வேதப்பண்பாடு நாட்டார் பண்பாடா?

வணக்கம் திரு. ஜெயமோகன் ,

நான் நாட்டாரியலில் ஆர்வம் கொண்டவன்.

வானமாமலை தொட்டு பரமசிவன் வரையில் வாசிப்பு (மிகக்குறைவே) எனினும் தமிழ்நாட்டில் நாட்டாரியல் என்பது பன்முகத்துடன் உள்ளதாகவே உணர்கிறேன்.

குறிப்பாக, திருநெல்வலியின் நாட்டார் வழக்குகள் மதுரைக்கு அந்தப்பக்கம் என்னவென்றெ தெரிவதில்லை என்பது என் கருத்து. நாட்டாரியலையே சமூகத் திரட்டாக (Social Capital) நினைக்கிறேன்.

எனது கேள்வி என்னவென்றால் யாகங்களும் (புரோகித பண்பாடு) ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு இனக்குழுவின் நாட்டாரியலாகத்தானே இருக்க முடியும்?

இல்லை, புரோகித பண்பாடு மற்றும் நாட்டாரியல் இரண்டிற்கும்  வேறுபாடு உள்ளது எனில் அது இருவேறு வட்டார நாட்டாரியலுக்கும் பொருந்தும்தானே?

இதை எப்படி புரிந்து கொள்வது?

நாராயணன்

திருநெல்வேலி

அன்புள்ள நாராயணன்

இதை நீண்டகாலம் முன்பு நான் திரிவிக்ரமன் தம்பி அவர்களை எடுத்த ஒரு மலையாளப் பேட்டியில் கேட்டிருந்தேன். அவர் அளித்த விளக்கம் சிறப்பாக இருந்தது.

நவீன அறிவுத்துறைகள் உருவாவதற்கு ஒரு தர்க்கமுறை உண்டு. ஓர் அறிவுத்துறையின் ஆய்வுமுறைமை சிலவற்றை ஆராய போதுமானதாக இல்லாதபோது அதிலிருந்து இன்னொரு அறிவுத்துறை முளைக்கிறது. அவ்வாறுதான் புதிய அறிவுத்துறைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு அறிவுத்துறையும் உண்மையில் இன்னொன்றின் கிளைதான். முந்தைய அறிவுத்துறை எதை பேசவில்லையோ அதையே இது பேசும்.

வரலாற்றாய்வு என்பது நவீன அறிவுத்துறைகளில் தொன்மையானது. ஆனால் அதனால் சமூகம் உருவாகி செயல்படும் விதத்தை, அதன் உட்கூறுகளை தன் ஆய்வுமுறையைக் கொண்டு விளக்கமுடியவில்லை. ஆகவே வரலாற்றாய்விலிருந்து சமூகவியல் பிரிந்து தனி அறிவுத்துறையாக ஆகியது.

சமூகவியல் சமகால சமூகங்களை ஆராய்கிறது. ஆனால் தொல்குடிகளின் வாழ்க்கையை ஆராய அதன் ஆய்வுக்.கருவிகள் போதவில்லை. ஆகவே மானுடவியல் என்னும் துறை உருவானது. சமூகவியல் மையம் சார்ந்த செவ்வியல் நோக்கை கொண்டிருந்தது. அடித்தள மக்களின் பண்பாட்டை அதனால் ஆய்வுசெய்ய முடியவில்லை. அதன்பொருட்டு உருவானதே நாட்டாரியல். நாட்டாரியல்கூட புதிதாக உருவாகி வரும் விளிம்புநிலை கலாச்சாரக்கூறுகளை ஆராய போதுமானதாக இல்லை. ஆகவே விளிம்புநிலை ஆய்வுகள் என்னும் துறை உருவானது.

வரலாற்றிலிருந்து தொல்லியல் தனியாகப் பிரிந்தது. வரலாற்றுக்கு முந்தையகால ஆய்வு தனியாக பிரிந்தது. வரலாற்றிலிருந்து தொல்வரலாற்றாய்வு தனியாக பிரிந்தது. வரலாற்றிலிருந்து வரலாற்றுப் பொருளியல் தனியாகப் பிரிந்தது.

ஆக , இந்த ஒவ்வொரு ஆய்வுமுறையும் அதற்கேற்ற பார்வைக் கோணத்தை, ஆய்வுப்பொருளை, ஆய்வுமுறையை வகுத்துக்கொண்டிருக்கின்றன. வேதகாலப் பண்பாடு, தொல்தமிழ்ப்பண்பாடு ஆகியவை வரலாற்றாய்வின் எல்லைக்குள் வருபவை. வரலாற்றாய்வுக்குள்ளேயே தொல்வரலாற்றாய்வு முறைக்குள் அமைபவை.

ஏனென்றால் அவை மிகத்தொல்காலத்திலேயே மையப்பண்பாடாக ஆகிவிட்டவை. அவற்றை செவ்வியல் பண்பாடுகள் எனலாம். அவைதான் நம் சமூகத்தை தொகுத்து நிலைநிறுத்தியிருக்கின்றன.

நாட்டாரியல் என்பது மையப்ப்படுத்தப்பட்ட பண்பாட்டின் பகுதியாக அல்லாமல் மக்கள் வாழ்க்கையில் நீடிக்கும் பண்பாட்டுக் கூறுகளையே ஆராய்கிறது. அதன் பேசுபொருளை இப்படி வரையறை செய்துகொண்டிருக்கிறது. ஒரு பண்பாட்டின் மையப்போக்காக இல்லாதது நாட்டார் பண்பாடு. மையப்பண்பாடு எழுத்துமரபுக்குள் சென்றிருக்கும். மதம், அரசு ஆகியவற்றின் முகமாக இருக்கும். ஆதிக்கத்தன்மை கொண்டிருக்கும். அது அல்லாததே நாட்டார் பண்பாடு. அந்த வேறுபாட்டைக் கொண்டே நாட்டார் பண்பாட்டை அடையாளப்படுத்துகிறார்கள்.

நாட்டார் பண்பாடு இன்றும் வாழ்வதாக இருக்கவேண்டும் என்பது இன்னொரு வரையறை. வளஞ்சியர் என்னும் வணிகக்குழு பற்றி தமிழ் வரலாற்றில் வருகிறது. ஆனால் இன்று அவர்களைப் பற்றிய செய்திகளே இல்லை. ஆகவே அது நாட்டாராய்வுக்குள் வருவதில்லை. உமணர்கள் யார் என்ற கேள்வி நாட்டாரியலின் எல்லைக்குள் இல்லை, ஏனென்றால் இன்று உமணர்கள் இல்லை.

நாட்டாரியல் என்பது உண்மையில் வேறுபாடுகளையே ஆராய்கிறது. ஒரு பண்பாடு நாட்டார் பண்பாடு என எப்படி கண்டடைவது? அது மையப்பண்பாட்டிலிருந்து வேறுபட்டிருக்கும். பறை இசைக்கலைஞர் நாட்டாரியலின் ஆய்வுப்பொருள். தவுலிசைக் கலைஞர் நாட்டார்ப்பண்பாட்டின் ஆய்வுவட்டத்திற்குள் வரமாட்டார்.

அதன்பின் வட்டாரம், இனம் சார்ந்து பண்பாட்டில் காணப்படும் வேறுபாடுகளைத்தான் நாட்டாரியல் ஆராய்கிறது. நெல்லையின் நாட்டார் பண்பாட்டில் எது சிறப்பாக பதிவுசெய்யப்பட வேண்டும்? மதுரையிலோ கோவையிலோ இல்லாத தனித்தன்மைதான். இந்த வேறுபாடுகளை தொகுத்து அதை ஆராய்வதே நாட்டாரியலின் அறிதல்முறை.

தமிழ்ப்பண்பாடு ஒன்றுதான். அதற்குள்தான் நாட்டாரியல் கருத்தில் கொள்ளும் பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. வரலாற்றுப் பார்வையில் தஞ்சையும் மதுரையும் ஒன்று, ஆனால் நாட்டாரியல் அவற்றுக்கு இடையே உள்ள பண்பாட்டு வேறுபாடுகளை கருத்தில்கொண்டு மக்களின் வாழ்க்கையை ஆராயும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-9
அடுத்த கட்டுரைமுதற்கனல் தொடங்கி…