அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-11

[ 11 ]

ஹொஸ்பெட்டை அணுகியதுமே அவளிடம் சட்டையை கழற்றி வீசச்சொன்னேன். முண்டாசையும் அவிழ்த்துவிட்டாள். ரயில்நிலையம் செல்வது ஆபத்து என்று தெரியும். இரவில் செல்லும் ரயில் ஒன்றே ஒன்றுதான். முதல் பஸ் விடிந்தபிறகுதான். வெளிச்சத்தில் ஹொஸ்பெட்டில் நின்றிருப்பது தற்கொலைத்தனமானது. லாரிதான், வேறு வழியே இல்லை. வெங்காய லாரிகள் பெல்லாரிக்குச் சென்றுகொண்டே இருக்கும். பெல்லாரியிலிருந்து திரும்பும் லாரிகள் இருந்தால் நல்லது.

சைக்கிளை அங்கிருந்த ஒரு கடை முன் நிறுத்தி வைத்தேன். அதற்கு பூட்டெல்லாம் இல்லை. ஆனால் எவரும் எடுத்துப் போக வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு பெயின்ட் சிந்தியிருந்தது. அரைக்கிலோமீட்டர் தூரத்திலேயே எவருடைய சைக்கிள் என்று தெரிந்துவிடும்.

நான் அவளிடம் “என் பின்னால் நின்றுகொள். சாலையில் போகிறவர்கள் உன்னைப் பார்க்கக்கூடாது” என்றேன்.

“சரி” என்றாள்.

லாரிகள் அதிகமாக கண்ணுக்குப் படவில்லை. பெல்லாரி செல்லும் லாரிகள் ஓரிரண்டு முகப்பு வெளிச்சத்தை வாரி வீசியபடிச் சென்றன.

ஒரு லாரி அங்கிருந்து வந்தது. நான் வெளிச்சத்திற்குச் சென்று கைகாட்டினேன். பழைய லாரி உதறியபடி நின்றது. டிரைவர் ஏதோ சொல்ல க்ளீனர் இந்தியில் “என்ன?” என்றான்.

“ஒரு சாவு… அவசரமாகப் போகவேண்டும்… பஸ் காலையில்தான். எங்களை கொப்பலில் விட்டுவிட முடியுமா? இந்த வண்டி எங்கே போகிறது?”

“நாங்கள் கதக் வரை போகிறோம்”

“கொப்பலில் பஸ் இல்லை என்றால் நாங்கள் கதக்கில் இறங்குகிறோம்… பணம் தருகிறோம்.”

“யார் இறந்தது?”

“இவள் அப்பா. என் மாமனார்.”

“சரி ஏறிக்கொள்ளுங்கள்… இங்கே இடமில்லை. பின்பக்கம் ஏறிக்கொள்ள வேண்டும்..”

“பரவாயில்லை.”

“தலைக்கு ஐந்து ரூபாய் ஆகும், கதக் என்றால் பத்துரூபாய்.”

“சரி.”

நான் தொற்றி ஏறி அவளையும் பிடித்து ஏற்றிக்கொண்டேன். லாரி கிளம்பியதும் அவள் தடுமாறினாள். அவளை பிடித்து அமரச்செய்தேன்.

“நீங்களும் வருகிறீர்களா?” என்றாள். ஆனால் ஆச்சரியமில்லாமல் அதைக் கேட்டாள்.

“வரும்போது அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால் உன்னை எப்படி லாரியில் தனியாக ஏற்றிவிடுவது? இவர்களிடம் என்ன சொல்லமுடியும்?”

அவள் “ஆமாம்” என்றாள்.

”கொப்பல் போகும்போது விடியவில்லை என்றால் அப்படியே கதக் போய்விடலாம்… அங்கிருந்து ஹைதராபாதுக்கு பஸ் இருக்கும். ஹைதராபாதில் இருந்து நேராகவே ராஜமந்த்ரி போய்விடலாம்”

“ஹைதராபாத் நெடுந்தூரம் அல்லவா?”

”ஆனால் பஸ் கண்டிப்பாக இருக்கும்… இங்கே பாதிப்பேர் தெலுங்கர்கள்… அவர்கள் ஹைதராபாத் போய்க்கொண்டே இருப்பார்கள்”

லாரி சீராக ஓடிக்கொண்டிருந்தது. நான் நிம்மதியாக உணர்ந்தேன். லாரியில் காய்கறி மூட்டைகள்போல ஏதோ இருந்தன. நான் அவற்றில் அமர்ந்து கைகலை நீட்டி உடலை நிமிர்த்திக்கொண்டேன். அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்தது களைப்பாக இருந்தது. அவள் நின்றுகொண்டே இருந்தாள். லாரி திரும்பியபோது தடுமாறியபின் அமர்ந்துகொண்டாள்.

“வேண்டுமென்றால் படுத்துக்கொள்” என்றேன். “தப்பிவிட்டோம் என்று நினைக்கிறேன்.”

”ஆமாம், எனக்கு கிளம்பும்போதே தப்பிவிட்டேன் என்ற எண்ணம் வந்துவிட்டது.”

“ஆமாம்” என்று கொட்டாவி விட்டேன்.  அமைதி தூக்கத்தைக் கொண்டுவந்தது. அல்லது அந்த நீண்டநேர பாட்டின் நிறைவு தூக்கமாக மாறியது. மேலே நிலவு கூடவே வந்துகொண்டிருந்தது. அண்ணாந்து அதைப் பார்த்தேன். அது இப்போது வேகமாக, வீசப்பட்ட வாள் போல முகில்களை வெட்டிக்கொண்டு பாய்ந்தது.

அவளும் அண்ணாந்து நிலவைப் பார்த்தாள். “நாளைதான் முழுநிலவு என்று நினைக்கிறேன்” என்றாள்.

“ஆமாம்” என்றேன்.

அத்தனை தூரம் பாடியபின் பேச்சு பொருளில்லாததாக ஆகிவிட்டிருந்தது. இருவரும் வெறுமே நிலவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.

நான் அப்படியே மல்லாந்து படுத்து தூங்கிவிட்டேன். கொப்பலில் லாரி நின்றபோதுதான் விழித்தேன். கிளீனர் உள்ளிருந்து எம்பி எட்டிப்பார்த்து என்னிடம் “பஸ் ஸ்டாண்டில் விளக்கே இல்லை” என்றான்.

“கதக் போகலாம்” என்றேன்.

”மொத்தம் இருபது ரூபாய் ஆகும்” என்றான்.

“சரி” என்றேன்.

“பணம் இப்போதே வேண்டும்”

நான் இருபது ரூபாய் கொடுத்தேன். கிளீனர் “யார் இறந்தது?” என்றான்.

“என் மாமனார்”

லாரி கிளம்பியது. அவள் தூங்காமலிருப்பதை கண்டு மெல்லிய குரலில் “விழித்துக் கொண்டாயா?” என்றேன்.

“தூங்கவே இல்லை” என்றாள்.

“என்ன செய்தாய்?”

“சும்மா, நிலவை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பாட்டுதான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த முகில், இந்த முகில்…”

“தூங்கு.”

அவள் புன்னகைத்து “பரவாயில்லை” என்றாள்

“தூங்குடி” என்றேன். “நாம் நீண்டதூரம் போகவேண்டும்”

“பரவாயில்லை. இந்த ஓர் இரவு எனக்கு இருக்கட்டும்”

“என்ன?” என்றேன் புரியாமல்.

“ஒன்றுமில்லை, தூங்குங்கள்” என்று சொல்லி புன்னகையுடன் என் கால்களை தட்டி தமிழில் “தாச்சுக்கோ பாப்பா” என்றாள்.

நான் புன்னகை செய்தேன். ஆனால் எதுவும் பேசமுடியாமல் தூக்கம் வந்து அழுத்தியது.

கதக் சென்றடைந்தபோது வானத்தில் வெளிச்சம் சிவப்பாக படர ஆரம்பித்திருந்தது. பறவைக் குரல்கள் லாரியை தொடர்ந்து வந்தன. பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகள் முன்விளக்கு எரிய நின்றிருந்தன.

இறங்கியதும் கிளீனர்  “எனக்கு இரண்டு ரூபாய் கொடுங்கள் சாப்” என்றான்.

நான் அவனுக்கும் பணம் கொடுத்தேன். பையை நான் எடுத்துக்கொண்டேன். அவள் என் பின்னால் வந்தாள். “டீ சாப்பிடலாம்” என்றேன்.

ஒரு சிறிய டீக்கடையில் அரிக்கேன் விளக்கொளியில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் அனைவரும் அவளையே பார்த்தனர். டீக்கு சொன்னோம். அவள் குவளைநீரை எடுத்துச்சென்று முகம் கழுவி வந்தாள்.

அவள் கன்னத்தில் மென்மயிர் நீளமாக படிந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை இழந்து கொண்டிருக்கிறேன். எப்போதைக்குமாக. அந்த எண்ணம் திக்கென நெஞ்சை அடைத்தது. அந்த தருணத்தை ஒத்திப்போடத்தான் அவளுடன் கூடவே இத்தனை தூரம் வருகிறேனா?

அவள் கிராமத்துக்காரிகளைப் போல டீ டம்ளரை சுழற்றிச் சுழற்றி டீ குடித்தாள். கண்ணிமைகள் சற்றே வீங்கியமையால் கண்கள் இன்னும் பெரிதாக தெரிந்தன. அப்போது குழந்தைபோல, அத்தனை பரிசுத்தமாக தெரிந்தாள். அவளை அணைத்துக்கொள்ளவேண்டும் போலிருந்தது.

நான் கையை மெல்ல நகர்த்தி அவள் கையில் என் கை படுவதுபோல வைத்துக்கொண்டேன். அவள் திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தபின் என் கையை மெல்ல பற்றிக்கொண்டாள். அந்தரங்கமான ஒரு தழுவல் அது. தழுவல்கூட அத்தனை உணர்ச்சிகரமாக இருக்குமா என்ன?

நினைத்ததைப் போலவே ஹைதராபாத் பஸ் அங்கே நின்றது. பஸ்ஸில் நான்கு பேர்தான் ஹைதராபாத் டிக்கெட் எடுத்தார்கள். கண்டக்டர் செல்லும் வழியை விளக்கினார். ஒரே டிக்கெட் எடுத்தால் போதும் ஆனால் வேறுவேறு பஸ்களில் மாறி ஏறவேண்டும். பாகல்கோட், விஜயபுரா, ஷோலாபூர் ஆகிய இடங்களில் வேறு பஸ்ஸில் ஏறிக்கொள்ள வேண்டும். மறுநாள் விடியற்காலை ஐந்தரை மணிக்கு ஹைதராபாத். ஷோலாப்பூரில் இரண்டு மணிநேரம் இடைவேளை உண்டு.

பஸ்ஸில் அவள் சன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். நான் அருகே அமர்ந்தேன். நீண்ட பயணம் ஒன்று தொடங்கவிருக்கிறது. இந்நேரம் நான் இல்லை என்பதை கண்டுபிடித்திருப்பார்கள். எல்லாம் வெட்டவெளிச்சமாகியிருக்கும். கோதண்டம் அண்ணா தையல் இலாகாவின் பொறுப்பை ஏற்றிருப்பார். ரங்கா ரெட்டிக்கே தெரிந்திருக்கும், என்ன நடந்தது என்று. ஆனால் நான் அனைத்திலிருந்தும் என்னை துண்டித்துக் கொண்டிருக்கிறேன். பறவைபோல சிறகு விரித்து பறந்துவிட்டேன். இனி என்னை பிடிக்க முடியாது.

பஸ் கிளம்பியதும் மிகமிக இதமான ஓர் உணர்வு ஏற்பட்டது. மகிழ்ச்சி அல்ல, ஒரு வகையான சொகுசான, மிதப்பான, இனிமையான உணர்வு. இங்குள்ள எதனுடனும் தொடர்பில்லை என்பதுபோல. அவளுடைய கூந்தலிழைகள் காற்றில்பறந்து என் முகத்தில் பட்டன. அவள் புன்னகையுடன் அவற்றை எடுத்து தன் காதருகே செருகிக்கொண்டே இருந்தாள்.

அந்த அசைவு ஒவ்வொரு முறையும் என் மனதை அதிரச்செய்தது. அவள் கழுத்தின் நீளம்தான் அந்த நளினத்தை உருவாக்குகிறது. நீளமான கழுத்துகொண்ட பெண்கள் திரும்பிப்பார்க்கையில் எல்லாம் அதை நடனமாக ஆக்கிவிடுகிறார்கள்.

அவள் ஒரு விளம்பரத்தை சுட்டிக்காட்டினாள். புவ்வுல சூரிபாபுவின் புராண நாடகம் ’ஜெகதலப் பிரதாபன்’ அங்கே நடிக்கப்படவிருப்பதை தெரிவித்தது.

“இங்கே பாதிப்பேர் தெலுங்கர்கள்தான்” என்று நான் சொன்னேன்.

“சூரிபாபுவை ஒருநாள் சந்திக்கவேண்டும்” என்றாள்.

“அய்யோ, நான் நினைக்காத நாளே இல்லை. ஆனால் சந்தித்தால் அழுதுவிடுவேன்…” என்றேன்.

”நான் அவர் நாடகங்களைப் பார்த்ததே இல்லை. பாட்டு கேட்டது மட்டும்தான். அதுவும் சென்னப்பட்டினத்தில் எங்கள் குப்பத்திற்கு பக்கத்தில் ஒரு ஆந்திரா ஓட்டலில் பிளேட் போடுவார்கள். அதைக்கேட்பேன்.”

“அங்கே ஆந்திர ஓட்டல் இருக்கிறதா?”

“பின்னே? நிறைய ஓட்டல்கள்… அங்கே எல்லாருமே ஆந்திராதான். நிறையபேர் கட்டிடவேலை செய்பவர்கள். பெரும்பாலும் ஆண்கள் ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள். அங்கே மலிவுச்சோறு உண்டு. சோறு பருப்புப்பொடி ஆவக்காய் ஊறுகாய், அவ்வளவுதான். ஆனால் நன்றாக இருக்கும். ஒரு சோறு வாங்கினால் நானும் என் அம்மாவும் சாப்பிடமுடியும்.”

”அவர் உன் அம்மா இல்லை என்றாய்”

”ஆமாம், ஆனால் அம்மா என்றுதான் நான் அழைப்பது” என்றாள். “அவளுக்கு பேராசை. ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டவள். அவள்மேல் ஒருவன் கொதிக்கும் சாம்பாரை கொட்டிவிட்டான். அவளுடைய கழுத்தும் இடது தோளும் வெந்து சிவப்பாக இருக்கும். அதன்பிறகு அவளுக்கு வருமானமே இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டாள்.”

“நீ எதுவரை உன் ஊரில் இருந்தாய்?”

“நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் அம்மா என்னை இந்த அம்மாவுக்கு கொடுத்தாள்.”

“ஐந்தாம் வகுப்புதான் படித்திருக்கிறாயா?”

“ஆமாம். எனக்கு பள்ளிக்கூடம் போக மிகவும் பிடிக்கும். மிகவும் சந்தோஷமாக இருக்கும்.”

அவள் அதுவரை அவளிடமிருந்த கட்டுப்பாடுகளை இழந்து பேசிக்கொண்டே இருந்தாள். அவளுடைய ஊர், அங்கிருக்கும் ஒரு சிற்றாறு, பள்ளிக்கூடம், தோழிகள், கோதாவரியின் அகலம், அது கடலுடன் கலக்குமிடத்தில் இருக்கும் ஒரு கனகதுர்க்கா ஆலயம்…

பேசிப்பேசி அவளே அந்த பேச்சில் அடித்துச் செல்லப்பட்டாள். தலையை ஆட்டி ஆட்டி கைகளை விதவிதமாக அபிநயம் பிடித்து, நீண்ட விழிகள் உருண்டு உருண்டு உடன் நடிக்க, அவள் பேசுவதை நான் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பெண்கள் திருமணம் ஆனபின்னர் சிலநாட்கள் கணவனிடம் அப்படி பேசித்தள்ளுவார்கள் என்று சலம் எழுதிய ’தெய்வமிச்சின பாரியா’ என்ற நாவலில் வாசித்திருந்தேன். அதுவரைக்கும் அவர்களுக்கு பேச உரிமையில்லை. பிறந்தவீட்டில் நிறையப் பேசினால் பெண்கள் பேசக்கூடாது என்று அடக்குவார்கள். சேர்த்து வைத்த அனைத்தையும் பேசிப்பேசித் தீர்ப்பார்கள். அது தனக்கே உரியவன் என்று ஒருவன் அமைந்ததனால் பேசுவது என்று சலம் எழுதியிருக்கிறார். ஆனால் அவர்கள் பேசிப்பேசி தங்களை வரைந்துகொள்கிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் மறுபிறப்பு எடுக்கிறார்கள், காதலிகளாகவும் மனைவிகளாகவும்.

அவள் மிகவிரிவாக தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தாள். தன்னுடைய குழந்தைப் பருவம் முதல் அன்றுவரையிலான வாழ்க்கையில் இனிதான அனைத்தையும் நினைவு கூர்ந்து அவற்றை மட்டுமே கொண்டு ஒரு வாழ்க்கையை பின்னி உருவாக்கினாள். “அய்யோ, அப்படி இருக்கும் தெரியுமா!” என்று வியந்தாள். “அப்பாடி, அப்டி ஒரு சந்தோஷம் அன்றைக்கு!” என்று நெஞ்சில் கைவைத்து மருகினாள். “என்ன ஒரு கிறுக்குத்தனம்… அப்போதெல்லாம் அப்படி இருந்தோம்!” என்றாள்.

பிறகு பேச்சு ஓய்ந்து அப்படியே என் தோளில் தலைவைத்து தூங்கினாள். அவள் தலைமுடி பாதி அவிழ்ந்து என் தோளில் இருந்து மடிவரை சுருள்களாக தொங்கியது. அவ்வப்போது அவள் அசைந்தபோது நான் அவள் தோளை அணைத்தேன். சில தருணங்களில் அவளை எழுப்பி அமரச்செய்தேன். ஒருமுறை அந்த முடிச்சுருளை தொட்டேன். அதன் மென்மையை என் கையில் நெஞ்சில் உணர்ந்தேன். மெல்ல வருடிக்கொண்டிருந்தேன்.

வழியில் பாகல்கோட்டில் இறங்கி ஓட்டலில் டிபன் சாப்பிட்டோம். மதியம் சாப்பாடு விஜயபுராவில். அவள் “அய்யோ, இங்கே பாயசம் கிடைக்கிறது! பாயசம் உண்டு!” என்றாள்.

“சத்தம் போடாதே” என்றேன்.

“எங்களூரில் ஒரு வாழைப்பழம் உண்டு… அந்தப்பழத்தை பாயசத்தில் பிசைந்து சாப்பிடலாம். தயிர்சாதத்தில்கூட பிசைந்து சாப்பிடலாம்” என்றாள்.

“இங்கே அப்படியெல்லாம் சாப்பிடமாட்டார்கள்… சும்மா இரு” என்றேன்.

“இங்கே தெலுங்கர் இருந்தால் சாப்பிடத்தான் செய்வார்கள்.”

“பேசாமல் இரு” என்றேன் பல்லைக் கடித்துக்கொண்டு.

பஸ்ஸில் ஏறியபோது உம் என்று இருந்தாள்.

“என்ன?” என்றேன்.

“ஒன்றுமில்லை”

“என்ன?” என்று உரக்க கேட்டேன்.

கண்களில் நீருடன் “ஒன்றுமில்லை” என்றாள். முகத்தை கூம்பவைத்துக்கொண்டு தலைகுனிந்தாள்.

“வாழைப்பழம் வேண்டும், அவ்வளவுதானே?”

“இல்லை”

நான் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடி அங்கிருந்த கடையில் தேடி கோதாவரி வாழைப்பழத்தை கண்டுபிடித்து வாங்கிக்கொண்டு வருவதற்குள் பஸ் கிளம்பிவிட்டது. ஓடிப்போய் ஏறிக்கொண்டேன்.

“விழுந்து சாகவா வந்தாய்? அறிவுகெட்ட முண்டம்” என்றார் கண்டக்டர்.

“என்ன இது? நான் பதறியே போய்விட்டேன்” என்று அவள் சொன்னாள்.

“நீதானே கேட்டாய்?”

“நான் கேட்டேனா?”

“சரி அப்படியென்றால் வேண்டாமா? வீசிவிடலாமா?”

“அய்யோ” என்று அதை வாங்கிக்கொண்டாள். ஒரு வாழைப்பழத்தை எனக்குத் தந்தாள். உண்மையிலேயே அது கோதாவரியின் சுவைகொண்டிருந்தது. ஒருவாய் சுவையிலேயே ஆந்திர மண் நெருக்கமாக வந்துவிட்டது.

ஷோலாப்பூரை அடைந்தபோது ஒன்பது மணி ஆகிவிட்டது. இரண்டு மணிநேரம் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்கவேண்டும். அப்போது ஓட்டல்கள் ஏதும் இல்லை. ஆனால் பஸ் ஸ்டாண்டில் அப்படி காத்திருப்பவர்கள் பலர் இருந்தனர். சைக்கிளில் பெட்டி வைத்து கட்டி ஆப்பம் கொண்டுவந்து விற்றார்கள். அதை சாப்பிட்டோம்.

அவள் மிகவும் தூக்கக் கலக்கமாக இருந்தாள். “எப்போது வண்டி வரும்?” என்று சிணுங்கினாள்.

“வரும்” என்றேன்.

அதற்குள் அவ்வளவு நடித்துவிட்டேன். கவலை கொண்ட கணவனாக, பொறுப்பான குடும்பத்தலைவனாக, கடுகடுப்பானவனாக, அன்பானவனாக. அவளும் அறியாமல் அந்த நடிப்பில் இருந்தாள். நாங்கள் நெடுங்காலமாக அப்படி வாழ்க்கையென்னும் பயணத்தில் சென்றுகொண்டிருப்பவர்கள். நெடுங்காலம் வாழ்ந்து, ஒருவருக்கொருவர் நன்கறிந்து,  தம்பதிகளுக்குரிய சலிப்பையும் அடைந்துவிட்டவர்கள்.

ஹைதராபாத் பஸ் வந்து நின்றது. டிக்கெட்டை காட்டி ஏறிக்கொண்டோம். அவள் “நான் இந்தபக்கம் உட்கார்ந்துகொள்கிறேன்… அங்கே காற்று” என்றாள்.

”சரி” என்றேன்.

உட்கார்ந்ததுமே அவள் என் மேல் சாய்ந்து தூங்கினாள். பிறகு சரிந்து என் மடி மேலேயே தலையை வைத்துக்கொண்டாள்.

நான் அவள் தோளில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தேன். வெளியே விண்மீன்கள் நிறைந்த வானம் உடன் வந்துகொண்டிருந்தது. வெண்சுடர் விடும் முழுநிலவு. அன்று பௌர்ணமி.

அந்த இரவு முழுக்க அந்தப் பாட்டுதான் ஓடிக்கொண்டிருந்தது. “அந்த முகில் இந்த முகில்”. அவள் கன்னத்தில் கையை வைத்தேன். மலர்மடலில் தொடுவதுபோலிருந்தது. மிக மென்மையான முகப்பருக்கள். உதடுகளின் மென்மையே சுருக்கங்களாக ஆன பரப்பு. உதடுகளின் இரு விளிம்புகளிலும் தொடுகையில் மட்டும் உணரக்கூடிய மென்மயிர். அவள் கூந்தலில் இருந்து கலைந்து அலைந்த மயிரிழைகளை எடுத்து காதருகே செருகினேன். மிகமெல்ல, தொட்டேனா இல்லையா என்பதுபோல அவள் கூந்தலை வருடினேன். அத்தனைதூரம் மனம் மென்மையானாலொழிய அப்படித் தொடமுடியாது.

ஹைதராபாதை அடைந்தபோதுதான் விழித்துக்கொண்டேன். நன்றாக விடிந்துவிட்டது. அசந்து தூங்கியிருக்கிறேன். ஆனால் தூக்கத்திலும் அந்தப்பாடலே ஓடிக்கொண்டிருந்தமையால் விழித்திருந்ததுபோலவே தோன்றியது.

ஹைதராபாதிலிருந்து ராஜமந்திரிக்கு மதியம்தான் பஸ் இருந்தது. அதுவும் குண்டூர் போய் இரண்டுமணி நேரம் கழித்து ராஜமந்திரி செல்லும். அதுவும் நல்லதுதான் என்று தோன்றியது. மறுநாள் விடியற்காலையில்தான் ராஜமந்திரி வரும்.

பஸ் ஸ்டாண்டிலேயே கழிப்பறையும் குளியலறையும் இருந்தன. அருகே இருந்த ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டோம். நான் அதற்கு முன் ஹைதராபாத் வந்ததில்லை. அத்தனை பெரிய ஊரின் பரபரப்பும் ஓசையும் என்னை பதற்றம் கொள்ளச் செய்தன. வெளியே சென்றால் தொலைந்து விடுவோம் என்று தோன்றியது. பஸ் ஸ்டாண்டிலேயே அமர்ந்திருந்தோம். இருவருமே களைத்திருந்தோம்.

ஆரம்பத்தில் இருந்த பதற்றமெல்லாம் விலகிவிட்டது. அந்தப் பரவசமும் கிளர்ச்சியும்கூட குறைந்துவிட்டது. யதார்த்தமாக, தேவைக்கு மட்டும் பேசிக்கொண்டோம். இயல்பாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஒருவரை ஒருவர் சாதாரணமாகத் தொட்டுக்கொண்டோம். அவள் என் மடியில் படுத்தாள். தோளில் சாய்ந்தாள். நான் அவளுடைய உள்ளாடை வெளியே தெரிந்திருந்ததை பிடித்து உள்ளே தள்ளி வைத்தேன். உண்மையிலேயே சலித்துவிட்டோமா? இல்லை, ஒருவரை ஒருவர் கொஞ்சமாவது தொட்டுக்கொண்டிருக்க விரும்பினோம்.

அவள் என்னிடம் உரிமை எடுத்துக்கொண்டாள். நான் கடையில் ஒரு புட்டி வாங்கி அதில் குடிக்க தண்ணீர் பிடித்து வந்தேன். அதை அவள் அருகே வைத்தபோது அவள் ஆடையின் விளிம்பின் மேல் வைத்துவிட்டேன். அவள் அறியாமல் எழுந்தபோது அது சரிந்து தண்ணீர் கொட்டியது. அவள் சலிப்புடன் “அய்யோ” என்று தலையில் அடித்துக்கொண்டாள். “பார்க்க மாட்டீர்களா?”

“பார்க்கவில்லை” என்றேன்.

“எதையுமே பார்ப்பதில்லை. அப்படியே வேடிக்கை பார்க்க மட்டும் தெரிகிறது” என்றாள்.

“ஏன் நீ பார்ப்பதுதானே?”

”சொல்லிக்கொண்டே இருக்கிறேன், கேட்பதில்லை. நான் என்ன செய்ய?”

“ஒன்றும் செய்யவேண்டாம், பேசாமல் வாயைமூடிக்கொண்டு வா”

நான் அவள் மேல் அவ்வப்போது எரிச்சல் அடைந்தேன். அதட்டிப் பேசினேன். “அந்த பஸ் எப்போது வரும்” என்று அவள் நான்காம் தடவையாக கேட்டபோது “வந்தால் சொல்வார்கள். சும்மா இரு, தொணதொணவென்று பேசாதே” என்றேன்.

ஆனால் அந்த சலிப்பும் எரிச்சலும் மிக இயல்பாக இருந்தன. அவை எங்களைப் புண்படுத்தவில்லை. முன்பிருந்த மனக்கிளர்ச்சியை விட அவை எங்களை மேலும் அணுக்கமானவர்களாக ஆக்கின.

மதியம் சென்று ஓட்டலில் சாப்பிட்டோம். ஆவக்காயை அள்ளிப் போட்டு பிசைந்து சோற்றை உண்டாள். அது ராஜ்மந்திரிப்பக்கம் உள்ள பழக்கம். எங்களூரில் அதை கேலி செய்வார்கள். நான் அவளிடம் “மெல்ல சாப்பிடு” என்றேன்.

“ஏன்?” என்றாள்.

”சும்மா.”

அவள் கொஞ்சம் படுக்க விரும்பினாள். நான் ஒரு செய்தித்தாள் வாங்கி விரித்து அவளை படுக்க வைத்தேன். தலைமாட்டில் அமர்ந்து பஸ் ஸ்டாண்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மாமா என்னை துரத்திவந்து அங்கே பிடித்துக் கொண்டால் என்ன செய்வேன் என்று யோசித்தேன். அப்படி ஒரு பெண்ணுடன், அந்த அன்னிய இடத்தில். ஆனால் அப்போது எவருமே எங்களை தனியாகக் கவனிக்கவில்லை. எவருக்கும் நாங்கள் கணவன் மனைவி என்பதில் சந்தேகம் வந்திருக்காது.

ஹைதராபாத் பேருந்தில் ஏறிக்கொண்டபின் நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. மிகமிக விலகி வந்துவிட்டிருந்தோம். ஹம்பி, சென்னை எல்லாமே எங்கோ கிடந்தன.

“இது எப்போது ராஜமந்திரி போகும்?” என்று அவள் கேட்டாள்.

“நாளை காலை ஐந்து மணிக்கு.”

“ம்” என்றாள். ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். கைகளை மார்பில் கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

அவளை சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். முகவாய்க்குமிழ் பளபளவென்றிருந்தது. கழுத்தின் மெல்லிய வரிகள் தளிர்க்கோடுகள். மூச்சில் கழுத்துக்குழி அசைந்தது.

என்ன ஒரு மென்மை, உயிர்ப்பரப்புக்கு மட்டுமே உள்ள மென்மை. உயிர் தன்னை மென்மையென ஒளியென வெளிப்படுத்துகிறது. இதை மட்டும் எத்தனை முறை நினைத்துவிட்டேன்! இந்த மென்மையை எப்படி அனுபவிப்பது? எப்படிக் கொண்டாடுவது? முத்தமிடலாம். ஆனால் அதைவிட இப்படி பார்த்துக்கொண்டிருக்கலாம். இது கண்களால் முத்தமிடுதல். நெஞ்சத்தால் முத்தமிடுதல்.

ஹைதராபாத் முதல் ராஜமந்திரி வரை பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதான் இருந்தோம். ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்து விழுந்தும் எழுந்தும். அவளுடைய எச்சில் என் மடியில் சொட்டி நனைந்திருந்தது. எழுந்து வாயை துடைத்துக்கொண்டு அதைப் பார்த்தாள். ஒன்றும் சொல்லாமல் “இன்னும் எவ்வளவு தூரம்?” என்றாள்.

“விஜயவாடாவே வரவில்லை” என்றேன்.

விஜயவாடா நள்ளிரவில் வந்தது. கிருஷ்ணாவின் மேல் பாலத்தில் பஸ் சென்றபோது காற்று அறைந்து வீசி அவள் கூந்தலை என் மேல் அள்ளிப்பரப்பியது. அதை பிடித்து அள்ளி சுருட்டி முடிச்சுபோட்டு வைத்தேன். அவள் சலிப்புடன் உச் கொட்டி அசைந்து படுத்தாள்.

”விஜயவாடா வந்துவிட்டது. வண்டி கொஞ்சநேரம் நிற்கும்… எதாவது சாப்பிடலாம்” என்றேன்.

“வேண்டாம், எனக்கு பசியில்லை” என்றாள்.

நான் ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கினேன். அதை இருவரும் சாப்பிட்டோம். நான் புட்டியில் தண்ணீர் பிடித்து வந்தேன்.

மீண்டும் வண்டி கிளம்பியதைக்கூட நான் அறியவில்லை. பின் கம்பியில் தலைசாய்த்து ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். அவள் கனவில் வந்தாள். ஆடை இல்லாமல் நின்றுகொண்டிருந்த பஸ்ஸில் ஏறி வந்து என் அருகே அமர்ந்தாள். அவள் நிர்வாண உடலை மிக நுணுக்கமாக, மிக அருகே பார்த்தேன். அவள் ஆடையில்லாமல் இருப்பது எனக்கு தவறாகத் தோன்றவுமில்லை. அவள் மார்பகங்களின் மேல் அக்குளுக்கு அருகே மென்சதை மடிந்து சிறு குமிழிகளாக இருந்தது. அதை மெல்ல தொட்டேன், “அய்யோ” என்றாள்.

விழித்துக்கொண்டேன். ராஜமந்திரி நெருங்கி வருகிறது என்று எனக்கு தோன்றியது. அந்தப்பகுதியே எனக்கு புதியது. கைகாரம் என்ற ஊரில் சிலர் இறங்கினார்கள். நான் கண்டக்டரிடம் “ராஜமந்திரி எப்போது வரும்?” என்றேன்.

“மூன்று மணிநேரம்…. அல்லது நான்குமணிநேரம்.. மேலே கூட ஆகும்.”

நான் கால்களை நீட்டிக்கொண்டேன். நெருங்கிக்கொண்டிருக்கிறது முடிவு. அது எப்படி இருக்கும்? அவளிடம் நான் என்ன பேசப்போகிறேன்? பதற்றமாக படபடப்பாக இருந்தது. அப்போது அசட்டுத்தனமாக ஏதோ உளறப்போகிறேன் என்று தோன்றியது.

ஆனால் எல்லாரும்தான் உளறுவார்கள். வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் எல்லாமே முன்பின் பழக்கமில்லாதவையாக இருக்கின்றன. என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒருவருக்கு நிகழ்வது இன்னொருவருக்கு நிகழ்வதில்லை. ஒருமுறை நிகழ்ந்தது இன்னொருமுறை நிகழ்வதில்லை. எவரும் எதையும் முன் அனுபவத்தைக்கொண்டு செய்யமுடியாது. எந்தப் பயிற்சியும் எடுத்துக்கொள்ள முடியாது. ஒருமுறை நிகழ்ந்தது எப்போதைக்குமாகத்தான். திருத்திக்கொள்ளவே முடியாது.

அவள் தோளில் கைவைத்தபோது அவள் தூங்கவில்லை என்ற உணர்வு ஏற்பட்டது. குனிந்து பார்த்தேன். அவள் விழிகள் இமைகளுக்குள் உருண்டுகொண்டிருந்தன. உதடுகள் ஜிகினாத்தாள் போல உலர்ந்து ஒட்டியிருந்தன.

அவளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. தூங்கவில்லையா என்று கேட்கலாம். ஆனால் நான் பேசாமலிருந்தேன்.

அவள் அப்படியே படுத்திருந்தாள். பின்னர் எழுந்து தலைமுடியை அள்ளி சுருட்டி கட்டிக்கொண்டாள். அந்தப் பையை காலருகே இழுத்துக்கொண்டாள்.

நான் “ராஜ்மந்திரி வருகிறது” என்றேன்.

”ஆமாம்” என்று அவள் சொன்னாள். அவள் கையை தூக்கியபோது இனிய வியர்வை மணம் எழுந்தது.

மீண்டும் பேச்சில்லாமல் அமர்ந்திருந்தோம். நான் “என் மாமாவுக்கு இந்நேரம் செய்தி சென்று சேர்ந்திருக்கும்” என்றேன்.

“அவர் கிளம்பி வருவாரா?” என்றாள்.

“இல்லை, கோதண்ட மாமாவே பார்த்துக்கொள்வார். கணக்கு சரியாகத்தான் இருக்கும். நான் ஐநூறு ரூபாய்தான் எடுத்துக்கொண்டேன்”

”ஐநூறு ரூபாயா?”

”ஏன்?”

“பெரிய தொகை.”

“அவருக்கு அது பெரிய தொகை இல்லை.”

“நீங்கள் எப்படி போகிறீர்கள்?” என்றாள்.

“ராஜமந்திரியில் இருந்து ஓங்கோலுக்கு பஸ் இருக்கும். மறுபடியும் விஜயவாடா வந்து குண்டூர் வழியாக போகவேண்டும்… ஒரு பகல் முழுக்க ஆகும்.”

“நீங்கள் விஜயவாடாவில் இறங்கியிருக்கலாமோ? வீண் அலைச்சல்.”

”பரவாயில்லை” என்றேன்.

அந்தப் பேச்சு இருவரையும் இயல்பாக்கியது. சாதாரணமாகப் பேசிக்கொண்டோம். சின்னச்சின்ன விஷயங்கள். எல்லாமே ராஜமந்திரி பற்றியவை. ஓங்கோல் பற்றியவை. நான் என் அம்மாவைப்பற்றிச் சொன்னேன். அப்பா சின்ன வயசிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். என்னை வளர்த்ததே தாய்மாமன்தான்.

“அவருக்கு துரோகம் செய்ததுபோல ஆகிவிட்டது இல்லையா?”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

“பரவாயில்லை. எல்லா இளைஞர்களும் செய்வதுதான்” என்று சிரித்தாள்.

நான் பலவீனமாகப் புன்னகை செய்தேன்.

ராஜமந்திரிக்கு தொலைவு காட்டும் கற்கள் கண்ணுக்குப் படலாயின. அந்த எண்களைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து வந்தது. அப்போது சந்தேகமில்லாமல் தெரிந்தது, அந்தப் பயணம் முடிவுக்கு வருகிறது. அவளை ஒருவேளை மீண்டும் பார்க்காமலாகிவிடவே வாய்ப்பு. ஆனால் அந்தப் பயணத்தில் நிறையவே தூங்கியிருக்கிறேன். நாவல்களில் என்றால் தூங்கவே மாட்டார்கள். கணம் கணமாக அந்த பகல்களையும் இரவுகளையும் அனுபவிப்பார்கள்.

ஆனால் தூங்கியதனால்தான் விழித்திருக்கையில் என் உள்ளம் அத்தனை கூர்மையுடன் இருந்தது. தூக்கத்தில் கனவுகள் வந்துகொண்டே இருந்தன. அந்தப் பயணத்தில் நிஜத்தைவிட கனவுகளே மேலும் தீவிரமானவையாக இருந்தன.

என் உள்ளம் கலைந்து கொண்டே இருந்தது. துயரங்களில் மனம் அடுக்குகலைந்து கிடப்பதுதான் பெரிய பிரச்சினை என அறிந்தேன். அதை அடுக்கிக் கொள்ளும் பொருட்டு அவளிடம் பேசினேன். ராஜமந்திரி பற்றி கேட்டேன். ஆனால் அவளுக்கு ராஜமந்திரி பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. அவள் அம்மா ராஜமந்திரிக்கு அனேகமாக தினமும் வந்துசெல்கிறாள். அவள் நாலைந்து முறை வந்திருக்கிறாள். ஆனால் ராஜமந்திரி அவளுக்கு பிடிக்காத ஊர்.

ராஜமந்திரியை நெருங்கியபோது மீண்டும் சொற்கள் மறைந்து அமைதி உருவாகியது. இருவரும் வெறுமே இருபக்கமும் ஓடிமறைந்த நிழலுருவங்களாகிய மரங்களை பார்த்துக்கொண்டிருந்தோம். வானில் நிலவு அர்த்தமில்லா ஜொலிப்பாக நின்றுகொண்டிருந்தது. விடிகாலைப்பனியில் பொன்னிறமாக இருந்தது அது. அது அனல்கொண்டு சிவந்திருக்கிறது என நினைத்தேன். அந்நினைப்பு ஒருபக்கம் இருக்க குளிர்காற்றில் நிலவின் ஒளி ஊறிக்கலந்திருப்பதை உடல் உணர்ந்தது.

கோதாவரிக்கு குறுக்காக அமைந்த பாலத்தில் பஸ் சென்றபோது காற்றில் அது பறந்து செல்வதுபோல தோன்றியது. பாலம் ஆர்ப்பரித்து முழக்கமிட்டது.மீண்டும் அவள் கொண்டை அவிழ்ந்து கூந்தல் எழுந்து பறந்தது. என் முகத்தின்மேல் பொழிந்த முடியிழைகளை அள்ளி ஒதுக்கினேன். அவள் தொகுத்து முடிச்சிட்டபடி “இது பெரிய தொந்தரவு” என்றாள்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

ராஜமந்திரிக்குள் நுழைந்தபோது விடியற்காலை ஆகியிருந்தது. பஸ் ஸ்டாண்டில் நிறைய பஸ்கள் நின்றன. உறுமியபடி முகப்பு வெளிச்சத்துடன் பல பஸ்கள் கிளம்பிச் சென்றன. எங்கள் பஸ் உலுக்கி அதிர்ந்தபடி சென்று நின்றது. டிரைவர் சாவியை எடுக்க அது உரக்க சீறி பெருமூச்சுவிட்டது

“ராஜ்மந்திரி… ராஜ்மந்திரி” என்று கண்டக்டர் குரலெழுப்பினார்

“வந்துவிட்டோம்” என்றேன். அப்போதுதான் அவள் சற்று தூங்கியிருப்பதை உணர்ந்தேன்

“ம்ம் ம்ம்” என எழுந்துகொண்டாள். வாயை துடைத்தபின் கூந்தலை அள்ளி பின்னாலிட்டாள்.

“தூங்கினாயா?”

“இல்லை.”

“பின்னே?”

“சும்மா” என்றாள்.

பஸ்ஸில் இருந்து இறங்கியதும் அந்த தரை வந்து என்மேல் அறைவதுபோலிருந்தது. டீசல்வாடை, சாக்கடை வாடை, அழுகிய இலைதழைகளின் வாடை. தாரிட்ட தரையின் சொரசொரப்பு.

நின்று கைகளை நீட்டி உடலை சோம்பல் முறித்தேன். வாய் திறந்து கொட்டாவி விட்டேன். உள்ளம் பரபரப்பு அடைந்திருந்தது. ஆனால் அந்தச் சலிப்பு நிறைந்த உடல்பாவனைகள் உள்ளத்தை கொஞ்சம் அமைதிப்படுத்தின.

“உன் ஊர் என்ன என்று சொன்னாய்?” என்றேன்.

“முனிப்பள்ளி…”

“பக்கமா?”

“பக்கம்தான்… பஸ்ஸில் அரைமணிநேரம்”

“அதற்கு காலையில் பஸ் உண்டா?”

”ஆமாம், எங்களுக்கு சந்தை இங்கேதான். சந்தைக்கு வந்துவிட்டு ஊருக்கு போவார்கள்… காலையிலேயே பஸ் உண்டு.”

”நான் ஏற்றிவிடுகிறேன்.”

“வேண்டாம், நீங்கள் கிளம்பி போங்கள். இனி நான் போவேன். எனக்கு பயமில்லை. பஸ்சுக்கான பணம் மட்டும் கொடுங்கள்.”

நான் அவளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தேன்.

“அய்யோ, இவ்வளவு எதற்கு?” என்றாள்.

“இருக்கட்டும்” என்றேன்.

“ஆமாம், அம்மா எதிர்பார்ப்பாள்” என்றபின் அவள் பணத்தை சுருட்டி மேலாடையில் முடிந்து இடுப்பில் செருகிக்கொண்டாள்.

“உன் ஊருக்கான பஸ் எங்கே வரும்?”

“இங்கே இல்லை. அந்தப்பக்கம் டவுன் பஸ் ஸ்டாண்ட்… இந்த சந்துவழியாக அங்கே போய்விடலாம்”

“வா உன்னை கொண்டுபோய் விடுகிறேன்”

“பரவாயில்லை, நானே போய்க்கொள்வேன்… நீங்கள் அங்கே வரவேண்டாம்.”

“ஏன்?”

“என்னைத் தெரிந்தவர்கள் இருப்பார்கள்…”

“உன்னை தெரிந்தவர்களா? இவ்வேளையிலா?”

“என் ஊரிலிருந்து நிறைய பெண்கள் ராஜமந்திரிக்கு சாயங்காலம் வருவார்கள். விடியற்காலையில் திரும்புவார்கள்…”

“எதற்கு?” என்றேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு மெல்லிய குரலில் “நான் வருகிறேன்” என்றாள்.

“ம்” என்றேன்.

அவள் அந்தப்பையுடன் நடந்து சென்று சந்தில் நுழைந்து மறைந்தாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் என நினைத்தேன். பார்க்கவில்லை. அவள் பின்பக்கத் தோற்றம் சிலகணங்கள்தான் தெரிந்தது. பின்பு மறைந்தது. நான் அங்கேயே வெறுமை நிறைந்த நெஞ்சுடன் நின்றிருந்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைதன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…
அடுத்த கட்டுரைசாவும் கருணையும்