வண்ணக்கடலில்…

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு – இன் மூன்றாம் நாவலான வண்ணக்கடல் புறக்கனிக்கப்பட்டவர்களின் கதை. மகாபாரதப் போரில் யாரெல்லாம் யாருக்கு எதிராக களம் காணப் போகிறார்கள் என்பதை இந்நாவல் முடிவு செய்துவிட்டதாகவே தோன்றுகிறது.

வெண்முரசு – வெளியாகிக் கொண்டிருக்கும் போது வந்த கடிதங்களை வாசிப்பது உண்டு. அவ்வப்போது மட்டுமே ஏதேனும் ஒரு அத்தியாயத்தை வாசித்தேன். வெண்முரசு தன்னுள் கொண்ட விரிவு என்னை மிரளச் செய்ததால் அப்போது வாசிக்கவில்லை. இப்போது அதை முழுமையாக வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்ததும், எடுத்தாகிவிட்டது. முதற்கனல் மற்றும் மழைப்பாடல் முடித்ததும் எழுதிய கடிதம் – வெண்முரசின் வாசிப்புச் சாத்தியங்கள் கொண்டதாக மட்டுமே இருந்தது. அதெல்லாம் ஒரு அசட்டு விளையாட்டுத் தனமாகப்படுகிறது. வண்ணக்கடல் – தொடங்கிய சில நாட்களிலேயே அந்த அசட்டு விளையாட்டு வாசிப்பை விடுத்து, முழுமையாக வண்ணக்கடல்-இல் நுழைந்துவிட்டேன்.

இளநாகன் பயணம் தோறும் அவரின் பகடி, நகர்த்தகவல்கள், உணவு என கவனமாக வாசிக்க வேண்டியாக இருந்தது. வேதாந்தம் – குறித்த உரையாடல் நிகழும் போது எல்லாம், மூன்றுமுறை வாசிக்க வேண்டியதாக இருந்தது. இருப்பினும் அப்பகுதிகள் எனக்கு இன்னும் சரியாக தெளிவடைய வில்லை என்றே கூற வேண்டும். இளநாகன் மூலமாக ஏன் நாவல் விரிவடைய வேண்டும் என்ற கேள்வி நாவலின் தொடக்கத்தில் இருந்தது. வாசிக்க – வாசிக்க, இதைத் தவிர வேறு எந்த வடிவத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்களின் கதையை கூறமுடியாது.

வண்ணக்கடலின் இறுதி அத்யாயங்களில் வரும் வரிகள்,

இளநாகன் “அத்தகைய பெருந்துயர் எது மூத்தாரே?” என்றான். “பெருந்துயர்கள் மூன்று. நோய், இழப்பு, அவமதிப்பு” என்றார் பூதர். “அவற்றில் முதலிரண்டும் காலத்தால் ஆற்றப்படுபவை. காலமே காற்றாகி வந்து வீசி எழுப்பிக்கொண்டிருக்கும் கனல் போன்ற பெருந்துயர் அவமதிப்பே.”

வண்ணக்கடல் முழுவதும் பெருங்கருணை கொண்டவர்கள் படும் அவமதிப்பும் அதற்கு அவர்களின் எதிர்வினை என உச்சநிலையிலேயே இருந்தது. துரியோதனன் பீமனிடம் அன்பும் கொண்டு ஒரு இடத்தில் “நீ என் முதல் தம்பி. எவருக்காவேனும் உயிர் கொடுப்பேன் என்றால், அது உனக்காக” என்கிறான். அந்த வரிகளை வாசிக்கும் போது ஒருவித மெய்சிலிர்ப்பு உணர்வு மேலிட்டது. ஆனால் காட்டில் ஏற்பட்ட ஒரு சிறு அவமதிப்பின் காரணமாக நாவலின் முடிவில் அதே துரியோதனன் “அவன் தலையை களத்தில் சிதறடிக்கிறேன்” என்று கூறும் போது தான் “கனல் போன்ற பெருந்துயர் அவமதிப்பு” என்ற கூற்று உண்மையானது.

பீமன் – அன்னம் வடிவில் பிரம்மத்தைக் கண்டவன். ஒரே நேர்கோட்டில் பயணம் செய்பவன். தன் குருநாதர் என அவன் கருதும் சமையல் வல்லுனரான முதிய சூதரின் பாதம் பணிந்த போது நான் வியப்புக்கு உள்ளாகவில்லை. ஆனால் அதே பீமன் கர்ணனை சந்திக்கும் தோறும் ஒவ்வொரு முறையும் கர்ணனை அவமதிக்கும் போது, ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறான் என்ற கோபமே மிஞ்சியது. வண்ணக்கடல் தொடக்கத்திலிருந்தே எனக்கு மிகப் பிடித்த கதாபாத்திரமான பீமன் – கர்ணனிடம் காட்டிய அவமதிப்பாகும் பேசிய சொற்களினாலும் எனக்கு அவன் மேல் ஒருவித வெறுப்பு வந்துவிட்டதாகவே உணர்கிறேன். அவன் ஏன் கர்ணனிடம் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு பதில் வண்ணக்கடலில் நேரடியாக இல்லை. கர்ணன் – அர்ஜுனன், அஸ்வதாமன் – அர்ஜுனன், துரியோதனன் – பீமன் என அவர்களின் வெறுப்புக்கான காரணங்கள் நேரடியாகவே உள்ளது. பீமன் – கர்ணன் வெறுப்புக்கான காரணத்தை நான் தான் கண்டுகொள்ள வேண்டும்.

இதே போல் துரோணர் – கர்ணன் வெறுப்பையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். வண்ணக்கடல் -இல் துரோணரிடம் கேட்ட அதே கேள்வியை அவர் கர்ணனிடம் கேட்கிறார். ‘யாசகம் பெற நீ பிராமணனா. ஷத்திரியன் என்றால் உன் குலம் என்ன. உன்னை சீடனாக ஏற்றுக்கொண்ட குருநாதர் யார்? ‘ என்று கேட்கிறார். இந்த இடமும் என்னை கலங்க வைத்தது. ஆனால் இதை எதிர்பார்த்திருந்தேன். எதிர்பாராமல் நான் அழுத இடம், அர்ஜுனன் – கர்ணன் வில்சண்டையில் பீமன் நடுவே புகுந்து கர்ணனை அவமதித்த பிறகு, கர்ணன் நடந்து செல்லும் அந்த இடம். என்னையறியாமல் கர்ணன் மீது ஏற்பட்ட அனுதாபம் கண்ணீராக வந்தது. அதே அனுதாபம் பீமன் மீது வெறுப்பாகவும் மாறியது.

ஏகலைவன் அன்னை சுவர்னைக்கு துரோணரின் கேட்க போகும் குருதட்சனையை முன்னமே உணர்ந்த காரணத்தால், சபையில் குறுக்கீடு செய்து கொண்டே இருக்கிறார். சுவர்னையின் பாத்திரமும் அதற்கு ஏற்றாற் போல் மதிநுட்பத்துடன் படைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி களங்கள் ஒருங்கு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. உணர்ச்சிகள் மேலிட எழுதப்பட்ட கடிதம் தான் இது. இரண்டு நாட்கள் இடைவெளி தேவை. நீலத்திற்குள் நுழைய.

நன்றி
பலராம கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைசினிமாவுக்காகச் செய்யவேண்டியவை…
அடுத்த கட்டுரைகாதலர் தின மலர் ஏற்றுமதிகள்