யூமா வாசுகிக்கு வாழ்த்து
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
தன்னறம் வாயிலாக ஒரு இலக்கிய விருது முன்னெடுப்பை இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் முயற்சிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி, முதல் விருதினை ஓவியர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான யூமா வாசுகி அவர்களுக்கு வழங்க நண்பர்கள் அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். அதற்கான காணொலி ஆவணப்பதிவு ஒன்றினை பதிவுசெய்வதற்காக பட்டுக்கோட்டைக்குச் சென்று எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களைச் சந்தித்தோம். மெல்லமெல்ல தன் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் பேச ஆரம்பித்தார். அப்பொழுதான் அவர் உங்களுடனான மறக்கமுடியாத சில நினைவுகளையும் எங்களோடு பகிர்ந்துகொண்டார்.
நீங்கள், நிர்மால்யா, எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஊட்டி நாராயணகுரு ஆசிரமத்திற்கு வந்திருந்த சமயத்தில் யூமா உங்களைச் சந்தித்துப் பேசியதாகச் சொன்னார். அப்போது நீங்கள் அவரிடம் ‘மலையாளம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற அக்கறையை உரிமை கலந்த குரலில் வெளிப்படுத்தியதாகச் சொல்லி அந்நாளினைப் பற்றிய நல்நினைவுகளை அகம் பகிர்ந்தார். அன்று, நீங்கள் உரைத்த சொல்லின் ஆழத்தைப் புரிந்துகொண்ட யூமா அவர்கள், அதன்பிறகு முழு அர்ப்பணிப்புடன் தன்னை அம்மொழிக்குள் ஈடுபடுத்திக்கொண்டதாகத் தெரிவித்தார். மலையாளத்திலிருந்து தான் மொழிபெயர்த்து 2014ம் ஆண்டு வெளியாகிய ‘கசாக்கின் இதிகாசம்’ நாவல் வரைக்கும் அந்த தூண்டுதல் துணைவருவதாகச் சொன்னார்.
ஒருவகையில் ஒரு பெரும் நிறைவு எங்களுக்குள் அக்கணம் தோன்றியது. யூமாவை அத்தனை ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு மொழிபெயர்ப்பின் முகமாக உங்களால் உய்த்துணர இயன்றிருக்கிறது என்பது வியப்பளிக்கிறது. ஒருவேளை உங்கள் மனதுக்கு தோன்றிய இயல்பான ஒரு எண்ணமாகக்கூட அது இருந்திருக்கலாம். ஆனால், அந்த ஊக்கச்சொல் திறந்த படைப்புவெளி இன்று தமிழ்ச்சூழலில் மறுக்கமுடியாத படைப்பாளுமை மனிதர்களில் ஒருவராக அவரின் இருப்பை அமைத்துக்கொள்ளச் செய்திருக்கிறது. எழுத்தாளர்கள் சிருஷ்டிக்கும் எல்லோருக்குமான சொல்தெய்வத்தை இக்கணம் வணங்கிக்கொள்கிறோம்.
தனது வாழ்வனுபாவங்களை நினைவுகளாகப் பகிர்ந்துகொண்ட யூமா வாசுகி அவர்களின் வாழ்வுரையாடல் காணொலி இணைப்பு: https://www.youtube.com/watch?v=WQHkyDBhoFc&fbclid=IwAR17LjSVU6v96ouZNZGhctUW_nBQquJL-z7RpssmMvrKMILAW9XLSY-2Agg
தன்னறம் இலக்கிய விருது என்கிற இம்முன்னெடுப்புக்கான அகத்தூண்டல் என்பது நீங்களும் நண்பர்களும் இணைந்து நிகழ்த்தும் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ தான். கவனிக்கத்தவறும் படைப்பாளுமை மனிதர்கள் குறிதான ஒரு நேர்மறை உரையாடலை இத்தகைய விருதளிப்பு நிகழ்வின் வழியாக நாம் இச்சமகாலத்திலும் முன்னெடுக்க முடியும் என்ற அகவிசை அங்குதான் உருவானது. இலக்கியம் சார்ந்த ஒரு வாசிப்பறிவு, எண்ணத் துணியும் செயல்களுக்குத் எங்ஙனம் துணையிருந்து மனவலு கூட்டுகிறது என்பதையும் நாங்கள் சிறுகச்சிறுக கற்றுக்கொண்டிருக்கிறோம்.
2020ம் ஆண்டிற்கான தன்னறம் இலக்கிய விருதினை எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பு படைப்புமுகத்திற்காக வழங்குகிறோம். வருகிற 27.02.2021 சனிக்கிழமை அன்று, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள குருகுல் லூதர்ன் தியோசாபிகல் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு இந்த விருதளிப்பு நிகழவுள்ளது. ஒரு படைப்பாளிக்கு பொதுசனத்திரளில் இருந்து கெளரவிப்பு எழுவதே நியாயதர்மம் என்பதால், இலக்கிய விருதுக்கான நினைவுப்பரிசோடு யூமா அவர்களுக்கு தோழமையுறவுகளின் கூட்டுப்பங்களிப்பில் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாய் தொகையினையும் ஒப்படைக்கவுள்ளோம்.
குக்கூ குழந்தைகள் வெளியைப் பொறுத்தவரை, எழுத்தாளர் வாண்டுமாமாவின் நீட்சியாகவே, அண்ணன் யூமா வாசுகி அவர்களைக் கருதுகிறோம். வாண்டுமாமாவை அவருடைய இறுதிநாட்களில் நாங்கள் சந்திக்க நேர்ந்தது. வாழ்வு நெருக்கடியும் நோய்மைச்சூழலும் துன்புறுத்திய காலத்திலும்கூட, வாழ்வைவிட்டுச் சிறிதும் நம்பிக்கையிழக்காத அவருடைய கனிவுப் பெருங்குரலாகவே, யூமா அவர்களின் அமைதிக்குரலையும் நாங்கள் அர்த்தப்படுத்துகிறோம். கலைஞன் நலிவடைய நேர்ந்தாலும் அவன்தன் கலையை நலிவடைய விடுவதில்லை. காரணம், அவன் அதைத் தனது ஆத்மச்சுடருக்குப் பக்கத்தில் வைத்து அணையாமல் பாதுகாக்கிறான்.
யூமா அவர்களின் மனம் இன்னமும்கூட சிறார் இலக்கியத்தை மையமிட்டே சிந்திக்கிறது. கேரளாவில் இருப்பதைப்போன்ற அரசுசார் அமைப்பு ஒன்று சிறாரிலக்கியத்திற்காக தமிழ்ச்சூழலில் நிறுவப்பட வேண்டும் என்பதைத் தன் வாழ்வின் பெருங்கனவாகக் கொண்டிருக்கிறார். என்று, யாரால் அக்கனவு நிகழும் என்பது தெரியாது; ஆனால் அந்த எண்ணத்தின் முதல்விதையும் முதல்நீரும் முதலொளியும் யூமாவுடையது. இவ்விருதின் வழியாக நாங்கள் அவருக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இத்தனை படைப்புகளை படைத்தபின்பும் தனக்குள் வாழும் குழந்தைமையைத் தொலைத்துவிடாத அந்த தூயமனதை நாங்களும் வழிதொடர முயல்கிறோம் என்பதே அது.
குக்கூ- தன்னறம்
யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி மொழியாக்க விருது!