அமெரிக்காவில் ஃபாஸிசம் கடிதங்கள்

அமெரிக்காவில் ஃபாஸிசம்

 

அன்புள்ள ஜெ.

உங்களது அமெரிக்காவில் பாசிசம் கட்டுரை படித்தபோது “பின் தொடரும் நிழலின் குரல்” நினைவுக்கு வந்தது

தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அழகியலோடு படுகொலைகளை நிறைவேற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் , சித்தாந்த  முகமூடி அணிந்து படுகொலைகளை அரங்கேற்றும் கம்யூனிச நாடுகள் ஆகியவற்றுக்கிடையே  ஹிட்லரை மட்டுமே படுகொலைகளுக்கு இனவெறிக்கு உதாரணமாக பலர்நினைக்கிறார்கள்.

காரணம் ஹிட்லர் தோல்வி அடைந்தவர்.   அவர் வென்றிருந்தால் அவர் “தரப்பு நியாயங்களை”  பேச  அவருக்கு குரல் கொடுக்க பல நாடுகளும் சிந்தனைவாதிகளும் முன்வந்திருப்பர்

சோவியத் யூனியன் கடைசி வரை ஹிட்லரோடு நட்புணர்வோடு இருக்க முயன்றது பலருக்குத் தெரியாது

நீங்கள் சொல்வது போல , அழகியலோடு பயங்கரவாதத்தை நிறைவேற்ற ஹிட்லருக்கு அமெரிக்காதான்உதவியது

ஒட்டு மொத்த ஜனத்தொகையில் யூதர்களை மட்டும் பிரித்தறிந்து இனம்காண அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனம்தான் ப்ரொகிராம் செய்து கொடுத்தது. அதற்கான கருவிகளை வழங்கியது.  அவை சரியாக செயல்படுகின்றனவா என கண்காணிப்பது , பழுதுகளை சரி செய்வது போன்ற பணிகளைச் செய்தது.

யூதப்படுகொலையில் அமெரிக்காவின் இந்தப் பங்கு மேலும் நீடித்திருந்தால் , கொலைகள் சிறுசிறு அலகுகளாக பிரிக்கப்பட்டு ,  குளிர்பதன அறையில் கண்ணியமான ஆடை அணிந்து கொலை செய்கிறோம் என்ற குற்ற உணர்வே இன்றி அழகியலோடு கொன்றிருப்பார்கள்நல்ல வேளை . அந்த கட்டத்துக்கு போவதற்கு முன் யுத்தம் வந்து விட்டது

என்ன ஆறுதல் என்றால் , தனது நாடு இப்படிச் செய்தது என புத்தகம் எழுதும் கருத்து சுதந்திரம் அமெரிக்காவில் இருக்கிறது

IBM and the Holocaust: The Strategic Alliance between Nazi Germany and America’s Most Powerful Corporation  என்ற நூல் அரிய ஆவணமாய் திகழ்கிறது

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள ஜெ,

அமெரிக்காவில் ஃபாஸிசம் என்பது ஓர் ஆழமான குறிப்பு. குறிப்பாக மதவெறி, இனவெறி,நிறவெறி போன்றவை என்றுமிருக்கும் நோய்க்கூறுகள் என்றும் ஜனநாயகம் என்பது அதற்கு எதிரான ஒரு சமநிலை சக்தி மட்டுமே என்றும் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை

ஜெயக்குமார்

 

முந்தைய கட்டுரைஇமைக்கணம்- வாக் சூக்தம்
அடுத்த கட்டுரைசுக்கிரி குழுமம் -கடிதம்