தாகூர், நவீன இந்தியச் சிற்பியா?

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-3
நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-2
நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-1

அன்புள்ள ஜெயமோகன்

நலம்தானே.   உங்கள்  கட்டுரைகள் மநுஸ்மிருதி  மற்றும் எழுத்தாளனின் இருள்  இரண்டும் நல்ல தெளிவையும்  ஒரு திறப்பையும் கொடுத்தது. [எழுத்தின் இருள்,மனு இன்று ]

ராமச்சந்திர குஹாவின்  புத்தகத்தை பற்றிய கட்டுரையை படித்தேன். ரபீந்திரநாத்  தாகூரை  நமது  தேசத்தின் சிற்பிகளில்  ஒருவராக காண்கிறார்.   இது சரி என்றே படுகிறது. எனது தலைமுறையிலும் (எனக்கு 46 வயது ) எனக்கு சற்று முன் பிறந்தவர் கணிசமான பலருக்கு  ரவீந்தர்  அல்லது ரவீந்திரநாத் என்ற  பெயர் சூட்டப்பட்டிருக்கும்.

அவரது சிறுகதைககள் சிலவற்றை என் கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன்.   அதில்  அவர்  ஒரு “எக்ஸிஸ்டனிலிஸ்ட்” போலவே தோற்ற்றம் அழிக்கிறார்.  அவரை பற்றி அதிகம் படிக்காமல் போனதற்கு  ஒருகாரணம்  அந்நாட்களில்   கூட இருந்த வங்காளிகளின் மேட்டிமை  பேச்சு.  “What  Bengal thinks today India will think tomorrow”    வகையறா   பேச்சுக்கள். மலையாளிகளே  பரவாயில்லை  என்று தோன்றும்.  நன் படித்த ஒரே வங்காள நாவல் ஆரோக்கியநிகேதனம் (நீங்கள் சிபாரிசு செய்தது).

தாகூர் பற்றி முடிந்தால் ஒரு கட்டுரை எழுத முடியுமா.

அன்புடன்

பரத்

அன்புள்ள பரத்

தாகூர் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு யூ.ஆர்.அனந்தமூர்த்தி என்னை அழைத்தார். தாகூரின் மொத்தப்படைப்புகளிலும் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வரவுள்ளன, தமிழில் அதற்கான பொதுத்தொகுப்பாளராக நான் செயல்பட முடியுமா என்று கேட்டார். நான் ஒப்புக்கொண்டேன். அந்த முயற்சி நிகழாதுபோயிற்று.

தாகூரின் கட்டுரைத்தொகுதியை அப்போது வாசித்தேன். அதையொட்டி ஒரு கட்டுரை எழுதி பாதியில் நிறுத்திவிட்டேன். முடிக்கவேண்டும்.

என் கணிப்பில் தாகூரின் நாடகங்களே முதன்மையான படைப்புகள். கவிதையும் புனைவும் இணைபவை அவை.அடுத்தபடியாக அவருடைய சிறுகதைகள். அவை இந்திய மொழிகளனைத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தியவை. ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா இருவரிலும் அச்செல்வாக்கைக் காணலாம். தாகூரின் கோரா தான் இந்தியமொழிகளில் எழுதப்பட்டவற்றில் நாவல் என்னும் வடிவில் அடையப்பட்ட முதல் வெற்றி. முன்னோடிப் படைப்பு என்ற தகுதியை மட்டுமே கொண்டவை அதுவரை வந்த படைப்புகள். கோரா என்றும் வாழும் ஒரு செவ்வியல் படைப்பு.

அடுத்தபடியாக அவருடைய கவிதைகள். அவை மொழியாக்கத்தில் நிறைய விடுபட்டே நமக்கு கிடைக்கின்றன. தமிழ், ஆங்கில மொழியாக்கங்களில் தாகூர் சரியாக வெளிப்படுவதில்லை. சம்ஸ்கிருதத்திற்கு அணுக்கமான மலையாளத்தில் தாகூரின் கவிதைகளின் சொல்லழகை காணமுடிகிறது. அவருடைய இசைப்பாடல்கள் மிக அருமையானவை என வங்காளிகள் சொல்வதுண்டு.அவர்கள் பாடிக்கேட்டபோது அப்படித்தான் தோன்றியது.

தாகூரின் கவனிக்கப்படாத எழுத்துக்கள் அவருடைய பயணக்கட்டுரைகள். அவர் ஓர் உலகப்பயணி. மிகநுணுக்கமான காட்சிச்சித்தரிப்புகள் அவருடைய பயணக்கட்டுரைகளில் உள்ளன. நூறாண்டுகளுக்கு முன் சாதாரணமாக எவரும் பயணம் செய்யாத அரேபியப் பழங்குடிகளுடனெல்லாம் சென்று தங்கி எழுதியிருக்கிறார். பயணம் உருவாக்கும் உள எழுச்சியை கவித்துவத்தால் தொட முடிந்த அரிதான சிலரில் ஒருவர் தாகூர். உலக இலக்கியத்திலேயேகூட அவ்வகையில் அவருடன் ஒப்பிட சிலரே உள்ளனர்

தாகூர் இந்தியாவின் இலக்கியமுன்னோடிகளில் ஒருவர். ஒரு மாபெரும் வழிகாட்டி.

ஜெ

தாகூரின் கோரா
அனந்தமூர்த்தி, பைரப்பா, தாகூர்
வம்சவிருட்சாவும் கோராவும் -சுசித்ரா
கோரா- கடிதம்- கண்ணன் தண்டபாணி
முந்தைய கட்டுரைவாலொடுக்கம்
அடுத்த கட்டுரைஇலக்கியத்தின் நிலக்காட்சிகளை காண…