சில வாரங்களுக்கு முன் மந்த்ரா என்னும் புத்தகத்தில் முதல் அத்தியாயத்தை மொழிப்பெயர்த்து உங்களிடம் மதிப்பீடு ஒன்று கேட்டிருந்தேன். அதன் பின் காளிப்ரசாத் அண்ணா அவர்களின் நட்பு கிடைத்தது. அவரிடம் நான் மொழிப்பெயர்த்த அத்தியாயத்தை காட்டினேன். அதை பற்றி கூறுகையில் அதன் மொழிநடை வெண்முரசின் சாயலை கொண்டுள்ளதையும் பொது வாசகர்களின் வாசிப்பு சரளத்திற்கு சில சொற்கள் தடை ஏற்படுத்தும் படி உள்ளது என்று கூறினார்.
இதை தாண்டி அவர் கூறியது உன்னுடைய மொழிநடை வெண்முரசின் சாயலை கொண்டுள்ளது. இங்கிருந்து கவிதைக்கு செல்லலாம், உனக்கென ஒரு மொழிநடையை உருவாக்கி படைக்கலாம். ஆனால் இது போன்ற இயந்திரத்தனமான மொழிப்பெயர்ப்பை செய்வது உன்னுடைய மொழித்திறனையும் படைப்பாற்றலையும் மழுங்கடிக்க செய்யும் என்றார். வேண்டுமென்றால் ஜெ வின் எண்ணை தருகிறேன், அவர் தீர்க்கமாக தெளிவாக்கி விடுவார் என்றார். அண்ணாவிடமிருந்து உங்கள் எண்ணை பெற்று கொண்டேன். ஆனால் உங்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு என் கேள்விக்கு தகுதியுள்ளதா என்ற ஐயமும் என் தயக்கத்தாலும் உங்களை தொடர்பு கொள்ளவில்லை.
என் கேள்வியை இப்படி தொகுத்து கொள்கிறேன். ஒரு எழுத்தாளர் அல்லது அவ்வாறு ஆக சாத்தியுமுள்ள தொடக்கநிலையில் இருக்கும் ஒருவர் மொழிப்பெயர்ப்பு செய்வதாக இருந்தால் எவற்றை செய்யலாம்? எவற்றை செய்யக்கூடாது?
இந்த கடிதம் தகுதியுள்ளது எனில் பதில் அளியுங்கள் ஜெ.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள சக்திவேல்
ஓரு தொடக்கநிலை எழுத்தாளர் மொழியாக்கம் செய்யலாமா? அதுதான் உங்கள் கேள்வி. செய்யலாம், அதில் சில எச்சரிக்கைகள் தேவை என்பதே என் பதில்.
எழுத வருபவர் எதைவேண்டுமென்றாலும் எழுதலாம். தொடர்ந்து சிலகாலம் மொழியிலேயே உழன்றுகொண்டிருக்கவேண்டும். அதற்கு வாசிப்பும் எழுத்தும் இரண்டு வழிகள்.
வாசிப்புகூட பலவகையானதாக இருக்கவேண்டும். வரலாற்று நூல்கள், கோட்பாட்டுநூல்கள், தத்துவநூல்கள், இலக்கியவிமர்சனங்கள் ஆகியவற்றையும் வாசிக்கவேண்டும். புனைவற்ற எழுத்துக்கள் புனைவெழுத்தாளனின் நடைக்கு ஓர் ஆழத்தை அளிக்கின்றன. அவை அவனுடைய கருத்துசார்ந்த வெளிப்பாட்டை வலுவாக்குகின்றன.
கூடவே சமகாலச் செய்திநடை ஊடகநடை ஆகியவற்றையும் அவன் கவனிக்கவேண்டும். ஆனால் சமகால ஊடகநடையில் மிகுதியாக ஈடுபடுபவர்கள் ஆழ்ந்த நடை இல்லாமல் அக்கப்போர் நடைக்கு பழகிவிடும் அபாயம் உண்டு.
புனைவு எழுத விரும்புபவர்கள் புனைவைத்தான் நிறைய வாசிக்கவேண்டும். ஆனால் வணிக எழுத்தை நிறைய வாசித்தால் அது ஒட்டுமொத்தமாக உருவாக்கியிருக்கும் நடை, அதன் கற்பனைமுறை ஆகியவற்றுக்கு மனம் பழகிவிடநேரிடும். வணிக எழுத்தையும் வாசிக்கவேண்டும். ஆனால் சூழலின் சிறந்த புனைவுகளிலேயே உள்ளம் தோய்ந்திருக்கவேண்டும்.
அதுவே எழுத்துக்கும். எல்லாவகை எழுத்திலும் ஈடுபடலாம். குறிப்புகள் எழுதலாம். மொழியாக்கம் செய்யலாம். எல்லாமே மொழிப்பயிற்சிதான். ஆனால் புனைவல்லாத கடினமான தத்துவ – கோட்பாட்டு நூல்களை மிகுதியாக மொழியாக்கம் செய்தால் காலப்போக்கில் நடை கெட்டிதட்டிப்போய்விடும்.
புனைவுநூல்களை மொழியாக்கம் செய்யலாம். ஆனால் அதுகூட எல்லைக்குட்பட்டே செய்யவேண்டும். இல்லையேல் மொழியாக்க நடையே தன் புனைவுக்கும் வரும். அப்படி வீணாகிப்போன பலர் உண்டு.
மொழியாக்கம் உட்பட அனைத்தையுமே தன் புனைவுமுயற்சிக்கு துணையாக அமையும்படி, ஓர் எல்லைக்குள் நிறுத்திக்கொள்வதே உகந்தது. இப்படிச் சொல்கிறேன், எப்போதுமே தன் சொந்தப்புனைவு ஒன்றை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். ஊடாக அவ்வப்போது மொழியாக்கங்கள் செய்யலாம். அதில் புனைவு மிகுதியாகவும் மற்றவை குறைவாகவும் இருத்தல் நன்று.
ஜெ