அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-2

அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-1

[ 2 ]

ஸ்ரீபாலா அந்த நடனப்பெண்களின் நடுவே கையில் நெய்விளக்குகள் எரியும் தாலத்துடன் ஆடிக்கொண்டிருந்தாள். அவளுடைய ஆடையாலா, அந்த விளக்கொளியாலா, அல்லது நான் நின்ற கோணத்தாலா, அவள் பானுமதியைவிடவும் அழகாக இருப்பதாகத் தோன்றியது. நான் அவளை இயல்பாக கண்களை ஓடவிட்டபோது பார்த்தேன். அதன்பின் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றேன்.

அவளுக்கு பதினெட்டு வயது இருக்கும். கொடிபோல ஒல்லியாக இருந்தாள். நடனத்திலேயே வாழ்பவள் போல மிக இயல்பாக ஆடினாள். அவளுடன் பானுமதியை நிற்க வைத்து ஆடவிட்டால் பானுமதி திமிர் பிடித்த மந்தபுத்திப்பெண் என்று தோன்றுவார். உண்மையில் பானுமதிக்கு ஆடவே தெரியாது, எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது. நின்ற இடத்திலேயே ஆட்டம்போல ஒன்றைச் செய்ய மட்டும்தான் முடியும். கண்களை உருட்டி, உதட்டை சுழித்து, மூக்கைச் சுளித்து அதை கொஞ்சம் இயல்பாகவே செய்துவிடுவார். பிற்பாடு அது பானுமதியின் தனிப்பாணியாகவே ஆகிவிட்டது. ஆனால் அங்கிருக்கும் மெல்லிய மஸ்லின் திரைச்சீலைகளைப்போல ஸ்ரீபாலா அசைந்தாள்.

நான் அவளைக் கண்டு ஏன் அப்படி மெய்மறந்தேன் என்று பின்னர் நிறைய யோசித்திருக்கிறேன். அவளுடைய நடனத்தால்தான் என்று பின்னர் தெரிந்தது. நடனத்தில் கொஞ்சம்கூட மனம் செல்லாமல் இயல்பாக உடல் உள்ளத்திலிருக்கும் தாளத்தை வெளிப்படுத்தினால்தான் அது நடனம். “நாக்கு மாதிரி இருக்கணும்டீ டேன்ஸு. நாக்கு ஆடுறதை நாம அறியறதில்லை” என்று சிவருத்ரப்பா சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஆனால் அது மட்டுமல்ல. அவள் அங்கே இருக்கும் பிற நடிகைகளைப்போல இருக்கவில்லை. அவளைப் போன்ற துணைநடிகைகளைப்போலவும் அல்ல. அவளிடம் அந்தப் பெண்களின் அம்சங்கள் எதுவுமே இல்லை. அவள் கண்களில் உண்மையான மருட்சி இருந்தது. அக்காலத்து குடும்பப்பெண்களின் கண்களில் இருந்த மருட்சி அது. ஒருவேளை அது ஒரு சாயலாக மட்டும் இருக்கலாம். நானே கற்பனை செய்துகொண்டதாக இருக்கலாம். ஆனால் இருந்தது. அது அவளை வேறுபடுத்திக் காட்டியது.

’கட்’ சொல்லப்பட்டதும் கையிலிருந்த விளக்குத்தாலத்தை அங்கே வைத்துவிட்டு அவள் வந்து ஓரமாக நின்றாள். டச்சப் பெண் வந்து வியர்வையை ஒற்றும்போது சலிப்புடன் கண்மூடிக் கொண்டாள். நன்கு வியர்த்திருந்தாள். அன்றெல்லாம் விளக்குகள் கடுமையான வெப்பம் கொண்டவை. உச்சிவெயிலில் நிற்பதற்கு சமம் அந்த வெளிச்சத்தில் நிற்பது. அதிலும் அதேபோல விரிந்த கூடத்தில் பலர் ஆடும் காட்சிகளில் அவர்களின் நிழல்களைக் கரைப்பதற்காக அதிகமாகவே வெளிச்சம் போடுவார்கள். காமிராவில் ஃபில்டர் போட்டு வேண்டிய அளவுக்கு வெளிச்சத்தை குறைத்துக் கொள்வார்கள்.

அவள் அங்கே போடப்பட்ட சிறிய மரஸ்டூலில் அமர்ந்து எவருடனும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஏன் மருண்டவை என தெரிகின்றன என்று நான் கண்டுகொண்டேன். அவை மிக நீளமான விழிகள். அத்தனை நீளமான கண்களை நான் பார்த்ததே இல்லை. மான்விழிகள் என்று நாடகப்பாடல்களில் அதைத்தான் சொல்கிறார்கள். அவற்றை மையிட்டு, நீட்டி எழுதி மேலும் நீளமாக ஆக்கியிருந்தார்கள். அத்தனை நீளமான கண் என்பதனால் அவள் திரும்பிப் பார்க்கையில் ஓரவிழியால் பார்ப்பதுபோலிருந்தது. அல்லது அப்படிப் பார்ப்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

ஏன் அவள் கதாநாயகியாக ஆகமுடியாது என்பதை அருகே கண்டதும் உணர்ந்தேன்.  அவளுடைய முகம் ஒடுங்கி நீளமாக இருந்தது. கன்னங்கள் உப்பலாக இல்லை. அன்றெல்லாம் சினிமாவுக்கு உருண்டையான முகமும், உப்பிய கன்னங்களும்தான் முக்கியமானவை. அன்று ஃபிலிம் லோ சென்சிட்டிவ் வகை. சுரணைகெட்ட ஃபிலிம் என்று காமிரா உதவியாளர்கள் சொல்வார்கள். ஆகவே காமிரா பார்க்கும் பொருள் மேல் நேரடியாகவே ஒளி வீசப்படும். மெலிந்து நீண்டமுகம் மீது ஒளி அடிக்கப்பட்டால் கன்ன எலும்பின் நிழலுடன் சேர்ந்து முகம் மேலும் ஒடுக்கமாகத் தெரியும். கண்ணுக்கு அவ்வளவு அழகியாகத் தெரிபவள் காமிராவுக்குள் பதிவாகும் அந்த வெள்ளிப்பிம்பத்தில் பஞ்சத்தில் அடிபட்ட முகம்கொண்டவளாக இருப்பாள். தோழியாகத்தான் அவளை நடிக்க வைப்பார்கள். ‘அரசி, மன்னர் வந்துகொண்டிருக்கிறார்’ என்றுதான் அதிகம்போனால் வசனம் இருக்கும்.

அவள் கேலி பேசிச் சிரிக்கவில்லை என்பதைக் கவனித்தேன். அவளிடம் ஏதாவது சொல்லப்பட்டால்கூட அவள் அச்சொற்களை முற்றிலும் கேட்காதவள் போலிருந்தாள். அதைவிட அவள் உடலில் கூச்சம் இருந்தது. அத்துமீறி ஒப்பனைக்காரன் கையை வைத்தால் நெளிந்து, விலக்கி, அதை தானே செய்துகொண்டாள். நான் தொலைவில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனம் கற்பனையில் நெகிழ்ந்து கொண்டே சென்றது. அவள் ஓர் அபலைப்பெண், வீட்டில் நோயுற்ற அப்பாவும், ஊட்டப்படவேண்டிய ஏழெட்டு இளைய குழந்தைகளும் கொண்டவள். தெரியாமல் இங்கே வந்து அவமானப்பட்டு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறாள். அல்லது அனாதை. கொடுமைக்காரப் பெண்மணி ஒருத்தி அவளை அடிமையாக வைத்திருக்கிறாள்.

அன்றைய கதைகளில் எல்லாம் வரக்கூடிய அழகான, அடக்கமான, நல்ல குடும்பத்தில் பிறந்த கதைநாயகி. அவளுக்குத்தான் உலகத்திலுள்ள அத்தனை துயரங்களும் வரும். வறுமை, அவமானம், தவறாகப் புரிந்துகொள்ளப்படுவது. அவள் தியாகம் செய்துகொண்டே இருப்பாள். அவளை பார்ப்பவர்கள் அனைவரும் அடைய முயல்வார்கள். கற்பழிக்க வருவார்கள். கையை நீட்டுவார்கள். கண்டபடி மிரட்டுவார்கள். ஆனாலும் அவள் அன்பானவளாகவே இருப்பாள். துயரம் மிஞ்சிப்போனால் பாட்டுதான் பாடுவாள். கடைசியில் செத்துப்போய்விடுவாள். அல்லது நல்லவனாகிய ஹீரோ அவளை திருமணம் செய்வான். ஆனால் அதற்கு முன் அவள் கற்பை இழந்திருக்கக்கூடாது.

அன்று நெடுநேரம் பிந்தித்தான் நான் தையல்கொட்டகைக்கு திரும்பினேன். தையலில் மூழ்கி நெடுந்தூரம் விலகிச் சென்ற பின்னர் நினைத்துப் பார்த்தால் அந்த உணர்ச்சிகளெல்லாம் அபத்தமாக இருந்தன. நானே என்னை கேலியாக நினைத்துச் சிரித்துக்கொண்டேன். அங்கே நான் வேலைக்கு வந்தபோதிருந்தே என்னை என் தாய்மாமா எச்சரித்துக்கொண்டே இருந்தது இந்த நடனப்பெண்கள் விஷயமாகத்தான். அங்கிருந்த தையல்காரர்களும் மாறி மாறி எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். அந்தப்பெண்கள் வலைவிரித்து அமர்ந்திருக்கும் சிலந்திகள் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது.

உண்மையிலேயே அவர்கள் வலைவிரித்துக் கொண்டும் இருக்க வாய்ப்புண்டு. அவர்கள் வெளியேற ஒரே வழி அதுதான். ஆர்ட் துறையில் ஒரு ஆசாரி ஒரு நடனப்பெண்ணை மணந்துகொண்டான் என்று தெரிந்த அன்று தையல் துறையில் அதைப்பற்றியே பேசிப்பேசி ஓய்ந்தார்கள். அவனைப்பற்றிப் பேசுவதில் அனைவருக்கும் ஒரு கிளர்ச்சியும் இளக்காரமும் ஒருங்கே இருந்தது. அவனை இழிவுபடுத்தினார்கள். ஆனால் அவனாக ஒவ்வொருவரும் மானசீகமாக நடித்தார்கள் என்று தோன்றியது. ஏனென்றால் ஒவ்வொருவரும் இன்னொருவரை அவன் இடத்தில் நிறுத்தி கிண்டல் செய்தார்கள்.

நான் ஒரு வாரம் படப்பிடிப்புப் பக்கமே போகவில்லை. ஆனால் அவளை நினைத்துக்கொண்டே இருந்தேன். அப்படிப் போய்விடக்கூடாது என்று தவிர்த்துக் கொண்டும் இருந்தேன். ஒருவாரம் கடத்திவிட்டுத்தான் ஃப்ளோருக்குப் போனேன். அப்போது அங்கே அத்தாணி மண்டபக் காட்சியை எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதுவே சட்டென்று ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் நான் அங்கே அதே நடனக்காட்சி நடந்துகொண்டே இருக்கிறது என்று என்னுள் கற்பனை செய்துகொண்டேன். என்னுள் அதுவே ஓடிக்கொண்டிருந்தது.

அங்கே அவளுக்காக என் கண்கள் தேடின. செட்டுக்குள்ளேயே இருநூறுக்குமேல் தலைகள். படைவீரர்கள், காவலர்கள், ஏவலர்கள், அமைச்சர்கள், குடித்தலைவர்கள், சேடிப்பெண்கள், கவரிவீசும் பெண்கள். தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகள்போல விக் வைத்த தலைகள் எங்கும் தென்பட்டன. படப்பிடிப்புக் குழுவே நூறுக்குமேல் இருக்கும். டீ காபி பரிமாறுபவர்கள், லைட்பாய்கள், ஆர்ட் உதவியாளர்கள், இன்னும் எவற்றையெல்லாமோ செய்துகொண்டிருப்பவர்கள். அனைவருமே காக்கி நிஜார் அணிந்திருந்தனர். லைட்பாய்களுக்கு சட்டையும் காக்கி. தலையில் காக்கித்துணியால் நேருத்தொப்பி. காமிரா உதவியாளர்கள் மட்டும் நெற்றிக்குமேல் நீட்டிய தொப்பி வைத்திருந்தனர்.

நான் நடிகர்களை மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். எல்லா முகமும் பேன்கேக் சிவப்பு. எல்லாருமே பளபளக்கும் வண்ண உடைகள் அணிந்தவர்கள். விசித்திரமான உடைகள். பழங்காலத்தில் எவரும் அதைப்போல உடையே அணிந்திருக்கவில்லை என்று நாகலிங்க ஆசாரி சொன்னான். படைவீரர்கள்கூட கோவணம்தான் அணிந்திருந்தார்கள். பழங்காலத்தில் பருத்தியே குறைவாகத்தான் பயிரிடப்பட்டது. கம்புசோளம் பயிரிடவே நிலமும் மழையும் இல்லை. சினிமாவுக்காக அவர்களுக்கெல்லாம் முகலாய உடைகள் அளிக்கப்பட்டன. அவை கால்களுக்குக் கீழே பெண்கள் அணியும் உடைபோல தொளதொளவென்றிருந்தன.

அவள் அங்கே இல்லை. அதை உணர்ந்ததும் ஏமாற்றம், பின்னர்கொஞ்சம் ஆறுதல். அவள் இல்லை என்றால் நான் அவளை நினைப்பதை நிறுத்திவிடுவேன். அவளிடமிருந்து விடுபட்டுவிடுவேன். ஒருவாரமாக அவளையே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்ன இது என்ன இது என்று வியந்தபடி அதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன். அவளைப்பற்றிய நினைவுகளை தொட்டுத்தொட்டு வளர்த்து, எங்கோ சென்று, அங்கே திகைத்து நின்றிருக்கிறேன். என்னையே கீழாக எண்ணி சலிப்படைந்திருக்கிறேன். அதிலிருந்து விடுதலை. ஒருவழியாக மீண்டுவிட்டேன். இனி இங்கே வரமாட்டேன்.

ஆனால் ஷாட் வைக்கப்பட்டதும் ஒத்திகைக்காக திருமலாதேவியாக நடித்த மிஸிஸ் குமாரியுடன் அவளும் தாலமேந்தி பின்னால் வந்தாள். என் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஆயிரம் பேரில் அவளை மட்டுமே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். தாலத்துடன் நடந்தபோது அவளுடைய இடை மிக இயல்பாகவே துவண்டது. கண்கள் தயங்கி, பக்கவாட்டில் பார்த்து மருண்டு, அழகாக அலைபாய்ந்தன. நான் என்னுள் திரவங்கள் நுரையாகக் கொப்பளிப்பதை அறிந்தேன்.

அந்தப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெல்லி இரானி. மும்பையிலிருந்து பெருஞ்செலவில் அவரை வரவழைத்திருந்தார்கள். அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும், இந்திகூட சுமார்தான். சதுர முகமும், மெல்லிய மீசையும் கொண்ட சிடுசிடுப்பான மனிதர். அவர் ஒரு சர்வாதிகாரி, கிறுக்கு பிடித்த சர்வாதிகாரி. அதை சொல்லிச் சொல்லி பரப்பி அவரை எவரும் நேருக்குநேர் பார்க்காமலாகியிருந்தனர்.

அன்றெல்லாம் காமிராக்கோணங்களை ஒளிப்பதிவாளர்தான் முடிவுசெய்வார். ஷாட் பிரிப்பதும் அவர்தான். இயக்குநர் நடிப்பை மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்கே நடப்பதில் நடிப்பு மட்டும்தான் இயக்குநர்களுக்கு புரியும். படம் எப்படி வந்திருக்கிறது என்பது பிரிண்ட் எடுத்து ரஷ் போட்டுப்பார்க்கும் வரை தெரியாது. சொல்லப்போனால் ரஷ் பார்த்தாலே பல இயக்குநர்களுக்குப் புரியாது. எடிட்டிங்குக்குப் பிறகுதான் அது சினிமாக் காட்சியாக ஆகும். வசனமும் இசையும் கலந்தபிறகுதான் சினிமாவாக தெரியும். கத்ரி வெங்கட்ட ரெட்டி தியேட்டரில் படம் பார்த்தபிறகுதான் தன் சினிமாவை புரிந்துகொண்டார் என்பார்கள்.

தரையில் வரையப்பட்ட வெள்ளிமின்னும் கோடு வழியாக மிஸிஸ் குமாரி வரவேண்டும். அவருக்குப் பின்னால் வருபவர்கள் அவரை தொடாமல் ஆனால் விலகாமல் வரவேண்டும். நாலைந்து முறை ஒத்திகை நடைபெற்றது. மிஸிஸ் குமாரியின் நிழல் ஸ்ரீபாலா மேல் விழுந்தது. அதை கரைப்பதற்காக ஒளி செலுத்தியபோது ஸ்ரீபாலா மிஸிஸ் குமாரியைவிட ஒளியாக தெரிந்திருப்பாள் போலிருக்கிறது. அவளை சற்றுப்பின்னால் செல்லும்படிச் சொன்னார் மெல்லி இரானி. அப்போதும் சரியாகவில்லை, அவளை மீண்டும் அருகே வரச்சொன்னார். அவருடைய உதவியாளர்கள் அவருடைய ஆணைகளுடன் ஓடிச்சென்று ஸ்ரீபாலாவுக்கு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ஏன் முன்னால் வரச்சொல்கிறார்கள், ஏன் பின்னால் நகரச் சொல்கிறார்கள் என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் மிரட்சி தெரிந்த கண்களுடன் தலையைத் தலையை அசைத்தாள். அவள் நெற்றியில் ஒரு முடிச்சுருள் விழுந்து ஆடியது. அதை ஹேர்டிரஸ்ஸர் எடுத்து சேர்த்து கிளிப் போட்டுவிட்டான். அவள் மேலுதடு வியர்த்து விட்டது, அதை டச்சப் ஆள் ஒற்றினான். மீண்டும் ஒத்திகை. ஒருவழியாக ஒத்திகை முடிந்தது. மெல்லி இரானி கைகாட்ட ‘ஆல் லைட்’ ஒத்திகை ஆரம்பித்தது. மேலிருந்த மாக்ஸி விளக்குகளும் மினி விளக்குகளும் சூரியன்கள் போல எரிந்தன. அரங்கில் நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒரு சிறு விளக்கு போல ஒளிவிடத் தொடங்கினார்கள். “பேபி” என்றார் மெல்லி இரானி.

அரங்கை முழுக்க ஒளிரச் செய்ய மேக்ஸி, நடிகர்களை ஒளிர வைக்க மினி, அவர்களின் முகங்களுக்கு மட்டும் பேபி. மூக்கின் நிழல் மேலுதட்டில் விழாமலிருக்க முகவாயை சற்றே தூக்கி ஒளியை வாங்கிக்கொள்வார்கள். அந்தக்கால படங்களில் அத்தனை பேரும் முகத்தை ஏந்தி நடிப்பது இதனால்தான். அதற்கு பேபி வாங்கி நடித்தல் என்று பெயர். பேபி வாங்குதல் என்பதை ஒரு சிலேடையாக திரும்பத் திரும்ப பயன்படுத்துவார்கள். எந்த நடிகையிடமும் ஒளிப்பதிவு உதவியாளர் “பேபி வாங்கிக்கிறியா?” என்று கேட்கலாம்.

பேபி லைட் வெளிச்சம் ஸ்ரீபாலா மேல் விழுந்தது. அவள் கண்ணில் நேரடியாக வெளிச்சம் விழுந்திருக்கவேண்டும். அவள் கையால் தூக்கி கண்ணை மறைத்தாள். அது ஓர் அனிச்சையான செயல். மெல்லி இரானி ஆங்கிலத்தில் ஏதோ சொல்லி சலித்துக் கொண்டு தலையை அசைத்தார். அவர் உதவியாளன் பாய்ந்து சென்று ஸ்ரீபாலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவள் முகத்தில் துப்பினான். பிற உதவியாளர்கள் அவனை இழுத்து வந்தனர்.

அவள் திகைத்து கண்களில் கண்ணீருடன் நின்றாள். மிஸிஸ் குமாரி அவளிடம் சமாதானமாக ஏதோ சொன்னாள். மெல்லி இரானி முக்காலியில் அமர்ந்து ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். என்.என்.ரெட்டி மூத்த ஒப்பனைக்காரரிடம் கைகாட்டினார். ஒளிப்பதிவுக் கூட்டமே மும்பையிலிருந்து வந்தது. அவர்களை ஒருவார்த்தை சொல்லிவிடமுடியாது.

ஒப்பனைக்காரர் அவளை அழைத்துச்சென்று மீண்டும் ஒப்பனை செய்து கூட்டிவந்தார். அவள் முகம் முந்தையதுபோல் இருக்கவில்லை. முன்பும் மிரட்சிதான் இருந்தது. இப்போது ஓர் இறுக்கம் இருந்தது. ஆனால் அவள் கதாநாயகி அல்ல. அவள் முகம் தெளிவாக தெரியப்போவதே இல்லை. ஆகவே எவரும் அதைக் கவனிக்கவில்லை. நான் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் வெடித்து அழுதுவிடுவாள் என நினைத்தேன். ஆனால் அவள் முகம் மண்பொம்மை போலவே இருந்தது.

என்.என்.ரெட்டி தன் கைவிரல்களைப் பார்த்தபடி, மெல்லி இரானி சிகரெட்டை முடிப்பதற்காக காத்திருந்தார். அவர் மட்டும்தான் செட்டில் புகைபிடிக்க முடியும். என்.என்.ரெட்டி முன்னால் கால்மேல் கால்போட்டு அமர முடியும். என்.என்.ரெட்டி கையசைத்தால் ஓடிவரவேண்டியதில்லை. மெல்லி இரானி சிகரெட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு உதவியாளனிடம் கைகாட்டினார். அவன் ஒரு துவாலையை கொண்டுவந்து அவரிடம் அளிக்க அவர் முகத்தை ஒற்றிக்கொண்டு காமிராவின் வியூஃபைண்டரில் கண்களை பொருத்தினார்.

என்.என்.ரெட்டி எழுந்து தன் உதவியாளர்களுக்கு சைகையால் ஆணையிட்டார். அவர்கள் ஓடிச்சென்று நடிகர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினர். மெல்லி இரானி கையசைக்க  ஸ்டேண்டுகளின் மேல் மேக்ஸியும் மினியும் மீண்டும் ஒளிவிடத் தொடங்கின. கோடாக்கள் மேல் நின்றிருந்த லைட்பாய்கள் ஒளிப்பதிவு உதவியாளர்களின் கையசைவுக்கு ஏற்ப விளக்குகளை திருப்பினார்கள்.

நான் அவள் முகத்தை பார்த்தேன். அவள் இமைகள் கண்ணீரால் நனைந்திருக்கின்றன என்று எனக்கு தோன்றியது. அங்கு நிற்க என்னால் முடியவில்லை,  திரும்பிவிட்டேன். செல்லும் வழியெல்லாம் கொதித்துக் கொண்டிருந்தேன். அவளை அப்போதே சென்று கையைப்பிடித்து கூட்டிக்கொண்டு வந்துவிடுவது போல, அவள் என் தோளில் தலைசாய்த்து கதறி அழுவதுபோல, அவள் வீட்டுக்கு தேடிச்சென்று அவள் குடும்பத்திற்கே நான் பொறுப்பை ஏற்றுக்கொள்வதுபோல கற்பனைகள் ஓடிக்கொண்டே இருந்தன.

இளமையில் மனிதர்கள் பலமடங்கு பற்பல மடங்கு உள்ளே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு புறவுலகம் வெறும் சக்கை. என் இடத்துக்குச் சென்று அமர்ந்து தைக்க ஆரம்பித்தபோதுதான் என் உடலில் எத்தனை ஆவேசம் இருக்கிறது என்று எனக்கே தெரிந்தது.

ஆனால் மறுநாள் அந்த வேகம் அடங்கியது. இது ஒரு பொறி என்று நானே எனக்கே சொல்லிக்கொண்டேன். இது எவரும் அமைக்கும் பொறி அல்ல, விதியால் அமையும் பொறி. முதலில் எனக்கு அவள்மேல் ஈடுபாடு வருகிறது, அதன்பின் இரக்கம் வருகிறது, இனி நெருக்கம் வரும். அதைநோக்கித்தான் இந்த பெருக்கு என்னைச் சுழற்றி அடித்துக்கொண்டுசெல்கிறது. என் முழு பலத்தாலும் அதற்கு எதிராக நின்றாகவேண்டும். இல்லாவிட்டால் நான் அந்த படுகுழியில் சென்றுவிழுவேன். அதன்பின் மீட்பே இல்லை.

இரக்கம்தான் மிக ஆபத்தானது. அது என்னை மேலானவனாக, ஆற்றல் கொண்டவனாக உணரச் செய்கிறது. பெண்ணிடம் இரக்கம் கொள்பவன் அவளுக்கு பொறுப்பேற்கிறான். பெண்கள் அதன் பொருட்டே ஆண்களிடம் இரக்கத்தை தூண்டுகிறார்கள். காமத்தைவிட பத்துமடங்கு ஆற்றல் மிக்க தூண்டில் இரக்கம்தான். அதை அங்கே ஸ்டுடியோவில் எவரோ ஏதோ வகையில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதனாலேயே பலர் இரக்கமற்றவர்களாக பெண்களிடம் நடந்துகொள்வார்கள்.

ஆனால் அவ்வப்போது நடனக்காரிகளை மணந்துகொள்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். பெரும்பாலானவர்கள் அதன்பின் ஸ்டுடியோ பக்கமே வரமாட்டார்கள். ஆனால் வேறு போக்கிடமில்லாமல் வந்தார்கள் என்றால் ஒன்று அவமானப்பட்டு சிறுமையடைந்து அந்தச்சிறுமையை ஏற்றுக்கொண்டு இளிக்க ஆரம்பித்து விடுவார்கள். மிக அபூர்வமாகச் சிலர் சீற்றம் கொள்வார்கள். லைட்பாய் நாராயணன் கலைப்பிரிவை சேர்ந்த குணசேகரனை கம்பியால் தாக்கியது நினைவுக்கு வந்தது. லைட்பாய் நாராயணனை பார்க்குமிடமெல்லாம் குணசேகரன் “ரேட் என்ன தோஸ்த்?” என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறான்.

மெல்லமெல்ல நான் அடங்கி சமநிலையை அடைந்தேன். தர்க்கம் மீண்டபோது எல்லாவகையான சொற்களையும் உருவாக்கிக் கொண்டேன். அசட்டுத்தனமான ஒரு ஈர்ப்புதான் அது. வேறொன்றுமில்லை. அதை நானே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தால் அது கடந்துபோகும். எனக்கு எல்லாமே சொல்லப்பட்டிருக்கிறது. எனக்கு எச்சரிக்கையுணர்ச்சி இருக்கிறது, விழுந்துவிட மாட்டேன். இந்த உலகம் என்னவென்று எனக்கு தெரியும். நாம் யோசிக்க ஆரம்பித்தால் அந்த திசையில் நெடுந்தூரம் சென்றுவிடுகிறோம். ஒரு கட்டத்தில் நான் அவள்மேல் வெறுப்பையே உருவாக்கிக் கொண்டேன். ஒரு பெரிய வஞ்சத்தில் இருந்து தப்பிய மகிழ்ச்சியைக்கூட அடைந்தேன்.

மேலும் சில நாட்களுக்குப்பின் அவளை அருகே கண்டேன், ஓரிரு வார்த்தைகள் பேசினேன். எங்களுக்கு தையல் பகுதிக்கே சாப்பாடு வந்துவிடும். மிக எளிமையான சாப்பாடுதான். சோறு, குழம்பு, ஒருபொரியல், மோர், ஊறுகாய்- அவ்வளவுதான். அன்றெல்லாம் சினிமாச் சாப்பாடு ஒரு  கொண்டாட்டமாக ஆகியிருக்கவில்லை. எங்கள் சாப்பாடு முதல்தரம். அன்றன்று கூலிக்கு வந்துசெல்லும் பெருங்கும்பலுக்கு புளிசாதம், எலுமிச்சைச்சாதம், தயிர்சாதம்தான் பொட்டலங்களில் அளிக்கப்படும். அசைவம் எல்லாம் ஆண்டுக்கு ஒருமுறைதான். அபூர்வமாக அனைவருக்கும் ஒரே இடத்தில் சாப்பாடு இருக்கும். அது ஏதாவது விருந்து விசேஷமாக இருக்கவேண்டும். அன்று அப்படி ஒரு விருந்து.

நான் சாப்பிடுவதற்காக போயிருந்தேன். விதவிதமான சாப்பாடுகள் அண்டாக்களில் வைக்கப்பட்டிருந்தன. பிரியாணிகூட இருந்தது. வேண்டியதை வாங்கிச் சாப்பிடவேண்டியதுதான். பிரியாணி இடத்தில் பெரும் நெரிசல். எனக்கு அப்படிச் சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆந்திராப் பருப்புச்சாதம் வாங்கிக்கொண்டு ஓரமாகச் சென்று அமர்ந்தேன். அப்போது அவள் என்னை நோக்கி வந்தாள்.

அவள் வருவதை எப்படியோ நான் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தேன். அவள் வந்துகொண்டே இருந்தாள். என் நெஞ்சு படபடத்தது. எழுந்துவிடுவேன் என்று தோன்ற வலுக்கட்டாயமாக அமர்ந்துகொண்டேன். நான் அவளைப் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டாள். நான் அவள்மேல் பித்தாக இருப்பது அவளுக்கு தெரியும். என் எண்ணங்களை முழுக்கவே புரிந்துகொண்டுவிட்டாள். என்னை முழுக்க வெல்ல வந்துகொண்டிருக்கிறாள். என்னை எடுத்து இடுப்பில் வைத்துக்கொள்வாள். என்ன கேவலம், எப்படி அதை சமாளிக்கப்போகிறேன்!

அவள் என் அகத்தை அறிந்துகொண்டது எனக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. அவளை புண்படுத்தி அனுப்பவேண்டும் என்று நினைத்தேன். அவளை அவமானப்படுத்தும்படி ஏதாவது சொல்லவேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. அவளுக்கு முகமே கொடுக்கக்கூடாது. அவளை நான் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று தெரிவிக்கவேண்டும். அதுதான் செய்யவேண்டியது, ஆமாம்.

ஆனால் அவள் அருகே வந்து நின்றபோது அந்த அசைவின் காற்றும், அதிலிருந்த வியர்வை மணமும், நகைகளின் ஆடையின் மெல்லிய ஓசையும் அன்றி எதுவுமே பிரக்ஞையில் இல்லை. நான் பார்வையை தாழ்த்தி தட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முகம் இறுகி இருந்திருக்க வேண்டும். என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்திருக்கவேண்டும்.

அவள் என்னிடம் “நீங்கள் தையல் இலாகாவா?” என்றாள்.

”ஆமாம்” என்றபோது என் குரல் அடைத்திருந்தது. “என் பெயர் மோட்டூரி ராமராவ்” ஏன் பெயரைச் சொன்னேன்? ஏன் என் குடும்பமும் சாதியும் தெரியும்படிச் சொன்னேன்?

“என் பெயர் ஸ்ரீபாலா. நான் இந்தப்படத்தில் சின்ன ரோலில் நடிக்கிறேன். எனக்கு ராணியின் தோழி வேடம். என்னுடைய உடைகளில் எப்போதுமே ஜரிகையை மடித்து உள்ளே வைத்து தைக்கிறார்கள். அது என் உடலை உரசுகிறது. உள்ளே புண்ணாகி விடுகிறது. நான் பலமுறை சொல்லிவிட்டேன். தையல் வேலையில் தலையிடமுடியாது என்று புரடக்‌ஷனில் சொல்கிறார்கள். தையல் உதவியாளருக்கு ஊசிநூலில் சின்ன தையல் போடத்தான் தெரிகிறது” என்றாள். படபடவென்று பேசினாள். சின்னப்பெண்களின் பேச்சு அப்படித்தான் பொரியும்.

அவளுக்கு என்னை தனிப்பட்டமுறையில் தெரியவில்லை என்பது தெரிந்தது. அது எனக்கு ஆறுதலை அளித்தது. ஒளிந்திருந்து பார்ப்பதுபோல ஒரு சுவாரசியத்தை உணர்ந்தேன்.

“இவள் என் தோழி. இவள்தான் சொன்னாள், நீங்கள் தையல் இலாகாவில் இருக்கிறீர்கள் என்று” என்றாள். அவளுக்கு பின்னால் இன்னொரு பெண் நிற்பதை அப்போதுதான் கண்டேன்.

“ஆமாம், என் தாய்மாமாதான் தலைமை தையல்காரர்” என்று சொன்னேன். அந்த மேட்டிமை பாவனையை நானே உள்ளே உணர்ந்து என்னைச் சலித்துக்கொண்டேன்.

“அப்படியா?” என்றாள், அவள் பெரிய ஆர்வமேதும் அதில் காட்டவில்லை.

அந்த ஆர்வமின்மை என்னை கொஞ்சம் சீண்டியிருக்கலாம். நான் கொஞ்சம் நிமிர்வுடன் “இதோ பாருங்கள், பெரிய நடிகர் நடிகைகளின் பட்டியல்தான் எங்களுக்கு தருவார்கள். அவர்களின் அளவும் தருவார்கள். அவர்களுக்கு மட்டும்தான் தனித்தனியாக ஆடைகள் தைப்போம். மற்றவர்களுக்கு அப்படி அவர்களுக்கான ஆடைகள் இல்லை. பொதுவாக நாலைந்து அளவுகளில் தைப்போம். பொருத்தமானதை எடுத்து அணிந்துகொள்ள வேண்டியதுதான். அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் தையல்காரர் சரிசெய்து கொடுப்பார்… “ என்றேன்.

“என் பெயர் பட்டியலில் இல்லை” என்றாள்.  “நான் துணைநடிகைதான்”

”அப்படியென்றால் உங்களுக்காக நாங்கள் என்ன செய்ய முடியும்? பொதுவான துணிகளில் ஏதோ ஒன்று உங்களுக்கு வரப்போகிறது” துணைநடிகர்களுக்கு பெயர்கள் இல்லை, துணிகளுக்கு அளவுகள்கூட இல்லை.

அவள் முகம் வாடியது. சட்டென்று அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியை இழுத்து நன்றாக தழைத்து “பாருங்கள், எப்படி இருக்கிறது என்று” என்றாள்.

அங்கே தோல் சிராய்ப்பு போல உரிந்து புண்ணாகியிருந்தது. நான் பார்வையை தாழ்த்திக் கொண்டேன். இந்த சரிகைகள் மட்டமான தரம் கொண்டவை. ஒரே ஒருதடவைதான் பயன்படுத்த முடியும். துவைத்தால் உதிர்ந்துவிடும். சூரத்திலிருந்து ஒட்டுமொத்தமாக வாங்கிக்கொண்டு வருவார்கள். வெள்ளிச்சரிகை, ஆனால் அலுமினியத்தாலானது.

“நான் பார்க்கிறேன்” என்றேன்.

“மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு இடுப்பிலும் காலிலும் எல்லாம் புண் ஆகிவிட்டது. விளக்கு வெளிச்சத்தில் வியர்க்கும்போது தீபட்டதுபோல எரிகிறது.”

“பார்க்கிறேன்” என்றேன்.

தழைந்த குரலில், ”ஏதாவது செய்யுங்கள்… மிகவும் உதவியாக இருக்கும்” என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தேன். அன்று அவள் மேக்கப் போட்டிருக்கவில்லை. பழைய பாவாடைத் தாவணி அணிந்திருந்தாள். வெண்ணிறமான பாசிமணி மாலை. காதுகளிலும் பாசிமணிக் கம்மல். மிக எளிமையான குடிசைவாசிப் பெண் போலிருந்தாள். முகத்தில் சிறிய  சிவந்த பருக்கள். மேலுதட்டில் மெல்லிய பூனைமயிர். கன்னமயிர் நன்றாகவே இறங்கியிருந்தது. அவள் உதடுகளை அப்போதுதான் பார்த்தேன். மேலுதடு சற்று மேலேழுந்து வளைந்து அவளுக்கு சிணுங்கும் குழந்தையின் பாவனையை அளித்தது.

மேக்கப் இல்லாமல் அவள் மிகப்பெரிய அழகியாக தெரிந்தாள். மாநிறமானவள். மெருகிட்ட தேக்குமரப் பலகையின் நிறம். அவள் கழுத்திலும் தோள்களிலும் நன்றாகத் தேய்க்கப்பட்ட செம்புக்கலங்களின் மிளிர்வு தெரிந்தது. முகமே பாளை விரிந்து வெளிவந்த புதிய வாழைப்பூ போல மென்மையின் ஒளியுடன் இருந்தது. கைகளில் சாதாரணமாகப் பெண்களின் கைகளில் இருப்பதைவிட அதிகமான மயிர்ப்பரவல். அவள் கூந்தலும் சுருளாக, கனமாக, இடைவரை அலையலையாக கிடந்தது. நடிக்கும்போது அதை சுருட்டி கொண்டையாக கட்டிவிடுகிறார்கள்.

நான் அவளிடம் “நான் உங்கள் உடைகளை தனியாக தைத்து அனுப்புகிறேன். உள்ளே ஒரு பருத்தித்துணி வைத்து தைக்கச் சொல்கிறேன். அதை தனியாக அனுப்ப முடியாது. ஆனால் அதை மட்டும் ஒரு நீல ரிப்பனால் கட்டி போட்டிருப்பேன். நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்றேன்.

“ரொம்ப நன்றி” என்று கும்பிட்டாள்.

பின்னால் நின்றபெண் “நல்லவேளை, எனக்கு சரிகைத் துணியே இல்லை” என்றாள்.

நான் ”அடுத்தபடத்தில் வரட்டும்” என்றேன்.

அவள் சிரித்து “இந்தக்குதிரை அவ்வளவு எடை தாங்காது” என்றாள்.

“நடிக்க முடியாதா?” என்றேன்.

“நடிப்பது நடித்துவிடலாம். கொஞ்சம் முகம் தெரிந்தால் மேலிருந்து கீழே வரை அத்தனைபேரும் வந்து மேலே ஏறுவார்களே, அதை தாளமுடியாது”என்றாள்.

நான் திடுக்கிட்டேன். என் நெஞ்சு துடிக்க ஆரம்பித்தது.  “அப்படியா?”என்று அசட்டுத்தனமாகக் கேட்டேன்.

”இவளிடம் கேளுங்கள். இவள் அம்மா இவளை முன்னால் நிற்கவைத்துவிட்டாள். ஒருநாளைக்கு எத்தனைபேர். எல்லாரும் குடிகார எருமைகள்…”

அனிச்சையாக நான் ஸ்ரீபாலாவைப் பார்த்தேன். பார்த்திருக்கக் கூடாது. அவள் பலவீனமாக புன்னகைத்துவிட்டு திரும்பிப்போய்விட்டாள். நான் பேசாமல் அவள் போவதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

அவள் “பாவம் இவள், நல்ல பெண்” என்றாள். “குடிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள், திட்டாமல் கூட இருக்க எவனாலும் முடியாது. அடிக்காமலாவது இருக்கலாமில்லையா?”

“அப்படியா?” என்றேன். மந்தபுத்தி போல உணர்ந்தேன். என்ன சொல்கிறேன்? என்ன சொல்ல முடியும்?

“பாவம்” என்றபின் அவளுக்குப் பின்னால் ஓடிச் சென்றாள். நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் அதற்குப்பின் ஒரு வாய் சோறை அள்ளி வாயில் வைக்கமுடியவில்லை.

[மேலும்]

முந்தைய கட்டுரைஓஷோ உரை – கேள்விகள்
அடுத்த கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…