எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்பு ஜெயமோகன்,

வணக்கம். எண்ணும்பொழுது கதைக்கான கடிதங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். வாசக நண்பர்களின் எழுத்தாள நுட்பம் பெருமை கொள்ள  வைக்கிறது. பல நேரங்களில் அக்கடிதங்களை திரும்ப வாசிக்கவும் வைக்கிறது. மேலும், அவை குறிப்பிடப்படவேண்டிய இலக்கியப்பிரதிகளாகவும் தோற்றம் கொள்கின்றன.

சமீபத்தில் எண்ணும்பொழுது கதையைக் குறித்து விஜய் ரெங்கராஜ் எனும் வாசகர் எழுதி இருந்த கடிதம் நுட்பமானது. அவரின் ”நிகழ்காலத்தில் ஆண் கவித்தன்மையோடு உள்ளான். அவள் எதிர்துருவம். இருவேறு துருவங்களைச் சேர்த்து வைத்திருப்பது காமம் ஒன்றே. சுடச்சுடவே பொன் மேலும் சுடரும். காதல், காமத்தால் சுட்டால் ஒழிய ஒளிராது. தங்கம் வெளிறியே போகும். எப்போது அவர்கள் காமமின்றி பிரிய நேர்கிறதோ அப்பொழுதே அவர்கள் எண்ணத்தொடங்கிவிடுவார்கள்; அப்பொழுதே நிரந்திர பிரிவு தொடக்கம்” எனும் வரிகளின் தீர்க்கம் அகலா வியப்பாய் என்னில் மிதந்தபடி இருக்கிறது.

ஆர்.கிருஷ்ணகுமாரின் கடிதம் எளிமையானது. எனினும் அவரின் “எண்ணும்பொழுது சிறுகதை என் பாட்டி அடிக்கடி சொல்லும் ஒரு சொலவடையை நினைவூட்டியது. அளந்து வாங்கணும், அளக்காம கொடுக்கணும். அன்பு, பாசம், கடமை, தியாகம் எதையுமே அளக்காமல், எண்ணாமல் , செய்பவர்கள்தான் உண்மையில் அதில் மகிழ்ச்சியும் நிறைவும் அடையமுடியும். அதை எண்ண ஆரம்பித்தால் கசப்பும் வருத்தமும்தான் மிஞ்சும்” எனும் வரிகள் அழுத்தமானவை. [எண்ணும்பொழுது- கடிதங்கள்]

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் எழுத்துக்களை பல வருடங்களாக வாசித்து வருகிறேன்.

உங்களின் புனைவுகளில் என்னை மிக கவர்ந்த அம்சம், ஆண் பெண் உரையாடல் (குறிப்பாக காதலர்கள், தம்பதிகள் இடையேயான உரையாடல்).

“எண்ணும்பொழுது” அவ்வகையில் நல்ல உரையாடலை கொண்ட சிறுகதை.

நன்றி.

ராஜசேகரன்

 

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது கதையைப் பற்றிய ஒரு புதிய கோணத்தை ஒவ்வொரு கடிதங்களும் உருவாக்குகின்றன. கதைகளைப் பற்றிய இத்தனை ஆழமான விவாதங்கள் வேறெங்கும் நிகழ்கின்றனவா என்று தெரியவில்லை.

எண்ணும்பொழுதுகதையில் உள்ள இரு கதைகளும் இரண்டு வேறு காலங்களில் நிகழ்கின்றன என்று விஜய் என்னும் வாசகர்கடிதம் சொன்னது வியப்பை அளித்தது. உண்மைதான். ஒருகதை நிகழ்காலத்தில் உள்ளது. இன்னொன்று கதைகளுக்குரிய என்றென்றைக்குமான காலத்தில் உள்ளது. அல்லது அகக்காலத்தில் உள்ளது

நிகழ்காலத்தில் அவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையை அந்த கதைக்காலத்தில் கொண்டுசென்று வைத்து சொல்லிப்பார்த்துக்கொள்கிறார்கள்

ஆர்.சந்திரகுமார்

எண்ணும்பொழுது- கடிதங்கள்-5

எண்ணும்பொழுது- கடிதங்கள்-4

எண்ணும்பொழுது- கடிதங்கள்-3

எண்ணும்பொழுது- கடிதங்கள்-2

எண்ணும்பொழுது- கடிதங்கள் -1

முந்தைய கட்டுரைமாலா சின்ஹா- கடிதம்
அடுத்த கட்டுரைபுதிரும் புனைவும்