வெள்ளையானை வாங்க
அன்புள்ள ஜெ,
ஒரு கதையை வாசிக்க தொடங்கும் முன் எந்த வித முன்முடிவுகள் இன்றி வாசிப்பதே சரியான முறையாக நான் நினைப்பதுண்டு. ஆனால், “வெள்ளை யானை” என்ற தலைப்பு பல்வேறு கற்பனைகளை இயல்பாகவே மனதில் ஊற செய்தது. “வெள்ளை யானை” என்பது என்னவாக இருக்கும்? என்ற கேள்வியின் ஊடாக நான் அடைந்த கற்பனைகளின் தொகுப்பே ஒரு தரிசனத்திற்க்கு உரியவை. இறுதியில் அது ஒரு பெரும் பனிக்கட்டியின் சித்திரம் என்பதை அறிந்த போது ஒரு நிமிடம் ஏற்பட்ட திகைப்பு, என்னால் விவரிக்க இயலாதது என்றே கூற முடியும்.
கதை ஒரு குற்றத்தை விசாரிக்கும் தன்மையை கொண்டு அதன் பின் உள்ள அரசியல் அதை கொண்டு அவர்கள் கட்டமைக்கும் வியாபாரம், அதன் மூலம் இதை எதையுமே அறியாத, அறிய முடியாத தொலைவில் உள்ள மக்கள் அடையும் கொடூரங்கள் என்று ஒரு சாதாரண மனிதனின் மனசாட்சியை உலுக்க கூடிய, கேள்வி கேட்க கூடிய ஒரு பெரும் தொகுப்பாக என்னுள் ஒரு வித தடுமாற்றத்தை உணர்ந்தேன். அந்த உணர்வு இன்னும் ஏதோ ஒரு ஓரத்தில் எப்பொழுதும் இருக்கும் என்றே தோன்றுகிறது.
பாதிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடங்கள் பற்றிய சித்தரிப்பில், ஏய்டன் மனதிற்குள் தோன்றும் “நரகம் என்பது ஓர் இடுங்கிய இடம்” என்ற வரி அந்த குடியிருப்பின் மொத்த அழுத்தத்தையும் ஏற்று இருப்பது போல் தோன்றுகிறது. அதை தொடர்ந்து அவன் பயணிக்கும் பஞ்சம் பாதிக்க பட்ட பகுதிகள் தோற்றுவிக்கும் கற்பனைகள் என்றென்டும் மனதிலிருந்து அகலாத துர்கனவுகளுக்கு உரியவை. கண்ணீரின்றி அதை கடப்பது என்பது இயலாதது என்றே தோன்றுகிறது. அந்நிகழ்வின் சித்தரிப்பிற்கு பிறகு வாசிப்பு வேறொரு கோணத்தை அடைந்ததாக நான் நினைக்கிறேன்.
வாசிப்பில் ஒரு வித பதற்றம் ஒட்டி கொண்டதாகவே எண்ணுகிறேன். இந்த அத்தனை நிகழ்விற்கும் ஏதோ ஒரு வகையில் அந்த பாதிக்கப்பட்ட ஐஸ் ஹவுஸ் தொழிலாளிக்கு நீதி கிடைத்து விட வேண்டும் என்ற பதட்டமாக அது இருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கும் பொழுது தோன்றுகிறது. ஆனால், இறுதியில் நிகழ்ந்தது ஒரு சாதி மேட்டிமையின், பல காலங்களாக ஊறிப்போன ஒரு ஆழ்ந்த வெறுப்பின் அல்லது ஒட்டுமொத்த கீழ்மையின் வடிவமாக நிகழ்ந்த ஒன்று. யாரொருவன் அவர்களின் நலனுக்காக தன்னை நிகழ்த்தி கொண்டானோ அவனே அவர்களுக்கு எதிராக நிற்கும் நிலைமை உருவாகிறது. அது அவ்வாறுதான் நிகழும் என்ற நிதர்சனம் ஒரு வலியை ஏற்படுத்தியது. ஆனால், இவை எல்லாவற்றிக்கும் மேலாக அவர்கள் தங்களுக்கான ஒரு சிறு அடியை முன் எடுத்து வைப்பதற்கு தயாராகி விட்டார்கள் என்பது ஒரு பளிச்சிடும் வைரக்கல்.
நரேந்திரன் ரமேஷ்பாபு
அன்புள்ள ஜெ
வெள்ளையானை நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். கொற்றவை, விஷ்ணுபுரம் போன்ற நாவல்களில் இல்லாத இன்னொரு மொழி. பல இடங்களில் மொழியாக்கமோ என்று தோன்றுமளவுக்கு ஒரு நடை. ஆனால் மிகச்சரளமாக, ஒரே விசையுடன் வாசித்து முடிக்குமளவுக்கு இருந்தது நாவல்.
நாம் அறியாத ஒரு உண்மையை காட்டுகிறது. அது நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது. இந்தியாவின் மாபெரும் பஞ்சங்களில் நமது உயர்வர்க்கம் அந்தப்பஞ்சத்தை உருவாக்கிய வெள்ளைக்காரர்களுடன் கொஞ்சிக்குலவி, அவர்களிடமிருந்து இச்சகம் வாங்கி தின்றுகொண்டிருந்தது. மதவாதிகள் ஆசார உலகங்களில் வாழ்ந்தனர். வரலாற்றை பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது. அத்தனை சிற்றரசர்களும் கொள்ளைக்காரர்களாக இருந்த காலம் அது. அன்றிருந்த நிலபிரபுக்கள் எல்லாருமெ ஈவிரக்கமற்ற கொடியவர்கள். வணிகள் மோசடிக்காரர்கள். நம்முடைய ஆன்மிகமான சீரழிவே அப்பஞ்சத்தை நாம் எதிர்கொள்ள முடியாமலாக்கியது
மறுபக்கம் வெள்ளை ஆட்சி இங்கே எதைக்கொண்டுவந்தது என்றும் காட்டுகிறது இந்நாவல். அவர்கள் இங்கே ஒழுங்கையும் கல்வியையும் கொண்டுவந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இல்லை, மாபெரும் பஞ்சங்களைத்தான் கொண்டுவந்தார்கள் என்று இந்நாவல் அப்பட்டமாக காட்டுகிறது. வெள்ளைய ஆட்சியின் கொடூரம் பற்றி தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இது.
இருசாராரையும் ஈவிரக்கமில்லாமல் கிழித்துக்காட்டும் இந்நாவலை மனசாட்சியை கொண்டுமட்டுமே வாசிக்கமுடியும். நாம் விரும்பும் அரசியலை முன்வைக்கவேண்டும் என்று எண்ணி வாசிக்கமுடியாது. வெள்ளையர் இங்கே ஒழுங்கையும் நல்லாட்சியையும் கொண்டுவந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இடதுசாரிகளுக்கும் அவர்கள் இல்லாவிட்டால் நாம் உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம் என்று சொல்லும் வலதுசாரி மத- சாதி வெறியர்களுக்கும் எதிரானது இந்நாவல். வெள்ளையர் ஆட்சியே தங்கள் விடுதலைக்கு வழிவகுத்தது என்று நம்பும் தலித் அறிவுஜீவிகளுக்கும் பெரிய அடி. அவர்களை பெருந்திரளாகச் சாகவிட்டது அந்தப்பஞ்சமே என்றும், அப்பஞ்சம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் பெரும்பான்மையினராகக்கூட தலித்துக்களே இருந்திருப்பார்கள் என்றும் காட்டுகிறது.
அரசியலால் வாசிக்கமுடியாத, மனசாட்சியால் வாசிக்கவேண்டிய நாவல்
எம்.ராம்குமார்