அன்புள்ள ஜெ,
தேர்வுசெய்யப்பட்டவர்கள் கட்டுரை வாசித்தேன். அதற்கு எதிரான அறிவுரைகளையும் கண்டேன். உங்கள் கட்டுரைகளில் முன்பு அயன் ராண்ட் பற்றி எழுதியிருந்த கட்டுரையை நான் நினைவுகூர்ந்தேன். அப்போது நானும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். அதில் தங்களை அட்லஸ் மேக்கர்ஸ் ஆக நினைத்துக்கொள்ளக்கூடிய அறிவுஜீவி மேட்டிமைவாதத்தை சாடியிருந்தீர்கள். இதிலே டெஸ்டினி மேக்கர்ஸ் என்கிறீர்கள். என்ன வித்தியாசம்? தெளிவுபடுத்தும்படி கோருகிறேன்.
சாந்தகுமார்
அன்புள்ள சாந்தகுமார்
நன்றி. நானே அயன் ராண்ட் உட்பட என் பழைய கட்டுரைகளை சுட்டி கொடுத்து இதைப்பற்றி கேளுங்கள் என்று என் விவாதத்தளத்தில் கோரியிருந்தேன். அதைப்பற்றி நிறைய விவாதங்கள் வந்தன. என்னுடைய பின் தொடரும் நிழலின் குரல் இந்த விஷயத்தை பல கோணங்களில் மிகவிரிவாக விவாதித்த ஒரு நாவல். அந்நாவலையே ஓர் ஒட்டுமொத்த நோக்குக்காக நான் சிபாரிசு செய்வேன்.
மூன்று வெவ்வேறு கருதுகோள்களாக இந்த விஷயத்தை பிரித்துக்கொண்டு பார்க்கலாம். முதல் கருத்து அயன் ராண்டினுடையது. அதை தமிழில் ‘ உலகு சுமப்பவர்கள்’ என்று மொழியாக்கம் செய்யலாம். அவரது நோக்கில் மனிதநாகரீகத்தை கட்டியெழுப்புபவர்கள் அறிவார்ந்த ஆற்றல் கொண்ட சிலர்தான். அவர்களே மனித நாகரீகத்துக்கு பொறுப்பேற்பவர்கள். மனிதநாகரீகத்தை ஆக்குபவர்கள் ஆதலால் அழிக்கவும் உரிமைகொண்டவர்கள். அவர்கள் பிற சாதாரண மக்களின் அறவியலால் மதிப்பிடத்தக்கவர்கள் அல்ல. பொது விதிகளுக்குக் கட்டுப்படவேண்டியவர்களும் அல்ல.
அயன் ராண்ட் இவர்களின் தனித்தகுதி பற்றியும் ஆகவே இவர்களுக்கான தனி உரிமைகளைப்பற்றியும் முக்கியமாக பேசுகிறார். ஏனென்றால் இவர்கள் தனிமனிதர்கள். தங்கள் தனித்துவம் மூலமே இவர்கள் தங்கள் காலகட்டத்தை கட்டமைக்கிறார்கள். தங்கள் தனித்தன்மையை பேணிக்கொள்ளவும் வளர்க்கவும் அதில் உச்சத்தை அடையவும் இவர்களுக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை அச்சமூகத்தின் பிற பொது மனிதர்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆகவே பொதுமனிதர்களுக்கு ஒரு சமூகமாக அவர்கள் வாழும்பொருட்டு அளிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், நெறிகள், மதிப்பீடுகளுக்கு இவர்கள் அடங்கவேண்டும் என்பதில்லை. சராசரிகளின் அளவுகோல்களால் இவர்கள் அளக்கப்படக்கூடாது. இதை மீண்டும் மீண்டும் அயன் ராண்ட் முன்வைக்கிறார்.
இந்த தனித்துவம் கொண்ட படைப்பாளிகளின், உலகுசமைப்பவர்களின், செயலூக்கத்துக்கான அடிப்படை என்பது அதிகாரத்துக்கான விருப்புறுதிதான். தங்கள் முழு அறிவுத்திறனையும் அகவல்லமையையும் தாங்கள் விரும்பியபடி உலகை ஆக்க அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் அதிகாரம்தான் சமூகத்தை ஆக்கி நிலைநிறுத்தும் ஆற்றல்.
அயன்ராண்ட் இந்தக்கருத்துக்களை ஜெர்மானிய தத்துவமேதை நீட்சேயிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார். இந்த தரப்பு ஐரோப்பிய மரபில் என்றும் இருந்து வந்த ஒன்றே. இதை பின்னுக்குப் பின்னுக்கு தள்ளினால் நாம் பிளேட்டோவிடம் சென்று சேர்வோம். பிளேட்டோ மொத்த சமூக அதிகாரமும் தத்துவப்பயிற்சி பெற்ற சிலரிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்றும், சாமானியர்களுக்கு அதிகாரத்தை கையாளும் உரிமையும் வலிமையும் இருப்பதில்லை என்றும் சொன்னவர்.
அயன் ராண்ட் வலதுசாரி உச்சம். அவர் முழுமூச்சாக எதிர்த்த தரப்பு என்றால் இடதுசாரி சிந்தனைதான். ஆச்சரியமென்னவென்றால் இடதுசாரிச் சிந்தனைகளிலும் இதே கருத்துக்கோணம் முற்றிலும் வேறு வாதகதிகளுடன் இருக்கிறது என்பதுதான். காரணம் இவ்விரு சிந்தனைகளுமே ஒரே ஊற்றில் இருந்து, கிரேக்க மெய்யியல் மரபில் இருந்து, சொல்லப்போனால் பிளேட்டோவின் சொற்களில் இருந்து உருவாகி வந்தவை என்பதே. இவை அறிவுத்தேவதையான சோபியாவின் அதிகாரத்தை முன்வைப்பவை.
அயன் ராண்ட் படைப்புத்திறன் கொண்டவர்களை தேர்வுசெய்யப்பட்டவர்கள் என்றால் இவர்கள் புரட்சியாளர்களை அப்படிச் சொல்கிறார்கள். புரட்சியாளர்கள் தங்கள் கல்வியறிவாலும், தியாகத்தாலும், துணிச்சலாலும் மக்களில் இருந்து மேலெழுந்து வந்தவர்கள். அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை ஆக்கிக்கொண்டவர்கள். இவர்களை நாம் ‘உலகின் பிரதிநிதிகள்’ எனலாம்
இடதுசாரிகள் மக்களைப்பற்றி பேசுகிறார்கள். மக்களிடம் அனைத்து அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்றும் மக்களே அனைத்தையும் ஆக்கி அழிக்கும் முதற்பெரும் சக்தி என்றும் சொல்கிறார்கள். மக்களிடமே எல்லா ஞானமும் உள்ளது என்கிறார்கள். ஆனால் அந்த மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கையாளும் எந்த அமைப்பையும் அவர்கள் ஏற்பதில்லை. மாறாக மக்களின் பொருட்டு மக்களின் பிரதிநிதிகளாக எழுந்து வரும் புரட்சியாளர்களின் அதிகாரத்தையே இவர்கள் முன்வைக்கிறார்கள். கம்யூனிசம் என்ற சொல்லே அதைத்தான் குறிக்கிறது. கம்யூன் என்றால் இந்த புரட்சியாளர்கள் கூடிவாழ்ந்த கூட்டுஅமைப்புகள்.
உலகமெங்கும் இடதுசாரிகளால் உருவாக்கப்பட்ட கட்சிகளும் அரசுகளும் எல்லாம் புரட்சியாளர்களின் முழுமுற்றான அதிகாரத்தையே முன்வைக்கின்றன. எண்பது வருடம் முன்பு இடதுசாரி அரசியல் பற்றி பேசப்பட்ட போது இந்த மிக முக்கியமான வினாவை நாராயணகுரு ஓர் உரையாடலில் எழுப்பினார். ’சரி, மக்களுக்காக புரட்சி செய்து ஆட்சியை அமைக்கிறார்கள். மக்களுக்கு அவர்களை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?’ ஒன்றுமே செய்யமுடியாது. மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாது, புரட்சியாளர்கள் அதை கற்பிக்க வேண்டும் என்பதே பதிலாக இருக்கும்.
மூன்றாவதாக ஒரு தரப்பு, பிறப்பால் தேர்வுசெய்யப்பட்டவர்கள் பற்றியது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் எல்லாமே பிறப்பு சார்ந்தவை என்பதனால் உலகை மாற்றியமைக்கும் அறைகூவலை முன்வைக்கும் எல்லா மதங்களுமே ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ சிறப்பு தகுதிகொண்ட மக்களை வரையறை செய்தன. கிறித்தவத்துக்கும் யூதமதத்துக்கும் யூத இனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் தான் தீர்க்கதரிசிகள் பிறந்தனர். மீட்பர் வந்தார். இஸ்லாமுக்கு அரேபியர்கள். அந்த மொழிதான் இறைவன் பேசிய மொழி. நபி பிறந்த குறைஷிக்குலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது
இந்த மூன்றையும் பிணைக்கும் பொது அம்சம் ஒன்றுண்டு. அதை அதிகாரம் என்று சொல்வேன். உலகு மீதான அதிகாரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பற்றியே இவை பேசுகின்றன. அந்த அதிகாரத்துக்குத்தான் அறிவுத்திறனையோ, போராட்டத்தன்மையோ, இறைவனின் ஆசியையோ காரணமாக ஆக்குகின்றன. அதற்கான உரிமைகளை தகுதிகளைப்பற்றி பேசுகின்றன
நித்யா இங்கே பேசும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. உரிமைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அல்ல. மானுட குலத்தின் உயிரியல் இயல்பால் ஏதோ ஒருவகையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நித்யா சொன்ன கருத்தை ‘உன்னிடத்தில் இருக்கும் ஒரு தனித்திறமை என்பது மானுட இனத்துக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்துகொள் . அது அபூர்வமாகவே அளிக்கப்பட்டுள்ளது. அது பிற அனைத்தைவிடவும் மேலானது. ஆகவே அதை வீணடிக்க உனக்கு உரிமை இல்லை. அதை முழுமைப்படுத்தி அதன் உச்சம் நோக்கிக் கொண்டுசெல்ல நீ கடமைப்பட்டிருக்கிறாய். அதை அடைந்த நீ உன்னிடம் இல்லாதவற்றை சுட்டிக்காட்டி அதை வீணடிப்பது குற்றம்’ என்று எளிமையாகச் சொல்லலாம்
மானுட இனத்தில் மிகமிகக் குறைவானவர்களே உண்மையான ஆக்கத்திறனுடன் இருக்க முடியும் என்பது ஓர் அடிப்படை உண்மை. கற்றுக்கொள்ளும் திறன், செயலாற்றும் திறன் ஆகிய்வை சமூக ரீதியாக மேம்படுத்தத் தக்கவை. ஆனால் படைப்புத்திறன் இயல்பிலேயே வருவது. படைப்பு என்பது சிந்தனை, கலைப்படைப்பு மட்டுமல்ல. புதியது படைக்கும் திறன். அதை மனக்கண்முன் காணும் திறன். மற்ற திறன்கள் உடையவர்கள் சேர்ந்துதான் இந்தச் சமூகத்தையே கட்டமைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இதன் செயல்பாட்டுக்கு பங்களிப்பாற்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே முக்கியமானவர்களே. ஆனால் ஒருசமூகத்தை, மானுடத்தை வளர்த்து முன்னெடுப்பவர்கள் படைப்பூக்கம் கொண்டவர்களே
அவர்கள் அதிகாரத்தை நோக்கிச் செயல்படுபவர்கள் அல்ல. அவர்களில் கணிசமானவர்களுக்கு அதிகாரமென்பதே தெரிந்திருக்காது. அவர்கள் அவ்வாறு செயல்படுவதற்கு ஒரே நோக்கம்தான். அவர்கள் அதைச்செய்யும்போது மட்டுமே முழு நிறைவை உணர்வார்கள். அதைச்செய்யும்போதே தாங்கள் செய்யவேண்டியதைச் செய்வதாக, தங்களுக்குள் இருந்த அனைத்தும் வெளிப்பாடு கொள்வதாக, உணர்வார்கள். அச்செயலுக்காக அவர்கள் இழப்பவை நிறைய இருக்கலாம். அவர்கள் ஒருவேளை அதற்காக கொடுமைப்படுத்தப்படலாம். கொல்லவும் படலாம். ஆனால் அச்செயலில் அவர்கள் அடையும் நிறைவை மட்டுமே அவர்கள் தங்களுக்கான ஊதியமாகக் கொள்கிறார்கள்.
அவர்களால்தான் இச்சமூகம் முன்னகர்கிறது. அவர்கள் இந்த சமூகத்தின் தலைவர்களோ உரிமையாளர்களோ அல்ல. இதன் ஒரே பிரதிநிதிளும் அல்ல. அவர்கள் இதன் எதிர்காலத்தை உருவாக்குபவர்கள். ஆகவேதான் நித்யா விதிசமைப்பவர்கள் என்றார். அவர்களுக்கும் முந்தைய மூவருக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது
என்னைப்பொறுத்தவரை அதிகாரம் என்பது என்றும் மக்கள் அனைவருக்கும் பங்குள்ளதாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் ஜனநாயகம் என்ற கருதுகோளில் நம்பிக்கை கொண்டவன். எந்த தகுதியாலும் எவரும் மக்களின் மேல் முற்றதிகாரத்தை அடைய முடியாது, கூடாது. அது அழிவையே உருவாக்கும். ஆகவேதான் அயன் ராண்ட் சொல்வதையும் இடதுசாரி அரசியலையும் நான் அழிவுசக்திகள் என்கிறேன்.
ஆனால் மானுடத்தின் படைப்பூக்கம் கொண்ட மனங்களை சராசரிகளில் ஒருவராக மட்டுமே மதிப்பிட வேண்டும் என்று சொன்னால் அதை ஒரு அறிவற்ற சராசரியின் கூற்றாகவே கருதுவேன். தன் இயல்பான படைப்பூக்கத்தால் ஒவ்வொரு கணத்தையும் அர்த்தபூர்வமாக ஆக்குபவனை, அதற்காக பிறர் அடையும் அனைத்தையும் தியாகம் செய்யக்கூடிய ஒருவனை ஒருபோதும் சராசரிகளுடன் ஒப்பிடக்கூடாது. அப்படி ஒப்பிடும் சமூகம் தன்னை சராசரிகளின் கும்பலாக ஆக்கிக்கொள்ளும்.
வயலினில் ஒரு உணர்ச்சியை சாத்தியமாக்கும் ஒரு கலைஞனை கற்பனைசெய்து பாருங்கள். அந்த கம்பிகளில் தன் நெஞ்சின் இசையை நிகழ்த்திக்காட்ட அவன் மேற்கொள்ளும் உழைப்பை வெறும் பீடிசுற்றும் செயலுடன் ஒப்பிட்டாலே கூட எத்தனை பிரம்மாண்டமானது அது!. அந்த கலையில் தன் முழுச்சாத்தியத்தை அடைவதற்காக அவன் சிந்தும் கண்ணீரை புரிந்துகொள்ளமுடியாத மொண்ணைச் சமூகமாக எப்போது ஆனோம்?
அந்த ஒரு இசைநுட்பத்தை சாத்தியமாக்கியதன் வழியாக அவன் என்ன அடைந்தான்? சமூகத்திற்கு என்ன கொடுத்தான்? மானுடம் இசையில், இலக்கியத்தில், சிந்தனையில் விளையாட்டில், அரசியலில் தன்னை ஒவ்வொரு கணமும் தானே தாண்டிச்சென்று கொண்டிருக்கிறது. அது ஒரு பிரம்மாண்டமான கூட்டுச்செயல்பாடு. அந்தக் கூட்டுச்செயல்பாடு அவனைப்போன்ற பலநூறு கலைஞர்களின் தியாகத்தால், உழைப்பால், சிரத்தையால், தியானத்தால் ஆனது. அதில் அவன் தன் பங்கை ஆற்றுகிறான். மிகச்சிறியதாக இருந்தாலும் அது மகத்தானதே. நீரெல்லாம் கங்கை என்பது போல
அந்தக் கலைஞனை தினம் ஆபீஸ் போய் கணக்கு எழுதும் ஒருவனுடன் சமப்படுத்தி பேசுவதனூடாக நாம் இழைக்கும் பிரம்மாண்டமான அநீதி ஏன் நம் கண்ணுக்குப்படவேயில்லை? எல்லாரும்தான் உழைக்கிறார்கள். உழைப்பு சோறுபோடுகிறது. வீடும் துணியும் ஆகிறது. பிள்ளைகளை வளர்க்கிறது. உழைப்பு வேறு படைப்பு வேறு என்று படித்தவர்களுக்கே புரியவில்லை என்றால் நாம் எங்கே வந்து நின்றுகொண்டிருக்கிறோம்?.
சென்ற சிலநாட்களில் இதுசார்ந்து வந்த பல கடிதங்கள் எனக்கு மிகுந்த நிம்மதியின்மையை அளித்தன. நாம் ஒரு பிரம்மாண்டமான குமாஸ்தா சமூகமாக ஆகிவிட்டிருக்கிறோம். குமாஸ்தா நியாயங்கள், குமாஸ்தா தர்க்கங்கள், குமாஸ்தா தத்துவங்கள்…. உண்மையில் ‘நான் கணக்கு போடுகிற குமாஸ்தா அவன் வயலின் வாசிக்கிற குமாஸ்தா’ என்று தான் சொல்கிறது இந்த அற்ப ஜீவன். அதைத்தான் பல்வேறு சொற்களில் பசப்பி முன்வைக்கிறது. கம்பனும் தியாகையரும் நடந்த மண்ணில் என்ன ஒரு கேடுகெட்ட தலைமுறை..
என்ன நடந்திருக்கிறது? ஒரு தலைமுறையையே குமாஸ்தாவாக பெற்று, குமாஸ்தாவாக கல்விகற்க வைத்து ,குமாஸ்தாவாக ஆக்கி விட்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த குமாஸ்தாவாக ஆவதே வெற்றி என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறது. மிகச்சிறந்த குமாஸ்தாவே முன்னுதாரணம்.ஒரு குமாஸ்தாவாக ஆவதற்காக அனைத்து தனித்திறமைகளையும் வீணடித்து, அனைத்து நுண்ணுணர்வுகளையும் மழுங்கடித்துக்கொண்டு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். உழைப்பது, உண்பது, கேளிக்கை-அவ்வளவுதான் ஒரு தினம். வேலைசெய்வது, சேமிப்பது, பிள்ளை பெற்று ஆளாக்கி ஓய்ந்து இருமி சாவது – இவ்வ்ளவுதான் மொத்த வாழ்க்கையும்
இதை நியாயப்படுத்தும் சித்தாந்தங்கள் இவர்களுக்கு தேவைப்படுகிறது. பரவாயில்லை, காலை ஒன்பதுக்கே ஆபீஸ் போய் வேலையை குறையில்லாமல் செய்து ‘பேஷ்’ வாங்கி இருட்டுவது வரை இருந்து மேலதிகாரி போ என்று சொன்னபின் கிளம்பும் நல்ல குமாஸ்தாவா நீ? ரொம்ப நல்லவன். கீதை சொல்லும் கர்மயோகி. நீ சமூகத்துக்கு தேவையானவன்.நீயும் தான்விரும்பிய சமூக மாற்றத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு போராளியும் தன் கலைக்காக தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் கலைஞனும் எல்லாம் சமம். புல்லுக்கும் புழுவுக்கும் யானைக்கும் எல்லாம் பிரபஞ்சத்திலே சம இடம்தான். இவர்கள் கேட்க விரும்பும் வரிகள் இவையே. இவற்றையே இங்கே உள்ள ஆன்மீக பிரச்சாரர்கர்கள் முதல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வரை சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால் இது அல்ல உண்மை. ஒரு ஆலயமென்பது அதன் எல்லா கற்களாலும் உருவானதே. ஆனால் சிற்பங்களின் மரியாதை எல்லா கல்லுக்கும் இல்லை. ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றும் ஒருவனின் முக்கியத்துவம் ஒரு போதும் அச்சமூகத்தின் சாதாரணமான ஓர் உறுப்பினனுக்கு இல்லை. எந்த சமூகம் அந்த படைப்பாளியை ,இலட்சியவாதியை முன்னிறுத்துகிறதோ அதுவே வளரும் சமூகம். தன் சிறந்த மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு தன் அடுத்த தலைமுறையை உருவாக்கும் சமூகங்களே வாழும் சமூகங்கள். வெல்லும் சமூகங்கள். சராசரியை முன்னிறுத்தும் சமூகங்கள் உறைந்துவிட்டவை. அடிமைப்பட்டவை.
நம்மிடம் நாம் குமாஸ்தாக்கள் மட்டுமே என்றான் வெள்ளையன், ஆமாம் அய்யா நாம் குமாஸ்தாக்கள் மட்டுமே என்று நாமும் சொல்கிறோம். ஐஐடி குமாஸ்தாக்கள், ஐடி குமாஸ்தாக்கள், ஆபீஸ் குமாஸ்தாக்கள்…..குமாஸ்தாத்தனம் என்பது ஒரு வேலை அல்ல. அது ஒரு மனநிலை. நிர்வாகமேலாளராகவும் உயர்பொறுப்பாளர்களாகவும் இருக்கும் குமாஸ்தாக்கள் உண்டு. குமாஸ்தா பணியிலேயே தன்னை கவிஞனாக, புரட்சியாளனாக, சிந்தனையாளனாக ஆக்கிக்கொண்டவர்களும் உண்டு. இந்த குமாஸ்தாக்குரலை ஒவ்வொரு தளத்திலும் நாம் எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. இவர்கள் உருவாக்கும் மந்தத்தனத்தை ஒவ்வொரு தளத்திலும் உடைக்க வேண்டியிருக்கிறது.
அந்த மனநிலையின் முதற்குரலே ’எல்லாரும் சமம்தான்’ என்பது. கலையை, சிந்தனையை, தியாகத்தை சிறுமைப்படுத்த இதைவிட வேறு சொற்றொடர் தேவை இல்லை. என் முன் நின்று ஒருவன் இதைச் சொல்வானென்றால் ’ஆமடா, நீ ஒரு வெறும் கூழாங்கல். உனக்கு எதிர்காலம் இல்லை. அவன் விதை. அவனுக்குள் வரும்காலம் இருக்கிறது. அவனை தூக்கிச்சுமக்கும் வாகனம்தான் நீ. அவன் அமரும் மேடைதான் நீ. அவனுக்கு துணியும் சோறும் கொடுக்கும் அமைப்பு மட்டும் தான் நீ. போய் அந்த வேலையைச்செய்யடா, முட்டாள்’ என்றுதான் சொல்வேன்.
சராசரியை முன்னுதாரணமாக்கும் நம்முடைய மனம்தான் எல்லா துறைகளிலும் ஆழமான தேக்கநிலையை உருவாக்கி உள்ளது. ’ஊரோடு ஒத்துவாழ்’ என்ற எளிய லௌகீக விவேகத்துக்கு அப்பால் ஒரு ஞானமே நம் பிள்ளைகளுக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தையிடம் ஓர் அறிஞனை, ஒரு கலைஞனை, ஒரு சமூகச்செயல்வீரனை சுட்டிக்காட்டி முன்னுதாரணமாக சொல்லும் பெற்றோர் எவருமே இங்கில்லை. ‘மூணாம் வீட்டு முருகேசனைப்பாரு, அமெரிக்காவிலே கைநெறைய சம்பாரிக்கிறான்’ என்பதே ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் உச்சகட்ட முன்னுதாரணம்.
பள்ளி இறுதி முடித்த இரண்டுகோடி பேர் வாழும் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக அத்தனை செய்தித்தாள்களும் சேர்த்து இருபது லட்சம்தான் பிரதிகள் விற்கின்றன. நூல்கள் இரண்டாயிரத்தை தாண்டுவதில்லை. எங்கும் மரபான ஞானம் பேணப்படுவதில்லை. பிழைப்புக்கு உதவாத எதுவும் கற்கப்படுவதில்லை. காசாக மாற்றமுடியாத எந்த அறிவுக்கும் மதிப்பில்லை. ஒருசாதனையாளனை விட சம்பாதிப்பவனுக்கு முதன்மை மதிப்பு.நம் பண்பாட்டின் எல்லா தளத்திலும் இருப்பது மனம் கூசச்செய்யும் அறிவு வறுமை. அதற்குக் காரணமே இந்த சராசரித்தனம்தான்
இங்கே ஒவ்வொரு தளத்திலும் தனித்தகுதி கொண்டவர்களை, சாதனையாளர்காளை, அதற்காக போராடுபவர்களை மட்டம் தட்ட எத்தனை குரல்கள். எந்த ஒரு தனித்திறனையும் அவமதிக்க திரளும் அசட்டு சராசரிகளின் குரல்களை கேட்க நீங்கள் ஒரு முறை இணையத்தை உலவி வந்தாலே போதும். நம் தெருவிலேயே ஒரு கம்பராமாயண அறிஞர் இருந்தால், ஒரு தத்துவ சிந்தனையாளர் இருந்தால், ஒரு இசைக்கலைஞர் இருந்தால் தெருவில் அவரைப்பற்றி இருக்கும் பொதுவான பேச்சு என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
காரணம்ஒரு சாதனையாளன், ஒரு தனித்திறன் கொண்டவன் நம் சராசரிகளை அச்சுறுத்துகிறான். அவர்களை சிறுமைகொள்ளச் செய்கிறான். அவனை அவர்கள் தங்களைப்போன்றவனல்ல என்று உணர்கிறார்கள். அதனாலேயே அவனை ஏளனம் செய்கிறார்கள். அவமதிக்கிறார்கள். தங்கள் ஒட்டுமொத்த அழுத்ததையும் அவன்மேல் செலுத்துகிறார்கள். அதற்கும் மேலாக அவன் சாதனை எஞ்சும்போது அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நாங்களும் அவனுக்கு சமம்தான், நாங்களும்தான் பங்களிபாற்றுகிறோம், எல்லாருக்கும் பங்களிப்புண்டு என்று பேசுகிறார்கள்.
இந்த சராசரி சிந்தாந்தமே நமக்கு பல அபத்தமான எண்ணங்களை உருவாக்குகிறது. திரும்பத்திரும்ப சொல்லப்படும் செருப்பு தைக்கும் உதாரணம். செருப்பு ஒன்றின் புதிய சாத்தியத்தை உருவாக்குபவன் படைப்பாளி. கச்சிதமாக செருப்பு தைப்பவன் வெறும் உழைப்பாளி. உழைப்பாளி இச்சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பின் பகுதி. படைப்பாளி அதன் வளரும் நுனி. படைப்பாளியை உழைப்பாளிக்கு நிகராக ஆக்குவதன் மூலம் அவன் பங்களிப்பை நாம் அவமதிக்கிறோம், அவனை அழிக்க நினைக்கிறோம்.
சராசரியின் இன்னொரு குரல், ’இவ்வளவு போதும்’ என்பது. படைப்பூக்கத்துக்கு நேர் எதிரான மனநிலை அது. சட்டையைக்கழற்றிவிட்டு நடு பெருக்கில் குதிப்பவனுக்கு மட்டுமே இந்த நதி சொந்தம். கரையோரம் நின்று கால்நனைப்பவனுக்கு அது காட்சிப்பொருள் மட்டுமே. ஆகவே அது அவனை அச்சுறுத்துகிறது. நிரந்தரமாக விலக்குகிறது. எங்கும் எதிலும் சற்றேனும் சாதித்தவர்கள் நடுவே பாய்ந்தவர்கள் மட்டுமே. நான் இதற்கெனப்பிறந்தவன், இதை அடைவதல்லாமல் வேறொன்றில்லை என்று முடிவுகட்டியவர்கள் மட்டுமே. மண்டையோடு சிதற முட்டினால் மட்டும் திறக்கும் வாசல்கள் அவை.
நான் என் இளமையில் எழுத்தை என் இடமாக எடுத்துக்கொண்டு அதற்காக பிற அனைத்தையும் கைவிட முடிவெடுத்தபின் இத்தனை வருடங்களில் எனக்கு எவ்வளவு அறிவுரைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆச்சரியத்துடன் நினைத்துக்கொள்கிறேன். அண்டை வீட்டார், வயதில் மூத்தார், சொந்தக்காரர்கள், மேலதிகாரிகள், ஏன் ரயிலில் கொஞ்ச தூரம் கூடவந்தவர்கள் கூட… ‘நமக்கெதுக்குங்க இதெல்லாம். பேசாம நாம உண்டு நம்ம வேலை உண்டு குடும்பம் உண்டுன்னு இருக்காம’ … ‘இதெல்லாம் ஒண்ணும் ஆவுறதில்லை தம்பி, நான் உன் அப்பன் மாதிரி.பேசாம எல்லாரையும் மாதிரி இருக்கிற வழியப்பாரு’ ‘ சரி இப்ப இப்டி இருக்கே, வயசான காலத்திலே அப்றம் கவனிக்க ஆளில்லாம சாகணும்’
இங்கே தன்னை ஒரு படைப்பாளியாக உணரும் ஒவ்வொருவனுக்கும் எதிராக சராசரியின் அழுத்தம் இருந்துகொண்டிருக்கிறது. ஞானக்கூத்தனின் வரிகளில் சொல்லப்போனால் ‘சூளைச்செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது’ போலத்தான் அவன் செயல்படவேண்டியிருக்கிறது. முதலில் நீ ஏன் இதைச்செய்யவேண்டும், இதெல்லாம் முக்கியமே அல்ல என்ற உபதேசம். அதன் பின் செய்வதைப்பற்றிய ஏளனங்கள் , அவமதிப்புகள்.. கடைசியாக நீ என்னசெய்தாலும் நீயும் நாங்களும் சமம்தான் என்ற தீர்ப்பு. இவர்களுக்கு எதிராக தனித்து நிற்பதற்கான ஆழமான தன்னம்பிக்கையை அளிக்கும் சொற்களே நித்யாவுடையவை.
‘நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன். அபூர்வமானவன். நீ உன் உச்சகட்டத்தை அடையவும் அளிக்கவும் கடமைப்பட்டவன். அந்த பொறுப்பு உனக்குள்ளது. அதை எந்தக்காரணத்தாலும் மழுப்பமுடியாது’ என்கிறார் நித்யா.ஒருவனுக்குள் உள்ள தனித்திறன் என்பது மிகமிக அபூர்வமானது என்று. அவன் தன்னை சராசரியாக ஆக்கிக்கொள்வது ஒரு மாபெரும் பாவம் என்று. அப்படி ஆக்கிக்கொள்வதற்கு அவன் உலகியல் காரணங்களை சொல்வது ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல என்று. அவனுக்கு தனிச்சலுகையோ சமூக அதிகாரமோ அளிக்கப்படவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அவனிடம் நீ ‘விதி சமைப்பவன்’, அதை நீ செய்தாகவேண்டும் என்று மட்டுமே சொல்கிறார்.
இங்கே, நித்யா சுட்டுவது ஐன்ஸ்டீனையோ ரமணரையோ காந்தியையோ நாராயணகுருவையோ தல்ஸ்தோயையோ மட்டும் அல்ல. அவர்கள் மட்டும் அல்ல விதிசமைப்பவர்கள். அவர்கள் அந்த வகையினரின் உச்சங்கள். ஆனால் அந்த படைப்பியக்கத்தில் எந்த ஒரு துளியிலும் ஏதேனும் ஒரு பங்களிப்பாற்றுபவன் அந்த வரிசையில்தான் இருக்கிறான். அது ஒரு பெரிய பேரொழுக்கு. அந்த பெருக்கில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் அதில் ஒரு துளியே. ஐன்ஸ்டீனும் தல்ஸ்தோயும் காந்தியும்கூட அதில் துளிகள் மட்டும்தான். கொஞ்சம் பெரிய துளிகள்.
மானுட படைப்பியக்கத்தின் அந்த பேரொழுக்கை ஒருவன் உணர்ந்தால் அவனிடம் கூடும் தன்னுணர்வு என்பது ஓர் எல்லையில் தன்னடக்கமும் மறு எல்லையில் மாபெரும் தன்னகங்காரமும் கொண்ட ஒன்றாகவே இருக்கும். தன்னுடைய பங்களிப்பைப்பற்றிய பெருமிதமும் அடக்கமும் ஒரே சமயம் அவனிடம் இருக்கும். அவனை சிறுமைசெய்து, அவனையும் தங்களைப்போன்ற சராசரியாக மதிப்பிடமுயலும் அற்பத்தனங்களுக்கு முன்னால் அது தலைநிமிர்ந்த ஆணவமாக இருக்கும் ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன்’ என்று ஜெயகாந்தன் சொன்னது அதைத்தான்.
உயிர்களாக மனிதர்கள் அனைவரும் சமமே. உரிமைகளில் மனிதர்கள் அனைவரும் சமமே. மனிதர்கள் எவருக்கும் பிறர் மேல் அதிகாரமும் இல்லை. அதிகாரம் என்றுமே மக்களின் கூட்டுச்செயல்பாடாகவே இருந்தாகவேண்டும். ஆனால் திறனில் மனிதர்கள் அனைவரும் சமம் அல்ல. ஆகவே மானுட குலத்துக்கான பங்களிப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் அல்ல. சிலர் அதிக தகுதியும் ஆகவே அதிக பங்களிப்பாற்றும் பொறுப்பும் அதன் பொருட்டு அதிக தியாகம் செய்யவேண்டிய கடமையும் கொண்டவர்கள்.
மனிதகுலத்துக்கு பங்களிப்பாற்றியதன் அடிப்படையிலேயே மனிதர்களின் முக்கியத்துவம் அமைகிறது. மனிதப்பண்பாட்டுக்கு பங்களிப்பாற்றுபவனை அங்கீகரிக்கவும் அவனை முன்னுதாரணமாகக் கொள்ளவும் அவனுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும்தான் நித்யா அறைகூவுகிறார்.
நித்யாவின் இந்த அறைகூவல் இருவகை விளைவுகளை ஏற்படுத்தும் என எனக்கும் தெரியும். தன்னுள் ஒரு படைப்பூக்கத்தை உணர்ந்து, அதை முன்னெடுக்க நினைப்பவனுக்கு அபாரமான தன்னம்பிக்கையை அளிக்கும். தனித்து நிற்க, போராட, தியாகம் செய்ய, தன் முழுமை நோக்கி செல்ல ஊக்கமளிக்கும். த்ன் அறிவுக்குமீறிய ஒரு பெரிய நோக்கத்தின் பகுதியே தான் என்ற உணர்வை உருவாக்கும்.
ஆனால் தன்னை சராசரியாக உள்ளூர உணரும் ஒருவர், படைப்புத்தன்மை இருந்ததைக்கூட தன் லௌகீக சமரசங்களால் அழித்துக்கொண்டு சராசரியாக ஆக்கிக்கொண்ட ஒருவர், சீண்டப்படுவார். தனக்கு இவ்வுலகில் இருப்பதாக அவர் நினைத்திருக்கும் இடம் மறுக்கப்படுவதாக உணர்வார். எல்லா சராசரிகளும் எல்லா காலத்திலும் படைப்பூக்கத்துடன் செயல்படுபவர்களிடம் சொல்வதை அவரும் சொல்வார்- இதெல்லாம் ஒன்றும் முக்கியமல்ல, நீயும் எல்லாரையும்போலத்தான் என்று.
ஜெ
- அறிவுரைகள்
- தேர்வு செய்யப்பட்டவர்கள்- எதிர்வினைகள்
- அயன் ராண்ட் 1 | jeyamohan.in
- அயன் ராண்ட் 2 | jeyamohan.in
- அயன் ராண்ட் – 3 | jeyamohan.in
- அயன் ரான்ட் -4 | jeyamohan.in
- அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில …
- அயன் ரான்ட்,மேலும் கடிதங்கள் | jeyamohan.in
[மறுபிரசுரம். முதல்பிரசுரம் 2011]