தாகூரும் கிரீஷ் கர்நாடும்

தாகூர், நவீன இந்தியச் சிற்பியா?

அன்புள்ள ஜெ,

பதில் அளித்தமைக்கு  நன்றி.

உண்மையில்,  ஆச்சிர்யமாகவே  உள்ளது. நான்  தாகூரை ஒரு சொகுசு பயணி என்றே நினைத்திருந்தேன்.     கிரிஷ் கர்னாட்  அவரை “Second  Rate  Playwright” என்றே கூறியது எல்லா பத்திரிகையிலும் வந்தது.

உங்கள் சுட்டிகளில் இருந்து Vamshavruksha மற்றும்  ஸம்ஸ்காராவை  படித்திருக்கிறேன்  கோராவை படித்ததில்லை.

நன்றி

பரத்

அன்புள்ள பரத்,

நீங்கள் டாகூரின் நாடகங்களையும் கிரீஷ் கர்நாடின் நாடகங்களையும் வாசிக்கவேண்டும். கிரீஷ் கர்நாட்தான் ஓர் இரண்டாந்தர நாடகாசிரியர். தாகூர் முன்னோடி நாடகாசிரியர். முன்னோடிகளின் வடிவத்துல்லியம் கொஞ்சம் பழைமையை அடைந்திருக்கும், சாராம்சம் மேலும் துலங்கியிருக்கும். தாகூரின் நாடகங்களின் அடிப்படையான கவித்துவம் இன்றும் மிளிர்கிறது.

கிரீஷ் எழுதிய எந்த நாடகத்திலும் அன்றிருந்த எளிமையான முற்போக்கு மையக்கருத்தும், அதை வலியுறுத்தும்பொருட்டு கட்டியமைக்கப்பட்ட காட்சிகளும்தான் இருக்கும். ஐரோப்பாவில் நாடகம் பயின்றமையால் ஐரோப்பா அறுபது எழுபதுகளில் எதிர்பார்த்த நாட்டாரியல்கூறுகளை நவீனப்படுத்தி உள்ளே அமைக்கும் முயற்சி இருக்கும். ஆனால் நாட்டார்கதைகளில் உள்ள வாழ்க்கையின் புதிர் மறைந்துவிட்டிருக்கும். அங்கே ஒரு முற்போக்கு அரசியல் – சமூகவியல் கருத்து அமைக்கப்பட்டிருக்கும்.

கிரீஷ் கர்நாடின் நாகமண்டலா, ஹயவதனா போன்றவற்றில் அந்த கருத்து எட்டப்பட்டதுமே நாடகம் முடிந்துவிடும். துக்ளக் நாடகம் வெறும் பிரச்சாரப்பேச்சு. கிரீஷ் கர்நாடின் நாடகங்களில் இந்திய நாடகமரபின் எந்த தொடர்ச்சியும் இருக்காது. அவை முழுக்கமுழுக்க ஐரோப்பியவகை நாடகங்கள். இந்தியாவின் பண்பாட்டுக்கூறுகள் சிலவற்றை எடுத்து பொருத்திக்கொண்டவை.

மாறாக தாகூரின் நாடகங்கள் அந்த நாடகத்தில் அவர் முன்வைக்கும், அல்லது நாம் சென்றடையும் அரசியல்- சமூகவியல் கருத்துக்களால் நிலைகொள்ளவில்லை. அவை வாழ்க்கையில் உள்ள வசீகரமான மர்மங்களை, கேள்விகளையே முன்வைக்கின்றன. சித்ராங்கதா, சண்டாளிகா போன்ற நாடகங்கள் எழுப்பும் கற்பனைகள் முடிவில்லாதவை. ஆண்பெண் உறவின் விளையாட்டுக்களை தொட்டுச் செல்பவை. அவை கதாபாத்திரங்கள் சொல்லும் கருத்துக்களால் நிலைகொள்ளவில்லை. கவித்துவத்தால், நாடகீயமான தருணங்களால் நிலைகொள்கின்றன.

தாகூரின் நாடகங்கள் இந்தியாவின் இரண்டு நாடகமரபுகளை உள்வாங்கிக்கொண்டவை. சம்ஸ்கிருதச் செவ்வியல்நாடக மரபு, வங்காள நாட்டார் நாடக மரபு [ஜாத்ரா]. இவை இரண்டுமே யதார்த்த நடிப்பு கொண்டவை அல்ல, நடிப்பை நாட்டியமாக ஆக்கிக்கொண்டவை. சித்ராங்கதா, சண்டாலிகா இரண்டுமே நாட்டியநாடகங்களாகவே அவரால் எழுதப்பட்டன. இன்றுவரை பல்வேறு வடிவங்களில் மிகவெற்றிகரமாக மேடையில் நிகழ்த்தப்பட்டபடியே இருக்கின்றன. [ ஜாத்ரா நாடகவடிவத்தைப் பற்றிய நாவல் தாராசங்கர் பானர்ஜி எழுதிய கவி]

கிரீஷ் கர்நாட் கர்நாடகத்தின் நவ்யா இயக்கத்தின் முகம். அவர்கள் ஐரோப்பிய வழிபாட்டாளர்கள், இந்தியாவை ஐரோப்பியக் கண்களால் பார்க்கமுயன்றவர்கள், டெல்லியின் அன்றைய ‘பண்பாட்டு மேட்டிமைக்குழு’வை சேர்ந்தவர்கள். இடதுசாரிகள், ஆனால் அமெரிக்க- ஐரோப்பிய  நிதிகளால் வாழ்ந்தவர்கள்.

கிரீஷ் கர்னாடு போன்றவர்கள் மிகையாக மதிப்பிடப்பட்ட சராசரி எழுத்தாளர்கள்.அவர்களை அவர்களின் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் வழியாகவும், அவர்களுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அளித்த விருதுகள் வழியாகவும்தான் நாம் மதிப்பிடுகிறோம். நம் சூழலில் இந்த பண்பாட்டு மேட்டிமைக்குழு உருவாக்கிய மதிப்பீடுகளை உடைத்து மேலே செல்லவேண்டிய தேவை இன்றுள்ளது. கூடவே தாகூர் போன்றவர்களை இவர்களின் கண்களால் பார்க்காமல் நமக்கான பார்வைகளை நாமே உருவாக்கிக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

ஜெ

அஞ்சலி: கிரீஷ் கர்நாட்

முந்தைய கட்டுரைஒரு தொடக்கம், அதன் பரவல்
அடுத்த கட்டுரைகுருதியின் சதுரங்கம்