விக்கிக்கு வாழ்த்துக்கள்
அன்புள்ள ஜெ
விக்கிப்பீடியா பற்றி எழுதப்பட்ட ஒரு குறிப்பை அளித்திருந்தீர்கள். அது ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு பொருந்தும். ஆங்கிலம் அறிவுலக மொழி. அதை கையாள்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவுப்பயிற்சி உண்டு. அதன் வாசகர்களும் அப்படித்தான். ஆங்கில விக்கியை 70 சதவீதம் நம்பலாம். சில பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. அவை மிகநுட்பமான தொழில்நுட்ப பிழைகளாக இருக்கும். அல்லது, சில அரசியல்பிழைகள் இருக்கும்.
ஆங்கில விக்கியில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் ஐரோப்பிய மேட்டிமைத்தனம் கொண்ட சிலர் அதில் இருப்பதுதான். அவர்கள் கீழைநாட்டுப் பண்பாட்டைப் பற்றிய செய்திகளை சுருக்கவோ, சிறிதாக காட்டவோ தொடர்ந்து முயல்கிறார்கள். ஒரு சிறிய அளவிலான கிறிஸ்தவப்பார்வையும் உண்டு. இந்துப்பண்பாடு சார்ந்த விஷயங்களில் பெருமையாக ஏதேனும் இருந்தால் உடனே திருத்தப்படும்
ஆனால் தமிழ் விக்கி அப்படிப்பட்டது அல்ல. அதை ஒரு சிறிய குறுங்குழு மொத்தமாகவே கைப்பற்றி வைத்திருக்கிறது. எந்த அடிப்படை அறிவுப்பயிற்சியும் அற்றவர்கள். வாசிப்பே இல்லாதவர்கள். வெறும் மொழிவெறியர்கள், இனவெறியர்கள். ஆனால் ஒரு கூட்டமாகச் செயல்படுகிறார்கள். சர்வதேச அளவில் செயல்படுகிறார்கள்
தமிழ்நாட்டில் எங்குமே புழக்கத்தில் இல்லாத ஒரு செயற்கையான தனித்தமிழை நாம் விக்கியில் பார்க்கலாம். வாசிக்கவே முடியாது. ஸ்டாலின் என்ற பெயரை இசுடாலின் என்று திருத்துவார்கள். எல்லா பெயர்களும் இப்படி திரிபடைந்தே இருக்கும். நான் என் மாணவர்களிடம் தமிழ் விக்கியை பார்க்கக்கூடாது என்று சொல்வேன். தமிழ் விக்கியின் சுட்டி இருந்தால் அக்கட்டுரையை உடனே நிராகரித்துவிடுவேன். ஏனென்றால் அடிப்படைச் சொற்களில் பிழையான புரிதல் வந்துவிட்டால் அது நீங்காது, பிறவாசிப்பிலும் பெரிய தடையாக ஆகும்
அத்துடன் தகவல்களையும் பிழையாக திருத்திக்கொண்டே இருப்பார்கள். திராவிட இயக்கம் பெரியார் பற்றிய பிழையான பொய்யான செய்திகள் சேர்க்கப்படும். இந்துமதம், ராஜாஜி, காந்தி பற்றிய பிழையான அவதூறுச் செய்திகளை அளிப்பார்கள். திருத்தினால் உடனே விக்கியின் நிர்வாகிகளே அதை மீண்டும் சேர்த்துவிடுவார்கள். தமிழ் விக்கி என்பது ஓர் அரசியல் காழ்ப்புக்குழுவின் கையிலுள்ள பத்திரிகைபோல. நம்பகத்தன்மை அற்றது
இதை எல்லாம் நீங்களே எழுதியிருக்கிறீர்கள்.
ஆர்.ஈஸ்வரன்
வெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்
வெண்முரசும் விக்கிப்பீடியாவும் -கடிதங்கள்
விக்கி- தமிழ் தாலிபானியம்
விக்கி,விவாதங்கள்
விக்கி- ம.நவீன்
தமிழ் மொழியின் வழி மேம்பட்ட பணிகளைச் செய்ய வேண்டிய தளங்களில் எல்லாம் இதுபோன்ற ஓரிரு மொண்ணைகள் அமர்ந்துகொண்டு அதன் வளர்ச்சியைத் தடுப்பதும் தங்களின் அடிப்படைவாத புத்தியால் அசட்டுத்தனங்களைக் காட்டுவதும் தொடர்ந்து நடந்தே வருகிறது. ஏதாவது வித்தை செய்துக்காட்டி இந்த ஒட்டுண்ணிகளால் தங்களை ஜீவிக்க வைத்துக்கொள்ள முடியும். அதற்கான பாவனையுடன் உலாத்துவது, தேவைப்படும் இடங்களில் குறுகி ஒடிவது என சாகசமெல்லாம் செய்யத்தக்கவர்கள் இவர்கள். ஆனால் அதற்கு எதிரான அறிவியக்கம் என ஒன்று தமிழில் இருந்தால் மறுப்புக்குரலும் ஒலிக்கப்படவேண்டும்: அது எவ்வளவு சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும்.