வெண்முரசு,வாசகனின் இடம்

அன்புள்ள ஜெ,

வெண்முரசு பற்றிய நல்ல அறிமுகக்குறிப்புகள் தொடர்ச்சியாக கடிதங்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. எனக்கு வெண்முரசு பற்றிய அறிமுகக்கட்டுரைகளின் உதவி தொடர்ச்சியாக தேவைப்படுகிறது. ஏனென்றால் வெண்முரசு அவ்வளவு பெரியது. அதை ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. நான் வாசிக்கும்போது வெண்முரசில் எதையாவது விட்டுவிட்டேனா என்று பதற்றம் அடைந்துகொண்டே இருக்கிறேன். ஆகவே திரும்பத்திரும்ப நினைத்துக்கொள்வேன்

ஆனால் கடிதங்களை வாசிக்கையில் ’ஆமாம், இதை நான் கவனித்தேன்’ என்று சொல்லும்படித்தான் இருக்கிறதே ஒழிய எதையும் ’அடாடா இதை விட்டுவிட்டேனே’ என்று சொல்லும்படி இல்லை. மிகமிக அபூர்வமாகத்தான் அப்படித் தோன்றியிருக்கிறது. இது நான் கூர்ந்து வாசித்திருப்பதற்கான சான்று என்று எனக்குநானே சொல்லிக்கொள்கிறேன். நானே என்னை ஆழ்ந்து பார்க்க இது உதவுகிறது. என்னுடைய வாசிப்பை நான் தொகுத்துக்கொள்கிறேன். ஆனால் எல்லாவற்றையும்விட முக்கியமானது வெண்முரசின் அபூர்வமான கணங்களை திரும்ப நினைவுகூர்வதுபோல இருக்கிறது. அது ஒரு மிகச்சிறந்த அனுபவம். ஒரு பயணத்துக்குப் பிறகு ஆல்பம் பார்ப்பதுபோல இருக்கிறது

இதில் வந்த பல கட்டுரைகள் மிக ஆழமானவை. மிகவும் தீவிரமானவை. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் மூன்று கட்டுரைகள் தலைசிறந்தவை என்று நினைக்கிறேன். அவை வெண்முரசை எப்படிப்படிக்கவேண்டும், எப்படித் தொகுத்துக்கொள்ளவேண்டும் என்று காட்டுகின்றன. ராஜகோபாலன் அவர்களின் கட்டுரை. சுசித்ரா அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகள். ஆங்கிலம், தமிழ். நாகராஜன் அவர்களின் கட்டுரை. அவை நான்கும் எனக்கு மிக உதவியாக இருந்தன

வெண்முரசின் சிக்கல் என்னவென்றால் அவை தனித்தனி நாவல்களாகவே முழுமைகொண்டவை என்பதுதான். அவற்றுக்கு ஒரு கதைத்தொடர்ச்சி உண்டு. சில குறியீடுகள் தொடர்ச்சியாக வருகின்றன. ஆனால் கதையின் கட்டமைப்பு தனியானது. ஆகவே ஒரு நாவல் முடிந்ததுமே நமக்கு ஒரு நிறைவுணர்வு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஒரே நாவலாக வாசிக்க நம்மால் முடிவதில்லை.இந்தச்சிக்கலால்தான் பலர் வெண்முரசை படிப்படியாக ஞாபகம் வைத்திருக்கிறார்கள். இந்த கட்டுரைகள் வெண்முரசு வாசித்தவர்களுக்கு அவர்களின் வாசிப்பை தெளிவாகப்புரிந்துகொண்டு ஒட்டுமொத்தமாகத் தொகுக்க மிகவும் அவசியமானவையாக உள்ளன

இந்த எல்லா நாவல்களிலும் வெண்முரசின் மையக்கதாபாத்திரத்தின் உள்ளமும் குணச்சித்திரமும் கொஞ்சம் மாறுபடுகிறது. காண்டீபம் நாவலில் உள்ள அர்ஜுனனின் குணச்சித்திரம் அதற்கு முன்பு வந்த நாவல்களில் காணப்படவில்லை. அதில் அவன் யோகியாகவும், ஞானம் தேடிச்செல்லும் விரக்தனாகவும்தான் இருக்கிறான். ஆனால் அடுத்த நாவல்களில் அவன் மீண்டும் வில்லேந்திய போர்வீரன் ஆகிவிடுகிறான். ஒரே நாவலாக வாசிப்பவர்களுக்கு உடனே இதென்ன குணச்சித்திர உடைவு என்று தோன்றும். ஆனால் இது இரண்டு வேறுநாவல்கள் என்று ஞாபகம் வைக்கவேண்டும். ஒரே நாவலின் தொடர்ச்சி அல்ல. தொடர்ச்சி என்பது உள்தொடர்ச்சி மட்டும்தான். காண்டீபம் ஒரு மையத்தரிசனத்தை கொண்டிருக்கிறது. அர்ஜுனன் கதாபாத்திரம் அதற்கேற்ப சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாவல்கள் அப்படி அல்ல

இது மகாபாரதத்திலும் அப்படித்தான். பர்வங்கள் நடுவே குணாதிசயங்கள் வேறுபடுகின்றன. விராடபர்வத்திலுள்ள அர்ஜுனனை வேறெங்கும் காணமுடியாது. இந்த தொடர்ச்சியும், தொடர்ச்சியின்மையும் ஒரு புனைவுக்கு ஏன் தேவைப்படுகிறதென்பதுதான் நாம் கவனத்தில்கொள்ளவேண்டியது. நாவல் முடியும்போது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக்கொண்டு ஒற்றை அமைப்பாக மாறவும் அதனால் முடிகிறது

இந்த வாசிப்பை ஒருவர் வெண்முரசின் வாசிப்பினூடாகவே அவரே அறியலாம். இப்படி பல அறிதல்கள் வழியாக ஒருவர் வெண்முரசின் வாசகராக தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நண்பர் வெண்முரசை வாசிக்கும்போது அதிலுள்ள சாகசப்பகுதிகளை தவிர்ப்பேன், அவை சிலசமயம் காமிக்ஸ் போல உள்ளன என்று சொன்னார். இன்னொருவர் நிலக்காட்சி வர்ணனைகளை தவிர்ப்பேன், அவை தேவை என்று தோன்றவில்லை என்று சொன்னார்

நான் சொன்னேன். அவை இரண்டுமே மூலமகாபாரதத்திலும் உள்ளவை அல்லவா என்று. மூலமகாபாரதம் ஒரு குழந்தைக்கதையின் அமைப்பும் உடையது. பலபகுதிகள் காமிக்ஸ் மாதிரித்தான் இருக்கின்றன. நிலக்காட்சிகள் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பண்டைய காவியங்களில் பெரும்பகுதி நிலக்காட்சிகளைத்தான் வர்ணிக்கின்றது. அவை நிலக்காட்சி வர்ணனை சொல்லவேண்டும், நகரவர்ணனை வேண்டும் என்று காவியலக்ஷணம் சொல்கிறது. அவை ஏன் தவிர்க்கப்படவேண்டும் என்று கேட்டேன்

சாகசங்களை தவிர்ப்பவர் எதை தவிர்க்கிறார்? அந்த சாகசங்களையே குழந்தைக்கதையாகவும் எடுக்கலாம் குறியீடாகவும் எடுக்கலாம். அர்ஜுன் மெய்நாடி பயணம் செய்பவன். ஆகவேதான் அவன் மேற்கே கருங்கடல் முதல் கிழக்கே பர்மா வரை, வடக்கே இமையமுடி முதல் தெற்கே கன்யாகுமரி வரை பயணம் செய்கிறான். அவன் தேடுவது என்ன என்பதை நான்கு திசைத்தேவர்களையும் சந்தித்துக் கேட்கிறான். அது சாகசம் மட்டுமல்ல, அதற்கு ஒரு குறியீட்டுட்டுத்தன்மை உண்டு

அதேபோல ஊர்களின் வர்ணனைகளையும் ஒரு நல்ல வாசகன் ஆழமான அர்த்தம்கொண்டு வாசிக்கமுடியும். வெண்முரசு அசுரர்களை எல்லாம் மண்ணுடன் பிணைந்தவர்களாக, மண்ணிலும் சேற்றிலும் வாழ்பவர்களாக காட்டுகிறது. மச்சர்குலம் நீரில் வாழ்கிறது. அந்தந்த ஊர்களின் வர்ணனைகள் அதை நேரடி அனுபவமாக விர்ச்சுவலாக ஆக்கிவிடுகின்றன

அசுரர்களை மிருணமயர் என்றுதான் மகாபாரதம் சொல்கிறது. மண்ணாலானவர்கள். அன்னத்தாலானவர்கள். தலித் என்ற சொல்லுக்கான அர்த்தமும் மண்ணின் மைந்தர், மண்மக்கள் என்றுதான். அந்த அர்த்தம் வெண்முரசு முழுக்க வருகிறது. அதன் உச்சம் சேற்றில் அசுரர்களின் தெய்வங்கள் நீராடி களிக்கும் வண்ணக்கடல் நாவலின் கடைசிப்பகுதி.

இந்தக்கோணத்தில் பார்த்தால் எந்த நாடு தண்ணீருடன் சம்பந்தப்பட்டது, எந்த நாடு சேறுடன் சம்பந்தப்பட்டது என்பது முக்கியமானது. சௌவீர நாடுகள், சிபிநாடு, பூரிசிரவசின் பால்ஹிகநாடு எல்லாமே புழுதியும் மண்ணும் நிறைந்தவை. காந்தாரம் புழுதியாலானது. ருக்மினியின் விதர்ப்பமும் சேறாலானது. இதெல்லாம் அவர்களின் அசுர அடித்தளத்தை காட்டுகின்றன

ஆனால் மணிபூரநாடு நீராலானது. அது அவர்களின் மச்சர்பின்னணியை காட்டுகிறது. பலநாடுகளின் அமைப்பைச் சொல்லிச் செல்லும்போதே அந்நாடு நீரா மண்ணா என்று சொல்லிவிடுகிறது வெண்முரசு.

அதேபோல பலநகர்களின் வர்ணனைகள். அசுரர்களின் கோட்டைகள் உயிருள்ள மரங்களை வளர்த்து அவற்றை சேர்த்து கட்டி அமைக்கப்பட்டவையாக உள்ளன. இது சாத்தியம்தான், இது விசித்திரமாக உள்ளது. ஆனால் குறியீட்டுரீதியாக பார்த்தால் அவர்கள் காட்டையே கோட்டையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள், காடே அவர்களுக்கு காவலாகிறது என்றுதான் அர்த்தம். காடு காவலாகிறது. மூங்கில் காவலாகிறது. கிழக்கின் திசை மூங்கில். இந்திரனின் திசை. ஆகவே மணிபூரநாடும் நாகநாடும் மூங்கிலால் ஆனவையாக உள்ளன

வெண்முரசை நாம் நம்முடைய சின்ன ரசனை, சின்ன அறிவுத்தளம் ஆகியவற்றை நோக்கி இழுத்தால் நஷ்டம் நமக்குத்தான். நம்மை நாம் ஏற்கனவே எல்லாம் நிறைந்த ஞானிகள், அறிஞர்கள், மரபு சார்ந்த எல்லாம் தெரிந்தவர் என்று பலசமயம் அபத்தமாக கற்பனைசெய்துகொள்கிறோம். அதிலிருந்தே இப்படி எனக்கு தெரிந்தவற்றைத்தான் வெண்முரசிலே தேடுவேன் என்ற அசட்டுத்தனமும், தெரியாதவை இருந்தால் அல்லது புரியாதவை இருந்தால் அதெல்லாம் தப்பு என்று சொல்லும் அசட்டுத்தனமும் உருவாகின்றன. அறிதொறும் அறியாமை கண்டற்றால் என்பது வெண்முரசு வாசகனுக்குப் பொருந்தும் ஒருவரி.

எம்.பிரபாகர்

VENMURASU- SUCHITHRA
வெண்முரசு வாசிப்பு- சுசித்ரா
காவியம்- சுசித்ரா

வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்

வெண்முரசின் கட்டமைப்பு- நாகராஜன்
முந்தைய கட்டுரைசெயல் எனும் விடுதலை
அடுத்த கட்டுரைடொமினிக் ஜீவா பற்றி எம்.ஏ.நுஃமான்