வணக்கம் சார்,
தங்கள் பயணக்குழுவை முன்னுதாரணமாகக் கொண்டு இனிதே தொடங்கியது எங்கள் பயணம். ஆம். 2019-ல் ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில் கலந்துகொண்ட சில நண்பர்கள் ஒன்றிணைந்து ஜனவரி 16, 17 தேதிகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மீனாட்சிபுரம் சிற்பங்கள், குடைவரை சிவன் கோயில், கூடல் அழகர் கோயில், நாயக்கர் மஹால், அழகர் கோயில் ஆகிய இடங்களுக்கு ஒரு சிறு பயணம் மேற்கொண்டோம். சென்னையிலிருந்து ஜெயராம், கோவையிருந்து ஆனந்த், மதுரையிலிருந்து வேலாயுதம் ஆகியோர் இணைந்து முதல் நாள் பயணத்தை தொடங்க, நான் இரண்டாம் நாள் அவர்களுடன் இணைந்து கொண்டேன்.
பயணங்களில் சிறகுகள் முளைப்பதை உணர முடிகிறது. குடும்பம் மற்றும் அலுவலகச் சூழலுடன் தொடர்பற்ற அதே நேரத்தில் நமது ஆளுமையை வளர்க்கவும் கூடிய ஒரு குழுவின் நிகரற்ற தன்மை மனதை நெகிழச் செய்து நிறைவளிக்கிறது.
பயணத்தின் முடிவில், அழகர் கோயிலின் சூழலில் அந்தி மாலையின் இளங்குளிரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஒரு இனிமையான உரையாடலை நிகழ்த்தினோம். மறக்கமுடியாத ஈரோடு சந்திப்பு உரையாடல் நினைவுகளுடன் விரைவில் மற்றொரு பயணத்திற்கான திட்டமிடலுடன் பிரிந்து சென்றோம்.
கட்டிடக்கலையும் சிற்பங்களும் நம் நிலப்பரப்பில் எங்கும் நிறைந்து மனித வாழ்வின் புதிரான வெறுமையை நீக்க சிறந்த வாய்ப்பினை அளிக்கின்றன.
இந்த பயணத்திற்குப் பிறகு எங்கள் ஊரைச் சுற்றி எத்தனை சிறப்புமிக்க கட்டிடங்கள் சிற்பங்கள் உள்ளனவோ அவற்றை எல்லாம் நேரில் சென்று புதிய கண்களுடன் பார்வையிடும் எண்ணங்கள் மனதில் உதயமாகின்றன.
உண்மையில், வாழ்வின் படிநிலைகளில் ஒரு புதிய வாசல் திறந்திருக்கிறது. எண்ணற்ற இத்தகைய மாற்றங்களுக்கும் மறுமலர்ச்சிக்குமான விதைகள் தங்கள் இணைய தளத்தில் விரவிக்கிடக்கின்றன.
தங்களின் வழிகாட்டலுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
– சுப்ரமணியம் குருநாதன்