2020 டிசம்பரில் கடைசி வாரத்தில் ஒரு நாள், ராதா, வெண்முரசு நாவலின், அனைத்து நூல்களையும், அதாவது 26 புத்தகங்கள், கிட்டத்தட்ட 26000 பக்கங்களை வாசித்து முடித்தவர் என்ற பெருமையை அடைந்தார். அதை, எனது வலுக்கட்டாயத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாசக நண்பர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் , அவரது எண்ணங்களை எழுதச் சொல்ல, அதற்கும் , நன்றி நண்பர்களே என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறு வார்த்தைகள் அவரிடமிருந்து இல்லை. ஆள் வைத்து எழுதும் அமெரிக்காவில் வசிக்கும், அவர் வைத்த ஆளாக, வாசகரான அவரைப் பற்றிய சில வரிகளும், வெண்முரசு பற்றிய அவரது பார்வையையும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன்.
எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சொன்னதுபோல, ஆயிரக்கணக்கான வாசகர்கள் , தான் வாசித்ததைப் பற்றி பேசாமல் / எழுதாமல், அவர்கள் போக்கில் வாசித்துக்கொண்டு மட்டும் இருப்பார்கள். அந்த வாசகர்களில் ஒருவர் ராதா.
எங்கள் வீட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஆகட்டும், எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் வந்த வெண்முரசு, மற்றும் மற்ற கதைகள், கட்டுரைகள் ஆகட்டும், எங்கள் இருவரில் யார் அதிகம் வாசித்திருப்பார்கள், என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது. பொதுவாக எதையும் மனதில் வைத்துக் காரியத்தை சாதித்துவிட்டு அமைதியாக இருக்கும் இலட்சக்கணக்கான பேசாமடந்தைகளில், இவரும் ஒருவர். தான், வாசித்த விஷயங்களை , பொது இடத்திலும், நண்பர்களிடமும் பேசாததால், ஒரு நல்ல வாசகர் என்ற அடையாளத்தையும் தனக்கெனத் தேடிக்கொள்ளாதவர்.
மற்றபடி வீட்டிற்கு, நாங்கள் வாங்கி வரும் நூல்களில், வாசித்த பிறகு அவரது மதிப்பீடும், சிறு குறிப்புகளும், ஒரு வார்த்தையில், சிறு சிறு வாக்கியங்களாக எங்கள் உரையாடலில் வந்து செல்லும். விஷ்ணுபுரம் நாவலை வாசித்து முடித்து, kindle புத்தகத்தை மூடிவிட்டு, it is worth reading என்றார். என்னால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். அவருக்கு புனைவோ அபுனைவோ பிடிக்கவில்லை என்றால், அந்த நூலை தொடர்ந்து வாசிக்க மாட்டார்.
சுஜாதாவின், ‘எப்போதும் பெண்’ நாவலை மூன்று முறை வாசித்திருக்கிறார். உனக்குப் பிடித்த புத்தகம் ஒன்றைச் சொல் என்றால், இதையே சொல்வார். நாங்கள் வீட்டுக்கு வாங்கி வந்த புத்தகங்களில் பெரும்பாலும் அவரே முதலில் வாசித்திருப்பார். சில புத்தகங்களை சிலாகித்துப் பேசி, இதை வாசியுங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்று அவர் சொன்ன புத்தகங்கள் – சோ. தருமனின் , ‘சூழ்’, கே.வி. ஜெயஸ்ரீயின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’, பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’, ஜெயகாந்தனின் ‘பாட்டிமார்களும் பேத்திமார்களும்’. ஜெயமோகனின் எழுத்துக்களை வாசிப்பதில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன் என்று சொல்லும் இவர், இன்று அவரது தளத்தை தேடிச் சென்று வாசிக்கிறார்.
வாழ்க்கையில் வெறுமையே மிஞ்சும் என்பது ராதாவின் கருத்து. வெண்முரசு அந்த எண்ணத்தை உறுதிப்படுத்தியது என்று சொல்லும் இவர், வெண்முரசு , நம்பும்படியான நடைமுறை வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தவும் சிந்திக்கவும் வைக்கும் நாவல்” என்கிறார். “எந்த ஒரு கடினமான முடிவுகளுக்கு முன்னரும் கணவன் மனைவியிடம் ஒரு உரையாடல் இருக்கத்தானே செய்யும்? திரௌபதி , தான் தவறி விழுந்ததைப் பார்த்து சிரித்தாள் என்று கோப்பபடும் துரியோதனனை, நானும் அங்குதான் இருந்தேன். அவள் சிரிக்கவெல்லாம் இல்ல என்று பானுமதி சமாதானம் செய்வாள். ஒரு வேளை, பானுமதியின் பேச்சை துரியோதனன் நம்பியிருந்தால் பாரதப்போரே நிகழாமல் இருந்திருக்கும்” என்பார் ராதா.
“திரௌபதி துகில் உரியப்படும்பொழுது, அங்கிருக்கும் அரசிகள், இளவரசிகள், சேடிகள், தங்களது மேலாடைகளை உருவி, திரௌபதியின் மேல் போட்டுக் காப்பாற்றுவார்கள். அதுவும் துச்சாதனின் மனைவி அசலை, துரியோதனின் மகள் கிருஷ்ணை ஓடி வருவார்கள் பாருங்கள். அதுதானே சரி. தெய்வமா நேரில் வந்து உதவும்?” என்று அந்தக் காட்சியை வாசித்த நாட்களின் மாலையில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
துகில் உரிவு நிகழ்வுக்கு அப்புறம், “தங்களை அணுக வரும் கணவர்களை, பானுமதி, அசலை மற்றும் தாரை என்னைத் தொடாதே என்பார்கள். அதுதானே எந்த ஒரு பெண்ணும் செய்திருப்பாள். நாம் நினைத்துப் பார்க்காத பக்கங்களை / பார்வையை, வெண்முரசு தொட்டுச் சென்றிருக்கிறது” என்பதில் வெண்முரசு நாவலின் மேல் அவருக்குள்ள அபிப்ராயம். திரௌபதிக்கு, ஐந்து கணவர்கள் என்றாலும் பிடித்தமானவன் பீமனாகத்தான் இருக்க முடியும் என்பார். அவன்தான், ஒரு பெண்ணிற்கு பிடித்த கணவன் போல் நடந்துகொள்வான். அவளிடம் பிரியமாக , ஒரு தோழனாக நடந்துகொள்வான் என்று அவர்கள் ஒரு முறைக் காட்டில் பயணம் செய்தபொழுது, திரௌபதியின் குதிகாலை தன் மடி மீது எடுத்து வைத்து, ஒவ்வொரு முள்ளாக பிடுங்கி எடுத்ததைச் சொல்வார்.
பிரயாகை வாசிக்கும் பொழுது அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள். இடும்ப வனத்தில், இடும்பியை எந்த வாதமும் இல்லாமல், தனது மருமகளாக ஏற்றுக்கொண்ட குந்தியை அவருக்குப் பிடித்திருந்தது.பீமனும், இடும்பியும், கடோத்கஜனும், மரங்களின் கிளைகளில் குடும்பமாக அவர்கள் தாவிச் செல்லும் காட்சி அவருக்கு மனதுக்கு நெருக்கமாக இருந்ததாக சொன்னார்.
இமைக்கணம் வாசிக்கும்பொழுது மட்டும், புரியவில்லை, அதைக் கடப்பதற்கு சிறிதே சிரமப்பட்டார். கீதையின் சாராம்சம் வரும் இந்த நாவலை ஒரு முறை வாசித்துவிட்டு புரிந்து கடக்கும் நாவல் அல்ல. தொடர்ந்து வாசித்து மற்ற நண்பர்களுடன் விவாதித்துப் புரிந்துகொள்வதே சரியான வழி. நானும் அவருடன் இணைவாசிப்பு செய்து , சின்ன சின்ன விளக்கங்கள் கொடுத்து முதல் வாசிப்பைக் கடக்க உதவினேன்.
கௌரவர்கள் கூட்டம் நடத்தும் சதிகளில் உவப்பு கொள்ளாத துரியோதனின் தம்பிகளில் குண்டாசி மற்றும் விகர்ணன், திருதராஷ்டிரனுக்கு சூதர் பெண்ணின் மூலம் பிறக்கும் யுயுத்ஸுடன் பிரியம் கொள்ளும் துரியோதனன் என்று கௌரவர்களின் வேறு முகங்களை, வெண்முரசு அடையாளப்படுத்துவதை, எங்கள் உரையாடலில் சொல்லிக்கொண்டே இருப்பார்.
துரியோதனன், போருக்கு செல்வதற்கு முன் தன் அன்னை காந்தாரியிடம், ஆசி வாங்க செல்வான். வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லாமல் , அறம் ஜெயிக்கட்டும் என்று ஆசிர்வதிப்பாள். கௌரவர்களுக்கும் அறம் சார்ந்த சிந்தனை இருந்தது என்பது நாவல் முழுக்கச் சிதறிக் கிடக்கிறது என்பதைக் குறிப்பிட ராதா இதை எடுத்துக்காட்டாக சொல்வார்.
போர் நடக்கும் நாட்களை சொல்லும் நூல்களை வாசிக்கும் நாட்களில், “எல்லோருமே போர் வேண்டாம் என்றுதானே சொல்கிறார்கள், ஏன் இந்த இளைய யாதவர் மட்டும் , போர் நடந்தே ஆகவேண்டும் என்று இருக்கிறார் என்று அவரின் மேல் கோபமாக இருந்தார். இவர் நினைத்திருந்தால், போரை நிறுத்தியிருக்கலாம் ” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். போர் நடப்பது பிடிக்காமலேயே, குந்தி எப்பொழுது கர்ணனிடம் வந்து மற்ற மகன்களைக் கொல்லாதே என்று வரம் வாங்குவாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், செந்நாவேங்கைக்கு அப்புறம் இருக்கும் மற்ற எட்டுப் புத்தகங்களை இருபது நாட்களில் , குறைந்தது நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் வாசித்து முடித்துவிட்டார்.
வாழ்வில் நம்மோடு தொடர்ந்து பயணம் செய்யும் கவலைகள், கோவிட்-19 பற்றிய சிந்தனை என்று எதுவும் இல்லாமல், ஒன்பது மாதங்கள் எப்படி சென்றது என்றே தெரியாமல், வெண்முரசுவின் வழியாக இன்னொரு உலகில் வைத்திருந்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, வாசகி ராதா தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.
– வ.சௌந்தரராஜன்