சாமானியர்களின் அடக்குமுறை- கடிதம்

அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதம்

அன்புள்ள ஜெ

சமீபத்தில் உங்கள் தளத்தில் வெளிவந்த கடிதங்களில் மிகமிக உண்மையான, நெஞ்சைத்தொடும் கடிதம் அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதம்

ஏனென்றால் இதுவே என் வாழ்க்கையின் சித்திரமும். நான் வாழ்க்கையையே பிறருக்காக அளித்துவிட்டு வாழ்பவன். என் வாழ்க்கை அப்படியே இந்தக்கடிதத்தில் உள்ளது.என் அப்பா அம்மாவுக்காக எல்லா சமரசங்களும் பண்ணிக்கொண்டவன். என் குடும்பத்துக்காக ஒத்துப்போகிறவன். என் நுண்ணுணர்வை பேணிக்கொள்ள மட்டுமே ஆசைப்படுபவன்.

டிவி பற்றிச் சொல்லியிருந்தார். இந்த டிவி வாசிப்பவர்களுக்கு எவ்வளவு பெரிய தடை என்பது அவர் சொன்னதைவிட அதிகம். நம் இல்லங்களெல்லாம் மிகச்சின்னவை. ஒருவீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் நடுவே ஒரு சுவர்தான் பெரும்பாலும் இருக்கும். இங்கே பெண்கள் டிவியை சத்தமாக வைக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் டிவியை அமர்ந்து பார்ப்பதில்லை. வீட்டுக்குள் வேலைசெய்தபடியே பார்க்கிறார்கள். ஆகவே சமையலறையிலிருந்தாலும் கேட்கும்படி வைக்கிறார்கள். தெரு முழுக்க அது ஒலிக்கிறது.

அதோடு டிவியின் சத்தமும் ஒரு தனித்தன்மை கொண்டது. நீங்களே பார்க்கலாம். டிவியில் சினிமா ஓடும்போது கொஞ்சம் அமைதியாக இருப்பதுபோல இருக்கும். இத்தனைக்கும் சினிமாவில் பயங்கரமான பின்னணி இசை இருக்கும். ஆனாலும் டிவி நிகழ்ச்சிகளைவிட அது அமைதியானதுதான். ஏனென்றால் சினிமா உட்கார்ந்து பார்ப்பவர்களுக்காக அமைக்கப்பட்டது. ஆனால் டிவி அலைந்துகொண்டிருப்பவர்களுக்காக அமைக்கப்பட்டது.

ஆகவே டிவி நம்மை  கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது. அடிக்கடி ஓசை வெடித்து கிளம்பும். விளம்பரங்கள் எல்லாமே கூப்பாடுபோடுவதுபோல அதட்டுவதுபோலத்தான் ஒலிக்கும். சீரியல்வசனமே அவ்வப்போது கூப்பாடு போடும். நம் கவனத்தை ஈர்த்தபடியே இருக்கும். டிவி ஓடிக்கொண்டிருந்தால் வாசிப்பது சாத்தியமே இல்லை. நான் இயர்பிளக் வாங்கி வைத்திருக்கிறேன். அதுகூட பிரயோசனம் இல்லை

டிவியால் குழந்தைகள் படிப்பதுகூட கஷ்டம். ஆனால் இதை பெண்களிடம் சொல்ல முடியாது. வயதானவர்கள் தங்கள் உரிமையை பறிப்பது என்று எடுத்துக்கொள்கிறார்கள். என் அம்மாவிடம் ‘டிவியை கொஞ்சம் பைய வைக்கக்கூடாதா?’ என்று கேட்டேன்.  ‘ஆமடே உன்னை வளத்து ஆளாக்கினேன்லா, நீ இதுவும் சொல்லுவே இதுக்குமேலேயும் சொல்லுவே. நான் செத்தாத்தான் உனக்கு நிம்மதி, இல்லியா?”என்று அன்றைக்கு முழுக்க அனத்திக்கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் இங்கே இப்படி புலம்பத்தான் முடியும். என் பெயரையும் வெளியிடவேண்டாம்

அன்புடன்

_

 

அன்புள்ள –,

இந்த பெயரிலிக் கடிதங்களைப் பார்க்கையில் ஒன்று தோன்றுகிறது. இந்த நாட்டில் ‘சாமானியர்களின் வன்முறை’ எந்த அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது என்று. சாமானியர்கள் கொஞ்சம் வேறுபட்டிருப்பவர்களை ஒடுக்கி அடக்குகிறார்கள். ஏளனம் செய்கிறார்கள்.சிறிய இன்பங்களையும் சுதந்திரங்களையும்கூட அனுமதிப்பதில்லை. அவர்களை வாழவே விடமாட்டேன் என்கிறார்கள்.

எங்கும் அவர்களின் ஆதிக்கம்தான். எங்காவது அமர்ந்து பேசினால் அங்கே வந்து அவர்களும் அமர்ந்துகொள்கிறார்கள். சமூகவலைத்தளங்கள் உட்பட எங்கும் அவர்களே நிறைந்திருக்கிறார்கள். அரசு, அரசியல், சமூகம் எல்லாமே அவர்களுடையது. இதற்குமேல் அவர்கள்மேல் உள்ள செண்டிமெண்ட் வேறு. சாமானியர் என்றால் கள்ளம்கபடமற்றவர்கள், சுரண்டப்படுபவர்கள், தியாகிகள், ஆகவே புனிதமானவர்கள் என்ற அசட்டுக் கற்பிதங்கள்.

சாமானியர்களின் தன்னலமும் அறமின்மையும் அறியாமையும் மூர்க்கமும் பேசப்படுவதே இல்லை. அதைப்பற்றி ஒரு வார்த்தை சொன்னால்கூட உடனே முதிராஅறிவுஜீவிகளும் போலிப்புரட்சியாளர்களும் கிளம்பிவந்து ஃபாசிச முத்திரையை குத்திவிடுகிறார்கள். இந்தியா ஒரு மாபெரும் போலிச்சூழலாக ஆகிவிட்டிருக்கிறது

ஜெ

அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்
முந்தைய கட்டுரைசெல்வேந்திரனின் ‘வாசிப்பது எப்படி?’-கடிதம்
அடுத்த கட்டுரைஆகுதி- கடிதங்கள்