[ 8 ]
நான் மாலையில்தான் ஹம்பியில் இருந்து திரும்பி வந்தேன். கிளம்பும்போது நரசிங்கனுடன் போய் துங்கபத்ராவில் குளித்தேன். திரும்பி வரும்போது பண்ணைவீட்டில் ஏதாவது நடந்திருக்கும் என்று கற்பனைசெய்து பதற்றத்தை உருவாக்கிக் கொண்டேன். ஆனால் ஒன்றுமில்லை. எல்லாம் வழக்கம்போல. ரங்கா ரெட்டியின் ஆட்கள் கண்காணிக்கிறார்களா என்று பார்த்தேன். வழக்கம்போல கண்காணிக்கப்படும் உணர்வு இருந்ததே ஒழிய எவரும் கண்ணுக்குப் படவில்லை.
தையல் கூடத்தில் வேலை வழக்கம்போல நடந்துகொண்டிருந்தது. ஷூட்டிங்குக்குப் போன ஆடைகளை கணக்கிட்டு திரும்பி வாங்கி அடுக்கினேன். அன்று தைக்கப்பட்டவற்றை பட்டியலிட்டேன். கணக்குகள் முடிக்கும்போது இரவு பத்துமணி ஆகிவிட்டது.
ஒன்பது மணிக்கே சாப்பாடு வந்துவிட்டது. நான் மதியமே நரசிங்கனுடன் நன்றாகச் சாப்பிட்டேன். மாலை கிளம்பும்போதும் மீண்டும் புரடக்ஷனில் இருந்து வந்த ஒப்பிட்டும் வடையும் காபியும் சாப்பிட்டேன். எப்போதுமே கலை இலாகாவில் நல்ல சாப்பாடுதான். ஆகவே இரவுச்சாப்பாடாக வந்த தோசையையும் வடையையும் அப்படியே கொண்டுவந்து வைத்துவிட்டேன்.
பத்தரை மணிக்கு கதவையும் சன்னல்களையும் உட்பக்கமாக மூடிவிட்டு அவளை அழைத்தேன். அவள் துணிக்குவியல்கள் மேல் தூங்கிக்கொண்டிருந்தாள். ஸீரோ வாட் பல்பு எரிந்துகொண்டிருந்த அறைக்குள் கொசுக்கள் சில பறந்து அலைந்து கொண்டிருந்தன.
“இவ்வளவுநேரம் தூங்கினாயா?”
“ஆமாம்” என்று புன்னகைத்தாள். “எனக்கு தூங்குவது ரொம்ப பிடிக்கும். எப்போதும் தூங்குவதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன்… “
”சாப்பிடு” என்றேன்.
அவள் தட்டை வாங்கி ஆவலுடன் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பாட்டிலும் இவளுக்கு ஆர்வம் அதிகம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.
“உன்னை இன்னும் தேடுகிறார்கள். இன்றைக்கு இரவும் நீ இங்கேயேதான் இருக்கவேண்டும். நீ பெல்லாரிக்கு போய்விட்டாய் என்று கொளுத்திப் போட்டுவிட்டேன். அது நாளைக்கு பரவினால் தேடுவது நின்றுவிடும். நீ நாளை இரவில் கிளம்பலாம்”
“சரி” என்றாள், அதில் அவளுக்கு அக்கறையே இல்லாததுபோல தோன்றியது. அவளுக்கு நன்றாகப் பசிக்கிறது என்று சாப்பிடும் விரைவில் இருந்தே தெரிந்தது. அதில்தான் அவள் கவனம் இருந்தது.
வெளியே ஓசைகள் அடங்கின. நெடுந்தொலைவில் ஒரு காரின் ஓசை. வெளிச்சம் சுழன்று சென்றது.
அவள் தட்டை வழித்து சாப்பிட்டபடி “இப்போது வெளியே நடமாட்டம் குறைந்திருக்கிறதா?” என்றாள்.
“ஆமாம்… நீ வெளியே போகவேண்டுமா?”
“ஆமாம்”
“நீ இந்த ஆடையில் வெளியே போனால் வித்தியாசமாக தெரியலாம்” என்றேன்.
”நான் போர்வையை நன்றாகபோர்த்திக்கொண்டுதான் போகிறேன்”
“சரி”
அவள் வெளியே சென்றுவிட்டு வந்தாள். எனக்கு தூக்கம் சொக்கிக்கொண்டு வந்தது. நாள் முழுக்க வெயிலிலோ பாறைகளின் வெக்கையிலோ நின்றிருக்கிறேன். வெம்மை தூக்கத்தை கொண்டுவருகிறது. குளிரும் தூக்கத்தை கொண்டு வருகிறது.
அவள் வந்து பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள். கூந்தலை தலையணைக்குமேல் தூக்கி போட்டு விட்டு சற்று ஒருக்களித்து என்னை நோக்கி “எங்கே போயிருந்தீர்கள்?” என்றாள்.
“ஷூட்டிங் பார்க்கப்போனேன்.” என்றேன்.
“பானுமதி வந்துவிட்டார்களா?”
“ஆமாம். அவளும் என்.டி.ஆரும் நடிக்கிறார்கள்.”
“அந்தப்பெண்ணுக்கு நடிக்கவே தெரியாது. பூசணிக்காய் முகம் வேறு”
“ஆமாம், தலைமயிர் வேறு நுரை மாதிரி.”
அவள் முகம் மலர்ந்தாள். “ஆமாம், அதை எண்ணை போட்டு நீவுவார்கள். ஆமணக்கெண்ணையும் வேறேதோ ஒரு கிரீமும் போட்டால் பசை போல ஆகிவிடும். அதை வைத்து பூசி சீவி சீவி நீட்டுவார்கள். அப்படியும் கொஞ்சம் முடி பிசிறாக நின்றுவிடும்…”
“பிசிறாக நின்றாலென்ன? பெண்களின் தலைமுடி அப்படித்தானே நிற்கிறது?”
நான் பானுமதியை ரசிக்கிறேன் என நினைத்துக்கொண்டாள் போல. அவள் முகம் மாறியது. நான் அவசரமாக “உன் முடி காதோரம் பிசிறாக நிற்பது அழகாக இருக்கிறது” என்றேன்.
“ஆமாம். நிறையபேர் சொன்னதுண்டு” என்று மீண்டும் முகம் மலர்ந்தாள். “ஆனால் சினிமாவில் முடியுடன் முடியின் நிழலும் தெரியும். அவை ஆடுவது தவறாக இருக்கும்.”
”தவறாக என்றால்?”
“பேபியின் வெளிச்சம் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்ப நிழலும் மாறும். அது தப்பாக தெரியும்.”
“ஓ”
“எனக்கு தெரியாது… அங்கே சொன்னார்கள். ருத்ரப்பா என்று ஒரு லைட்பாய் அண்ணன்.”
“ஓ” என்றேன் பொதுவாக.
அந்த ஒற்றை ஒலியில் என் மனம் கொஞ்சம் சலித்ததை புரிந்துகொண்டாள். பேச்சை மாற்றி “வெளியே என்ன நடக்கிறது?” என்றாள்.
“ஷூட்டிங் பார்ட்டி வேறெதையும் பொருட்படுத்துவதில்லை… அவர்களுக்கு வேலைதான் முக்கியம்” என்றேன்.
அவள் மிகமெல்ல எனக்கு மட்டுமே கேட்கும்படிப் பேசினாள் “கடுமையாக காவல் இருக்கிறதா?”
“கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இது அவர்களின் ஊர். முக்கியமான இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருக்கலாம்” என்றேன். “நீ அடித்த அந்த ஆள் சாகக்கிடக்கிறான். போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.”
”சாகட்டும் நாய்” என்று அவள் அலட்சியமாகச் சொன்னாள்.
“ஆனால் அவன் செத்தால் நீ ஜெயிலுக்கு போவாய்” என்றேன். ஆனால் ஏனோ அந்த அலட்சியம் எனக்குப் பிடித்திருந்தது.
“ஜெயிலுக்கு போனால்தான் என்ன?”
நான் “அவர்கள் விடாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன்.
“அவர்கள் மிருகங்கள் போல இருந்தார்கள். அப்படியொன்றும் புத்தி இருப்பதுபோல தோன்றவில்லை.”
“மிருகங்கள்தான் துரத்திவருவது, காவல்காப்பது எல்லாவற்றிலும் மனிதனைவிட திறமை வாய்ந்தவை.”
அவள் “ம்ம்” என்று முனகினாள். புரண்டு மல்லாந்து படுத்தாள். நான் அவளை பார்த்தேன். அவளுடைய தலைமுடி விரிந்து நிழல்போல அவளுக்கு கீழே விரிந்திருந்தது. கன்னங்கரிய திரவம் வழிந்து பரவியதுபோல.
“என்ன?” என்றாள்.
”ஒன்றுமில்லை” என்றேன்.
“பகல் முழுக்க தலைமுடியை சுருட்டி இறுக்கி கட்டிவைத்திருந்தேன், அதுதான்…” என்றாள். “இந்த சினிமாவில் எப்போதுமே கொண்டைதான். ஆகவே இரவில் அவிழ்த்து பரப்பி காற்றாட விட்டுவிடவேண்டும். வெட்டிக்கொள்ளட்டுமா என்று அம்மாவிடம் கேட்டேன். ஆனால் நிறைய படங்களில் இந்த முடியை விரும்புகிறார்கள். நிறைய முறை நான் பேயாக நடித்திருக்கிறேன்.”
”நீ நிறையபடங்களில் நடித்திருக்கிறாயா?”
“சின்னப்பெண்ணாக இருந்தபோதே நடிக்கிறேனே… இதுவரை ஒன்பது படம் நடித்துவிட்டேன். எல்லாமே சின்னச்சின்ன ரோல்கள்தான்… இந்தப்படத்தில்தான் படம் முழுக்க வருகிறேன். ஆனால் இதுவரை வசனமே பேசவில்லை.”
“ஓ!”
”துணைநடிகைதான்… கொஞ்சம் கொஞ்சமாக நடிகை என்ற அந்தஸ்து வந்துவிட்டால் இந்த அவஸ்தை இல்லை.”
“என்ன அவஸ்தை?”
”யாரும் இழுத்துக்கொண்டு போகமாட்டார்கள்.”
நான் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பிக்கொள்ள விரும்பினேன். அது எப்படியோ என் உடலசைவில் வெளிப்பட்டிருக்கவேண்டும்.
“பெரிய நடிகைகள் வேண்டாம் என்று சொல்லமுடியும்… எல்லாரிடமும் சொல்ல முடியாது. இந்த மாதிரி எருமைமாடுகள் வேண்டாம் என்று சொல்லமுடியும்… அப்படிச் சொல்லமுடிந்தாலே போதும், நிம்மதியாகத் தூங்கலாம்.”
நான் என்னை இறுக்கிக்கொண்டு படுத்திருந்தேன். என்ன எண்ணினேன். ஒன்றுமில்லை, நம்மை ஒருவர் அடிக்கப்போகும்போது உடலைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருப்போமே, அப்படி மனதை வைத்திருந்தேன்.
“தலைமுடியைப் பற்றி கேட்டீர்களே, அதை சுருட்டிப் பிடித்துக் கொண்டுதான் என்னை அடிப்பார்கள்.”
“யார்?”
“குடிகாரர்கள்… எல்லா நாயுமே குடிகார நாய்தான்.”
“எதற்கு அடிக்கிறார்கள்?”
”நிறையபேருக்கு அடித்தால்தான் நிறைவு வருகிறது. பெண்களுடன் இருக்கும்போது பெண்களை வெறுக்கிறார்கள். வெறுக்கும் பெண்களெல்லாம் அவர்களின் நினைவுக்கு வருகிறார்கள். போதை ஏற ஏற காமம் குறைந்து கோபம் ஏற்படுகிறது…. அடித்தால் கேட்க யாருமில்லை என்றால் அடிக்காமலிருக்க பெரும்பாலானவர்களால் முடியாது” என்றாள்.
ஆனால் உடனே மெல்ல சிரித்து “தேவ்டியா தேவ்டியா என்று சொல்லியபடியே அடிப்பார்கள். தெரிந்துதானே வந்தாய் நாயே என்று ஒருமுறை கேட்டேன்” என்றாள்.
“வேண்டாம்” என்றேன்.
“ஏன்?”
“இதையெல்லாம் என்னிடம் நீ சொல்லவேண்டாம்.”
”ஆமாம், ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. நீங்கள் நல்ல மனிதர். உயர்ந்த குடும்பம்” என்றாள் கண்களை மூடி கால்களை ஆட்டிக்கொண்டு “நான் பகல் முழுக்க தூங்கினேன். இரவு உடனே தூக்கம் வராது என்று நினைக்கிறேன்.”
”எனக்கு தூக்கம் வருகிறது”
”தெரிகிறது, ஆனால் என்னால் பேசாமலிருக்க முடியாது” என்று அவள் சொன்னாள். “கொஞ்சநேரம் முன்னால் நீங்கள் என்னிடம் என்னை தேடுவதைப் பற்றியெல்லாம் சொன்னீர்கள். அதற்கு என்ன செய்யலாம் என்றெல்லாம் யோசனை செய்தீர்கள். அப்போது எனக்கு மனம் உல்லாசமாக இருந்தது.”
“ஏன்?” என்றேன்.
“என்னைப்பற்றி ஒருவர் இத்தனை அக்கறை எடுத்துக்கொள்வது இப்போதுதான்… நான் இங்கே வந்தபிறகு என்னைப்பற்றி நினைக்கவே இல்லை. எல்லாம் நீங்களே பார்த்துக் கொள்வீர்கள் என்று முழுக்க முழுக்க விட்டுவிட்டேன். அப்படி நம்மை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றாக என்றால் மிகவும் நன்றாக. மிகவும் நன்றாக மிகவும் நன்றாக என்றுதான் என் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது… நான் இப்படி மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை. ”
“எல்லாரும் இப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் சாலையில் செல்லும்போது பெண்களைப் பார்ப்பேன். எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பாதிப்பெண்கள் ஆண்களை திட்டுகிறார்கள். அவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டு திட்டுகிறார்கள். அப்படி திட்டுவதுகூட நன்றாக இருக்கிறது, நம்மால் ஒருவரை திட்டமுடியும் என்றால் நமக்கு அந்த உரிமையை அவர்கள் அளித்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அது எவ்வளாவு நல்ல விஷயம்… நினைக்கவே நன்றாக இருக்கிறது”
நான் தூக்கத்தில் சரிந்து சரிந்து சென்றேன். சால சால என்று அவள் சொல்லிக்கொண்டிருப்பதுபோல கேட்டது. அரைத்தூக்கத்தில் அந்த வார்த்தை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பது போலிருந்தது. விழித்துக்கொண்டு “என்ன?” என்றேன்.
“இப்படி நன்றாக இருப்பதுதான் எல்லாப் பெண்களுக்கும் பிடித்திருக்கிறது போல” என்றாள்.
“ம்?” என்றேன்.
”அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்படி பாதுகாப்பாக இருப்பது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பது. நம்மை பாதுகாக்க ஆண் ஒருவன் இருக்கிறான் என்று ஒரு நிலைமை… அது மிக நன்றாக இருக்கிறது. இப்படி நன்றாக இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லை. அதுதான் அவ்வளவு தூக்கம். பகல் முழுக்க தூக்கம்.”
“ம்” என்றேன்.
”நடுவே விழித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன். நான் திருமணம் செய்துகொண்டு எங்கோ ஒரு சின்ன வீட்டில் இருப்பதுபோல தோன்றியது. அந்த வீட்டைக்கூட என்னால் பார்க்க முடிந்தது. ஓட்டுவீடு. இந்த வீடு மாதிரி. இந்த வீடு சின்னது. ஆனால் இது நல்ல வீடு. இங்கே யாரோ நன்றாக வாழ்ந்திருக்கிறார்கள்.”
நான் அதைச் சரியாகக் கேட்கவில்லை, என் குரட்டையோசையை அவள் கேட்டிருக்கலாம்.
“தூங்கிவிட்டீர்களா?” என்றாள்.
”ம்ம்? இல்லை” என்று புரண்டேன்.
”கொஞ்சநேரம் தூங்காதீர்கள். நான் கொஞ்ச நேரம் ஏதாவது என் மனசுக்கு வந்ததுபோலப் பேசிக்கொண்டிருக்கிறேன்.”
“இல்லை, தூங்கவில்லை.”
“என் தோழிகளெல்லாம் இப்படியெல்லாம் கனவு காண்பதைச் சொல்வார்கள். நான் அப்படி யோசித்ததே இல்லை. ஆனால் இங்கே இன்றுதான் அப்படியெல்லாம் யோசித்தேன்…”
“ம்”
“எப்படியெல்லாம் என்று கேளுங்கள்.”
“சொல்.”
“அதுதான் சொன்னேனே, கல்யாணமாகி இதைப்போல ஒரு வீட்டில் இருப்பதைப்போல. ஆனால் இங்கே இல்லை, ராஜமந்திரி பக்கம் எங்கள் ஊரில்..”
”உன் ஊர் எது?”
“முனிப்பள்ளி… ராஜமந்திரிக்கு பக்கம்தான்.”
“ஓ!”
“எனக்கு என்னென்னவோ நினைப்பு…” அவள் சட்டென்று சிரித்து “நீங்கள் கவலைப்படுவது பதற்றப்படுவது எல்லாமே எனக்கு பார்க்கப் பார்க்க சந்தோஷமாக இருந்தது” என்றாள். “அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறேனா?”
நான் மீண்டும் தூக்கத்திற்குள் நழுவிக்கொண்டிருந்தேன். உண்மையில் அந்த வார்த்தைகளை அப்போது சரியாகக் கேட்கவில்லை. மீண்டும் நினைவுகூர்ந்தபோது தெளிவாக, சொல் சொல்லாக, உள்ளிருந்து எழுந்து வந்தன.
“நான் ஏன் ஓடி இங்கே வந்தேன்? தெரியவில்லை. எப்படியோ, அந்த தருணத்தில் தோன்றியது. வந்துவிட்டேன். நாகா தான் சொல்லிக்கொண்டே இருப்பாள். நீங்கள் என் மேல் விருப்பம் கொண்டிருப்பதாக. சின்னப்பையன், ஆகவே காதல்தான் கொண்டிருப்பான் என்று சொல்வாள். நான் அதை கவனித்ததே இல்லை. அப்படியெல்லாம் யோசிக்க எனக்கு நேரமே இல்லை.”
“ம்” என்றேன்.
“ஆனால் இப்போது உங்கள் கண்களை நினைத்துப்பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. அவற்றில் அப்படி ஒரு மயக்கம் இருந்தது” அவள் சிரித்து “இப்போது அதை நினைக்க அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”
மீண்டும் சால சால என்ற சொல் மட்டும் கேட்டது எனக்கு.
“பார்க்கிறீர்களா?”
“ம்?”
“கேட்டேனே”
நான் விழித்துக்கொண்டு “என்ன?” என்றேன்.
“என் கூந்தலைப் பார்க்கிறீர்களா?”
நான் நன்றாகவே விழித்துக்கொண்டேன். என் நெஞ்சு அடித்துக்கொண்டது.
“வேண்டாம்”
“ஏன்? ஆசைப்பட்டீர்களே?”
“நானா?”
“ஆமாம், இப்போது சொன்னீர்களே.”
நான் அதை நினைவுகூரவே இல்லை. ஆனால் சொல்லியிருப்பேன். அல்லது என் கண்களிலேயே தெரிந்திருக்கும்.
அவள் எழுந்து நின்று தன் கூந்தலை கையால் நீவி ஒழுக விட்டு திரும்பி நின்றாள். பொதுவாக நீள்கூந்தல்கள் பட்டையான சுருளற்ற அழுத்தமான முடியாலானவையாக இருக்கும். அவளுடைய கூந்தல் சுருள் சுருளாக, மென்மையாக, கரிய அருவிபோல விழுந்திருந்தது.
நான் உடலெங்கும் குருதியின் துடிப்பை உணர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவள் திரும்பி என்னை நோக்கிச் சிரித்து “பிடித்திருக்கிறதா?” என்றாள். அவள் சிரிப்பு ஆணைக் கவரும் பெண்ணின் சிரிப்பாக இல்லை, உற்சாகமான சிறுமியின் சிரிப்பாக இருந்தது. வயது, வாழ்க்கைச்சூழல், இருக்கும் நிலைமை எல்லாவற்றையும் ஒரு சிறு துள்ளல் வழியாக கடந்துவிட்டாள். ஏனோ அவளுடைய சிரிப்பு ஆற்றில் மீன் ஒளியுடன் எழுந்து விழுவதுபோல என எனக்கு தோன்றியது. அவளுடைய மாநிற முகத்தில் வெண்பற்கள் தெரிந்தமையாலாக இருக்கலாம்.
முடியைச் சுழற்றி முன்னாலிட்டு கையால் நீவியபடி “நான் உடம்பில் ஆடையே அணியவில்லை என்றாலும் இந்த முடியை வைத்தே உடலை மறைக்கமுடியும்…” என்றாள்.
“ம்” என்றேன். என் மூச்சுதான் என் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.
“காட்டட்டுமா?” என்றாள். அப்போதும் கண்களில் அச்சிறுமிதான் தெரிந்தாள்.
நான் மூச்சுத்திணறி “வேண்டாம்” என்றேன்.
”ஏன்? உங்களுக்கு என்னை பிடிக்கும் தானே?” அவள் கழுத்தை சற்றே நொடித்து, குழந்தைத்தனமாக முகவாயை தூக்கி,உதட்டைச் சுழித்தபடி கேட்டாள்.
நான் திணறலுடன் பேசாமலிருந்தேன்.
“பிடிக்கும் என்று உங்கள் கண்களைப் பார்த்தால் தெரிகிறது… நான் இப்படிப்பட்ட கண்களைப் பார்த்ததே இல்லை. ஆனாலும் நன்றாகத் தெரிகிறது” பெண்ணின் அந்த மெல்லிய சிரிப்பொலி போல் அந்தரங்கமானது ஏதும் இல்லை.
அவள் சிறுமிகள் பேசுவதுபோல மூச்சை வாயால் உறிஞ்சி “அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? உண்மையில் நம்மை ஒருவருக்கு பிடிக்கிறது என்று நினைக்கும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி. மனம் குதித்துக்கொண்டே இருக்கிறது. நான் மட்டும் ஊரில் இருந்திருந்தால் மாடுமேய்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு தோட்டத்துக்குப்போய் துள்ளிக்குதித்திருப்பேன்.”
“அப்படியா?” என்றேன். அந்த சந்தர்ப்பத்தின் விசித்திரமான இறுக்கத்தை அந்தச் சொற்கள் எளிதாக்கிவிட்டன. கோதாவரியின் பளபளக்கும் நீர்ப்பரப்பை நினைவில் கொண்டுவந்தன. என் முகம் மலர்ந்துவிட்டது.
“பகலில் என்னால் இங்கே இருக்கவே முடியவில்லை. மனதுக்குள் துள்ளிக் குதித்துக்கொண்டு படுத்திருப்பது எவ்வளவு கஷ்டம்… பாட்டுப் பாடவேண்டும் என்றுகூட தோன்றியது” மீண்டும் அந்த மெல்லிய சிரிப்பொலி. “ஆனால் நான் பாடமாட்டேன். எனக்கு பாட்டே தெரியாது”
நான் “ம்” என்றேன்.
“சொல்லுங்கள் என்னை உங்களுக்கு பிடிக்கும்தானே?”
“ம்” என்றேன். முனகல்போல அந்த ஒலி எனக்கே கேட்கவில்லை. என் அகம் பதறிக்கொண்டிருந்தது.
“உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்?”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“சொல்லுங்கள் நான் ஒன்றும் உங்களிடம் என்னை கல்யாணம் செய்துகொள்ள கேட்கமாட்டேன்”
“அதில்லை” என்றேன். அவள் என்னிடம் விளையாட விரும்புவது நன்றாகவே தெரிந்தது. ஆனால் அந்த தருணம், அத்தனை உடல்நெருக்கம் இருந்தாலும், காமத்தை எழுப்பவில்லை. என் உடலில் அதன் துடிப்பே இல்லை.
அவள் என் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்துகொண்டு “சரி, இப்படி கேட்கிறேன். உங்களுக்கு என்னிடம் பிடித்தது என்ன?” என்றாள்.
“என்ன?”
“இதுவா?”என்று மார்பகங்களை தொட்டு காட்டினாள்.
“இல்லை”
“பின்னே?”
”ஒன்றுமில்லை”
”சொல்லுங்கள்” என்று கொஞ்சினாள்.
“உன் கண்கள்… நீளமானவை”
“அப்படியா?” என்று அவள் முகம் மலர்ந்தாள். அவள் முகம் சிவந்து கன்றியதுபோல ஆகியது. மூச்சிரைப்பவள் போல கழுத்து குழிந்து எழுந்தது. “அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்… மேக்கப் போடுபவர்கள் சொல்வார்கள்” என்னருகே மேலும் அணுகி “பிறகு?” என்றாள்.
அவள் முகத்தை அருகே பார்த்தேன். மேலுதட்டின் மென்மயிர்களை, கன்னத்து முகப்பருக்களை.
“சொல்லுங்கள்”என்று கொஞ்சி என் மேல் கையை வைத்தாள்.
“உன் மேலுதடு” என்றேன்.
”ம்” என்றாள். முனகலாக அவ்வொலி எழுந்தது.
”அது கொஞ்சம் வளைந்து இருக்கிறது. நீ சிணுங்குவதுபோலவே தெரிகிறது”
அவள் என்னருகே படுத்துக்கொண்டு என்னை அணைத்துக்கொண்டாள். அவள் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. அவளுடைய மூச்சு என்மேல் பட்டது. அவளுடைய மார்பகங்கள் என் தோளில் அழுந்தின. அவள் கழுத்தில் வியர்வை பளபளத்தது. அதன் மென்மையான உப்புமணம்.
“ம்ம்” என்று நான் ஓசையிட்டேன்.
அவள் ஒரு காலை தூக்கி என் மேல் போட்டாள். கையால் என் தோளை வளைத்து மேலெழுந்து என்மேல் கவிந்து என் உதடுகளில் முத்தமிட்டாள். பச்சைக்கற்பூரம் போல ஏதோ வாசனை. மென்மை, வெம்மை, ஈரம். அவள் உடலின் எடை. நெஞ்சிலும் இடையிலும் அதன் அழுத்தங்கள்.
நான் அவளை உந்தினேன். ”வேண்டாம்” என்றேன்.
“நான் … மிகவும் மிகவும்…” என்று திணறினாள். அவள் கண்களில் கண்ணீர்ப்படலம் இருப்பதுபோலத் தோன்றியது. கழுத்தும் கன்னங்களும் தீயில் தெரிபவை போல பளபளத்தன.
“வேண்டாம்” என்றபோது என் குரல் தேவைக்குமேலேயே ஒலித்தது.
அவள் “நான் வேறென்ன கொடுப்பது?” என்றாள்.
நான் அவளை உந்திவிட்டு உருண்டு எழுந்துகொண்டேன். “வேண்டாம், தள்ளிப்போ” என்றேன்.
புரண்டு ஒருக்களித்து, “என்னை பிடிக்கவில்லையா?” என்றாள். ஜாக்கெட்டுக்குள் அவள் மார்புகள் ஒன்றுடனொன்று மென்மையாக அழுந்தியிருந்தமை தெரிந்தது.
“இல்லை” என்றேன்.
“பிடித்திருக்கிறது என்று சொன்னீர்கள்?”
“அது வேறு… நீ தொடும்போது அருவருப்பாக இருக்கிறது.”
“ஏன்?” என்றபோது அவள் முகம் சுருங்கி, வாய் இழுபட்டு அழகனைத்தும் மறைந்துவிட்டது.
“நான் உலகத்திலேயே வெறுப்பவர்கள் ரங்கா ரெட்டி போன்ற ஆட்கள். வெறும் மாமிசங்கள்… கலை இலக்கியம் இசை ஒன்றுமே தெரியாத பிண்டங்கள். அவர்களெல்லாம் உன்னை…” என்றேன். பல்லைக் கடித்தபடி “அவர்களுக்கு பின்னால் நான்…” என்றேன்.
“எச்சில் என்கிறீர்கள்?” அவள் முகம் கடும் குரோதம் கொண்டதுபோல ஒரு கணம் தோன்றியது.
“ஆமாம்” என்றேன், வஞ்சத்துடன் தீர்மானத்துடன் என் குரல் ஒலித்தது.
ஆனால் அதைச் சொன்னதுமே என் உள்ளம் உருக ஆரம்பித்தது. அது நான் உத்தேசித்தது அல்ல. அது என்னுள் வேறெங்கோ இருந்து வந்தது. அதை நான் ஏதோ ஒரு ஆங்காரத்தால் வெளியே எடுத்தேன். வேண்டுமென்றே நான் அந்த அழகிய தருணத்தை அழித்துக்கொண்டேன். இனி மீளவே முடியாதபடி ஒன்றை உடைத்துவிட்டேன்.
வெளியே போகப்போவதுபோல் ஓர் அசைவு என்னில் எழுந்தது. ஆனால் என்னால் அசையவும் முடியவில்லை. அவள் கீழே என் காலடியில் முழங்கால்மேல் கைகளை பூட்டி அமர்ந்திருந்தாள். அவள் கழுத்து மூச்சில் எழுந்து அமைந்தது.
அவள் மிகவிரைவில் இயல்பானாள். எழுந்து தன் தலைமுடியை சுற்றிக் கட்டிக்கொண்டாள். ”நீங்கள் சொல்வது சரிதான்… நான் அதை யோசிக்கவில்லை. என்னை கூட்டிக்கொண்டு போகிறவர்கள் அயோக்கியர்கள். அவர்களே என்னை எச்சில் எச்சில் என்று சொல்லித்தான் அடிப்பார்கள். ஒருவன் முகத்திலேயே காறி துப்பியிருக்கிறான்”
நான் தலைகுனிந்து நின்றேன். நான் ஏதாவது சொல்லவேண்டும். ஆனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
“பரவாயில்லை, நீங்கள் சொல்லிவிட்டது நல்லது. இல்லாவிட்டால் வாழ்க்கை முழுக்க குற்றவுணர்ச்சியால் கஷ்டப்படுவீர்கள்.”
அவள் துணிப்பொதி ஒன்றை தலையணையாக எடுத்துப்போட்டு படுத்துக் கொண்டாள். நான் அவளை பார்த்தபடி நின்றேன்.
“ஒன்றும் கவலைப்படவேண்டாம். எனக்கே நிம்மதியாக இருக்கிறது. நானும் பெரிய ஏதோ தவறுசெய்துவிடப் பார்த்தேன். பின்னாளில் நினைத்து வருந்தும் தவறு ஏதும் இதுவரை நான் செய்ததில்லை. இப்போது ஒன்றை செய்திருப்பேன்… அது வேறு வாழ்க்கை முழுக்க குற்றவுணர்ச்சியை தந்திருக்கும்.”
“நான் உன்னை குற்றம் சாட்டவில்லை” என்றேன்.
“இல்லை, நீங்கள் இயல்பாகத்தான் சொன்னீர்கள்… நான்தான் தவறாக நினைத்துவிட்டேன். எல்லா ஆண்களும் ஒன்று என்று நினைத்தேன். எனக்கு தெரிந்ததெல்லாம் இது மட்டும்தானே?”
நான் பெருமூச்சுவிட்டேன். ஏதோ சொல்லவேண்டும் போலிருந்தது, உடலெங்கும் குருதிக்கொப்பளிப்பு நிகழ்ந்து செவிகளில் ஆவி பறந்தது.
“வெளியே போய் வாருங்கள். ஒரு நிமிடம் வெளியே திறந்த வெளியில் நின்றால் நீங்கள் மீண்டு வருவீர்கள். நீங்கள் தவறு ஒன்றும் செய்யவில்லை. என்னை புண்படுத்தியதாக எல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம்… நான் நிம்மதியாகத்தான் உணர்கிறேன்.”
நான் வெளியே சென்று காற்று பெருகியோடிய திறந்தவெளியில் நின்றேன். மரங்கள் சுழன்றுகொண்டிருந்தன. வானில் ஒளியுடன் நிலா நின்றிருந்தது. விண்மீன்கள் பெருகிக்கிடந்தன. உண்மையாகவே திறந்தவெளி ஆறுதலாக இருந்தது. அனைத்து இடுங்கல்களில் இருந்தும் விடுவித்தது.
எண்ணங்களாக ஆகாத உதிரிச்சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க மெல்லமெல்ல நான் எளிதானேன். வியர்வை அடங்கி நெஞ்சொலி அமைந்து இயல்படைந்தேன். அதன் பின்னர்தான் நெடுநேரமாக கதவு திறந்துகிடப்பது என்னுள் தோன்றியது.
வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டேன். உள்ளே சென்று பார்த்தேன். அவள் சன்னமான மூச்சொலியுடன் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.
மேலும்