[ 1 ]
ஸ்ரீராஜவிஜயேஸ்வரி என்று ஒரு தெலுங்கு படம். 1951ல் அது வெளியான காலகட்டத்தில் ஒரு சராசரி வெற்றிப்படம். ஏனென்றால் அதன் பட்ஜெட்டுக்கு அது மும்மடங்கு வசூல் செய்திருக்கவேண்டும். அதோடு அது அன்றைய மற்ற பெரிய தெலுங்குப் படங்களைப்போல தமிழில் டப் செய்யப்படவுமில்லை. நஷ்டம் வராமல் தப்பித்தது.
ஆனால் பின்னர் அது ஒரு கல்ட் கிளாஸிக் தகுதியை அடைந்தது. இந்தியாவின் மிகச்சிறந்த நூறு படங்களின் பட்டியலில் அந்தப்படத்தை அடிக்கடிச் சேர்ப்பார்கள். அழியாவரம் பெற்ற பாடல்கள், திரைக்கதை ஒருமை, மிதமான நடிப்பு ஆகிய அனைத்துக்கும் மேலாக வெளிப்புறப் படப்பிடிப்பில் அது அன்று ஒரு சாதனையாக கருதப்பட்டது.
கறுப்புவெள்ளைப் படம் அது. என்.டி.ராமராவ் நடித்திருந்தார். இளமையான, பெரிய குரல்வளை கொண்ட, அழகான என்.டி.ஆர். நுரைபோன்ற சுருட்டை முடியுடன் குண்டுச் சின்னப் பெண்ணான பானுமதி அவருக்கு ஜோடி. எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில் கண்டசாலா இசையமைத்த பதிமூன்று பாட்டுக்கள். பின்னர் மிகப்பிரபலமாகி அதே சாயலில் பல பாடல்களை உருவாக்கின.
ஆகவே அந்தப்படம் தலைமுறை தலைமுறையாக பார்க்கப்பட்டது. அடுத்தடுத்த ரிலீஸ்களில் வெற்றிபெற்றுக்கொண்டே இருந்தது. எங்கோ ஏதோ தியேட்டரில் அதன் எல்லா பிரிண்டுகளும் ஓடிக்கொண்டேதான் இருந்தன. டிவி வந்ததும் அது மீண்டும் புகழ்பெற்றது. யூடியூபிலும் இருக்கிறது. யார் யாரோ அதற்கு உணர்ச்சிகரமாக பின்னூட்டமெல்லாம் போடுகிறார்கள். பலர் இப்போது வயோதிகர்கள். அவர்களுக்கு அந்தப் படம் அவர்களின் இனிமையான இறந்தகாலத்தில் ஜொலித்த ஒரு நட்சத்திரம் போல.
அது ஒரு காதல்கதை. சரித்திரப்பின்னணி கொண்டது. விஜயேஸ்வரி ஒரு சாதாரணப் பெண். அவளை முறைப்பையன் நல்லமராஜு காதலிக்கிறான். அன்று ஒருவழக்கம் இருக்கிறது, ஒரு பெண் எல்லா இலக்கணங்களும் ஒத்து அமைந்தவள், அரச ஜாதகமும் உள்ளவள் என்றால் அவளை அரண்மனைக்கு ராணியாக கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள். அவளை வேறு அரசர்கள் மணந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கைதான் ஒரு காரணம். அவள் வழியாக அரசகுடியில் தகுதியான குழந்தைகள் பிறக்கவேண்டும் என்பது இன்னொரு காரணம்.
அந்தப்பெண்ணைப் பற்றிய செய்தி பரவினால் அவள் வீட்டுக்கு ஒரு பல்லக்கு நிறைய நகைகளும் பட்டும் வரும். அதை பெண்ணின் பெற்றோர் எடுத்துக்கொண்டு அந்தப் பல்லக்கில் பெண்ணை ஏற்றி அனுப்பிவிடவேண்டும். அதற்கு ராணிவாசம் என்று பெயர். அதன்பின் அவளை அவர்கள் பார்க்கமுடியாது. அவள் அரண்மனையில் வாழ்வாள். அது அந்தப்பெண்ணுக்கும் அவள் குடும்பத்திற்கும் மிகப்பெரிய கௌரவம், அதிருஷ்டம். அந்தக் குடும்பம் அந்த ஜாதிக்கு தலைமை வகிக்க முடியும். ஆட்சி செய்ய நிலம்கூடக் கிடைக்கும்.
விஜயேஸ்வரியின் ஜாதகம் அப்படிப்பட்டது. எல்லா லக்கினங்களும் அவளை அரசி என்றே காட்டின. அவள் சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தியவள். ஆகவே அவளை விஜயநகரத்து அரசர் கிருஷ்ணதேவராயரின் அரண்மனைக்கு கூட்டிச்சென்று விடுகிறார்கள். அவள் பெற்றோர் அதில் பெருமிதம் அடைகிறார்கள். சகோதரர்கள் கொண்டாடுகிறார்கள். அவள் ஜாதியே களியாட்டமிடுகிறது.
ஆனால் நல்லமராஜு தன் காதலியை விட முடியாமல் தவிக்கிறான். கடைசியில் அவளை தேடிச்செல்கிறான். விஜயநகரத்திற்குள் நுழையவே முடியவில்லை. ஆகவே ஒரு சிற்பக்குழுவில் சேர்கிறான். நன்றாக புல்லாங்குழல் வாசிக்கும் அவனை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடன் நகரத்திற்குள் செல்கிறான். தந்திரமாகக் கட்டுக்காவல்களை மீறிச்சென்று அரண்மனையில் சிறையிருக்கும் அவளைச் சந்திக்கிறான்.
அவளும் அவன்மேல் பைத்தியமாக இருக்கிறாள். அரசபோகத்தை அவள் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இரவுகளில் அவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். பிடிபடும் அபாயம் இருந்தும் அவர்களால் சந்திக்காமலிருக்க முடியவில்லை. அங்கிருந்து அவளை அழைத்துச்செல்ல நல்லமராஜு முயல்கிறான். ஆனால் தப்பி ஓடும்போது காவலர்களிடம் பிடிபட்டு தூக்கில் தொங்கவிருக்கிறான். ஏற்பாடுகள் நடக்கின்றன.
தன் பட்டத்தரசி வழியாக அச்செய்தியை அறிந்த கிருஷ்ண தேவராயருக்கு ஆச்சரியம். ஒரு பெண் ஏன் அரசிப்பட்டத்தை துறந்து ஓடவேண்டும்? அவளை விசாரிக்கிறார். அவளுக்கு அரசிப்பட்டம், சுகபோகங்கள் எதுவுமே தேவையில்லை. அவன் மட்டும் போதும். அவனுடன் அவளையும் கொல்ல ஆணையிடுகிறார். அரசியாக வாழ்வதை விட அவனுடன் சாவதையே அவள் தேர்வுசெய்கிறாள். அவர்களின் மெய்க்காதலை உணர்ந்த கிருஷ்ணதேவராயர் அவனை விடுவிக்கிறார். அவளை அவனுக்கு அவரே திருமணம் செய்துவைத்து சீர் செய்து அனுப்பிவைக்கிறார்.
அது எனக்கு முக்கியமான படம். ஏனென்றால் அந்தப் படத்துடன் என்னுடைய சினிமா வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. ஆனால் நான் சினிமாவில் தையல்காரனாகத்தான் இருந்தேன். சினிமாவை விட்டுவந்தபிறகு இன்னும் நன்றாகத்தான் வாழ்க்கை அமைந்தது. குண்டூரில் ஒரு தையல்கடை வைத்தேன். சப்தகிரி டெய்லர்ஸ் ஒரு காலத்தில் குண்டூரில் சூட் தைத்துக்கொள்வதற்கு இருந்த ஒரே கடை என்னுடையதுதான். என்னுடைய ‘கர்வ்ஸ்’ அழகாக கச்சிதமாக இருக்கும்.
ஊரிலேயே சொந்தத்தில் வீடு வாங்கினேன். இரண்டு பிள்ளைகளை படிக்கவைத்து ஒரு பெண்ணை கட்டிக்கொடுத்தேன். பெண்ணுக்கும் ஒரு வீடு வாங்கிக்கொடுத்தேன். பையன்களுக்கும் பெண்ணுக்குமே இப்போது வயது ஐம்பது தாண்டிவிட்டது. மனைவி மறைந்து விட்டாள். நான் மகளுடன் குண்டூரிலேயே இருக்கிறேன். இன்று என் சினிமாக் காலகட்டம் இளம் வயதில் நான் கண்டு மறந்த ஒரு கனவுபோல. அது கனவாகவே நீடிக்க ஒரு காரணம், நான் ஐம்பதுகளுக்குப்பின் புதிய படம் என எதையுமே பார்த்ததில்லை. நான் பார்த்த கடைசிப்படமும் ஸ்ரீராஜவிஜயேஸ்வரிதான்.
ஐம்பதுகளில் என் தாய்மாமா ராவுரி சுப்பா ராவ் சினிமாவில் இருந்தார். சென்னையில் தையல்கடை வைத்திருந்தவர் சினிமாவுக்கு துணி தைக்க ஆரம்பித்து அதையே முழுநேரத் தொழிலாக ஆக்கிக்கொண்டார். நான் அவருக்கு உதவியாக என் அம்மாவால் அனுப்பப்பட்டேன். தையல் கற்றுக்கொண்டேன், கணக்குவழக்குகளும் பார்ப்பேன். தாய்மாமா வழியாக நானும் சினிமாவுக்குள் நுழைந்தேன். மூன்று படங்களில் என் பெயர் தையற்கலை உதவியாளர்களின் பட்டியலில் முதலாவதாக மோட்டூரி ராமராவ் என்று கறுப்புவெள்ளையில் நடுங்கியபடி மின்னிச்செல்லும்.
நான் சினிமாவில் நுழைந்தபோது எனக்கு பதிமூன்று வயது. ஏழுவருடம் மூன்று படங்களில் வேலை பார்த்து நான்காவதாக ஸ்ரீராஜவிஜயேஸ்வரியில் வேலை பார்க்கும்போது எனக்கு இருபது வயது. மீசை பட்டுபோல இருக்கும். குரல் பெண்மைச் சாயல் கொண்டது. என்.டி.ஆர் போல பெரிய குரல்வளையுடன் நெட்டையாக, சிவப்பாக இருப்பேன். கண்டசாலாவின் பாடல்களை உருக்கமாகப் பாடுவேன். அது பானுமதி பாடுவது போல் இருப்பதாக நண்பர்கள் கேலி செய்வார்கள்.
எனக்கு அப்போது சினிமா பற்றிய பெரிய பிரேமை எல்லாம் இல்லை. அன்று சினிமா அந்த அளவுக்கு பெரிய பித்தாக ஆகியிருக்கவில்லை. மற்ற பலரையும் போல கொஞ்சம் சலிப்பூட்டும் பொம்மலாட்டமாகவே அது எனக்கு தோன்றியது. புவ்வுல சூரிபாபு, அப்பூரி வரப்பிரசாத ராவ் போல பெரிய நாடக நடிகனாகவும் பாடகனாகவும் ஆகிவிடவேண்டும் என்றுதான் ரகசியமாகக் கனவுகண்டேன். அன்று அவர்கள் ஆந்திராவில் சினிமா நடிகர்களைவிட பெரிய ஆட்கள்.
என் தாய்மாமாவுக்கு பெரிய இசையார்வம் இல்லை என்றாலும் ஒரு கௌரவத்திற்காக கிராமஃபோனும் எல்பி ரெக்கார்டுகளும் வாங்கி வைத்திருந்தார். அதில் பெரும்பகுதி நாடகப்பாடல்கள்தான். நான் அக்கால நாடகப்பாடல்களை கேட்டுக்கேட்டு மனப்பாடம் செய்திருந்தேன். பாடியபடியேதான் தையல் இயந்திரத்தை ஓட்டுவேன். நிறைய ஆளிருந்தால் மனதுக்குள் பாடிக்கொள்வேன். ஆனால் தையல் பெரும்பாலும் தனிமையில் செய்யவேண்டிய வேலை.
ஆகவே எனக்கு எங்கள் சினிமாவில் நடிக்க வந்த என்.டி.ராமராவ் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவரைப்போன்ற ரெட்டிப்பையன்கள் எங்களூரில் அங்குமிங்கும் அலைவார்கள். பானுமதி கொழுத்த சிறுமியாகத் தெரிந்தாள். அதோடு அந்தப் படத்துக்கு ராஜேஸ்வர ராவ் அமைத்த பாடல்கள் எல்லாமே எனக்கு வெறும் இங்கிலீஷ் பியானோ மெட்டுகளாக அன்று தோன்றின. பொதுவாகவே அந்த சினிமாவில் எனக்கு ஈடுபாடே வரவில்லை.
அன்று சினிமாவில் வேலைபார்த்த பலருக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது. ஏனென்றால் அன்றைய சினிமா அப்படி. மலைகளில் வாழும் உயிர்கள் மலையையே பார்த்திருப்பதில்லை அல்லவா? அன்று படங்களை பெரிய படநிறுவனங்கள்தான் எடுத்தன. சினிமாவில் வேலைபார்த்தவர்கள் அந்த ஸ்டுடியோவின் ஊழியர்கள் அவ்வளவுதான். ஒவ்வொருநாளும் நேரத்துக்கு வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை விரும்பியோ விரும்பாமலோ செய்து மாதச்சம்பளம் வாங்கிச் செல்வார்கள். பல ஸ்டுடியோக்களில் கதாசிரியர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனைக்காரர் எல்லாருமே முழுநேர ஊழியர்கள். சில ஸ்டுடியோக்களில் ஒளிப்பதிவாளரே அப்படித்தான்.
எங்கள் மோகினி ஸ்டுடியோ என்பது ஒரு குட்டி அரசாங்கம் போல. ஒவ்வொரு பிரிவும் மேலும் மேலும் பிரிந்து சென்றுகொண்டே இருக்கும். ஸ்டுடியோ ஓர் எறும்புப்புற்று போல தோன்றும். எறும்புகள் என்ன செய்கின்றன என்றே தெரியாது, ஆனால் எல்லா எறும்பும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும். சில எறும்புகள் வெளியே ஓட சில எறும்புகள் உள்ளே வரும். படப்பிடிப்பு உள்ள நாட்களில் கலைக்கப்பட்ட எறும்புப்புற்றாக ஆகிவிடும்.
அங்கே எல்லாருமே அந்நியர்கள்தான். பல ஆண்டுகளாக வேலைபார்ப்பவர்கள்கூட. பாதி முகங்கள் தெரிந்தவையாக இருக்கும், ஆனால் அறிமுகமானவர்கள் ஓரிருவர்தான் இருப்பார்கள். செட் அமைப்பது, ஒளி அமைப்பது, ஒப்பனை, ஆடை அலங்காரங்கள், சாப்பாடு ஏற்பாடுகள், வாகன ஏற்பாடுகள், துணைநடிகர்கள் என்று குறைந்தது ஐநூறுபேர் ஒவ்வொருநாளும் வேலைசெய்வார்கள். நிறையபேர் வேலைசெய்ய வேண்டும் என்றால் அவர்களை வேலைசெய்யவைக்க மேலும் நிறையபேர் வேலைசெய்யவேண்டும்.
என் தாய்மாமா மோகினியில் நிரந்தர ஊழியர் போல. மாதச்சம்பளம் இல்லை, தையல்வேலையை குத்தகைக்கு எடுத்தவர் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். எங்கள் குழுவில் நாற்பது முதல் நூறு பேர் வரை வேலைபார்த்தனர். ஸ்டுடியோவின் பின்பக்கம் ஒரு பெரிய கொட்டகைதான் எங்கள் இடம். அங்கே மூன்று பெரிய அறைகள் துணிகளை வைத்து பூட்டுவதற்கு. கொட்டைகையில் ஐம்பது தையல் எந்திரங்கள் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும்.
நான் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கே போவதில்லை. ஸ்டுடியோவின்பின்பக்கம் வழியாக நேராக தையல்கொட்டகைக்குப் போகமுடியும். என் கையில்தான் ஓர் அறையின் சாவி இருந்தது. நிறைய நாட்களில் இரவிலும் அங்கேயே தங்கவேண்டியிருக்கும். இளமையில்தான் நாம் அப்படி தீனியிலேயே வாழும் புழு போல ஒரு வேலையில் மூழ்கிக்கிடப்போம். எனக்கு அன்றெல்லாம் வேறொரு வெளியுலகம் இல்லை. நான் சென்னப்பட்டினத்தையே சரியாகப் பார்த்ததில்லை.
தையல் பகுதி வேறொரு உலகம். அது ஒரு ஸ்டுடியோவின் பகுதி என்றே தோன்றாது. உண்மையில் அதெல்லாம் அங்கிருப்பவர்களுக்கே தெரியாது. அவர்களில் பலருக்கு என்ன தைக்கிறோம் என்றே தெரியாது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்வார்கள். அது ஒரு மாபெரும் திரைச்சீலையின் தொங்கட்டான்களாக இருக்கும். அந்த திரைச்சீலை எங்கே தொங்கப்போகிறதென்று தெரிந்துகொள்ளவே முடியாது. அந்த திரைச்சீலையையே முழுமையாக கற்பனை செய்து பார்க்க முடியாது.
என்னுடைய பொறுப்பில் இருந்தது துணைநடிகர்களின் ஆடைகள், பின்னணித் திரைச்சீலைகள் போன்றவை மட்டும்தான். பெரிய நடிகர் நடிகையரின் ஆடைகள் நல்லையா என்ற சீனியரின் பொறுப்பில் விடப்பட்டிருந்தன. நல்லையா மாமாவுக்கு நெருக்கமானவர். அவர் கிட்டத்தட்ட பார்ட்னர் போல. அவருடைய இடம் வேறு. அது நடிகர்கள் தங்கும் பங்களாவின் அருகிலேயே ஒரு தனிவீடு. அவருக்கு அங்கே ஏழு தையல்காரர்களும் பன்னிரண்டு உதவியாளர்களும் இருந்தார்கள்.
நான் ஸ்டுடியோவுக்குள் செல்வதே இல்லை. அங்கேதான் என்.டி.ராமராவும் பானுமதியும் கிருஷ்ணதேவராயராக நடித்த ஸ்ரீவத்சாவும் திருமலாதேவியாக நடித்த ஸ்ரீகுமாரியும் எல்லாம் வந்துசென்றார்கள். இயக்குநரும் தயாரிப்பாளருமான என்.என்.ரெட்டி வரும்போது அங்கே கேட்கும் ஓசையின் மாற்றத்திலேயே அது தெரியும். ஓர் அலை சுருண்டு பின்வாங்கி கடல் மிகத்தொலைவுக்கு நகர்ந்து சென்றுவிட்டதுபோல தோன்றும்.
என்.என்.ரெட்டி ஒரு பண்ணையார். கண்டிப்பான, திறமையான, அடிப்படையில் நல்லவரான பண்ணையார். அப்படிப்பட்ட பெரிய நிறுவனங்களை கட்டி எழுப்ப நல்லவர்களால்தான் முடியும். கெட்டவர்களுக்கு நல்ல இரண்டாவது அணி அமையாது. நம்பிக்கையான உள்வட்டமும் உருவாகாது. அவர்களாலும் எதையும் எவரிடமும் நம்பி விடமுடியாது. ரெட்டிகாருவின் தம்பிகள் இருவரும் அண்ணன்மேல் பெரிய பக்தி கொண்டவர்கள். ராமனுக்கு பரதனும் லட்சுமணனும் போலத்தான் இருப்பார்கள்.
தயாரிப்பு நிர்வாகத் துறையிலும், கலையமைப்பு துறையிலும் எனக்கு சில நண்பர்கள் இருந்தனர். தயாரிப்பு உதவியாளனாகிய நரசிங்க ரெட்டி என் ஊருக்கு பக்கத்து ஊர்தான். கலை உதவியாளனாகிய நாகலிங்க ஆசாரி தமிழ்நாட்டுக்காரர், ஆனால் தெலுங்கும் நன்றாகப் பேசுவார். அன்றெல்லாம் எல்லா சினிமாக்காரர்களும் தெலுங்கு பேசுவார்கள், பேசியாகவேண்டும். என்னை பார்ப்பவர்கள் இயல்பாகவே தெலுங்கில்தான் பேச ஆரம்பிப்பார்கள். பொதுவாக சினிமாவில் பெயரைக் கேட்பார்கள், அதிலேயே ஜாதியும் இருக்கும். நான் மோட்டூரி ராமராவ் என்றதுமே “ஓ மனவாடு” என்பார்கள்.
புதிய செட் அமைக்கப்பட்டால் நான் சென்று வேடிக்கை பார்ப்பேன். பெரும்பாலும் பின்னிரவில். அவ்வேளையிலும் ஆசாரிகளும் கொத்தனார்களும் குயவர்களும் அடங்கிய அந்தக்கூட்டம் வேலை செய்து கொண்டிருக்கும். கடைசியில் படப்பிடிப்புக்கு காமிராமேன் வந்து லைட் அமைக்கும்போது கூட வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்களின் வேலை முடிவதே இல்லை. ஒரு ஷாட் எடுத்து, அடுத்த ஷாட் வைப்பதற்குள் ஏதாவது திருத்தம் செய்ய பாய்ந்து வந்து இயக்குநரிடம் திட்டு வாங்குவார்கள். ஸ்வர்கசீமா படத்தை எடுத்தபோது படம் ரிலீசானபிறகுகூட செட்டில் திருத்தங்கள் செய்தார்கள் என்று ஒரு வேடிக்கைப்பேச்சு உண்டு.
ஸ்டுடியோவில் டீ, காபி எவ்வளவு வேண்டுமென்றாலும் கிடைக்கும். ஆனால் சிகரெட் பீடி பிடிக்கக்கூடாது, அங்கே பாதிப்பொருட்கள் காகிதக்கூழால் ஆனவை. சிகரெட் பிடிக்க வெளியே நடந்து நெடுந்தொலைவு போகவேண்டும். ஆகவே அங்கே எல்லாருமே வெற்றிலைவாயர்கள்தான். கால்வைக்கும் இடமெல்லாம் மணலோ மரத்தூளோ கொட்டப்பட்ட தகரடப்பாக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதைச்சுற்றியே துப்பி வைத்திருப்பார்கள். புதுப்பெயிண்ட்டின் பாரஃபின் மணமும், மரத்தூளின் அரக்குவாசனையும், துணிகளின் வாஷிங்சோடா மணமும், பிளாஸ்டர் ஆஃப் பாரீசின் சுண்ணாம்பு நெடியும் கடந்து பன்னீர்புகையிலை, வாசனைப்பாக்கு மணம் எழுந்துகொண்டிருக்கும்.
எப்போதாவது என்னை நரசிங்க ரெட்டி அழைத்து “இன்றைக்கு படப்பிடிப்பு பார்க்க வாடா” என்று கட்டாயப்படுத்துவான். அவன் அழைப்பதெல்லாம் நடனக்காட்சிகள் படம் பிடிக்கப்படும்போதுதான். நூற்றுக்கணக்கான நடனப் பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். நாங்கள் தைத்த இறுக்கமான ஜிகினா ஆடைகளை அணிந்திருப்பார்கள். பான்கேக்கால் உரசி அத்தனை பேரையும் செம்மண் சிலைகள் போல ஆக்கியிருப்பார்கள். எல்லையம்மன் கோயிலில் வரிசையாக இருக்கும் சிலைகள் போல கண்ணைப்பறிக்கும் வண்ணங்களுடன் அமர்ந்திருப்பார்கள்.
கறுப்பு – வெள்ளை படமாகையால் வண்ணங்கள் துலக்கமாக மாறுபட்டு தெரியவேண்டும். நாங்கள் தையல் இலாகாவில் வண்ணங்களை ‘காண்டிராஸ்ட்’ என்றே சொல்வோம். “ஈரோயினிக்கு என்ன காண்டிராஸ்டு?” என்றுதான் மாமா கேட்பார். மஞ்சளும் நீலமும், சிவப்பும் கறுப்பும் என பட்டைகளும் பூக்களுமாக ஆடைகள் கண்ணில் அறையும். ஒருத்தியை பார்த்துவிட்டு கண்ணைமூடினாலும் அரைக்கணத்துக்குமேல் கண்ணுக்குள் எஞ்சுவாள்.
வளைத்து வரையப்பட்ட பெரிய புருவங்கள். கன்னத்தில் நீட்டி விடப்பட்ட கன்னங்கரிய கண்மைத் தீற்றல். ரத்தச்சிவப்பு உதடுகள். மார்புகளை பஞ்சுவைத்து பெரிதாக்கி இறுக்கமாக தூக்கி கட்டி இரு செம்புகள் போல ஆக்கி வைத்திருப்பார்கள். இடுப்புத் தசைகளும் பிதுங்கித்தெரியும். அந்தப்பெண்கள் எல்லாம் வேறுவேறு நிறமும் உருவமும் கொண்டவர்கள். ஆனால் அந்த ஒப்பனையில் பெரும்பாலும் அனைவருமே ஒரேமாதிரி இருப்பார்கள். அவர்களின் இயல்புகளும் ஒன்றுதான். சின்னப்பெண்கள் பேச்சு, சிரிப்பு, கிண்டல் என்று இருப்பார்கள். கொஞ்சம் முதிர்ந்தவர்கள் அரைத்தூக்கத்தில் இமைசொக்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் வாய் வழிவதும்கூட உண்டு.
அவர்களுக்கு உடல் பற்றிய சுரணை என்பதே இருக்காது. பெரும்பாலும் ஆந்திராவின் சிற்றூர்களில் பிறந்து, சென்னப்பட்டினத்தின் சேரிகளுக்கு வந்து, எங்கெங்கோ என்னென்னவோ அடிபட்டு, இழப்பதற்கு என்று எதுவும் இல்லாமல் இங்கே வந்து சேர்ந்தவர்கள். அவர்களின் மார்பகங்களை ஒப்பனைக்காரர் அலட்சியமாக கையால் அள்ளி எடுத்து பிதுக்கி அலுமினியக் கச்சுகளுக்குள் வைத்து இறுக்கி கட்டும்போது அதை அறியாமல் அருகிலிருப்பவர்களிடம் பேசிச்சிரிப்பார்கள். அவ்வழியே செல்பவர்களிடம் நையாண்டியாகப் பேசுவார்கள்.
அவர்களிடம் எவரும் உடலுறவு சம்பந்தமாக அல்லாமல் எதையுமே பேசமாட்டார்கள். ஒப்பனைக்காரர் முதல் டீ கொண்டுவருபவர் வரை ஆபாசமாக மட்டும்தான் பேசுவார்கள். அதை எதிர்கொள்ள ஒரே வழி அவர்களும் ஆபாசமாக பேசுவதுதான். நடன இயக்குநர் சிவருத்ரப்பா சின்னவயதிலேயே பரதம் ஆடி ஆடி பெண்மைச்சாயல் கொண்டவர். நடனம் சொல்லிக் கொடுக்கும்போது “ஏண்டி தேவ்டியாளுங்களா, நல்லா தூக்கி ஆட்டுங்கடீ” என்றுதான் பேசுவார். ஆனால் வசைபாடமாட்டார்.
அவருடைய உதவியாளர்கள் கடுமையானவர்கள். குறிப்பாக கொஞ்சம் மூத்த பெண் நடன உதவியாளர்கள். அவர்கள் பழைய நடனக்கலைஞர்கள். ஒத்திகையில் முதுகை முறித்து விடுவார்கள். கையில் நீண்ட பிரம்பு இருக்கும். தப்பாகச் செய்பவர்களுக்கு சுளீர் சுளீர் என அடி கிடைக்கும். தவறாக தூக்கிய கையிலேயே அடி விழும். அவர்களெல்லாம் அத்தனை அனுபவசாலிகள். ஆனாலும் தவறு நடந்துகொண்டேதான் இருக்கும். அடிக்கும் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். “அரைமணி நேரம் தட்டு தூக்குறதுக்குள்ள கனக்குதாக்கும்? ராத்திரியிலே எத்தனை வெயிட்டு தூக்குறே? கஸ்மாலம்!” எத்தனை வசையானாலும் சிரிப்பார்கள். மீண்டும் பிழையே செய்வார்கள்.
அது ஏன் என்று நான் யோசித்திருக்கிறேன். அவர்கள் வேண்டுமென்றே தவறுசெய்கிறார்கள் என்று நரசிங்க ராவ் என்னிடம் சொன்னான். அவர்கள் சிவருத்ரப்பாவை பழிவாங்குகிறார்கள், ஸ்டுடியோவில் உள்ள அனைவரையும் பழிவாங்குகிறார்கள் என்பான். ஆனால் உண்மை அது அல்ல. அடிவாங்கிய பெண்கள் அழுவதை கண்டிருக்கிறேன். தனியாக அமர்ந்து அழும் பெண்களைக்கூட கண்டிருக்கிறேன். அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. அவர்களுக்கு இந்த அமைப்பு மேல் ஒரு கசப்பு இருக்கிறது. அதை நையாண்டியாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அது அவர்களுக்குள் இருப்பதனால் ஆட்டத்தில் அவர்களை மீறி வெளிவந்துவிடுகிறது.
அது அங்குள்ள அனைவரிடமும் உண்டு. அவ்வளவுபெரிய ஸ்டுடியோவில், எல்லாமே அவ்வளவு கச்சிதமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படும் இடத்தில், எண்ணிக்கையில் வேலை செய்பவர்களுக்கு சமானமாகவே மேஸ்திரிகளும் மேலதிகாரிகளும் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் தவறுகள் நடந்துகொண்டே இருக்கும். அற்பமான பிழைகள், அபத்தமான பிழைகள். ஒருமுறை படப்பிடிப்பு நடக்கும்போது ராயரின் அரசமாளிகையில் ஒரு மூலையில் இருந்த இருக்கைக்கு பின்னால் நஞ்சங்கோடு பல்பொடி விளம்பரத்துடன் ஒரு மஞ்சள்பை தொங்கிக்கொண்டிருந்தது. அதை இயக்குநரே கடைசிநேரத்தில் கண்டுபிடித்து தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார். அத்தனை பெரிய அமைப்பின்மேல் அதன் ஒருபகுதியாக இருக்கும் சாமானியனின் எதிர்ப்பு அது.
நடன ஒத்திகையும் நடனப்படப்பிடிப்பும் ஒரேமாதிரித்தான் இருக்கும். ஒரே அசைவை திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு பட்டுப்புடவையை நூல்நூலாக பிரித்துப் போடுவதுபோல என்று நாகலிங்க ஆசாரி ஒருமுறை சொன்னான். பார்க்கப் பார்க்க சலிப்பும் எரிச்சலும்தான் வரும். ஒருவழியாக எல்லாரும் மிகச்சரியாக அந்த அசைவை செய்தால் காமிராமேன் இன்னொரு ஷாட் கேட்பார். அல்லது லைட் தவறாக ஆகிவிடும். இயக்குநரே ஏதாவது தவறு கண்டுபிடிப்பார்.
அந்த நடனக்கூட்டத்தில்தான் ஸ்ரீபாலாவை முதல்முறையாகப் பார்த்தேன். அப்போது என் வாழ்க்கையில் அத்தனை முக்கியமான இடம் அவளுக்கு இருக்கும் என நான் அறிந்திருந்தேனா? பிறகு அந்த தருணத்தை நினைத்துப் பார்க்கையில் எல்லாம் அப்படி எதையாவது இணைத்து அர்த்தம் அளித்துக்கொண்டேன். உண்மையில் நாம் அப்படி அறிவதில்லை. எந்த சிறு குறிப்பும் தெய்வம் அளிப்பதில்லை. நான் அவளை சாதாரணமாகத்தான் பார்த்தேன். நினைவுகூர்ந்து சொல்லவேண்டும் என்றால் அவள் மிக அழகாக இருப்பதாகவும், கதாநாயகியாகவே நடிக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டேன்.
[மேலும்]