விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். கோவிட்-19 காலத்திற்கு முன்னெரெல்லாம், ஆறு மாதங்களுக்கு முன்னரே விஷ்ணுபுரம் விழாவிற்கு வருவதற்காக விமான டிக்கெட்டிற்குப் பதிவு செய்துவிட்டு நானும் ராதாவும் காத்திருப்போம். 2020-ல் எங்கள் வீட்டில் நடந்த கல்யாணத்தையும் சரி, விஷ்ணுபுரம் விழாவையும் சரி யூடுயூப் லைவில்தான் பார்க்கவேண்டிய நிலைமை. பரவாயில்லை, நேரில் வந்து க்விஸ் செந்தில் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் பல்பு வாங்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. இப்பொழுது நிறைய நண்பர்களை அணுக்கமாகத் தெரியும் என்பதால், அநியாயத்திற்கு வெட்கப்படவேண்டியதாக இருந்திருக்கும்.
விழாவில் எல்லொரையும் கலர் கலர் தாடியுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. எல்லோரும் பேசும்பொழுது விழாவிற்கான மகிழ்வுடன் இருந்ததை உங்கள் கண்கள் காட்டின. இல்லையென்றால், நான் என்ன சொல்லியிருப்பேன் என்று நீங்கள் ஊகித்துக்கொள்ளவும்.
நான் நீண்ட நேரம், நிகழ்வைத் தொகுத்து வழங்குபவர் சுஷில் குமார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எதற்கும் கேட்டு அறிந்துகொள்ளலாம் என்று காளிப்ரசாத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ‘சார், அவர் கோவை நரேன் சார்’ என்றார். “சரி, அவருக்கு கண்ணு நல்லா இருக்கும்போல” என்று நம்பிக்கொண்டேன்.
ரேஷனலாக இருக்கும் மனிதனையும் பொருளாதாரத்தையும் சொல்லும் பிஹேவியரல் எகானாமிக்சை விளக்க ஆரம்பித்து, சுரெஷ்குமார இந்திரஜித்தின் படைப்புகளைப் பற்றி சுனீல் கிருஷ்ணனின் உரை மிக்க கச்சிதமாக இருந்தது. காற்றினிலே வரும் கீதம் பாடும் பெண், தெலுங்கு கீர்த்தனையை பாடுவதால் வாழ்வு மாறும் கதையையும், எம்ஜிஆர் படம் ஸ்க்ரிப்ட் போல் இருக்கும் அவரது அறிக்கை கதையையும் சொல்லி முழு விமர்சனத்தை எட்டு நிமிட உரையில் வைத்துவிட்டார். இது, நகுலனுக்கு, கா.நா. சு-விற்கு, புதுமைப்பித்தனுக்கு கொடுக்கவேண்டிய பரிசு என்று உங்கள் கண்கள் கணிவுடன் சொல்வதை கேமரா அழகாகப் படம் பிடித்திருந்தது. பேய்ச்சி நாவல் பற்றி பேசிய அருண்மொழி ஜெயமோகனைக் குறிப்பிட்டு சொல்லி, இனிமேல் எழுதும் சில படைப்புகளை கொஞ்சம் வர்ணனைகளுடன் எழுதுகிறேன் என்று சொன்ன, மாற்றத்திற்கும், கற்பதற்கும் என்றும் தயாராக இருக்கும் விழா நாயகனின் ஆளுமைக்குத் தலைவணங்குகிறேன்.
தற்செயலின் வரைபடம் என்ற ஆவணப்படத்தின் தலைப்பே விருது பெறுபவரின் கதைகளின் தன்மையை அழகாக சொல்கிறது. ந. முருகேஷ பாண்டியன், சுனீல் கிருஷ்ணன், நீங்கள், என அனைவரும் பேசியது என்னவோ சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் படைப்புகளைப் பற்றித்தான், பார்ப்பவனுக்கு, படத்தின் தலைப்பிற்குத் தகுந்தாற்போல் பேசுங்கள் என்று கேட்க நீங்கள் அனைவரும் பேசியதுபோல் இருந்தது. அவரது குழந்தைகளும், அவரது படைப்புகளை பெயர் சொல்லி புரிதலுடன் பேசியது சிறப்பு. கலைஞனை சொந்த வீட்டினர் புரிந்து வைத்திருப்பது ஒரு கொடுப்பினை.
தலைப்புதான் அப்படி என்றால், ராஜன் சோமசுந்தரத்தின் இசையைக் கூர்ந்து கவனித்தால், சென்ற வருடம் விருது பெற்ற ‘அபி’யின் ஆவணப்படத்திற்கும், இந்த ஆவணப்படத்திற்கும் பின்னனி இசையில் அவர் காட்டியிருக்கும் வேறுபாடு தெரிகிறது. அந்த வேறுபாடு படைப்பாளிகளின் படைப்பின் தன்மையை அவர் இசையிலேயே உணர்த்துவதால். அத்வைதம் பேசிய அபியின் கவிதைகளைச் சொல்ல ராஜனுக்கு தேவையாக இருந்த இசைக்கருவிகள், தற்செயலின் வரைபடத்தை வரையும் கதையைச் சொல்லும் சுரேஷ்குமார் இந்திரஜித் கதைகளுக்குத் தேவையில்லை. சமகாலக்கதைகளைச் சொல்லுபவரின் ஆவணப்படத்திற்கு அவர் சமகால இசைக்கருவிகளை மட்டுமே உபயோகித்துள்ளார். இசையும் இலக்கியமும் அறிந்த ஒருவர், விருது பெறுபவரின் படைப்புகளை வாசித்துவிட்டு, ஆவணப்படத்திற்கு இசையை அமைப்பதால், வரம் பெறுவது பார்வையாளன்தான்.
விருது பெறும் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
விழாவினை ஏற்பாடு செய்து குறைவான நண்பர்களுடன், நிறைவாகச் செய்ததற்கும், பாதுகாப்பு உணர்வுடன் நடத்தியதற்கும், விழாக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்!
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
அன்புள்ள சௌந்தர்
விஷ்ணுபுரம் விழா நிறைவாக நடைபெற்றது- சிறப்பாக என்று சொல்லமுடியாது. ஆண்டில் மூன்றுநாள் சந்தித்து தழுவி பேசி மகிழ்வது அவ்வாண்டு முழுக்க நீடிக்கும் ஒரு நினைவு, செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல். அது இந்த ஆண்டு இல்லை.
சென்ற மே மாதம் ஊட்டி குருகுலத்தில் குருநித்யா முகாம் நிகழவில்லை. இவ்வாண்டு நடத்தலாமென நினைக்கிறேன். பார்ப்போம்.
ஜெ