலக்கியம் என்றால் அடிப்படை சொல்லாட்சிகளும் ஆழ்படிமங்களும் மக்களிடமிருந்தே எழமுடியும். ஆன்மிகம் என்றால் தொன்மங்களும் ஆசாரங்களும் குறியீடுகளும் மக்களிடமிருந்து எழுந்து சென்றவையாகவே இருக்கமுடியும். விதிவிலக்கே இல்லை.
ஒரு சமூகத்தின் வாழ்வை கடைந்து எடுக்கப்படும் வெண்ணை என அதன் பண்பாட்டு, அறிவுத்தொகையைச் சொல்லலாம். சமீபத்திய ஆய்வுகள் அறிவியலின் அடிப்படைகளே கூட வேளாண்மை தொழிற்தளங்களில் மக்கள் கண்டடைந்த அறிதல்களின் மேம்படுத்தப்பட்ட உருவாகவே எழுகின்றன என்று காட்டுகின்றன.
ஆகவே அடித்தள மக்கள் எந்த மேட்டிமையாளரிடமும் நீ வைத்திருப்பவை அனைத்தும் என்னுடையவையும்கூட, என் கையில் இருப்பவற்றை கூர்தீட்டியதே உன் பங்களிப்பு என்று சொல்லமுடியும்.
ஆனால் அவ்வண்ணம் திரட்டி மேம்படுத்தப்பட்டு முன்வைக்கப்பட்ட பண்பாட்டு மரபை, அறிவுத்தொகையை அது தங்களால் உருவாக்கப்பட்டதல்ல என்றோ தங்களைச் சுரண்டி உருவாக்கப்பட்டது என்றோ எண்ணி ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அடித்தளத்து மக்கள் முயல்வார்கள் என்றால் அது அறியாமை உருவாக்கும் பெரும்பிழை. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் செயல்பாடு.
மாறாக, அந்த அறிவியக்கத்தை நோக்கி தங்களை கொண்டுசெல்லவே அவர்கள் முயலவேண்டும், அதை தங்களை நோக்கி இழுத்தார்கள் என்றால் அதை அவர்கள் அழிக்கிறார்கள். அதை வென்றெடுக்கவேண்டும், உரிமைகொள்ளவேண்டும், பயன்படுத்திக்கொள்ளவேண்டும். புறக்கணிப்பது வரலாற்றை, பண்பாட்ட, அறிவுத்தொகையை நிராகரிப்பதுதான். அது ஒரு தோல்வி.
தமிழின் சங்க இலக்கியங்களை ஈராயிரமாண்டுகளாக பேணியவர்கள் சமணர்களும் சைவர்களும் வைணவர்களுமான உயர்குடியினர்தான். அவற்றை பிழைநோக்கி அச்சில் கொண்டு வந்தவர்களும் அவர்கள்தான்.ஆகவே அவை அடித்தளத்தோருக்கு உரிமையற்றவை என்று சொல்லமுடியுமா?
சங்க இலக்கியங்களை பயில்வதற்கு ஒரு கல்விமுறை உள்ளது. அதற்கு ஆய்வுத்தொகை ஒன்று உண்டு. கற்பதற்கான உரிமை தேவை என எவரும் கோரலாம். ஆனால் அதை கற்கமாட்டோம் என்றும், எந்த முயற்சியும் எடுக்காதவர்களுக்கும் அவை புரியவேண்டும் என்றும், புரியாதவற்றை அழிப்போம் என்றும் ஒருவர் சொல்லமுடியுமா? சொன்னால் எவருக்கு இழப்பு?
இன்றும்கூட மக்களுக்குப் புரியாதவை மக்கள்விரோத அறிவுச்செயல்பாடுகள் என்று சொல்லும் ஒரு மொண்ணை வாதம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. நான் அப்படிச் சொன்ன ஒருவரிடம் கேட்டேன். மக்களுக்காகப் பேசும் புரட்சி இலக்கியங்களிலேயே மக்களுக்கு புரிபவை எத்தனை?
மக்கள் என்பவர்கள் வெவ்வேறு வாழ்க்கைக்களங்களில் வெவ்வேறு தொழில்களில் வாழ்பவர்கள். அவர்களில் சிலருக்கே அறிவியக்க ஆர்வம் இருக்கும். எஞ்சியோர் அவர்களின் வாழ்க்கையையே வாழ்வார்கள். அறிவியக்க ஆர்வமுடையவர்கள் அறிவியக்கத்தை வந்தடைவார்கள்.
ஜெ