உற்றுநோக்கும் பறவை, நம்பிக்கையாளன் – கடிதங்கள்

அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்

அன்புள்ள ஜெ,

நீங்கள் எழுதிய ‘நம்பிக்கையாளன்’ சிறுகதை இன்று வாசித்தவுடன் மனதால் எளிதல் கடந்து செல்ல முடியவில்லை.கதை வேறொரு புனைவுக்களத்தை கொண்டிருப்பினும் கூட அதில் பகிரப்பட்டிருக்கும் பல தகவல்களையும் குறிப்பிட்டதோர் மதம்சார் கொள்கைகளுடன் ஒன்றித்துப்பார்க்க முடியுமாய் இருப்பதை உணர முடியும்.

கதையின் முடிவு அவனை நம்பிக்கையாளன்(?) ஆக காட்ட முனைவதாக இருப்பினும் கதையோட்டத்தில் அறிவியலின் கருத்துக்களோடு அவன் ஒத்தோடுகிறான்.ஓர் அறிவியல் புனைகதையாக கதை பிரஸ்தாபிக்க நினைப்பதை அது நிறைவு செய்திருந்த போதிலும், இளைஞனின் மனதில் ஏற்படும் நெருடல்  எவ்வகையானது என்பதை விளக்கலாமா?

நன்றி

இப்படிக்கு,

ஷாதிர்.

அன்புள்ள ஷாதிர்

பொதுவாக கதைகள் நிலைகொள்ளாமை, இரண்டு எல்லைகளுக்கும் நடுவே நின்றிருக்கும் அலைக்கழிப்பு ஆகியவற்றையே சொல்லமுயலும். உறுதிப்பாட்டில் கேள்விகள் இல்லை, ஆகவே கதைக்கு வேலை இல்லை. அவன் எடுக்கும் முடிவென்பது அக்கணம் அளிக்கும் தாவல் மட்டுமே

பொதுவாக கதைகள், அந்தக்கட்டமைப்புக்குள் என்ன சொல்கின்றனவோ அதைத்தான் வாசகன் கொள்ளவேண்டும். அதிலிருந்து தன் கற்பனையை விரித்துக்கொள்ளவேண்டும். மேலதிகமாக ஆசிரியன் பேசக்கூடாது. அது கதை போதாமைகொண்டது என்பதாக ஆகிவிடும்

ஜெ

அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை

அன்புள்ள ஜெ

இரு கதைகள் என்னை அலைக்கழிக்கின்றன. வாசித்து நீண்டநாள் ஆகியும் இன்னும் நினைவில் நின்று தொந்தரவு செய்யும் கதைகள். அதில் ஒன்று நம்பிக்கையாளன். இன்று உலகளாவிய சூழலில் அனைவருமே அந்த நிலையில்தான் இருக்கிறோம். நம்பிக்கையாளர்கள்தான் எல்லா திசையிலும். சஞ்சலம் கொண்டவன், கேள்விகள் கொண்டவன் என்ன செய்யவேண்டும். ஏதாவது ஒரு நம்பிக்கை பக்கமாக ஓடவேண்டும். அது தற்கொலைதான்

அதைவிட என்னை தொந்தரவுசெய்யும் கதை உற்றுநோக்கும் பறவை. இன்று நாமனைவருமே இரட்டை ஆளுமை கொண்டவர்களாக ஆகிவிட்டோம். நமது முகம் சமூக ஊடகங்களில் ஒன்று, குடும்பத்தில் இன்னொன்று. மதவெறியனாக இருப்பவன் ஒரு செக்யுலர் நிறுவனத்தில் ஊழியனாகவும் இருக்கிறான். நவீன அறிவியலில் ஈடுபடுபவன் மூர்க்கமான ஆசாரவாதியாகவும் இருக்கிறான். இரட்டை ஆளுமை என்பது ஒரு பண்பாட்டுக்கூறாக ஆகிவிட்டது

அந்தக்கதையை இன்றைய சூழல் உருவாவதற்கு முன்பு எழுதிவிட்டீர்கள். இருகதைகளும் இன்றைய சூழலுக்காக, இதையெல்லாம் அவதானித்து எழுதியவை போலவே உள்ளன. அவை கூர்மையான அரசியல்கதைகள். அறிவியல்கதைகள் என்றால் அவற்றில் ஆச்சரியமும் திகைப்பும் ஊட்டும் கற்பனை மட்டுமே இருக்கும் என்றே நான் நினைத்திருந்தேன்

சிவக்குமார் எஸ்

முந்தைய கட்டுரைஅடையாள அட்டை- கடிதம்
அடுத்த கட்டுரைஅறம்- கடிதங்கள்