எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் இரண்டாவது சிறுகதைத்தொகுதியான விஷக்கிணறு வெளியாகியிருக்கிறது. அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி அம்புப்படுக்கைக்காக அவர் சாகித்ய அக்காதமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்றார்.
அதன் பின் அவருடைய முதல் நாவலான ‘நீலகண்டம் ‘ வெளியாகியது. அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் பரவலான வாசிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றவை. தமிழின் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் முதன்மையான சிலரில் ஒருவராக சுனில் இன்று இடம்பெற்றிருக்கிறார்
சென்ற 31-1-2021 அன்று சென்னையில் நண்பர்கூடுகையில் எளிமையாக அவருடைய சிறுகதை தொகுதியை வெளியிட்டோம். காளிப்பிரசாத், சௌந்தர், யாவரும் ஜீவகரிகாலன் ஆகியோர் உடனிருந்தனர். நான் நூலை வெளியிட மருத்துவர் மாரிராஜ் பெற்றுக்கொண்டார்.
சுனீல் கிருஷ்ணன் ஒர் இளம் காந்தியச் சிந்தனையாளர் என அறியப்பட்டவர். காந்திய சிந்தனைக்காக இவர் உருவாக்கிய காந்தி டுடே என்னும் தளம் பலநூறு கட்டுரைகள் கொண்டது. காந்திய நூல்களின் தொகுப்பாசிரியராகவும் அறியப்படுகிறார். காரைக்குடியில் மரப்பாச்சி என்னும் இலக்கியக்கூடுகையையும் நடத்திவருகிறார். சுனில் கிருஷ்ணன் தொழில்முறையாக ஓர் ஆயுர்வேத மருத்துவர். காரைக்குடியில் புகழ்பெற்ற மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவர்
தன் இரண்டாவது சிறுகதை தொகுதிக்கான முன்னுரைக் குறிப்பில் சுனில் இவ்வாறு சொல்கிறார்.
இக்கதைகளில் பெரும்பாலானவை வெளிவந்த காலகட்டத்தில் பல தரப்புகளில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டவை. முதன்மைக் கதையாகிய விஷக்கிணறு பற்றி இளம் எழுத்தாளரான ஸ்வேதா சண்முகம் எழுதிய குறிப்பு முக்கியமான ஒரு விமர்சனப்பார்வை. இக்கதை பற்றி வாசகசாலை அமைப்பு ஒரு விவாத அரங்கும் ஒருங்கிணைத்துள்ளது. அதில் லாஓசி, அம்பிகாபதி, இந்துமதி ஆகியோர் பேசினார்கள்.