நூறாண்டுகளாக, நூறுநூறு ஆண்டுகளாக, அப்படி ஏராளமான நூறாண்டுகளாக இந்த கரடிமலை, இந்த கைதையாறு, நீரோட்டத்தை ஏறிக்கடப்பதற்கான பல்வரிசைப் பாறைகள், அப்பாறைகளின் நடுவே ஓசையுடன் எழும் நுரை எல்லாமே இப்படியேதான் இருக்கின்றன என்று பாட்டுகள் சொல்கின்றன. அந்தப்பாட்டுகள் இங்கே பறவைகளால் பாடப்படுகின்றன. புறா உறுமியும் குயில் கூவியும் கானாங்கோழி கொஞ்சியும் மரங்கொத்தி தாளமிட்டும் அந்தப்பாட்டுக்களைத்தான் பாடிக்கொண்டிருக்கின்றன. இவை இப்படித்தான் இருக்கும் என்று அறிந்ததனால்தான் எங்கள் முன்னோர் அந்த மலையை, இந்த ஆற்றை, இங்குள்ள பாறைகளைத் தொட்டு “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொன்னார்கள். பெண் கருவுற்றதை உறுதிசெய்ததும் அவளை அவள் கணவனும் சுற்றமும் அழைத்துவந்து மலைகளைச் சுட்டி அதை சொன்னார்கள். அக்குழந்தை பிறந்ததும் இருபத்தெட்டாவதுநாள் காட்டுக்கொடி எடுத்து முறுக்கி இடுப்பில் நாண்கட்டி கொண்டுவந்து ஆற்று நீரில் நனைத்து அதை சொன்னார்கள். திருமணத்தின்போது ஆணையும்பெண்ணையும் பாறைமேல் அமரச்செய்து அதை சொன்னார்கள். செத்த பிணங்களை புதைத்துவிட்டு வந்து நீரில் மும்முறை மூழ்கி எழுந்து அதை சொன்னார்கள். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” ஏனென்றால் இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும். ஆகவே நான் அந்த கரடிமலையை பார்த்தபடி கைகளை ஏழுமுறை தட்டி சொல்லிக்கொள்கிறேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” பின்னர் கைதையாற்றை பல்வரிசைப் பாறைகளின் வழியாக ஏறி மறுபக்கம் இறங்கிக் கடந்ததும் திரும்பிப்பார்த்து பன்னிருமுறை கைதட்டி சொல்லிக்கொண்டேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!”
நான் தன்னந்தனியாக இந்த அயல்நிலத்தில் மழையில் முளைத்த புதுப்பூசணியின் கொடி போல புதர்களையும் பாறைகளையும் ஊடுருவிச்சென்றுகொண்டிருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில் நடந்துகொண்டிருக்கிறேன். என் தலைக்குமேல் கொண்டைக்குருவிகள் பேசிக்கொண்டிருந்தன. என் கால்களுக்கு அருகே வாழைப்பூநிற உக்கிலுகள் உறுமியபடி சருகுப்புதர்களை ஊடுருவிச் சென்றன. புள்ளிச்சங்கு போன்ற கௌதாரிகள் ஈரச்சுனைகளின் அருகே நின்று தலைதூக்கி என்னை பார்த்தன. பூத்து குலைதாழ்ந்த மரக்கிளைகளில் தேன்சிட்டுகள் பூக்களின் அருகே சிறகடித்து வானில் நின்றிருந்தன. மைனாக்களும் வானம்பாடிகளும் அத்தனை பறவைகளின் ஓசையையும் தாங்கள் எழுப்பின. கைதையாற்றுக்கு இப்பாலுள்ளவை எங்களை அஞ்சுகின்றன. நாங்கள் இந்த அயல்நிலத்தை அஞ்சுவதுபோல. ஆனால் இந்தப் பாதை மிகமிக தொன்மையானது. இந்தப்பாதையில் நடக்கும் என் கால்களிலிருக்கும் வழியுணர்வும் மிகமிகத் தொன்மையானது. இந்த வழிகளிலுள்ள கூழாங்கற்கள் என் கால்பட்டு உருள்கின்றன. அவற்றில் சில கற்கள் அந்த கரடிமலை உச்சியில் கரடிப்பாறை அமைந்தபோதே தாங்களும் அமைந்தவை. இனி அக்கரடி ஒருநாள் உருண்டு உறுமிக்கொண்டு கீழிறங்குவது வரை அசைவிலாது அமையப்போகின்றவை. ஒவ்வொரு கல்லிடமும் நான் “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொல்லிக்கொள்கிறேன். அதை சொன்னபடியே இந்த மலையிலிருந்து இறங்கிச் செல்கிறேன்.
மலைக்குக் கீழே மலைகள் உருகி வழிந்து பரவிய ஊர்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் மக்கள் நிறைந்து வாழ்கிறார்கள். நாங்கள் பறக்கும் மனிதர்கள், மரங்களில் பறவைகள் போல மலைகளில் வாழ்பவர்கள். அவர்கள் ஊரும் மனிதர்கள், மண்ணில் வாழ்கிறார்கள். மண்ணுக்கு அடியிலும் மனிதர்கள் உண்டு. மலைமேல் வாழும் நாங்கள் காற்றால் ஆனவர்கள். நாங்கள் இறந்ததும் எங்கள் உடல்கள் மண்ணில் விழுகின்றன. எங்கள் சிறகுகள் வெண்மேகங்களாகி மேலே சென்று கரடிப்பாறை உச்சியில் சென்று நின்றிருக்கின்றன. மேலிருந்து வந்து தொடும் அமைதி அவற்றை எடுத்துக்கொள்கிறது. மேலே நிறைந்திருக்கும் மேகங்களாக ஆகிவிடுகிறோம். அங்கே இந்த உலகின்மேல் மிதந்து நின்றிருக்கிறோம். இங்கே கீழே வாழும் மனிதர்கள் கல்லால் ஆனவர்கள். அவர்கள் எடையுடன் நடக்கிறார்கள். எடைமிகுந்ததும் அப்படியே சரிந்து மண்ணில் விழுந்து புதைகிறார்கள். புதைந்து புதைந்து உள்ளே சென்றுவிடுகிறார்கள். உள்ளே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களின் எலும்புகளின் கணுக்கள் முளைக்கின்றன. அவர்களைப் போலவே அவர்களின் வாரிசுகள் உருவாகி வருகிறார்கள். இந்த ஊர்களில் நான் பார்த்த பலநூறுபேர் திரும்பத் திரும்ப வந்திருக்கிறார்கள். அவர்களும் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார்கள். இலைகள் உதிர்ந்து தளிர்களாகி வருகின்றன. எதுவும் எங்கும் இல்லாமலாவதில்லை. அனைத்தும் எப்போதும் நிலைகொள்கிறது. ஆகவே நான் சொல்லிக்கொள்கிறேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று.
நான் என் தோளில் மாட்டுத்தோல் பையை தொங்கவிட்டிருக்கிறேன். தலையில் முடியை சுருட்டி கொண்டைகட்டியிருக்கிறேன். வழியை கால்களுக்கு விட்டு கண்களால் காட்டை பார்த்தபடி ஊர்களுக்குச் செல்லும் சிறுபாதையில் நான் நடக்கிறேன். மலையிறங்கிச் செல்லும் ஓடைபோல அந்தப்பாதை கிளைபிரிந்து செல்கிறது. உண்மையில் அது ஊரிலிருந்து வரும் பாதை. ஊர்களிலிருந்து மாடுகளை அந்தவழியாக மேலேற்றுகிறார்கள். அவை காட்டை உண்டு திரும்பிச் செல்கின்றன. காட்டிலேயே கருவுறுகின்றன. அவற்றின் அகிடுகளில் காட்டின் பால் ஊறுகிறது. அங்கே அவர்களின் கிணறுகளில் காட்டின் நீர்தான் ஊறுகிறது. காட்டிலிருந்து ஓடைகளும் சிற்றாறுகளும் இறங்கி அவர்களின் வயல்களையும் ஊர்களையும் வளைத்து ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கே கலப்பைகளால் மண்ணை கீறுகிறார்கள். உரித்த தோலைப் புரட்டுவதுபோல மண்ணை கிளறிவிடுகிறார்கள். அதன்பின் அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து கொண்டுவரும் விதைகளை விதைக்கிறார்கள். அந்த விதைகளை அவர்கள் தங்கள் வீடுகளில் மண்கலங்களில் வைத்திருக்கிறார்கள். விதையை வயலாக்கி வயலை விதையாக்கி சுழற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
பின்காலையின் வெயில் முற்றி வெண்ணிறமாக சூழ்ந்து நிற்கிறது. இது தாழ்நிலங்களில் மட்டும் பெருகி நின்றிருக்கும் வெயில். மூழ்கி சுனையாழத்துக்குச் செல்கையில் அங்கே அசைவற்ற நீல இருளாக அடிநீர் நின்றிருப்பதுபோல. இது வெம்மையானது. அலைகளற்றது. இதை நாங்கள் அடிவெயில் என்கிறோம். இந்தப்பாதையில் இந்தப்பொழுதில் எவருமிருப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நான் மலையிறங்கி ஊருக்குள் செல்லும் இந்தப்பருவத்தில் வயல்வெளிகளில் எவரும் இருப்பதில்லை. வயல்கள் மண்நிறமாக மாறி விரிந்திருக்கும். சேற்றுநிலம் வெடித்து முதலைத்தோல்போல ஆகிவிட்டிருக்கும். நண்டுகள் வளைகளிலிருந்து வந்து வெளியே உலவும். கொக்குகளும் நாரைகளும் ஒற்றைக்கால்களில் நின்றிருக்கும். இப்பறவைகளை அங்கே மலைகளின்மேல் பார்ப்பது அரிது. நத்தைக்கொத்திநாரைகள், அரிவாள் மூக்கன்கள், கரண்டிவாயன்கள். அவை சிறகடித்து எழும்போது காற்றொலி கேட்கும். அவற்றின் நிழலும் அவையும் இரு சரிந்த கோடுகளாக வந்து சந்தித்துக்கொள்ள அவை இறங்குகின்றன. நிழல் விலகிச்செல்ல வானிலெழுகின்றன.
இந்த வயல்வெளிக்கு நான் சென்றமாதமும் வந்தேன். அன்று இதில் என் கண்கள் நிறையும்படி நெடுந்தொலைவுக்கு பொன் விளைந்திருந்தது. ஒவ்வொன்றும் ஒருவகை பொன். இது செம்பொன், அது பசும்பொன், அப்பால் அது வெண்ணிறப்பொன். நான் மலைவிளிம்பில் நின்றுகொண்டு கைகளை விரித்து “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொன்னேன். மலைக்குமேல் பூக்களாகின்றவை இங்கே மணிகளாகின்றன. மலைகள் பூக்கும் காலம் உண்டு. சித்திரையில் கொன்றைகள் பூக்கின்றன. வேங்கை பூக்கின்றது. தேக்கு பூத்து குலைதள்ளுகிறது. மாமரங்கள் பூச்செண்டுகளால் நிறைகின்றன. மாபெரும் பூக்குடையாகிறது கள்ளிப்பாலை. பூத்தால் மலை பொன்னென்றாகிறது. வேங்கையின் செம்பொன். கொன்றையின் பசும்பொன். தேக்கின் வெண்பொன். மாம்பூவின் கறைமணக்கும் அரக்குநிறப் பொன்.
இந்த வயல்களில் அப்போது பொன்னுருகி அலைகொண்டது. காற்றில் சலசலப்பொலி எழுந்து சூழ்ந்தது. நான் மலையிறங்கி வந்தபோது கதிர்காப்பவர்கள் சிறிய பரண்களை கட்டிக்கொண்டு கைகளில் பெரும்பறைகளுடன் அமர்ந்திருந்தனர். சிலர் தகரடப்பாக்களை வைத்திருந்தனர். இலைப்புயல் போல வந்திறங்கும் கிளிக்கூட்டங்களை ஓசையெழுப்பி துரத்தினர். வயல்களுக்குமேல் கிளிக்கூட்டங்கள் காற்றில்பறக்கும் பச்சை சால்வை போல நெளிந்து அலைக்கழிந்தன. சிறுகுருவிகள் அஞ்சவில்லை. அவை கதிர்களின் மேல் இறங்கியபோது கதிர்களென்றே ஆயின. நெல்மணிகளை கொத்தும்பொருட்டு நெல்மணிபோலவே அலகுகள் கொண்டிருந்தன. அவை சிறுகுரலில் பேசி சிறுசிறகுகளை வீசி மேலெழுந்து அமைந்தன.
அந்தியில் அவர்கள் தங்கள் பறைகளுடனும் தகரங்களுடனும் சென்றபின் நான் மலைவிளிம்பிலிருந்து இறங்கிவந்து வயல்வரப்பில் நின்றேன். காற்றில் கதிர்சிலம்பும் ஓசை என்னைச் சூழ்ந்திருந்தது. நெல்மணிகளில் வாழும் சிறுதெத்துப்பூச்சிகளின் பச்சைத்தழை மணம். செவிகளில் ரீங்கரிக்கும் அவற்றின் மிகமெல்லிய ஓசை. மூங்கில் இலைகள் காற்றில் சீறுவதுபோன்றது அது. நான் காட்டிலிருந்து கொண்டுவந்திருந்த மூன்று பொன்வரிக் கற்களை வரப்பின் மேல் வைத்தேன். மஞ்சள்கோடுகள் கொண்ட கடுத்தா. பொன்னிறப்புள்ளிகள் கொண்ட பிறுத்தா. சிறிய புள்ளிகளுடன் சிறுத்தா. காடுகாக்கும் தெய்வங்கள். யானைகளும் எருமைகளும் பன்றிகளும் காட்டின் கிழங்குகள். முயல்கள் விதைகள். பிறவிலங்குகளெல்லாம் இலைகள். மான்கள் தளிர்கள். வரிப்புலியும் புள்ளிப்புலியும் பூனைப்புலியும்தான் காட்டின் மலர்கள். பொன் எனப் பொலிபவை அவை. வரிப்புலியென எழுந்தது கடுத்தா. புள்ளிப்புலி என பிறுத்தா. பூனைப்புலி என சிறுத்தா. மலையாளும் தெய்வங்களே காத்தருள்க! மலைமேல் பூத்த பொன்னே காத்தருள்க! இங்கு மானுடருக்கு பசியாற்றும் இப்பொன்னை காத்தருள்க!
நெல்மணிகளை உருவி மூன்று தெய்வங்களுக்கும் மூன்று சிறுகுவியல்களாக படைத்தேன். என் கட்டைவிரலை சிறுகத்தியால் வெட்டி ரத்தம் சொட்டச்செய்து அந்நெல்லுடன் கலந்தேன். அதை அள்ளி கரடிமலை நோக்கி, பச்சைக்காடுநோக்கி பொன்னுருவான மூன்று தெய்வங்களையும் எண்ணி உள்ளத்தில் நோற்றபடி வீசினேன். “கொள்க, கொள்க, கொள்க. நிறைக, நிறைக, நிறைக! மலையில்பூத்த தெய்வங்களே மண்ணில் விளைந்தவற்றை ஏற்று அருள்க! மலைப்பொன் மண்பொன்னை கொண்டருள்க!” என்றேன். ஏழுமுறை கைதட்டி எல்லா தெய்வங்களுக்கும் நான் வணங்குவதை அறிவித்தேன். நான்குதிசைகளையும் வணங்கினேன். உச்சிவானை வணங்கினேன். பின்னர் திரும்பிப்பாராமல் நடந்து காட்டுக்குள் நுழைந்தேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே” என்று என்னை தொடர்ந்துவந்து காட்டுவிளிம்பில் நின்றுவிட்ட வழித்துணைத் தெய்வங்களிடம் சொன்னேன். காலடியோசையாக, நிழலாக, நினைவுணர்வாக உடன்வருபவர்கள் என்னுடன் சேர்ந்துகொண்டனர். நான் மலைக்குச் சென்று, நள்ளிரவில் என் குடிலுக்குள் புகுந்து அங்கே தெற்குமூலையில் ஏழு உருளைச்சிறுகற்களாக அமைக்கப்பட்ட மூதாதையரிடம் “நிறைவுற ஆற்றி மீண்டேன், தந்தையரே, இம்முறையும் நீங்களாக இருந்தேன்”என்று சொன்னேன்.
மறுநாள் காலையில் நான் எவரும் எழுவதற்கு முன்னரே என்னுடைய பூசைத்தடியுடன், குடுவையில் குடிநீருடன், மலையேறி நடந்தேன். பன்றிகள் உருவாக்கிய தடத்தினூடாக வளைந்து வளைந்து மேலேறிச்சென்று மலைகடந்து மறுபக்கச் சரிவை அடைந்தேன். அப்போது இளங்காலை எழுந்துகொண்டிருந்தது. பொன்பூத்துப் பரவியிருந்த காட்டின் அலையலையலையை நோக்கியபடி நின்றேன். ”தெய்வங்களே” என்றேன். “மலைபூத்த பொன்னே” என்றேன். பூத்த வேங்கையின் குலைமலர்களின் அசைவிலெழுந்தது கடுத்தா. அலைவுற்ற பாலையின் மலர்களில் தோன்றி தோன்றி தன்னை கலைத்துக்கொண்டே இருந்தது சிறுத்தா. உதிர்ந்து பரவிய கொன்றையின் மஞ்சள்மலர்ப்பரப்பில் ஒன்று நூறு இதோ மேலும் என தோன்றித்தோன்றி விரிந்தன பிறுத்தாக்கள். நான் கைகூப்பியடி சொன்னேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!”
இன்று, இந்த அறுவடை செய்யப்பட்ட வயல்களினூடாக நான் நடக்கிறேன். இந்த வயல்களின் மேல் வண்டிகள் ஓடிய பெரிய சக்கரத்தடங்கள் சுழன்று சுழன்று தெரிகின்றன. சிறிய படிக்கட்டுகள் போல அவற்றில் வெட்டுமடிப்புகள் உள்ளன. அவை அறுத்து அள்ளிச்செல்லும் இயந்திர யானைகள். அவை நின்ற இடங்களிலெல்லாம் கசக்கப்பட்டு புழுதியென்றே ஆன கூளம் குவிந்திருக்கிறது. அங்கே காகங்களும் சிறுகுருவிகளும் மைனாக்களும் கூடி கிளறி கொத்தி சிறகடித்து எழுந்து மீண்டும் கொத்திக்கொண்டிருக்கின்றன. அந்த சக்கரத்தடங்களிலெல்லாம் நெல்மணிகள் உதிர்ந்து நீளமாக விழுந்திருக்கின்றன. சரம்போல, கொடிபோல. இங்கு முன்பெல்லாம் அறுவடைக்குப்பின் இவ்வூர்களுக்கு வெளியே பள்ளங்களில் வாழ்பவர்கள் வந்து வரப்புகளை வெட்டிப்பிளந்து உள்ளே எலிகள் சேர்த்துவைத்திருக்கும் நெல்லை எடுத்துக்கொள்வார்கள். ஓடும் எலிகளை வளையின் மறுஎல்லைக்குச் சென்று காத்திருந்து மூங்கில் கூடையிட்டு பிடிப்பார்கள். அவர்களும் அவர்களின் குழந்தைகளும் அந்த வேட்டையை கொண்டாடுவர். அவர்கள் அன்றே அந்நெல்லை அரிசியாக்கி அந்த எலிகளையும் சமைத்து உண்பார்கள். மலைமேல் வாழும் நாங்கள் எலிகளை உண்பதில்லை. அவை விலங்குகளில் வேர்கள். வேர்களை எங்கள் தெய்வங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எலிகள் உண்பதைவிட பலமடங்கு நெல் இதோ வயலெங்கும் உதிர்ந்திருக்கிறது. ஆனால் இவற்றை அள்ளமுடியாது. சேறுடன் சேறென கலந்து இவை மூன்றாம் நாள் மென்மயிர்ப்பரவல் போல முளைத்தெழும். அலைகொண்டு பச்சைப்பரப்பாக நிற்கும். கோடையில் வாடி கருகி மறையும். சேர்த்து உழுது மீண்டும் விதைபொழிவார்கள்.
என் காலடியோசை எழுந்து சுழன்று செல்லும் காற்றில் மறைகிறது. இருள் வந்துகொண்டிருக்கிறது. அக்கரையில் தாழைசெழித்த வரப்பை நான் அடையும்போது என்னை நான் பார்க்கமுடியாமலாகும். என் காலடியோசையே நான் என்றாகும். நான் கன்னங்கரியவன். உடலில் மேலும் கரிபூசிக்கொண்டிருக்கிறேன். கரிய ஆடையை அணிந்திருக்கிறேன். கரிய கல்மணிமாலைகள் என் கழுத்தில் கிடக்கின்றன. கரிய இறகுகளை என் தலையில் சூடியிருக்கிறேன். இருட்டில் நான் கரைந்து மறைந்துவிடுவேன். இந்த ஊர் என்னை பார்க்கமுடியாது. என் மூதாதையரை இவர்கள் பார்த்ததில்லை. இவர்கள் என் காலடியோசையை மட்டுமே அறிவார்கள். என் காலடியோசை என் மூதாதையரின் காலடியோசையேதான். இவர்கள் நூறாண்டுகளாக நூறுநூறுநூறாண்டுகளாக இந்தக் காலடியோசையை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மலையிறங்கிவந்து மீளும் இக்காலடிகளை இவர்கள் அறிவார்கள். இவர்கள் அதற்காக இந்தப்பொழுதுகளில் செவிகூர்ந்திருக்கிறார்கள்.
நான் வயல்விரிவைக் கடந்து வரப்பின்மேல் ஏறிக்கொள்கிறேன். தாழைமரப்புதர்கள் நிழல்களாக மாறிவிட்டிருந்தன. அவற்றுக்குள் என் காலடியோசை கேட்டு இரைதேடக்கிளம்பிய எலிகள் அஞ்சி சருகோசையுடன் ஓடுகின்றன. அப்பால் ஓடையில் நீர் வளையும் இடங்களில் ஒளிகொண்டு ஓசையிட்டுச் செல்கிறது. என் பாதையை ஒரு நாகம் கடந்துசெல்கிறது. சீவிடுகளின் ரீங்காரம் சூழ்ந்திருக்கிறது. மலைக்காடுகளை அதிரவைக்கும் ஒலி இங்கே அவற்றுக்கில்லை. அவை வேறெங்கோ என கேட்கின்றன. நான் நீரில் இறங்கி மறுபக்கம் கரையேறுகிறேன். அந்தப்பாதை மையக்கோயிலை நோக்கி செல்வது. என் காட்டுத்தெய்வங்கள் மையக்கோயிலில் அமர்ந்திருக்கும் நாட்டுத்தெய்வங்களை விலக்குகின்றன. ஆகவே அந்தக் கோயிலின் தட்டக வளைப்புக்குள் என் முன்னோர் கால்வைத்ததில்லை. என் முன்னோர் காலடிவிழாத இடங்களில் நான் காலடி வைப்பதில்லை. நான்கு காவல்தெய்வங்களாலானது இந்த தெய்வத்தின் தட்டகம். யானைமேல் அமர்ந்திருக்கும் ஆனைச்சாத்தன், புலிமேல் அமர்ந்திருக்கும் வரிச்சாத்தன், கால்களில்லாத நாகயட்சி, ஆலமரத்தடியிலமர்ந்த வடயட்சி. அவற்றை வளைத்துக்கொண்டு நான் நடக்கிறேன். அங்கே ஆலயத்தில் மணியோசை எழுகிறது. இரவுப்பூசை முடிந்து நடைசாத்தவிருக்கிறார்கள். நான் தாழைப்புதர்களுக்குள் பாறையொன்றில் அமர்ந்து காத்திருக்கிறேன். இந்த இருள் கொழுத்து தடித்து கரிய பிசுக்கு போல ஆகவேண்டும். என் மலைத்தெய்வங்கள் அதன்பின்னரே இங்கே எழமுடியும்.
வானத்தின் மின்னும் கூழாங்கற்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அவை மிகமெல்ல இடம் மாறிக்கொண்டிருந்தன. கூர்ந்து பார்த்தால் அவை நம்மை இடம்மாற்றுவது போல தெரியும். நள்ளிரவு என்று அவை எனக்கு அறிவித்தபோது நான் எழுந்தேன். என் தோளிலிருந்த தோல்பையிலிருந்து இரும்பாலான கொக்கறையையும் மீட்டு கம்பியையும் எடுத்துக்கொண்டேன். தலைப்பாகையை அவிழ்த்து கொண்டையாக அணிந்திருந்த தலைமுடியைப் பிரித்து மயிர்க்கற்றைகளை தோளில் விரித்துப் போட்டேன். சுருட்டி காட்டுக்கொடிகளால் கட்டி தோல்பையில் வைக்கப்பட்டிருந்த சாக்குப்பையை எடுத்து விரித்து உதறி தோளிலிட்டுக் கொண்டேன். நீரில் இறங்கி நீர்வழியாகவே நடந்து நீரிலிருந்து பிரிந்து செல்லும் சிறுபாதையினூடாக ஊருக்குள் நுழைந்தேன். இந்தச் சிறுபாதைகள் வீடுகளின் பின்பக்கங்களினூடாகவே செல்பவை. அத்தனை வீடுகளையும் இவை தொட்டு இணைக்கின்றன. இவை பெண்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் கீழ்க்குடிகளுக்கும் உரியவை. இங்கே வீட்டிலுள்ளோர் மலம்கழிக்கும் சிறிய அறைகள் உள்ளன. அங்கிருந்து மலம் சிறுதிறப்புகள் வழியாக வெளியே வருகிறது. அவற்றை எடுத்துச்செல்பவர்களும் இவ்வழியேதான் வருகிறார்கள். எலிகளும் பாம்புகளும்கூட இவ்வழியே வருகின்றன. அங்கே மையக்கோயிலில் இருக்கும் தெய்வங்களோ அவர்களின் துணைத்தெய்வங்களோ இந்தப்பாதையில் வருவதே இல்லை.
நான் அந்தச் சிறியபாதையில் நடந்தபோது என் காலடியோசை அதன் இருபக்கமும் இருந்த சுவர்களில் பட்டு எதிரொலித்தன். குகைவழிபோல அந்த ஓசையை அப்பாதை முழங்கவைத்தது. கொக்கறையை மீட்டி நான் இந்த பொழுதுக்குரிய பாடலை பாடினேன். “கொத்தோடு குலையோடு வாரித்தா மாதாவே, மக்களும் பசுக்களும் வாழணும்…” அந்தப்பாடல் என் மொழி அல்ல. அவர்களுக்கான மொழி அது. “நெல்லோடு மணியோடு வாரித்தா மாதாவே சட்டியும் பானையும் நெறையணும்!” கொக்கறை மலைகளில் உறுமும், கொக்கரிக்கும், எக்களிக்கும். இங்கே அதை நான் மிகமெல்ல மீட்டினேன். அது தொலைந்துபோன எதையோ எண்ணி புலம்புவதுபோல சிலம்பலோசையை எழுப்பியது. “பொன்னாயி பூவாயி நிக்குது தெய்வங்கள் மண்ணிலும் மலையிலும் நிறையவே” இந்தப்பாடல் இந்த பருவத்தில் இந்த விண்துளிகளுக்குக் கீழே, இதே காற்றில் இப்படியே முன்பும் ஒலித்திருந்தது. “காயாக கனியாக கையில் நிறையணும் காடெல்லாம்!”
ஒவ்வொரு வீட்டு கொல்லைப்பக்க கதவின் அருகிலும் மரத்தாலத்திலோ மூங்கில்கூடையிலோ கைக்குவை நெல்லை மூன்றுமுறை அள்ளி வைத்திருக்கவேண்டும். மண்ணகலில் எண்ணையிட்டு திரிகொளுத்தி அது அணையாமலிருக்க இரு செங்கற்களையோ ஓடுகளையோ சேர்த்து கூடுவைத்திருக்கவேண்டும். அந்த நெல் மூன்று பொன்னுருத் தெய்வங்களுக்கும் உரியது. மலைபூத்த மஞ்சள் மலர்களெனப் பொலியும் கடுத்தாவும் பிறுத்தாவும் சிறுத்தாவும் அளித்தது இந்தத் தாழ்நிலம். இது அவர்களுக்கு அளிக்கும் காணிக்கை. ”புந்நெல்லும் பொன்னெல்லும் வாரித்தா மாதாவே கைகளும் கால்களும் வாழணும்! செந்நெல்லும் கன்னெல்லும் கோரித்தா மாதாவே கண்ணுமே காதுமே வாழணும்” நான் கொக்கறையை மீட்டியபடி பாடினேன். “கடுத்தாவும் பிறுத்தாவும் காணிக்கை கொள்ளணும், சிறுத்தாவும் நிறையட்டும் காணிக்கை கொண்டே” நான் அந்த சிறிய இடுங்கிய பாதையில் திகைப்புடன் நடந்தேன். எந்த வீட்டின் பின்புறத்திலும் விளக்கு இல்லை. எங்குமே புதுநெல் காணிக்கை வைக்கப்படவில்லை. “பொன்னாய் விளையுத புதுநெல் வேணுமே, பொன்னாய பூவாய மலைதெய்வம் கொள்ளவே!” ஒவ்வொருமுறை நான் வரும்போதும் விளக்குகளும் நெல்லும் குறைந்துகொண்டிருந்தன. சென்றமுறை ஒன்றிரண்டே இருந்தன. ஒற்றைக்கையால் நெல்சாக்கை தூக்கிக்கொண்டு நான் மலையேறியிருக்கிறேன். என் முன்னோரின் காலத்தில் நெல்மூட்டைகளைச் சுமக்க ஓடைக்குள் துணைவந்த மலையர் நின்றிருப்பார்கள்.
ஊரை வளைத்துச்சென்ற சிறுபாதை ஆங்காங்கே குப்பைக்குவியல்களால் மூடப்பட்டிருந்தது. இடிபாடு மண்ணும் கல்லும் குவித்திருந்தார்கள். சாக்கடை தேங்கி நுரைக்குமிழிகளுடன் தெரிந்தது. ”வாழுக வாழுக மக்களும் குடிகளும் வாழுக! வாழுக வாழுக மன்னனும் கொடியுமே வாழுக!” நான் அந்தப்பாதையின் இறுதிக்கு வந்தபோது கொக்கறையை மீட்டுவதை நிறுத்திவிட்டேன். பெருமூச்சுடன் வந்த இருண்ட வழியை திரும்பிப்பார்த்தபின் மீண்டும் ஓடையில் இறங்கி தாழைசெறிந்த வயல்மேட்டில் ஏறி மறுபக்கம் சென்று நீண்டு சென்ற வரப்பினூடாக நடந்தேன். காட்டின் விளிம்பை அடைந்ததும் திரும்பி ஊரைபார்த்தேன். “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று சொன்னபிறகு காட்டுப்பாதையில் நடந்தேன். இருண்ட காடு என்னைச்சூழ்ந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தது. என் காலடிகளை ஒவ்வொரு மரமும் கேட்டறிந்தன. தொலைவிலிருந்த பாறைகள் மென்மையாக எதிரொலி செய்தன.
நான் என் குடியை அடைந்தபோது கருக்கிருள் செறிந்திருந்தது. என் குடிசைக்குள் சென்று தெற்குமூலை மூதாதையரிடம் நடந்தவற்றை சொன்னேன். ”வெறுங்கையுடன் வந்திருக்கிறேன் போனவர்களே, அங்கே தாழ்ந்த நிலம் ஒரு மணிநெல்லைக்கூட அளிக்கவில்லை” என்றேன். அவர்கள் துயர்மிக்க அமைதியுடன் அமர்ந்திருந்தனர். “நான் என்ன செய்யவேண்டும்?”என்று கேட்டேன். ”சொல்லுங்கள், நான் செய்யவேண்டியது என்ன?” என் தந்தை மெல்லிய முனகலாக “நாம் செய்வதற்கென்ன? தெய்வங்கள் முடிவெடுக்கட்டும்”என்றார். என் மூதாதை ஒருவர் “ஆம், நாம் எப்போதும் தெய்வங்களிடம் சொல்வதையே சொல்வோம்”என்றார். இன்னொரு மூதாதை “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!”என்றார். நான் பெருமூச்சுடன் “ஆம், அவ்வாறே” என்றேன். பின்னர் என்னுடைய கைக்கோலை எடுத்துக்கொண்டு வெளியே இறங்கி கரடிமலை நோக்கி சென்றேன்.
நான் நடக்கையில் காட்டுக்குமேல் வானின் ஒளி விழுந்து பரவத்தொடங்கியிருந்தது. முதலில் கரடிமலையின் உச்சி ஒளிகொண்டு எழுந்து வந்தது. பின்னர் இலைகள் வண்ணம் கொண்டன. காட்டுக்குள் இலைப்பரப்புகளின்மேல் ஒளித்துண்டுகள் அசைவுகளாக மின்னல்களாக தெரியலாயின. கரடிமலைச் சரிவை கடந்து பூத்துப்பெருகியிருந்த மஞ்சள்மலர்ப்பரப்பை அடைந்தேன். தீயென பொன்னென மலர்கள். கொன்றையும் வேங்கையும் ஒன்றெனக் கலந்திருந்தன. நான் கைகூப்பியபடி காட்டின்முன் நின்றேன். “காடுபூத்த தெய்வங்களே!” என்று அழைத்தேன். “மலை கனிந்த செம்பொன்னே!”என்று கூவினேன். “கனிவுள்ள தெய்வங்களே, கடுத்தாவே பிறுத்தாவே சிறுத்தாவே, காத்தருளவேணுமே” என்றேன். “காடு கொடுத்த நிலத்திலுள்ளோர் கையள்ளி தரவில்லை. வெறுங்கை கொண்டு வழியெல்லாம் நடந்து வந்தேன். முப்பொன்னே, மூத்தோரே கனிவுகாட்டவேண்டுமே” என் முன் காற்றில் எழுந்தமைந்தன செம்மலர்க்குலைகள். கொப்பளித்து அசைந்தது பொன்னுருகிய பரப்பு. நான் பார்த்திருக்கவே அவற்றிலெழுந்தன நிமிர்வுகொண்ட வேங்கைவரிப்புலிகள். புள்ளிச் சிறுத்தைகள் உடல்நெளித்தன. பூனைப்புலிகள் சீறி பதுங்கின. வெண்சிப்பி விழிகள், திறந்த வாயில் தீத்தழலென வளைந்த நாக்குகள், எழுந்து நெளிந்த நீண்ட வால்கள், மெத்தென மெத்தென காலடுத்து வைத்தன ஆயிரம், பல்லாயிரம், பற்பல ஆயிரம் பொன்னுருவப் புலிகள். அவற்றின் உறுமலை என் செவியருகே கேட்டேன். கரடிமலை உச்சியில் இருந்து பெரும்பாறை நிலைபிறழ்ந்து உருண்டு அணைவதுபோல பேரொலி.
நான் கொக்கறையை என் தோளிலிட்டிருந்தேன். நடுங்கும் கைகளால் அதை எடுத்தேன். கம்பியால் அதை மீட்டியபோது அடிபட்டு விழுந்து பதுங்கும் சிறுநாய்க்குட்டியின் முனகல் என அது ஒலித்தது. “பிழையெல்லாம் பொறுக்கவேண்டும். பெற்றவரென்றே கனியவேண்டும். மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்?” என்றேன். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. என் உதடுகள் துடித்தன. அழுகையில் உடைந்து பிசிறிட்ட குரலில் “பொன்னுக்கு மண்ணுடன் ஏதுபகை உடையோரே? மூன்றுபொன்னும் முனிந்துவிட்டால் மிச்சம் ஏதுமுண்டோ?” என்றேன். என் குரல் தாழ்ந்து தாழ்ந்து எனக்குள்ளேயே ஒலித்தது. வேங்கை மெல்ல பின்காலெடுத்துவைத்து பதுங்கி மறைந்தது. சிறுத்தை தன்னைத்தானே சுருட்டிக்கொண்டது. பூனைப்புலி பொன்மலர்களின் மஞ்சள்நிழல்களில் கரைந்தது. புலிகள் மறைந்து மலர்க்கூட்டம் என ஆவது வரை நான் பாடிக்கொண்டிருந்தேன். பின்னர் என் கொக்கறையை எடுத்து தலைமேல் தூக்கி “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்றேன்.