பனிமனிதன், கடிதம்

அன்புள்ள ஜெமோ,

புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஈரட்டி வாசத்தின் இனிமைத் தூறலில் எங்களையும் நனைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்க கிளையில் பல புது பறவைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு விதமான ஸ்லீப்பர் செல்ஸ் போல், அருகில் இருந்தும் அறியாது இருந்தவர்களை ஒன்று சேர்க்கின்ற நிகழ்வுகள் இனிதே தொடங்கி வைத்திருக்கிறது இந்த புது வருடம்.

உங்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும் – இங்கே இருக்கும் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு புத்தக வாசிப்பையும், வாசிப்பை ஒட்டிய விவாதங்களும், வாசித்ததை தொகுத்து வெளிப்படுத்தும் பயிற்சியை முதல் வகுப்பில் இருந்தே தொடங்கி விடுகிறார்கள். இயல்பாகவே புத்தக வாசிப்பை அவர்களின்  பிடித்த செயல்களின் ஒரு  பகுதியாய் மாறிருப்பதை வெளிப்படையாக காண முடிகிறது.

இங்கே படித்தாலும் தமிழ் மொழியிலும் நன்கு அறிமுகம் வேண்டும்  என்றும் அதே சமயத்தில்  எளிமையாகவும், பொறுமையாகவும், அழுத்தம் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அதீத கவனத்துடன்  மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு வீட்டிலேயே தமிழ் எழுதவும் வாசிக்கவும் பயிற்சி கொடுக்க தொடங்கினேன்.  முதலில் ஒரு பக்க கதைகளில்  தொடங்கி, ஓரளவு தேறிவிட்டாள் என்று அறிந்ததும் தினமும் இரவில் கதை நேரமாய் – உங்கள் “பனிமனிதன்” நூலை எடுத்து சேர்ந்து வாசித்து வந்தோம்.

ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் என்ற வீதத்தில் 44 நாட்களில் முடிக்க திட்டமிட்டோம். கதையை நான் படித்து விளக்கி சொல்ல, ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் வரும் தனித்தகவல் பகுதியை அவள் படிக்க வேண்டும் என்பது விதி. எதிர்பார்த்தப்படி பனிமனிதன் நிறைவில் தமிழில் அவள் வாசிக்கும் வேகம் முன்னேற்றம் அடைந்ததை  காண முடிந்தது. அது மட்டும் இல்லாமல் அதில்  வரும் புதிய வார்த்தைகளைக் குறிப்பெடுத்து அதை தனியே எழுதவும், அதை பயன்படுத்தி பிற வாக்கியங்களை எப்படி அமைப்பது என்பதையும் தொடர்ந்து செய்தோம்.

பனிமனிதர்களின் இருப்பிடம் பற்றி அரசாங்கத்திற்கு பாண்டியன் சொல்லப் போவதாய் வரும் பகுதிக்கு முன்பே, அவள் “அப்பா, அந்த பாண்டியன் இவங்கள பத்தி யார்கிட்டயேயும் சொல்லக்கூடாது, சொன்னா அவங்களுக்கு ரொம்ப problems வந்துரும். தேவையில்லாம அவங்கள நம் people trouble செய்வாங்க” என்றும் சொல்லிக்கொண்டிருந்தாள். இறுதிப் பகுதியை படிக்கையில், டாக்டரின்  நீண்ட பேச்சு அவளை வெகுவாக அசைத்து விட்டதை அவள் கண்களில் தெரிந்தது.

அந்த பேச்சின் நீட்சியாய் டேவிட் அட்டன்போராவின்  “A life on our planet ” ஆவணப்படத்தை பார்த்தோம். இயற்கையின் அழகை, பன்முகத்தன்மையை அதை வெறிப்பிடித்து வேட்டையாடும் மனித இனத்தின் பேராசை பசி, இயற்கையை மீட்க நாம் செய்யக்கூடிய சில செயல்கள் என்று தொன்னூறு நிமிடங்களில் பதிவு செய்திருந்தார்கள்.

இந்த முயற்சியில் பல நன்மைகள் தெளிவாக தெரிந்திருந்தாலும் சமீபத்தில் ஒரு நாள் இரவு நடையின் போது, “அப்பா, அந்த பனிமனிதன் நாவல்ல பார்த்தீங்கன்னா, அதில வர பாண்டியன் தான் நம்ம thoughts / நமக்குள்ள வர கேள்விகள் , டாக்டர் தான் நம் தேடி கண்டுபிடிக்கிற answers, கிம் தான் நம்மள டிரைவ் பண்ணற spirituality, நடுவில வர பனிப்புயல், வைரம், கடல், நெருப்பு, முதலை எல்லாம் தான் obstacles. அதை எல்லாம் கடந்து போனா நாமளும் பனிமனிதன் மாதிரி Joyfulஆ இருக்கலாம். நம்மோளோட original stateக்கு  ” என்று அவள் சொன்ன போது அசந்து விட்டேன்.

ஒரு புத்தகத்தின் முன்பு எந்த முன்முடிபுகளும் இல்லாது அதில் முழுமையாய் இயைந்து வாசிக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி சொல்வது எனக்கு நினைவுக்கு வந்தது. எத்தனை முறை வாசித்து இருந்தாலும், இன்னும் ஒரு கோணம் இருக்கவே கூடும்  அனைத்தும் உரைத்தும் எஞ்சியிருக்கும் சொல் போல. மீண்டும் பனிமனிதன் புத்தகத்தை அவளே தனியாக வாசிக்க தொடங்கி இருக்கிறாள்.

மிக சிறந்த புத்தகங்கள் நம் கற்பனைகளையும் சிந்தனைகளையும் விரித்து வானில் பறக்க கற்றுக்கொடுக்கின்றன. பிள்ளைகள் இன்னும் சுலபமாக அதை செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. மகிழ்ச்சி ஜெ!

வெங்கடேஷ் பிரசாத்

அன்புள்ள விபி

உங்கள் மகள் வயதில் அஜிதன் இருக்கும்போது அவனுக்காக சொல்லப்பட்டது பனிமனிதன். பின்னர் அதை எழுதினேன்.

அந்த வயதில் நாமும் குழந்தைகளின் உலகுக்குள் செல்கிறோம். அவர்களாகவே ஆகிறோம். அதற்கு பனிமனிதன் போன்றநூல்கள் உதவுகின்றன

உங்கள் மகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அது ஒரு கல்விதான்

ஜெ

பனிமனிதன் வாங்க

முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 5
அடுத்த கட்டுரைகுயில்களின் தன்மீட்சியில் கல்லெழும் விதை..