திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் சமீபத்தில் ரா. செந்தில்குமார் அவர்களின் இசூமியின் நறுமணம் நூல் வெளியீட்டு விழா உரையில் பேசும் போது அன்றாட யதார்த்தத்தைச் சொல்லும் தன் அனுபவக் கதைகள் சிறந்த இலக்கியமாகாது எனக் கூறியிருந்தீர்கள். ஆனால் நான் இவற்றில் நிறைய விதிவிலக்குகளை காண்கிறேன்.
உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் நாஞ்சில் நாடன் அவர்களுடைய ‘யாம் உண்பேம், அம்மை பார்த்திருந்தாள்’ ஆகியவை யதார்த்த தன் அனுபவக் கதைகளே. அவற்றைக் கூறும் விதமும், மொழிநடையும் அவற்றைச் சிறந்த கதைகளாகவும், என்று வாசித்தாலும் நமது மனசாட்சியைத் தொடும் கதைகளாவும் உணர வைக்கிறது. சாரு நிவேதிதா அவர்களின் ‘பிளாக் எண் 27, திரிலோக்புரி’ கதையையும் மேற்கூறிய வரிசையில் வகைப்படுத்தலாம். கதை நடந்த அன்று அன்றாட யதார்ததமாக இருந்த ஒரு நிகழ்வு இன்று அநேகமாக ஒரு வரலாற்றுப் பதிவாகின்றது.
மேலும் நாஞ்சில் நாடனின் தீதும் நன்றும் தொகுப்பில் ஒரு கட்டுரையாக உள்ள ‘ தனிமையென்னும் காடு’ கட்டுரை முதியோரின் நிராதரவான நிலையைப் பேசும் சிறப்பான சிறுகதை என்பது என் எண்ணம். அதுவும் நீண்ட காலத்திற்குப் பிறகும் கவனிக்கப்படும் என நம்புகிறேன்.
யதார்த்த தன்னனுபவ கனதகளுக்கு மேலதிகமாக உங்களுடைய புனைவுக் களியாட்டு, கதைத்திருவிழா கதைகளான ‘ நகைமுகன், கிரீட்டிங்ஸ்’ கதைகளையும் கூறலாம். ஒரு அலுவலகத்தில் அன்றாடம் அல்லது எப்பொழுதாவது நிகழும் இறுக்கமான சூழ்நிலையை ஒருவர் அறியாமல் செய்யும் முட்டாள்தானமான தவறு மற்றும் குழந்தைகளின் வருகை அவற்றின் விளையாட்டு, அறியாமை ஆகியவை மாற்றி சிரிப்பலைகளை பரப்பி தளரச் செய்வதை நாம் இன்றும் கூட காணமுடியும்.
இவற்றை சிறந்த கதைகளாக்கியது உங்களது கதை சொல்லும் திறனும், மொழிநடையும், சூழலை விவரிக்கும் முறைகளும் தான். இக்கதைகள் பரவலாக வாசிக்கப்பட்டு நிறைய எதிர்வினைகளையும் பெற்றது என்பதையும், கொரோனா காலத்தில் நேர்மறை எண்ணங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் கொண்டு வந்து மிகுந்த வரவேற்பினையும் பெற்றன என்பதை நினைவு கூறுகிறேன்.
இவை குறித்து தங்களுக்கு மாற்றுக் கருத்தேதும் உண்டா? அல்லது நான் உங்களின் பேச்சை தவறாக புரிந்து கொண்டேனா?
விளக்கமளித்தால் என்னைப் போன்று குழப்பம் உள்ளவர்களுக்கு உதவும்.
என்றென்றும் நன்றியுடன்,
V. தேவதாஸ்
அன்புள்ள தேவதாஸ்
31-1-2021 அன்று காலை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் எழுத்தாளருக்கு இதே சந்தேகம் வந்தது. எங்கோ ஓர் இடத்தில் அன்றாடவாழ்க்கையை அப்படியே எழுதுவது இலக்கியமல்ல என்று சொல்லியிருந்தேன். அவர் அன்றாடவாழ்க்கையை எழுதவேகூடாது என்று நான் சொல்வதாக புரிந்துகொண்டு சந்தேகம் கேட்டார்
அந்த சந்தேகத்தை விளக்கியபின் அந்த விளக்கத்தையே மீண்டும் மிகவிரிவாக மேடையில் சொன்னேன். மீண்டும் அதே சந்தேகம் உங்களிடமிருந்து. இது, நாம் கருத்துக்களைப் புரிந்துகொள்வதில் அடையும் சிக்கல்களையே காட்டுகிறது. நமக்கு இவ்வகை விவாதங்கள் பழக்கமில்லை. ஆகவே பெரும்பாலும் நாம் ஏற்கனவே எதை எண்ணியிருக்கிறோமோ அதையே புதிய உரையாடல்களிலிருந்தும் எடுத்துக்கொள்கிறோம்.
நான் என் உரையில் அன்றாட வாழ்க்கையை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. நடைமுறைவாழ்க்கையின் சித்திரத்தை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை.தன் அனுபவத்தை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. நடந்ததை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. யதார்த்தத்தை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லவில்லை என்பதையே அந்த உரையில் பலமுறை சொல்லியிருக்கிறேன்
நான் சொல்வது, அன்றாட வாழ்க்கையைச் சொல்லும்போது, நடைமுறை யதார்த்தத்தைச் சொல்லும்போது, தன் அனுபவத்தைச் சொல்லும்போது அதில் அந்த ஆசிரியன் மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய, அக்கதையில் மட்டுமே எழக்கூடிய ஓர் தனி அறிதல் வெளிப்பட்டாலொழிய அதற்கு இலக்கியமதிப்பு இல்லை என்று மட்டுமே.
அக்கதையில் வெளிப்படுவது எல்லாரும் அறிந்த ஒரு அன்றாடக் கருத்தாக இருந்தால் அதற்கு மதிப்பில்லை என்று மட்டுமே. அது wisdom ஆக இருந்தால்கூட பொதுவாக ஏற்கப்பட்ட common wisdom ஆக இருந்தால் அதற்கு மதிப்பில்லை. ஓர் uncommon wisdom வெளிப்பட்டால்தான் இலக்கிய மதிப்பு. இதை மட்டும்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.
அந்த அரிய மெய்மை வெளிப்படுகையில் நகைச்சுவைத்தன்மை கொண்டிருக்கலாம். நெகிழ்ச்சியூட்டுவதாக இருக்கலாம். தத்துவார்த்தமாக இருக்கலாம். கவித்துவமானதாக இருக்கலாம். மிக மென்மையாக வெளிப்படலாம். மிகப்பூடகமாகக்கூட வெளிப்படலாம். ஆனால் அப்படி ஒன்று வெளிப்பட்டாகவேண்டும். அவ்வாறு ஒன்று வெளிப்படாமல் வெறுமே எல்லாரும் அறிந்த யதார்த்தம் அக்கதையிலும் இருந்தால் அதனால் வாசகனுக்கு பயனில்லை என்று சொல்கிறேன்
உலக இலக்கியத்தில் பல்லாயிரம் யதார்த்தவாதக் கதைகள் உள்ளன. தமிழில் மகத்தான பலநூறு யதார்த்தக்கதைகள் உள்ளன. நானே முந்நூறு யதார்த்தக்கதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் பல கதைகள் தன்வரலாற்றுத் தன்மை கொண்டவை. அப்படியிருக்க, யதார்த்தவாதக் கதைகள் எழுதக்கூடாது என்றோ அன்றாடவாழ்க்கையை எழுதக்கூடாது என்றோ நான் சொல்வேனா என்ன? நான் சொல்வது அதைச் சொல்வதனூடாக மேலதிகமாக என்ன வெளிப்படுகிறது என்று வாசகன் தேடுகிறான் என்று மட்டுமே. அவனுக்கு புதுமையை,நிறைவை ஊட்டும் ஒரு அறிதல் அதில் இல்லை என்றால் ஏமாற்றமடைகிறான் என்று மட்டுமே.
நீங்கள் சொன்ன எல்லா கதைகளும் முக்கியமான கதைகளாக மாறுவது அப்படி ஒரு வெளிப்பாடு,ஒரு uncommon wisdom அக்கதைகளில் நிகழ்ந்திருப்பதனால்தான்.
ஜெ