இரு சிறுகதைகள்- கடிதங்கள்

சிறுகதைகள்

முடிவின்மையின் விளிம்பில்

அன்புள்ள ஜெ

உங்கள் இணையதளத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்க அளவுக்கு சிறுகதைகள் மட்டுமே வாசிக்கக் கிடைக்கின்றன. எத்தனைபேர் வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நான் நேற்று ஒரு கணத்துக்கு அப்பால் கதை வாசித்தேன். ஒரு நிலைகுலைய வைக்கும் அனுபவம் அக்கதை. இன்றைய எழுத்தாளர்களில் மிகச்சிலர்தான் இன்றைய உண்மையான பிரச்சினையை எழுதுகிறார்கள். ஒரு அல்ஷெமிர் நோயாளியின் பிரச்சினை அவருக்கு நிகழ்காலத்தில் இருத்தல் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான். அவருடைய வாழ்க்கை இங்கே இருந்து நழுவி விடுகிறது.

இந்தக்கதையில் அந்த அப்பா இரண்டு வகையில் தவிக்கிறார். இங்கே இருந்து நழுவி அவர் கடந்தகாலத்தில் வாழ்கிறார். எழுபதுகளில் ராஜேஷ் கன்னாவின் உலகத்தில். இங்கே ஒரு தொடர்புக்கொக்கியை உருவாக்கிக்கொள்வதற்காக அவர் போர்ன் தளங்களை நாடுகிறார். காமம் நிகழ்காலத்துடன் அவரை பிணைக்கமுடிகிறது. அந்த ஒரு கொக்கி மட்டும்தான்

உண்மையில் அல்ஷெமிர் நோயாளிகளுக்கு இசை, போர்ன் இரண்டும் மட்டுமே ஆழமாக சென்று பாதிக்கிறது. நினைவுகளை கிளறுகிறது. இருத்தல் என்பது அர்த்தமற்றுப்போகும் இடம் அதுதான். அந்த வெறுமையையும் தவிப்பையும் அளித்த கதை

ஒரு கண்ணாடிப்பரப்பில் புழு நெளிவதுபோல தோன்றியது. நெளிந்துகொண்டே இருக்கிறது. நகர முடிவதே இல்லை

அர்விந்த்

திருமுகப்பில்

அன்பு ஜெ,

திருமுகப்பில் சிறுகதை படித்தேன் ஜெ. அதில் நீங்கள் காட்டிய விஷ்ணு சயன தரிசனம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. ‘இருளை உருக்கி வார்த்து வடித்தது’ என்ற படிமச் சொற்களை காட்சிப் படுத்தி பரவசமடைந்தேன். நீங்கள் ஒவ்வொரு வாசல்களையும் விளக்கும்போது விஷ்ணுபுரத்தின் மூன்று வாசல்களை ஓட்டிப்பார்த்தேன். ஸ்ரீபாதம், கெளஸ்தூபம், மணிமுடி.. அங்கே பயங்கரமும் சாந்தியும் ஒன்றாய்கூடிய அறிநகை என்று சொன்னீர்களே… அங்கு மயிற்கூச்செரிந்தது.

பின்னும் பிரபஞ்ச தோற்றத்தை விளக்கும் வரிகளில் தியானித்திருந்தேன். பிரபஞ்ச தோற்றத்தை விளக்குவதற்கு என பல அறிவியல் கோட்பாடுகளை மனிதன் “arm chair theory” வடிவில் சொல்லி வைத்துள்ளான். பல மதங்களிலும் பிரபஞ்ச தோற்றுவாயை படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் விளக்கும் தோற்றுவாய் மட்டுமே என்னை அதிரச் செய்கிறது. காலம் என்ற பரிமாணத்திற்கு முன் நீங்கள் செல்லும்போதே பரவசமடைந்துவிடுகிறேன். இந்தக் கதையில் வரும் இந்த வரிகளின் துணை கொண்டு காலத்திற்கு அப்பால் பயணித்தேன்.

இங்கேயுள்ள மூர்த்தி மலந்து கைவிரிச்சுப் படுத்திருக்கு. இதுக்கு சாஸ்திரத்திலே மகாயோக நிலைண்ணாக்கும் பேரு…. மகாயோகநிலைண்ணாக்க வேற ஒண்ணுமே இல்லாத பெருநிலைண்ணு அர்த்தம். அப்ப தெய்வங்கள் பொறக்கேல்ல. பிரபஞ்சமும் பொறக்கல்ல. காலம்கூட உண்டாகல்லண்ணாக்க வேற என்ன? விஷ்ணுமட்டும்தான் இருந்தாரு. வேறு ஒண்ணுமே இல்ல. காலம் இல்லேண்ணா எல்லாமே சூனியம்தானே? சூனியத்திலே காலம் பிறந்துவருது. காலத்துக்க பீஜம். கருத்துளி. அங்கு பாஷை இல்ல. சித்தம் இல்ல. சித்தத்துக்கு அப்பால் உள்ள துரியம் இல்ல. துரியாதீதமும் இல்லவிஷ்ணுஇல்லாம வேற ஒண்ணுமே இல்ல. அப்படிண்ணாக்க விஷ்ணுவ ஆரு காணுயது? அவரு எப்டி இருந்தாரு? அதுனால அவரும் சூனியவடிவமாக இருந்தார்.. சூனியம் என்றால்இல்லாமை. இருட்டு. இருப்பது போலத்தெரியும். கைகளை நீட்டிப்பார்த்தால் தொட முடியாது.

துரியம் என்றால் என்ன?நினைப்பு. நினைத்து நினைத்து போய் ஒன்றுமே இல்லாமல் ஆகுமே அது. “

 காலம் என்பதை பரிமாணமாக வைத்து பல அறிவியல் புனைவுப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதையும் தாண்டிய ஐந்தாம் பரிமாணமாக ஈர்ப்பு விசையை வைத்த இன்டர்ஸ்டெல்லார் என்ற படம் காலம் என்னும் பரிமாணத்தை பகடி செய்வதைக் கண்டேன். இன்னும் கண்டறியப்படாத பரிமாணங்களின் மேல் புனைவை ஏற்றி அதன்பின் களித்திருந்தேன். இங்குதான் சூனியத்திலிருந்து உண்டாகும் முதல் விசையின் மேல் காதல் கொண்டேன். அதை நீங்கள் விளக்கும்போது பரவசமடைவதும் அதனால் தான்.

இறுதியில் “அவர் அன்று கண்டதைப் பத்துவருடம் கழித்துதான் நான் கண்டேன்.” என்று எழுதியிருந்தீர்கள். நீங்கள் கண்டதை உங்கள் எழுத்துக்களின் வழியாக உடலால் பயணிக்காமலேயே கண்டடைந்தாற் போல இந்த சிறுகதை அமைந்தது.

சிறுகதை படித்ததும் அந்த காளிசரணை இணையத்தில் தேடி கண்டடைந்தேன். சமீபத்தில் மும்பை சென்றபோது நீங்கள் டெண்டுல்கர் அவர்களை அடையாளம் காண முடியாதிருந்தது நினைவிற்கு வந்தது. பாவம் நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டநாயகனை எங்ஙனம் அடையாளம் காணுவீர்கள். சிரிப்பு வந்தது. காளிசரண் அவர்கள் மேலும் பரிதாபம் வந்தது. சிறுகதை நெடுகவே உங்களுக்கேயுரிய நகைச்சுவை நிரம்பியிருந்தது. அவர் உங்களை மறந்திருக்க வாய்ப்பேயில்லை. உங்களைப்போலவே.

அன்புடன்

இரம்யா. 

முந்தைய கட்டுரைமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்
அடுத்த கட்டுரைஇரைகளும் இலக்கணமும்