முதற்கனல், மழைப்பாடல் வாசிப்பு

வணக்கம்.

வெண்முரசு எழுதப்பட்ட ஆரம்ப நாட்களில் அந்த புத்தகங்களை கடைகளிலும் மாவட்ட புத்தகக் காட்சிகளிலும் தேடியதுண்டு. இன்னும் வெண்முரசு அச்சாக வில்லை என்ற பதில் கேட்டு சோர்வுற்றுள்ளேன். அப்போது ஜெமோ இணையத்தில் வெண்முரசு  தொடர்ந்து வெளியாவதெல்லாம் தெரியாது. பிறகு புத்தகங்கள் அச்சானப்பின்பு அதன் பேருருவம் கண்டு சோர்ந்து போனேன். தற்போது வெண்முரசு வரிசையில் முதல் மூன்று புத்தகங்களை வாசித்து விட்டேன்.

கோவிட்  கெடுபிடி உச்சத்தில் இருந்த அந்த முதல் இரு மாதங்களில் ஒரு நாள் துவங்கினேன். திடீரென்றெல்லாம் துவங்கவில்லை. வெண்முரசு வாசிப்பதற்கு முன்பே சில ஆண்டுகள்  அதற்கான தயார் நிலை என்னுள் துவங்கி விட்டது. சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக என்னுள் ஒரு தயார் நிலை உருவாகியதை இப்போது உணர்கிறேன். வெண்முரசு சம்பந்தமான ஜெமோவின் இணையத்தில் உள்ள பேட்டிகள் கட்டுரைகள் என அனைத்தையும் வாசித்திருப்பேனோ என்று தோன்றுகிறது. பாரதம் மூல நூல் வியாசர் எழுதியது வெறும் 2000 பக்கத்திற்குள்ளேதான். பிறகு அவரது மாணவர்கள் பாரதத்தை பெருக்குகிறார்கள் என்ற தகவலெல்லாம் சுவாரஸ்யம்.

இடையிடையே கமல் இளையராஜா பங்கு கொண்ட வெண்முரசு வெளியீட்டு நிகழ்ச்சியையும் பார்த்துக் கொள்வேன். துவங்கிய நாட்களில் ஐந்தைந்து பகுதிகளை கங்கணம் கட்டிக் கொண்டு முதற்கனலில் வாசிப்பேன். முதற்கனல் வாசித்துக் கொண்டிருக்கும் போதே வெண்முரசு நடை வசப்பட்டு விட்டது. முதலில் நடை சற்று தடுமாற செய்ததும் மறக்க முடியாதது. இந்த நோய் காலத்தில் செவ்விலக்கிய வாசிப்பு சரியானதாக இருக்கும் என தோன்றியது வெண்முரசில் இறங்க துணிச்சலையும் ஆர்வத்தையும் தந்தது. தற்போது பேருந்து நிலையம் வங்கி என எங்கிருந்தாலும் வெண்முரசு குள்ளே என்னால் சட்டென நுழைய முடிகிறது.

முதற்கனல் மழைப்பாடல் போன்ற ஆரம்ப புத்தகங்களை வாசித்து விட்டால் தொடர்ந்து வெண்முரசு நம்மை அழைத்துச் செல்லும் என்கிறார் ஜெமோ. எனக்கு ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது இல்லை. எந்த வேலையும் இன்றி வீட்டுக்குள்ளேயே இருந்த கோவிட் காலம் தொடர்ந்திருத்தால் நிறைய தூரம் வெண்முரசில் பயணித்திருப்பேனோ என்றே தோன்றுகிறது. வாசிக்க வைத்திருக்கும் மற்ற புத்தகங்களும் வெண்முரசு விற்கு தடை போடுகின்றன. பீஷ்மர் காடுகளுக்குள் அலைவதும் தொடர்ந்து பயணம் செய்து தன்னை தகவமைப்பதும் ஆழப் பதிந்தது. எங்கோ ஓரிடத்தில் பயணத்தின் இடையே ஓய்வில் பீஷ்மர் பற்றி பீஷ்மரிடமே ஒரு பாணன் பாடுவது கதைப்பது சிறப்பு

அம்பை அம்பிகை அம்பாலிகை.. மூவரில் மிரட்டுபவர் அம்பைதான். மறுபிறவியையெல்லாம் கொணராமல் அம்பை பீஷ்மரை பழி வாங்க தனது வாரிசை வளர்த்தெடுப்பதை கூறுவது தர்க்க புத்திக்கு நல்ல தீனி. இதுபோல முக்கியமான சிக்கலான இடங்களை ஜெமோ தர்க்க ரீதியாக கடந்து செல்வது வெண்முரசுவின் பலமும் ரசனையும் ஆகும்.

விஷ்ணுபுரத்தில் ஒன்று நினைவிற்கு வருகிறது. பெரும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். அருகே செல்லும் ஒருவரை நெருப்பு இழுத்துக் கொள்ளும். தீ பூதம் இழுத்து விழுங்கிவிட்டது என கூறும் ஜெமோ அடுத்து தர்க்கத்தை துவங்குவார். பெரும் தீ எரியும் இடத்தில் காற்று காலியாகும் வெப்பத்தால். காலி இடத்தை நிரப்ப பக்கத்திலுள்ள காற்று விரைந்து வரும். அந்த இடத்தில் மாட்டுபவர்களை காற்று நெருப்புக்குள் தள்ளிவிடும். நெருப்பு பூதம் விழுங்குவதை உண்மையாக்கும் ஜெமோ வின் கைவண்ணம் இது. இது போல் வெண்முரசுவில் அவ்வப்போது ஒர் ஆச்சரியம் காத்துக்கொண்டே இருக்கிறது.

கர்ணன் குந்தியில் கருவாகும் இடத்தை அட்டகாசமாக கையாண்டிருப்பார். சூரியனுக்கு மகன் பிறப்பதா. என்ற நமட்டு சிரிப்புக்காரர்கள் இதை சரியாக வாசித்தால் கர்ணனின் பிறப்பு அவர்களுக்குள் உருவாக்கி இருக்கும் முடிச்சு அவிழும். இயேசு பிறக்கவும் ஆண் பெண் உடல் தேவை என்பார் ஓஷோ. அதை சரியாக கர்ணன் பிறப்பில் கையாள்கிறார் ஜெமோ.து

ரோணர் தன்னை தயாரித்துக் கொள்ளும் பகுதிகள் மனதில் ஆழ இறங்கின. ஒவ்வொரு ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய பகுதிகள். எப்படிப்பட்ட ஆசிரியராக இருந்தாலும் துரோணர் அவருள் ஒரு கட்டுடைப்பை இங்கே நிகழ்த்துவார் என ஒரு ஆசிரியராகிய நான் நம்புகிறேன். குறிப்பாக காயத்ரி மந்திரம் துரோணர் பயிலும் இடம். அந்த மந்திரத்தின் தமிழ் பெயர்ப்பை பல முறை வாசித்துள்ளேன்.  அது தரும் அமைதியும் திடமும் அனுபவிக்க வேண்டியவை. காயத்ரி மந்திரம் மூல மொழியில் ஆயிரம் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டே இருக்கும் துரோணர் எப்படியான மன அமைப்பை எட்டி இருப்பார் என என்னால் அணுமாணிக்க முடிகிறது. அந்த அவதானிப்பு  ஏதோ செய்து என்னுள்ளும் சில அல்லது பல திடங்களை உருவாக்கியதை நினைவில் மீட்டுகிறேன்.

அடுத்து குந்தி. குந்தியும் சகுனியும் மோதும் இடங்களில்  குந்தியே வில்லியாகப் படுகிறாள்.  சகுனியின் அவர் தரப்பு நியாயங்கள் ஈர்க்கின்றன. ஊரில் சாதாரண அதிகாரங்களுக்கு ஆசைபடுபவர்களே இப்படி உள்ளார்களே. அப்போது பெரிய அதிகாரங்களுக்கு ஆசைப்படுவோரின் எண்ணமும் இச்சையும் மூர்க்கமும் காய் நகர்த்தலும் இவைகளை நீங்கள் அறிய எண்ணிணால் வெண்முரசு வின் குந்தியைத் தொடர்க. விதுரர் குந்தி இடையே மெல்லிழையாய் அசைந்தாடும் காதல் அல்லது காமம் அல்லது அந்த ஈர்ப்பை எப்படி சொல்லலாம். அவ்வுணர்வும் வாசிக்க கிடைக்கும் புதையல்.

ஒரே தந்தைக்குப் பிறந்தும் திருதராஷ்டிரன் பாண்டுவிடமிருந்து விலகி நின்று விதுரர் புழுங்கும் காட்சிகள் இலக்கிய சாதனை. விதுரர் தாய் மாடத்தின் ஓரிடத்தில் சித்தம் கழன்று அமர்ந்திருப்பாள் அல்லவா. அப்படியே மனதில் அமர்ந்து விட்டாள். எத்தனை சோகம், தீர்வே சொல்ல இயலா சிக்கல் அவள் அசைவின்மையில் அசைந்து கொண்டே இருக்கின்றன. நான் வாசித்த வரையில் வெண்முரசில் பேச இன்னும் எத்தனையோ உள்ளன. மீண்டும் வருவேன்.

நன்றி.

முத்தரசன்

முந்தைய கட்டுரைநெல்லையில் பேசுகிறேன்
அடுத்த கட்டுரைசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பிப்ரவரி 2021