காதலர் தின மலர் ஏற்றுமதிகள்

அன்பின் ஜெ,

நலம்தானே?

இதோ இன்னொரு பிப்ரவரி துவங்கிவிட்டது. காதலர் தின சிகப்பு ரோஜாக்கள் கொய்மலர் ஏற்றுமதிகள் சென்ற ஜனவரி 25 முதலே துவங்கி விட்டன. அழுத்தும் வேலைப்பளு. இரவு பகலாக கொய்தலும், தரம் பிரித்தலும், பேக்கிங்கும் நடக்கிறது. இந்தப் பத்து பதினைந்து நாட்களில் ஈட்டும் வருமானம் தான் பண்ணையின் ஆண்டு நிகர லாபம். கொரோனாவிற்குப் பின்னான முதல் காதலர் தினப் பருவம். சந்தையில் சுணக்கம் எல்லாம் இல்லை. ஆல்ஸ்மீர் ஏலச் சந்தையில் விலை நன்றாகவே இருக்கிறது. சந்தையை இணையம் மூலம் ஆன்லைனில் நேரடியாகவே பார்க்கலாம்.

அதிகாலை ஒரு மணிக்கு தூங்கச் சென்றுவிட்டு, ஏலத்தைப் பார்ப்பதற்காக, ஆறு மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி மறுபடியும் அலுவலகம் வந்து 300 பணியாட்கள் வேலை செய்யும் தரம் பிரிக்கும் அறையில் மடிக்கணினியின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். வேலைப்பளு தெரியாமலிருக்க ஸ்பீக்கர்களில் ஸ்வாஹிலி பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. கண்களில் களைப்பிருந்தாலும் ஏலத்தில் கிடைக்கும் விலை உற்சாகம் தருகிறது.

2021-ன் பிப்ரவரி காதலர் தினம், எனக்கு கொய்மலர் வளர்ப்பில் இணைந்த வாழ்வின் 26-ம் வருட காதலர் தினம்.

கொய்மலர் ஏற்றுமதி வணிகத்தில் பன்னாட்டு அன்னையர் தினம், மகளிர் தினம், கிறிஸ்துமஸ் தினம், வருடப் பிறப்புகள், மலர்கள் பயன்படுத்தும் நாடுகளின் சுதந்திர தினங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் மலர்களின் உபயோகம் அதிகமிருக்கும் விசேஷ தினங்கள் (உதாரணத்திற்கு ரஷ்யாவில் பள்ளிகளில் கல்வியாண்டு துவங்கும் மாதம் செப்டம்பர்; செப்டம்பரில் முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவர்களின் ஆசிரியர்களுக்கு மலர் கொடுப்பது அங்கு வழக்கம்) எல்லாமே முக்கியமானவை என்றாலும் கொய்மலர் வர்த்தகத்தின் மிக முக்கியமான பருவம் என்றால் பிப்ரவரியில் வரும் காதலர் தினம்தான். பல வளர்ப்புப் பண்ணைகள் காதலர் தின வணிக வருமானத்தை வைத்துத்தான் வருடத்தின் மீதமுள்ள மாதச் செலவுகளை நிர்வகிக்கும்.

இருபது/இருபத்தைந்திற்கும் மேலான தொட்டிச் செடி வகைகளும், முப்பதிலிருந்து/முப்பத்தைந்திற்கும் அதிகமான கொய்மலர் வகைகளும் கொண்ட பன்னாட்டு கொய்மலர் வர்த்தகத்தில் முதலிடம் ரோஜாவிற்குத்தான். ரோஜாக்களிலும் சிகப்பு ரோஜாக்கள் வணிகத்தில், வளர்ப்பில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு வரை. வளர்ப்புப் பண்ணைகள் சில, முழுதுமாக சிகப்பு ரோஜாக்களையே வளர்ப்பதுண்டு. சிகப்பு ரோஜாக்களில் பல்நூறு வகைகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வகை சிகப்பு ரோஜாக்களை மட்டுமே வளர்க்கும் பண்ணைகள் பல உண்டு. உதாரணத்திற்கு “ரெட் நவோமி” என்ற “ஸ்ரூவர்ஸ்” இனப்பெருக்க நிறுவனத்தின் வகையை மட்டுமே பத்து ஹெக்டருக்கும் மேல் வளர்க்கும் பண்ணைகள் ஹாலந்தில் உண்டு. ஸ்பெயின், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலிருக்கும்  எல்லா ரோஜா இனப்பெருக்க நிறுவனங்களும், தங்களின் ஆராய்ச்சியில் புதிய சிகப்பு வகையைக் கண்டுபிடிப்பதற்கே முன்னுரிமை அளிக்கும். வளர்ப்புப் பண்ணைகளும், தங்களின் வளர்ப்புப் பரப்பளவில் 30 சதவிகிதம் சிகப்பு வகைக்கே ஒதுக்குவார்கள்.

ஐரோப்பிய நாடுகள், கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, இந்தியா (குறைந்த அளவில்), கொலம்பியா, ஈக்வடார் போன்ற கொய்மலர் வளர்ப்பில், வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லா நாடுகளுக்கும் பிப்ரவரியின் காதலர் தினம் என்பது அந்நியச் செலாவணி ஈட்டிக்கொடுக்கும் மிக முக்கியமான மாதம்தான்.

கொய்மலர் வளர்ப்புப் பண்ணைகளில், காதலர் தினத்திற்கான ஆரம்பகட்ட வேலைப் பரபரப்புகள் நவம்பர் மாதமே துவங்கிவிடும். நிறுவனங்களின் விற்பனைப் பிரிவிற்கு, அப்போதே காதலர் தினத்திற்கான ஆர்டர்கள் வர ஆரம்பித்து விடும். விலையும் அப்போதே நிர்ணயிக்கப்பட்டு விடும். புத்தாண்டின் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலேயே, வளர்ப்புப் பிரிவிற்கும் தரப் பிரிவிற்கும், பேக்கிங் பிரிவிற்கும் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் பெயர்களும், யாருக்கு எத்தனை பெட்டிகள் என்றென்று அனுப்ப வேண்டும் என்ற தெளிவான பட்டியலும் வந்துவிடும். இதுதவிர பிப்ரவரி ஐந்திலிருந்து பத்த்தாம் தேதி வரையிலான கடைசி நேர விற்பனையும், சூடுபிடிக்கும்.

எல்லா ஆண்டுகளும் ஒரே வகை சிகப்பு ரோஜாக்கள்தான் அதிகம் விற்கும் என்று சொல்லமுடியாது; ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு சிகப்பு வகைகள் முதலிடம் பிடிக்கும். சென்ற ஆண்டு “டிருய்டர்” இனப்பெருக்க நிறுவனத்தின் “ரோடஸ்”-ம் “எவர் ரெட்”-டும், “இண்டர்ப்ளாண்ட்” நிறுவனத்தின் “எக்ஸ்ப்ளோரர்”-ம் சக்கை போடு போட்டன. கொய்மலர் ரோஜாவின் விலை அதன் நீளத்தைப் பொறுத்து அமையும். பொதுவாக, பண்ணையிலிருந்து நேரடியாக வாங்கும் வாடிக்கையாளருக்கான பண்ணை விலை ஒரு செண்டி மீட்டருக்கு ஒரு டாலர் செண்ட் என்ற அளவில் இருக்கும்; உதாரணத்திற்கு 80 செமீ நீளமுள்ள சிகப்பு ரோஜா 80 டாலர் செண்ட். பண்ணைக்குப் பண்னை, சிகப்பு ரோஜாக்களின் வகைக்கேற்ப இவ்விலை மாறுபடும். மொத்த வியாபாரிகளிடமிருந்து, சில்லறை வியாபாரிகளுக்கும், அவர்களிடமிருந்து கடைசி உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் வரை செல்லும்போது நான்கைந்து மடங்கு விலை ஏற்றமிருக்கும். சில சமயம் பத்து மடங்கு வரை செல்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது நாட்டுக்கு நாடு மாறுபடும். உதாரணத்திற்கு ரஷ்யாவில், ரூபிள் மதிப்பு சரியும் முனபான மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை நல்ல விலை கிடைத்து வந்தது; ஹாலந்தைக் காட்டிலும் அதிகம்.

சிகப்பு ரோஜாக்களின் வளர்ப்பிலும் சவால்கள் உண்டுதான்.ரோஜா செடிகள், பசுங்குடிலில் ஒருமுறை நடவு செய்தால் அவற்றின் ஆயுள், பராமரிப்பிற்குத் தகுந்தவாறு, ஐந்திலிருந்து எட்டாண்டுகள். பொதுவாய் ஐந்திலிருந்து ஆறாண்டுகள்தான் கணக்கு. வகைக்குத் தகுந்தவாறு, ஒரு சதுர மீட்டரில் 7 முதல் 9 செடிகள் வரை நடவு செய்யலாம். ஒரு வருடத்தில் ஒரு சதுர மீட்டரில் 100-லிருந்து 200 பூக்கள் வரை அறுவடை செய்ய்லாம் (இது கடல் மட்டத்திலிருந்து எத்தனை உயரத்தில் வளர்ப்புப் பண்ணை அமைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது).

காதலர் தினத்திற்கான ஏற்றுமதி தோராயமாக ஜனவரி 28ம் தேதி துவங்கி, பிப்ரவரி 9ம் தேதி வரை இருக்கும். அதற்குத் தகுந்தவாறு கணக்கீடு செய்து 60-லிருந்து 75 நாட்களுக்கு முன்னதாக (வகைக்குத் தகுந்தவாறு), செடிகளில் கவாத்து/கத்தரிப்பு செய்யவேண்டும். கத்தரிப்பு முடிந்ததும், வழக்கமாய் சொட்டுநீர்ப் பாசனத்தோடு செல்லும் உரங்களின் அளவை 10 முதல் 15 சதவிகிதம் அதிகரித்தல் நல்லது. 19:19:19 போன்ற உரங்களை மேலுரமாகவும் இடலாம். இரும்புச் சத்துக் குறைபாடு இப்பருவத்தில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. தண்ணீரில் எளிதாகக் கரையும் கீலேட் செய்யப்பட்ட EDDHA போன்ற இரும்பு உரங்களை கரைத்து பாத்திகளின் மேல் ஊற்றலாம்.

காதலர் தினம் வரை பூச்சி மற்றும் நோய்களிலிருந்தும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். இதுதவிர இயற்கை இடையூறுகள் குறுக்கிடாமல் இருக்கவேண்டும். மழை, மேகமூட்டம் கொண்ட நாட்கள், இரவு வெப்பநிலையில் அதீத மாறுதல்கள்…இவைகள் ஏற்பட்டால் கணக்கீடு செய்த நாட்களில் தவறு ஏற்பட்டு எதிர்பார்த்த நாட்களில் மலர்கள் அறுவடைக்குத் தயாராகாமல், தாமதாக வரும். அல்லது எதிர்பார்த்ததை விட இரவு மற்றும் பகல் வெப்பநிலைகள் வழக்கத்தைவிட அதிகமானால் முன்னதாகவே பூக்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும் ஆபத்து உள்ளது.

கடைசிநேர விற்பனை விலையிலும் ஆபத்துக்கள் உண்டு. எதிர்பாரா விதமாக சந்தையில் வரத்து அதிகாமாகி விட்டால் விலையில் எதிர்பாரா சரிவுகள் ஏற்படும். மலர் ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த ஆபத்து அதிகம். பிரிட்டனின் டெஸ்கோ போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு விநியோகிக்கும் பண்ணைகளும் விலை மாற்றங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.  சில பண்ணைகள் வருட முழுமைக்குமான விலை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதுண்டு.

கொய்மலர் வர்த்தகத்தில் எண்பதுகளில் பொதுவாக ஒரு பேச்சு வழக்கு உண்டு – “இயற்கை, மலர்களுக்கு வேர்களைத் தந்தது; ஆனால் அதற்கு சிறகுகள் தந்தது நெதர்லாந்துதான்” என்று. உண்மைதான். 2017-ம் ஆண்டின் ”ராயல் ஃப்ளோரா ஹாலந்து” நிறுவனத்தின் வருட வர்த்தக மதிப்பு 4.7 பில்லியன் யூரோக்கள். இது 2016-ஐ விட 1.2% அதிகம்.

கென்யாவைப் பொறுத்தவரை, அதன் மொத்த விற்பனையில் காதலர் தின விற்பனை மட்டுமே 30 சதவிகிதம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். கொய்மலர் ஏற்றுமதியில் மூன்றாமிடத்தில் இருக்கும் நாடு கென்யா. ஐரோப்பிய கொய்மலர் சந்தையில் கிட்டத்தட்ட 38 சதவிகிதப் பங்கு கென்யாவினுடையது. ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா உட்பட கிட்டத்தட்ட 60 சேரிடங்களுக்கு கொய்மலர்களை ஏற்றுமதி செய்கிறது.

கொலம்பியாவின் மலர் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அமெரிக்காவிற்குத்தான் செல்கிறது. இது 2016-ன் கணக்கு. 2016-ல் ஏவியான்கா என்ற ஒரு விமான கார்கோ நிறுவனம் மட்டுமே காதலர் தின ஏற்றுமதியாக பத்து நாட்களில் 9600 டன்னுக்கும் மேலாக அனுப்பியிருக்கிறது.

ஈக்வடாரின் பெரும்பாலான கொய்மலர்ப் பண்ணைகள் அமைந்திருப்பது, அதன் மத்தியில் ஆண்டஸ் மலைகளில், 9000 அடிகளுக்கு மேல் கொடபாக்ஸி எரிமலைக்கு அருகில். அதன் மொத்த ஏற்றுமதியில் 27 சதவிகிதம் ரஷ்யாவிற்குச் செல்கிறது. 4000 ஹெக்டர்கள் வளர்ப்புப் பண்ணைகளில் வருடத்திற்கு 160,000 டன்கள் கொய்மலர்களை உற்பத்தி செய்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கிறது. 2017 காதலர் தின பருவத்தின் சிகப்பு கொய்மலர்களின் மொத்த ஏற்றுமதி  13766 மெட்ரிக் டன்கள் என்கிறது ஈக்வடாரின் குய்டோ பன்னாட்டு விமான நிறுவனம். காதலர் தின பருவத்திற்கு 2016-ல் குய்டோ பயன்படுத்திய கார்கோ விமானங்களின் எண்ணிக்கை 201. 2017-ல் அதனை 235-ஆக அதிகரிக்க வேண்டியிருந்தது என்று தெரிவிக்கிறது.

நான் தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள நிறம் சிகப்பு. அலுவலகம், பணிபுரிபவர்களின் உடைகள், தரக் கட்டுப்பாடு, தரம் பிரிக்கும் அறைகள், விமான நிலையம் செல்லும் குளிரூட்டப்பட்ட டிரக்குகள் அனைத்துமே சிகப்பு வண்ணம் கொண்டவை. நிறுவனத்தின் அடையாள வாசகம் “Pure Expressions” (தூய வெளிப்படுத்துதல்கள்”?). காதலர் தினத்திற்கு மட்டுமல்ல, எல்லா சமயங்களுக்கும் சூழ்நிலைகளுக்குமான வாசகம்தானே?.

2012-ன் பிப்ரவரியின் முதல் நாள். அப்போது கென்யா வந்து ஏழெட்டு மாதங்கள்தான் ஆகியிருந்தன. “நியூ ஹாலந்த் ஃப்ளவர்ஸ்” என்ற வளர்ப்புப் பண்ணையில் உற்பத்திப் பிரிவில் மேலாளராயிருந்தேன். பண்ணை அமைந்திருந்தது கடல் மட்டத்திலிருந்து 2400 மீட்டர்கள் உயரத்தில். ஏனோ அவ்வருடம் குளிர் அதிகமிருந்தது. இரவின் குறைந்த வெப்பநிலை மைனஸ் ஒன்று/இரண்டிற்கு இறங்கியது. காதலர் தின ஏற்றுமதிக்கு எங்கே சிகப்பு ரோஜாக்கள் சரியான நேரத்திற்கு வராமல் போய்விடுமோ என்ற பயம் வந்தது. விடிகாலை நான்கு மணி அளவில்தான் வெப்பநிலை மிகக் குறைவதால், அந்நேரத்தில் பசுங்குடில்களுக்குள் பெரிய பெரிய டின் ட்ரம்களை வைத்து சருகுகள்/விறகுகள் கொண்டு புகையெழுப்பலாம் என்று முடிவு செய்தோம் – பசுங்குடிலின் வெப்பநிலையை கொஞ்சமாவது உயர்த்துவர்க்கு.

விடிகாலை நான்கு மணி. ஒரு சிகப்பு ரோஜா பசுங்குடிலினுள். பணியாளர் புகை மூட்டுவதற்கு தயாரிப்புகள் செய்துகொண்டிருந்தார். வெளியில் குளிர் கவிந்திருந்தது. வெளிப்பாதையின் விளக்கு வெளிச்சம் உள்வரை விழுந்திருந்தது. சிகப்பு மலர்கள் அமைதியாய் அழகாய் நின்றிருந்தன; அவை நடப்பட்டு ஒன்றரை வருடங்கள்தான் ஆகியிருந்தது. பிப்ரவரி 14ம் தேதி இவை யார் கையிலிருந்து யார் கைக்கு மாறப் போகின்றனவோ என்று நினைத்துக்கொண்டேன்.

வெங்கி

முந்தைய கட்டுரைவண்ணக்கடலில்…
அடுத்த கட்டுரைபிறழ்வெழுத்து சில பார்வைகள்-சிவானந்தம் நீலகண்டன்