விஷ்ணுபுரம் என்னும் அமைப்பு ஒரு தொடக்கம். அதிலிருந்து தொடங்கிய நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு இலக்கியக்கூடுகைகளை நடத்தி வருகிறார்கள். சென்னை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் வெண்முரசு விவாதக்கூட்டத்தை நடத்திவருகிறார்கள். கோவையில் வெண்முரசு விவாதக்கூட்டம் ஒன்று இம்மாதம் முதல் தொடங்கி நடைபெறுகிறது.
சென்னை வெண்முரசு கூட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே இப்போது வெண்முரசை வாசிக்க தொடங்குபவர்களுக்காக இன்னொரு சந்திப்பு நண்பர் சந்தோஷ் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகின்றது
கோவையில் நரேன் ஒருங்கிணைப்பில் சொல்முகம் என்னும் இலக்கியக்கூடுகை நடைபெறுகிறது. சுனீல் கிருஷ்ணன் காரைக்குடியில் மரப்பாச்சி என்னும் இலக்கியச் சந்திப்பை ஒருங்கிணைக்கிறார். கே.ஜே.அசோக்குமார் தஞ்சை இலக்கியக் கூடலை நடத்துகிறார். சுரேஷ் பிரதீப் திருவாரூரில் நதிக்கரை இலக்கியவட்டம் என்னும் சந்திப்பை நடத்துகிறார். ஈரோட்டில் கிருஷ்ணன் முன்னெடுக்க ஈரோடு வாசிப்பு இயக்கம் என்னும் இலக்கியவிவாத அரங்கு உள்ளது
பொதுவான இலக்கிய ஆர்வம் மட்டுமே இந்நிகழ்வுகளின் அடிப்படை. இலக்கியம் மட்டுமே முன்னிறுத்தப்படும். அரசியல் முழுமையாகவே தவிர்க்கப்படும். இலக்கிய நூல்களை வாசிப்பதும் விவாதிப்பதும் மட்டுமே ஒரே செயல்பாடு. அளவை விட ஆழமே இலக்கு என்பதனால் மேலோட்டமான நூலறிமுகங்கள், எளிமையான பேச்சுக்கள் தவிர்க்கப்படும். அதற்குரிய கறாரான மட்டுறுத்தல் உண்டு. நூல்களை வாசித்துவிட்டு வந்து விவாதிப்பவர்களுக்கும், தொடர்ச்சியான இலக்கிய வாசிப்பு உடையவர்களுக்குமே முக்கியத்துவம்
இந்நிகழ்வுகள் எவையுமே ‘அனைவருக்கும்’ உரியவை அல்ல. இலக்கியம் மீதான ஈடுபாடும், வாசிப்பும் அவசியம். ஆகவே பெருந்திரளை தவிர்க்கிறார்கள். ஆயினும் தொடர்ச்சியாக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. அவர்களிடையே ஆழ்ந்த நட்பும் உருவாகி வருகிறது. அது குறித்த நிறைவும் நண்பர்களிடையே உள்ளது
30,31 தேதிகளில் மட்டும் நான்கு இலக்கியச் சந்திப்புகள். சென்னை இலக்கிய நண்பர்கள் ஒருங்கிணைக்க ரா.செந்தில்குமாரின் இசூமியின் நறுமணம் என்னும் சிறுகதை நூல்வெளியீடு சென்னையில் நடைபெற்றது. நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட அரங்கு நிறைந்த கூட்டம். அதன்பின்னான இனிய உரையாடல்கள்.
30 ஆம் தேதி பாண்டிச்சேரியில் வெண்முரசு விவாதக்கூட்டம். நீலம் நாவலை பேசுகிறார்கள். 31 ஆம் தேதி காரைக்குடியில் மரப்பாச்சி இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராஜா கலந்துகொண்டார். இருபத்தைந்துபேர் கலந்துகொண்டனர். அவர்களின் வழக்கமான எணிக்கை இருபதுக்குள்தான். 31 அன்று கோவையில் வெண்முரசு விவாதக்கூட்டம். முப்பதுபேருக்கு மேல் கலந்துகொண்டனர் என்று புகைப்படங்கள் அனுப்பியிருந்தனர்
வாசிப்பவர்கள் அனைவருக்குமே பேச ஆளில்லாத தனிமை உண்டு. வழக்கமான இலக்கியச் சந்திப்புகளில் வாசிப்பற்றவர்கள், முதிரா எழுத்தாளர்கள் பேசி சலிப்பூட்டுவார்கள். நம் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் இச்சந்திப்புகளின் வெற்றிக்கு, அவற்றின் தொடர்ச்சிக்குக் காரணம் அங்கே இணைமனங்களை கண்டடையமுடியும் என்பதே. வாசிப்பில் ஈடுபாடும் உண்மையான அழகியலுணர்வும் கொண்டவர்களை அறிமுகம் செய்யலாம். அந்நட்பு இந்தச் சந்திப்புகளுக்கு அப்பாலும் நீளும். பலர் சிறு பயணக்குழுக்களாகவும் ஆகியிருப்பதை காணமுடிகிறது.
ஒரு சிறுமுயற்சி மெல்ல விரிவதையே காண்கிறேன். எதுவும் தீவிரத்தால்தான் விளைவை உருவாக்குகிறது.
சொல்முகம்
நரேன் – 7339055954
சுஷீல் – 96002 74704
மரப்பாச்சி காரைக்குடி
சுனில் கிருஷ்ணன் 9994408908
சென்னை வெண்முரசு கூடுகை
பாண்டிச்சேரி வெண்முரசு விவாதக்கூட்டம்
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்”
முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை – 605 001
தொடர்பிற்கு : 9943951908 ; 9843010306
ஈரோடு கூட்டம்
அழகிய மணவாளன்
தஞ்சைசந்திப்பு
அசோக் குமார்