அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-5

முன்தொடர்ச்சி 

[ 5 ]

நாகலிங்க ஆசாரி ஒருநாள் முன்னதாகவே வந்து ஹம்பியிலேயே கலை இலாகாவின் கூடாரத்தில் தங்கியிருந்தான். படப்பிடிப்பு தொடங்க நான்கு நாட்கள் இருந்தன. எங்கள் தையல் வேலைகள் முழுமையாக ஆரம்பிக்கவில்லை. கொண்டுவந்த பொருட்களை அடுக்கி வைத்தபின் ஓய்வாக அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பிக்கொண்டிருந்தோம். கலை இலாகாவில் நாகலிங்க ஆசாரி இருப்பதை சாப்பாடு கொண்டுவரும் சிவலிங்கம் சொல்லி நான் அறிந்தேன்.

நான் ஹம்பிக்குள் சென்று நாகலிங்க ஆசாரியைப் பார்த்தேன். அவன் அடையாளமே தெரியாதபடி புழுதி மூடி களிமண் பொம்மை போலிருந்தான். தலைமுடி மண்ணாலான திரிகளாக தொங்கியது. புருவமே மண்ணாலானதாக இருந்தது. அவன் எனக்கு புட்டியில் அடைக்கப்பட்ட ஒரு திரவத்தை குடிக்க கொடுத்தான். இனிப்பானது. சர்பத் போலிருந்தது. ”எனர்ஜி டிரிங்க். இதைக்குடித்தால் களைப்பே தெரியாது” என்றான். எனக்கு ஏப்பம் வந்துகொண்டே இருந்தது. ஆனால் தாகம் அடங்கிய மாதிரியும் இருந்தது. “அமெரிக்காவில் இந்த பானம் இல்லாமல் சினிமாவே எடுக்க மாட்டார்கள்” என்று அவன் சொன்னான்.

அங்கே கலை இலாகாவினர் வெறிகொண்டு வேலைசெய்தபடி இருந்தனர். அன்றெல்லாம் ஹம்பியில் யுனெஸ்கோ நடத்திய பழுதுபார்ப்பு வேலைகள் ஆரம்பிக்கவில்லை. தொன்மையான நகரத்தின் பெரும்பகுதி அப்படியே சீட்டுக்கட்டு போலச் சரிந்து கிடந்தது. மத்திய தொல்லியல்துறையின் வேலைகள் ஆங்காங்கே சின்ன அளவில் நடைபெற்றன. அங்கே என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியாதபடி அவை ஆமை வேகத்தில் நடைபெற்றன. ஆனால் யாரோ எங்கோ ஏதோ செய்துகொண்டும் இருந்தனர்.

அங்கே தொல்லியல்துறையில் கூலிவேலைக்கு வந்திருந்த தமிழ்நாட்டு மக்கள் அங்கேயே விரூபாக்ஷர் கோயில் முன்னால் இருந்த இடிந்த கல்மண்டபங்களில் தட்டிகட்டி மறைத்து வீடுகளாக்கிக் குடியிருந்தார்கள். ஹம்பியின் இடிபாடுகளுக்கு உள்ளேயே விவசாயிகள் நிலத்தை ஆக்ரமித்து கரும்பும் சோளமும் நட்டிருந்தார்கள். இடிந்த கோயில்களிலேயே விவசாயக்கருவிகள் சேமிக்கப்பட்டிருந்தன. பல மண்டபங்கள் எருமைத்தொழுவங்களாக இருந்தன. பல கோயில்களின் மேல்  வைக்கோல் போர்கள் தெரிந்தன.

ஹம்பியில் அன்று ஏராளமான தேனீக்கூடுகள் இருந்தன. அங்கே கொஞ்சம் தனிமையான இடங்களுக்குச் சென்றால் தம்பூரா சுதிபோல தேனீக்களின் ரீங்காரம் கேட்கும். அந்த இடத்தின் அழுத்தமான அமைதியை அது அச்சுறுத்துவதாக மாற்றிவிடும். எவரோ அக்காட்சிகளுக்கு இசையமைத்ததுபோல. அந்த ஓசையே இறந்தகாலத்தில் இருந்து எழுவது. சாவின் நாதம்.

அதோடு காற்று அள்ளிவரும் புழுதிமணல் சருகுகள் மேல் மெல்லப்பொழியும் ஓசை. அது எங்கோ நீர் ஓடிக்கொண்டிருப்பதுபோல பிரமை எழுப்பும். ஹம்பி அசைவிழந்து ஒரு மாபெரும் ஓவியம்போலிருந்தது. விவசாயம் செய்பவர்கள், மாடுகள், அலையும் நாய்கள், தொல்லியல் துறை கூலியாட்கள் அனைவருமே அந்த அசைவின்மையில்தான் அசைவின்மையாக இருந்தனர்.

எப்படியோ இடிந்த மண்டபங்களின் நடுவே, நெருஞ்சிக்காடுகளினூடாக வழிதேடி துங்கபத்ராவின் கரையை அடைந்துவிட்டால் நீரின் சலசலப்பு கேட்கும். மொத்த ஹம்பியே அசைவிழந்து கிடக்க நதி ஓடிக்கொண்டிருக்கும். எதிர்காலத்தை நோக்கி. ஏனென்றால் அது நிகழ்காலம். நதி எப்போதுமே நிகழ்காலம்தான். ஒரு சிறுமியின் சிரிப்பொலி போல அத்தனை இளமையானது அதன் சத்தம்.

நீரலைகளின் ஒளியைக் கண்டதுமே நெஞ்சின் அழுத்தம் மறைந்துவிடும். நீரிலிறங்கி அள்ளி அள்ளி மேலே விட்டுக்கொள்வோம். கடந்தகாலத்தை கழுவிவிட்டு நிகழ்காலத்திற்கு வரமுயல்பவர்களைப்போல. நீரின் தண்மையில்தான் அத்தனை தூரம் வெயிலில் அலைந்து தோல் வெந்துவிட்டிருப்பதே தெரியும். முகத்தை கழுவிக்கொண்டாலே முகம் சிவந்துவிடும்.

ஹம்பியின் இடிபாடுகளில் ஓரளவு தேறக்கூடிய இடங்களை தேர்வுசெய்து அங்கே இடிபாடுகளை மறைத்து பிளாஸ்டர் ஆஃப் பாரீஸிலும் களிமண்ணிலும் அதேபோன்ற மண்டபங்களை  கட்டி இணைத்தும், தேவையில்லாதவற்றை ஓவியத் திரைச்சீலைகளால் மறைத்தும் பழையகாலச் செழிப்பான தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். இடிந்த ஆலயங்களின் மேல் வரிசையாக நந்திகளையும் யானைகளையும் பதித்தபோது அவை உயிர்கொண்டு வந்தன.

உண்மையிலேயே பிரமிப்பாக இருந்தது. பல இடங்களில் களிமண் மண்டபங்களுக்கும் உண்மையான மண்டபங்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை. கருங்கல் கட்டுமானங்களில் இடிக்கப்பட்ட பகுதிகளை களிமண்ணால் தூண்களும் சிற்பங்களுமாக நிரப்பி முன்பிருந்தது போலவே ஆக்கியிருந்தனர். பல கோயில்கள் தற்காலிகமாக இறந்தகாலத்திலிருந்து மீண்டு நிகழ்காலத்திற்கு வந்து நின்றிருந்தன. அல்லது அந்த இடமே இறந்தகாலத்திற்கு மூழ்கிச்சென்றுவிட்டதா?

ஹம்பியில் நான் பகல் முழுக்க பித்துப்பிடித்தவன்போல அலைந்தேன். எத்தனை விதமான கல்மண்டபங்கள், எத்தனை வகையான கோயில்கள். அனைத்தும் ஏதோ வானிலிருந்து உதிர்ந்து உடைந்து கிடப்பவை போல கண்ணெட்டும் தொலைவுவரை விரிந்து கிடந்தன. கல்மண்டபங்கள் மேல் வெயில் விழுந்து விந்தையான காட்சிவெளியை உருவாக்கியது. சமப்பரப்புகளில் வெயில் ஜொலித்தது, அருகிலேயே ஆழ்ந்த நிழல் விழுந்து கிடந்தது. வளைவுகளில் வெயில் வழிந்தது.

பார்க்கப் பார்க்க நிழல்கள் மாறிக்கொண்டே இருந்தன. காட்சியை எவரோ மாற்றிக்கொண்டே இருப்பதுபோல. மெல்ல ஓடும் ஒரு சினிமா அது என நினைத்தேன். கண்கள் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்க அலைந்தேன். அது ஒரு பரவசநிலைதான், ஆனால் மனதில் துக்கமும் நிறைந்திருந்தது. ஏனென்றால் அது பாழடைவு என்று, சாவின் வெளி என்று என் அகம் அறிந்திருந்தது. ததும்பிக்கொண்டே இருந்தேன். அழுதுவிடுவேன் போலிருந்தது.

ஏப்ரல்- மே மாதம் ஹம்பியில் சென்னப்பட்டினத்தைவிட இரண்டுமடங்கு வெயில். தூசுமணம் கொண்ட புழுதிக்காற்று வீசிக்கொண்டே இருந்தது. கல்மண்டபங்களின் மேலிருந்து புழுதி அமைதியாக வழிந்தது. கைவிடப்பட்ட கோயில்களில் இடிந்த கற்தூண்களின் அருகிலும் சுவர்மூலைகளிலும் சருகுகளும் புழுதியும் சேர்ந்து குவிந்திருந்தது. தோண்டப்பட்ட கண்கள் போல கருவறைகள் காலியாக கிடந்தன. தெய்வமில்லாத பீடங்களை காண்கையில் ஒரு திடுக்கிடல். அங்கே சூட்சும வடிவில் தெய்வம் நின்றிருப்பதுபோல. இருட்டுக்குள் இருந்து எவரெவரோ நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினேன்.

வௌவால்கள் செறிந்த இருண்ட கோயில்களுக்குள் நுழையும்போது முதலில் கருந்திரைபோல அடர் இருளாக தெரிந்து, மெல்லமெல்ல கண் தெளிந்து, கரிய திரவப் பளபளப்புடன் நந்தியோ சிவலிங்கமோ எழுந்து வருவது கனவு போலவே இருந்தது. மண்ணில் பாதி புதைந்த சிற்பங்களில் உறைந்த சிரிப்பு.  எல்லா சிற்பங்களும் எதையோ கூவிச் சொல்லிக் கொண்டிருந்தன. கைகளால், விரல் முத்திரைகளால், சிரிப்பால், உதட்டுச்சுழிப்பால், கண்களால். ஒட்டுமொத்தமாக ஹம்பியே கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. செவிக்கு கேட்காத இரைச்சல்.

ஒரு கல்மண்டபத்தில் களைத்து அமர்ந்தபோது அப்படியே தூங்கிவிட்டேன். என் உடலில் இருந்து வியர்வை வழிவதை உணர்ந்தேன். காதோரம் வியர்வை அப்படி ஊறிச்சொட்டுவது முன்பு நிகழ்ந்ததில்லை. கைகால்கள் எடைகொள்ள அப்படியே மூழ்கி மூழ்கிப்போனேன். தூக்கத்தில் கனவில் விக்கி விக்கி அழுதேன். என் விம்மலோசையைக் கேட்டு விழித்துக்கொண்டேன். எழுந்து கண்களை துடைத்தேன். எனக்கு அருகே புழுதியில் விழுந்து கிடந்த ஒரு கல்தூணில் இருந்த சிற்பம் வெறித்த பார்வையுடன் உடைந்த கூரையை பார்த்துக்கொண்டிருந்தது.

துங்கபத்ரா கோடையிலும் வற்றுவதில்லை. அந்த நீரில் மேலே வெயிலின் வெப்பமும் ஆழத்தில் பாறைகளின் தண்மையும் இருந்தது. பாறைகளில் இருந்து எழுந்த ஒருவகை சுட்டசெங்கல்லின் வாசனை நீரில் இருந்தது. கரையோரத்து ஆழமற்ற பாறைகளில் பாசி படர்ந்திருந்தது. நீரிலும் பாசி மணம். பச்சைப்பாசி நீரோட்டத்தில் தானும் செல்ல தவிப்பது போல நெளிந்து அலைகொண்டது. கால்கள் பட்டு உருண்ட உருளைப்பாறைகள் இன்னொரு முறை உருள நூறாண்டுகள் கூட ஆகக்கூடும் என்று தோன்றியது.

அந்தியில் வேலைமுடிந்ததும் கலை இலாகாவில் அத்தனைபேரும் அதில் நீந்தி திளைத்தார்கள். பகல் முழுக்க வெயிலில் காய்ந்தபின் அந்தக் குளியல் உடலை அலுப்புறச் செய்து இரவில் ஆழமான தூக்கத்தை அளித்தது. எனவே காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்தார்கள். அங்கே அனைவருமே மலர்ந்த முகத்துடன், கேலிப்பேச்சுகளுடன் இருந்தனர். அவர்களின் அன்றாடத்திலிருந்து மிக விலகிவந்துவிட்டிருந்தனர். வீடு, குடும்பம் என்ற நினைவுகள் அகன்றுவிட்டிருந்தன. அந்த விடுதலையை அவர்கள் கொண்டாடினர்.

ஓரிரு நாட்களிலேயே அந்த இடம் பழகிவிட்டது. ஓர் இடம் இனிதாக இருக்கவேண்டும் என்றால் அது முற்றிலும் பழகியதாகவும் இருக்கக்கூடாது, முற்றிலும் புதிதாகவும் இருக்கக்கூடாது. பழகிய இடம் சலிப்பூட்டும், புதிய இடம் திகைப்பூட்டும். கண்டுபிடிக்க ஏதோ ஒன்று எஞ்சியிருக்கும் இடத்தில் அன்றாட வாழ்க்கை மட்டும் பழகிவிட்டதாக இருந்ததென்றால் அது ஒருவகை கனவுலகு. ஹம்பியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் எதையாவது புதிதாகச் சொன்னார்கள். புதிய சிலைகள், புதிய கோயில்கள், அபூர்வமாக பாம்புகள், ஒருமுறை ராஜநாகமே கூட. அவற்றைவிட பெரிய காட்சிகளை அனைவரும் கனவுகளில் கண்டனர்.

நான் மூன்று நாட்கள் ஹம்பியிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். முதலிரண்டுநாட்கள் இருந்த பரவசமும் நெஞ்சுக்கனமும் மூன்றாம் நாள் குறைந்துவிட்டது. ஹம்பியின் அதிகம் பேர் பார்க்காத இடங்களை போய்ப்பார்த்தேன். ஒரு கோயில் முக்கால்வாசி புதைந்து போயிருந்தது. அதை அகழ்ந்து எடுத்திருந்தனர். ஆகவே ஒரு குளத்திற்குள் அது இருந்தது. கற்சுவர்களில் தொற்றி சென்று கீழிறங்கி கோயிலுக்குள் நுழைந்து பார்த்தேன். உள்ளே இருளுக்குள் கரிய நீரின் பளபளப்பில் பாதிமூழ்கி நந்தி அமர்ந்திருந்தது. அங்கிருந்து கருவறை வரை கற்பரப்புகளில் நீரலைகளின் ஒளிநெளிவு தெரிந்தது.

நீரில் இறங்கலாமா என்று சிந்தனைசெய்தபோது சளசளவென்று நீந்திச்சென்ற மூன்று நீர்நாய்களைக் கண்டேன். நீர் அவற்றின் மென்மையான முடியை அழகாக சீவி விட்டிருந்தது. அவற்றை நான் முன்பு கண்டதில்லை. ஆகவே அஞ்சி விதிர்த்து மேலேறிவிட்டேன். அவை மெழுகால் செய்தவை போலிருந்தன. பெரிய எலிகள். எலிக்கண்கள், எலி மீசை. எலியின் அச்சம். அவை நீந்திச் சென்று மறைந்தபோது தொலைவில் சிவலிங்கம் ஒளியலையில் நெளிந்தது. நெடுநேரம் அங்கே நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மறுநாள் விரூபாக்ஷ சுவாமி கோயிலை இன்னொருமுறை பார்த்தேன். அங்கேதான் கோயில் இடிபடாமல் முழுமையாக இருந்தது. ஆனால் அதன் பிராகாரங்கள் ஓய்ந்து கிடந்தன. தரையெங்கும் பசைபோல வௌவால் எச்சம் மிதிபட்டது. தலைக்குமேல் பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் கண்கள் மின்ன கோழிக்குஞ்சுக் கூட்டம் போல கிளுகிளு ஓசையெழுப்பியபடி கூரைக்கல் பரப்பில் செறிந்திருந்தன. காலடியோசையில் சில வௌவால்கள் எழுந்து நீருக்குள் நீந்துவதுபோன்ற ஓசையுடன் சிறகடித்தன.

கோயிலுக்குள் ஓர் அறையில் ஒரு சிறுதுளை. அதன் எதிரிலிருந்த சுவரில் கோயிலின் கோபுரம் தலைகீழாகத் தெரியும். அங்கே நின்ற ஒரு தமிழகத் தொழிலாளி அதை எனக்கு காட்டினார். அந்த நிழலுருவமே எனக்கு விசித்திரமாக இருந்தது. ஏன் கோபுரத்தை தலைகீழாகப் பார்க்க ஆசைப்பட்டார் அந்தச் சிற்பி? அரசர் அதை விரும்பியிருப்பாரா? அவரே கட்டிய மாபெரும் கோபுரம் அது. இன்றும் ஏன் அதை மக்கள் கண்டு மகிழ்கின்றனர்?

அது ஒரு வகை சினிமாவா என்ன? நிழல்களில் எப்போதுமே மக்கள் திகைப்பும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். பொருட்கள் தன்னிடமிருந்து காட்சியுருக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. தன்னை வெவ்வேறு வகையாக காட்டி நடித்து விளையாடுகின்றன. அல்லது அவை அப்பொருட்களின் இன்மையின் வடிவங்கள். சினிமாவை என் அம்மா வெறுத்தார். நிழலாட்டம் என்று சொல்வார். அவர் ஒரே ஒரு சினிமாவை அரைமணிநேரம்தான் பார்த்தார்.

விரூபாக்ஷர் ஆலயத்தின் முன் இருந்த நீண்ட தெரு மிகப்பழமையானது. முழுக்க முழுக்க கல்மண்டபங்கள். அவையெல்லாம் அப்படியே இடிந்து சரிந்து நின்றன. அவற்றை தொழிலாளர்கள் கைப்பற்றி கை போனபடி கற்களும் செங்கல்லும் சாக்குப் படுதாவும் வைத்து மூடி வீடாக்கிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் இருளில் சிற்பங்கள் வெறித்த கண்களுடன் நின்றிருந்தன. சிற்பங்கள் வாசற் படிகளாக போடப்பட்டிருந்தன். சிற்பங்களின் உடைசல்கள் சாலையோரமாக குவிந்துகிடந்தன. சிற்பம் மீண்டும் கல்லாக மாறமுயன்றது, ஆனால் எத்தனை உடைந்தாலும் அது கல்லாகி விடுவதில்லை.

ஒரு டீக்கடையில் டீ குடித்தேன். அங்கே பெஞ்சாகப் போடப்பட்டிருந்தது ஒரு வீரபத்ரர் சிலை. என் பரவசம் முழுக்க வடிந்துவிட்டது. சோர்வு களைப்பாக மாறி உடலை அழுத்தியது. ஏன் அந்தச் சோர்வு என்று என்னையே கேட்டுக்கொண்டேன். உடற்களைப்பு அல்ல. உண்மையில் உடற்களைப்பு உள்ளத்தை ஊக்கப்படுத்துவது. அது உள்ளக் களைப்பு. ஆனால் நான் உளச்சோர்வூட்டும் எதையும் அடையவில்லை. அந்த இடிபாடுகளைத்தான் பார்த்தேன். அவற்றில் இருந்த சாவைப் பார்த்தேன்.

அந்த நிழலாட்டம். அது கடந்தகாலமாக, சாவின் வடிவாக ஆகிவிட்டிருந்த கோபுரத்தின் உயிருள்ள தோற்றம். நிழல்தான், ஆனால் அசைவது நெளிவது, தோன்றி மறைவது, ஆகவே உயிருள்ளது. அனிமேஷன் என்று எங்கள் எடிட்டிங் துறை ஆட்கள் சொல்வார்கள். அனிமா என்றால் அசைவது. உயிர், விலங்கு. நாங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பது உயிரை. செத்த ஹம்பியில் இருந்து உயிருள்ள விஜயநகரை.

நேராகச் சென்று துங்கபத்ராவில் இறங்கினேன். குளிர்ந்த நீர் என்னை கொஞ்சம் அமைதியடையச் செய்தது. குளித்துவிட்டு மேலேறியபோதுதான் முதல்முறையாக நீண்ட நாட்களுக்குப்பின் ஸ்ரீபாலாவை நினைவுகூர்ந்தேன். என் மனம் இனிமை கொண்டது. என் உணர்வுகள் மெல்ல அடங்கின. அவளை நினைத்துக் கொண்டு நீரை பார்த்தபடி பாறைமேல் அமர்ந்திருந்தேன்.

திரும்பி கூடாரத்துக்கு வரும்போது நாகலிங்க ஆசாரி விசில் அடித்து அழைத்து கமலாப்பூர் திரும்புவதற்கான வண்டி கிளம்புவதாக சொன்னான். நான் ஓடிப்போய் அந்த லாரியில் ஏற்றிக்கொண்டேன்.

டிரைவரிடம்  “வண்டி எங்கே போகிறது?” என்று கேட்டேன்.

”ஹொஸ்பெட் போகவேண்டும் சார்… ரயிலிலே கொஞ்சம் பெண்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை கூட்டிவந்து விடவேண்டும்…”

”துணைநடிகர்களா?”

“ஆமாம். எல்லாம் கிழவிகள்… அதற்குமுன் இங்கிருந்து கொஞ்சபேரை கூட்டிக்கொண்டு சென்று ரயில் நிலையத்தில் விடவேண்டும். அவர்கள் ஊருக்குப் போகிறார்கள்…”

“ஏன்?”

“நல்ல காய்ச்சல்… இந்த வெயில் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.”

அப்போதும் நான் எதையும் எண்ணவில்லை. என்னுடைய பண்ணை வீட்டுக்கு போவதற்கான வழித்திருப்பத்தை அடைந்தபோது சட்டென்று தோன்றியது “நான் அங்கே வருகிறேன். அங்கே ஒரு சின்ன வேலை இருக்கிறது” என்றேன்.

சொன்னபின் என் மனம் படபடக்க ஆரம்பித்தது. என் முகம் சிவந்து கண்களில் நீர்ப்படலம் வந்துவிட்டது. டிரைவர் என்னை பார்த்திருந்தால் திகைத்திருப்பான்.

வண்டி அந்தப் பண்ணை வீட்டை அடைந்தது. அது நாலைந்து கிலோமீட்டர் தள்ளி இன்னும் சமநிலத்தில் இருந்தது. அங்கே புதிய கட்டிடங்கள் நாலைந்து இருந்தன. நான் லாரியில் இருந்து இறங்கிய பின்னர்தான் என்ன செய்வது என்று யோசித்தேன். எப்படி எவரிடம் சென்று கேட்பது?

ஆனால் அங்கே எவரும் எவரையும் கவனிக்கவில்லை. பண்ணை வீட்டில் ஆங்காங்கே கூடி அமர்ந்து வெற்றிலைபோட்டு துப்பிக்கொண்டிருந்தார்கள். நிழல்களில் அமர்ந்து சீட்டாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். அங்கே அவர்கள் அடைந்த நிம்மதியை, உல்லாசத்தை அவர்கள் அடைந்து நெடுங்காலமாகியிருக்கவேண்டும். ஏனென்றால் அங்கே எவருக்கும் குடும்பம் உடனில்லை.

பெண்களின் தங்குமிடம் சற்று தள்ளி இருந்தது. அங்கே செல்லவேண்டும். ஆனால் அதற்கொரு காரணம் வேண்டும். தைரியமாகச் செல்லலாம், அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் நான் தயங்கி குழம்பி அலைந்துகொண்டிருந்தேன். எவரிடமும் எதையும் கேட்கவேண்டுமென்று தோன்றவில்லை. தைரியம் வரவில்லை என்று சொல்லவேண்டும். திரும்பி விடலாமென்று எண்ணினேன். ஆனால் என்னால் என்னை திருப்பிக்கொள்ளவும் முடியவில்லை.

என்னை அவள் தோழி பார்த்துவிட்டாள். “ராவுகாரு, இங்கே ஏன் நிற்கிறீர்கள்?” என்றாள்.

“சும்மாதான்” என்றேன்.

அவள் சட்டென்று புன்னகைத்து “விஜி இங்கேதான் இருந்தாள்… இருங்கள் பார்க்கிறேன்” என்றாள்.

“யார்?” என்றேன்.

”விஜி, விஜயலட்சுமி… ஸ்ரீபாலா என்பது அவள் சினிமாப்பெயர்தான்.”

“ஆமாம், முன்பு சொன்னாய்” என்றேன் “நான் சும்மா இந்தப்பக்கமாக வந்தேன்.”

அவள் அதற்குள் சென்றுவிட்டாள். நான் திரும்பிச் செல்லலாமா என்று யோசித்தேன். ஒரு துணைநடிகையை தேடி வந்திருக்கிறேன். என் மாமாவுக்கு தெரிந்தால் அப்படியே செருப்பைக் கழற்றிவிடுவார்.

ஆனால் அங்கேயே நின்றிருந்தேன். சற்றுநேரத்தில்  அவள் தோழியுடன் வருவதைக் கண்டேன். திரும்பி ஓடிவிடுவது போல ஓர் அசைவு என் உடலில் வந்தது. என் நெஞ்சு படபடத்தது. உடலெங்கும் குளிர்ந்த வியர்வை எழுந்தது. அப்போதுதான் அவளிடம் சொல்வதற்கு என்று எதையும் யோசிக்கவில்லை என்பது ஞாபகம் வந்தது. ஏன் பார்க்கவந்தேன் என்று என்ன சொல்வது?

அதற்குள் அவர்கள் அருகே வந்துவிட்டார்கள்.

“ராவுகாரு உன்னை விசாரித்தார்” என்று தோழி சொன்னாள்.

நான் மறுப்பதுபோல அசைந்தேன். ஆனால் அந்த அசைவு என் உடலில் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. இல்லை நான் விசாரிக்கவில்லை. நான் வேறு வேலையாக வந்தேன். ஆனால் நான் அதையும் சொல்லவில்லை.

அவள் என்னைப் பார்த்து மிகக்கொஞ்சமாக புன்னகை செய்தாள். நான் புன்னகை போல உதட்டை சுழித்தேன். என் கைவிரல்கள் வியர்வையில் நனைந்துவிட்டன. உள்ளங்காலே வியர்த்து நிற்கமுடியாமலாகியது.

“பேசிக்கொண்டிருங்கள்” என்று தோழி விலகிச் சென்றாள்.

அவள் வெறுமே என்னை பார்த்துக்கொண்டு நின்றாள், ’சரி சொல்’ என்பதுபோல. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மெல்ல கனைத்தேன். அவள் திரும்பி மிக அப்பால் நின்ற தோழியை பார்த்தாள். அவள் திரும்பிய கழுத்தசைவு மெல்லிய சிறிய பறவைபோல அவளைக் காட்டியது. அவள் கழுத்து நீளமானது, மெல்லியது, மாநிறமான மெருகு கொண்டது. அதில் பாசிமணிமாலை நலுங்கியது.

“இங்கே எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா?” என்றேன். என் குரல் உடைந்ததாக இல்லை என்பது ஆறுதலளித்தது.

அவள் பொதுவாகத் தலையசைத்தாள்.

அது அபத்தமான கேள்வி என்று எனக்கு தோன்றியது. நான் அந்த இடத்துக்கு பொறுப்பில்லை. அவளுக்கும் பொறுப்பில்லை.

அதற்குள் பேசவேண்டியதை கண்டுபிடித்தேன். “இங்கே ஒருவரை பார்க்க வந்தேன். அப்போதுதான் அவரைப் பார்த்தேன். உங்களுக்கு சரிகைக்கு அடியில் துணிவைத்து தைத்த ஆடை வேண்டும் அல்லவா?”

“ஆமாம்” என்றாள்.

“அதை நான் தனியாக கொடுத்து அனுப்புகிறேன்.”

“அய்யோ வேண்டாம், எவராவது பார்த்தால் வம்பு.”

“இல்லாவிட்டால் வழக்கம்போல நீலரிப்பனில் கட்டி போடுகிறேன்”

“ஒரே ஒரு ஆடையை அப்படி போடவேண்டாம், நாலைந்து போட்டால்தான் எனக்கு கிடைக்கிறது.”

“சரி, போடுகிறேன்” என்றேன்.

அத்தோடு பேசுவதற்கு ஏதுமில்லாமல் ஆகிவிட்டது. அங்கேயே வேறெங்கோ பார்த்தபடி, உடலால் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி நின்றுகொண்டிருந்தோம். காற்று கடந்து சென்றது. ஒரு சருகு உதிர்ந்தது.

அவள் மீண்டும் தோழியைத் திரும்பிப் பார்த்தாள். அந்த அசைவில் என் உள்ளம் திடுக்கிட்டு படபடத்தது. எத்தனை அழகிய அசைவு. அவள் கழுத்தின் கன்னங்களின் தோளின் தளிர் போன்ற மென்மையை விடாய்கொண்டவனாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கன்னங்களில் இரண்டு சிறிய புதுப்பருக்கள் முளைத்திருந்தன. அந்த மேலுதட்டின் மென்மயிர்.

அவள் திரும்பி “நேரமாகிறது… நான் வருகிறேன்” என்றாள். இயல்பான அசைவால் நெற்றிமயிரை ஒதுக்கினாள். மீண்டும் என் நெஞ்சில் அதிர்வு. தற்செயலாக கை வீணைக்கம்பிகள்மேல் பட்டதுபோல.

”சரி” என்று நான் சொன்னேன்.

அவள் திரும்பிச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் இயல்பாகவே நடனக்காரி. அவள் அசைவுகள் எல்லாமே அழகிய நடனங்கள். நடை ஒரு நடனம். இயல்பான நடனம். காற்றில் ஓர் இறகு மிதந்துசெல்வதுபோலச் சென்றாள்.

நான் அங்கிருந்து நடந்தே என் பண்ணைவீட்டுக்கு வந்தேன். வரும் வழியெல்லாம் புவ்வுல சூரிபாபு, அப்பூரி வரப்பிரசாத ராவ் பாடல்களை பாடிக்கொண்டே இருந்தேன். அந்தி கவிந்து இருட்டாகிவிட்டது. சாலையில் யாருமில்லை. கோடைகாலத்து முன்நிலவு. வெளிச்சம் நன்றாகவே மண்சாலையையும், இருமருங்கும் இருந்த மரங்களையும் துலக்கியது. நான் கைவீசி நடிப்புடன் எதையெதையோ பாடினேன்.

சட்டென்று நினைவுக்கு வந்தது அந்த பாட்டு. “ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யனா…” அந்த முகில் இந்த முகில், வான்நடுவினிலே.. இரு முகில்கள் இணைவதுபோல் இணைவோம். வானில் ஒரு மேகம், அதன் கீழே இன்னொன்று. நிலாவெளிச்சத்தில் மண்ணில் தெரிந்த எல்லா காட்சிகளுமே மேகத்தாலானவை போலிருந்தன. வானிலிருந்த மேகங்களும் மண்ணும் ஒன்றாகி ஒற்றைவெளியாகி நின்றிருந்தன. முக்கால்வடிவ நிலா வெண்ணிறச் சுடர்போல தெரிந்தது.

அந்தப்பாடலை பாடிக்கொண்டே சென்றுசேர்ந்தேன். இரவு சாப்பிடவில்லை. எனக்கான சாப்பாடு மூடிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை எடுத்துச் சாப்பிடுவது உலகியல்சார்ந்த செயலாக, கீழானதாகத் தோன்றியது. “அந்த முகில் இந்த முகில் ஆகாய நடுவினிலே”. நிலவொளி ஊறி சொட்டி நின்ற மேகங்களைப் பார்த்தபடி இரவெல்லாம் அமர்ந்திருந்தேன்.

மேலும்

முந்தைய கட்டுரைஅம்பேத்கர் நினைவுப்பேருரை
அடுத்த கட்டுரைகல்வி நிலையங்களில் சாதி