யதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

‘நித்ய சைதன்ய யதி’ மெய்ஞான நவீன வேதாந்தியை நாங்கள் கண்டடைந்தது உங்களுடைய வார்த்தைச்சொற்கள் வழியாகத்தான். உங்களது ஒவ்வொரு உரையிலும், பெரும்பாலான கட்டுரையிலும் ஏதாவதொரு கணத்தில் யதி அவர்களைப்பற்றி நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு நினைவனுபவமும் எங்கள் மனதை ஒருவித அகயெழுச்சிக்கோ, தத்துவ ரீதியிலான தன்னுணர்தலுக்கோ தூண்டுவதை உணர்ந்திருக்கிறோம். பின்தொடர வேண்டிய ஆசான்களில் ஒருவராக உங்களால் யதி அவர்கள் எங்களுக்குள் அகம்நின்றார்.

ஆகவே, குரு நித்ய சைதன்ய யதி குறித்து சிறந்த புத்தகமொன்றை தன்னறம் நூல்வெளி வாயிலாகப் பதிப்பித்து, வாசகமனதுடன் ஏங்கித்தவிக்கும் எங்களைப் போன்ற நிறைய நண்பர்களுக்கு அந்நூலைக் கொண்டுசேர்க்கவும் உளவிருப்பம் கொண்டிருந்தோம். இக்கனவை சாத்தியப்படுத்தும் செயலுக்கான உதவிநீட்சியாக, ‘யதி: தத்துவத்தில் கனிதல்’ என்னும் தலைப்போடு நித்ய சைதன்ய யதியின் அறிதலனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து கெட்டி அட்டையில் புத்தகமாக கொண்டுவரும் செயலைத் துவங்கியுள்ளோம்.

இப்புத்தகத்தை சமரசமின்றி நேர்த்தியான அச்சுத்தரத்தில் கொண்டுவரும் சாத்தியத்திற்காக, இதற்கென ஒரு புத்தக முன்வெளியீட்டுத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கிறோம். இதை முதன்முதலில் உங்களுக்கும், உங்களது வாசக தோழமைகளுக்கும், விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களுக்கும் அறிவித்துத் துவங்குவதில் மகிழ்வடைகிறோம். வருகிற (2021) சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகத்தை வெளியிடவும் எண்ணம் கொண்டிருக்கிறோம்.

ஒருவருடம் முன்பாக, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் வாழ்வுவரலாற்று நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்ட அறிவிப்பு முதன்முதலாக உங்களுடைய இணையதளத்தில் வெளியானது. அதன்வழியாக, தோழமையுறவுகள் அமைத்துத்தந்த பொருளியல் உதவிகளின் சூழ்கையால் அப்புத்தகமானது நினைத்தபடி தேர்ந்த நேர்த்தியோடு வெளிவந்து, உள்ளடக்க அளவிலும் அதை வாசித்த அனைவருக்கும் அணுக்கமான புத்தகமாக மாறியது.

இப்பொழுது, நித்ய சைதன்ய யதி அவர்களைப்பற்றிய வாழ்வறிமுக நூலான இப்புத்தகத்திற்கும் அந்த நல்நிகழ்கை நிகழவேண்டுமென்ற நற்கனவை நெஞ்சில் ஆவலுடன் சுமந்திருக்கிறோம். சமகாலத்தில் இச்சமூகத்தில் வாழ்ந்துமறைந்த நவீனவேதாந்தியான ஒரு பெருந்துறவியை, அவருடைய அனுபவ அறிதலின் சொற்கள் வழியாக அறிமுகப்படுத்தும் முதல்நிலைத்தெளிவை இப்புத்தகம் வாசிப்புமனங்களுக்கு நிச்சயம் நல்கும். அத்தகைய மெய்ஞான குருவை தமிழ்ச்சூழலில் தொடர்ந்து பேசியும் எழுதியும் அகம்சேர்த்துப் பரவலாக்கிய உங்கள் படைப்புமனதைத் தொழுகிறோம்.

இப்புத்தகத்தை அதற்குரிய  செய்நேர்த்தியோடு உருவாக்கிட, இதன் முன்வெளியீட்டிற்கான நிர்ணயிப்புத் தொகையாக ரூ.400 முடிவுசெய்திருக்கிறோம். முதற்கட்டமாக, குறைந்தபட்சம் 300 நண்பர்கள் இப்புத்தகத்திற்காகத் தொகைசெலுத்தி முன்பதிவு செய்துகொண்டால், கடன்நெருக்கடிகள் ஏதுமின்றி இப்புத்தகத்தை அச்சுப்பதிப்பதற்கான பொருளியலை தன்னறம் நூல்வெளி எட்டிவிட முடியும். தன்னறத்தின் ஒவ்வொரு நகர்வுக்கும் உறுதுணையளிக்கும் அத்தனை மனிதர்களையும் மீளமீள வணங்குகிறோம்.

 

கரங்குவிந்த நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி

முன்வெளியீட்டுத் திட்ட விபரங்கள்:

யதி: தத்துவத்தில் கனிதல்
(நித்ய சைதன்ய யதியின் அறிதலனுபவக் கட்டுரைத் தொகுப்பு)

மெய்ஞான முன்னோடிகளான நாராயணகுரு மற்றும் நடராஜகுரு ஆகியோர்களின் தத்ததுவமரபுத் தொடர்ச்சியின் நீட்சியாகத் தனது ஊழ்கத்தில் நின்றுதித்த குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடும் முயற்சியைத் துவங்கியிருக்கிறோம். தனது வாழ்வுப்பாதை குறித்தும், தத்துவதரிசனம் குறித்தும் தான் நம்பியுணர்ந்த உண்மைகளை அறிவுச்செறிவான மொழிநடையில் யதி எடுத்துரைக்கும் புத்தகமாக இந்நூல் அமையவிருக்கிறது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், நிர்மால்யா, பாவண்ணன், சூத்ரதாரி ஆகிய முதன்மைப்படைப்பாளிகள் மொழிபெர்த்துத் தொகுத்த செறிவடர்ந்த கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

முன்பதிவு செய்ய: http://thannaram.in/product/yathi-thathuvathil-kanithal/

புத்தக விலை (கெட்டி அட்டை) ரூ: 500
முன்வெளியீட்டுத் திட்டத்தில் (அஞ்சல் செலவு உட்பட) ரூ: 400

 

வங்கிக்கணக்கு விபரங்கள்:

THUMBI
Acc.no : 59510200000031
Bank of Baroda
Branch : Moolapalayam – erode
IFSC : BARB0MOOLAP (fifth letter is zero)
Gpay No – 9843870059

தொடர்புக்கு: 9843870059,  [email protected]

(வங்கிக்கணக்கில் நேரடியாக தொகை செலுத்தும் தோழமைகள் தங்களுடைய முழுமுகவரியை அஞ்சல் எண் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிட்டு எங்களுக்கு குறுஞ்செய்தி / வாட்சப் அல்லது மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறோம்)

நன்றியுடன்,
தன்னறம் 

முந்தைய கட்டுரைஎழுத்தாளனின் பார்வை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிடுதல்