அன்புள்ள ஜெ
சென்ற செப்டெம்பரில்தான் வெண்முரசு வாசிக்கத் தொடங்கினேன். வெண்முரசு பற்றி முன்னரே பலரும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அன்று என் வேலை நாள்முழுக்க படுத்தி எடுப்பதாக இருந்தது. என்னால் வாசிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை வரவில்லை. ஏற்கனவே நான் விஷ்ணுபுரத்தை வாசிப்புக்கு எடுத்து வாசித்து முடிக்க மூன்றுமாதங்களுக்குமேல் ஆகியது. ஆகவே இதை அப்படியே ஒத்திவைத்துக்கொண்டிருந்தேன்
வெண்முரசை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது சமீபத்தில்தான். வீட்டிலிருந்தே வேலை செய்ய ஆரம்பித்து நிறைய நேரம் வந்தது. அப்போது ஏராளமான சினிமாக்கள், சீரியல்கள் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சலிப்பு. எந்த சினிமாவை எடுத்தாலும் பாதிதான் பார்க்கமுடிந்தது. அதற்குள் அலுப்பு வந்துவிடும். அதன்பிறகுதான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலநாவல்கள், கிளாசிக் என்றால் நெடுநாட்களாக எடுத்து எடுத்து வைத்த வுதரிங் ஹைட்ஸ்.
தற்செயலாகத்தான் வெண்முரசு படித்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. துணிந்து ஒரு வால்யூம் படிப்போம். மேலே இழுத்துக்கொண்டால் படிப்போம் என்று முதற்கனல் வாசித்தேன். தொடர்ச்சியாக வேறேதும் வாசிக்காமல் இப்போது இமைக்கணம் வரை வந்துவிட்டேன். வெண்முரசு உருவாக்கும் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் இதன் தனி உலகமும் தனி மொழியும் வேறெதையுமே வாசிக்கவிடாமல் ஆக்கிவிடும் என்பதுதான். இதன் நடுவே ஒரு சின்ன சுவாரசியத்துக்காக வேறு சில மகாபாரத நாவல்களை வாசிக்கப்பார்த்தேன். பர்வ எல்லாம் சின்னப்பிள்ளை விளையாட்டு போல சாதாரணமாக இருக்கிறது. இரண்டாமிடம், இனிநான் உறங்கட்டும் எல்லாம் அதைவிட கீழேதான்.
வெண்முரசின் மிகப்பெரிய ஈர்ப்பு என்பதே அது ஒரு விர்ச்சுவல் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது என்பதுதான். நிலம், மக்கள், வீடுகளின் அமைப்பு, சந்தைகள், நகரங்கள், அன்றாடவாழ்க்கை, மக்களின் பிரச்சினைகள் என்று ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய வாழ்க்கை இருக்கிறது. மிகமிக விரிவான வாழ்க்கை. முதற்கனல் முடிந்து மழைப்பாடல் தொடங்கும்போது அந்த விரிந்த உலகம் வர ஆரம்பிக்கிறது. அதற்குள் செல்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் உள்ளே போனபோது ஒரு முழுமையான வாழ்க்கையே என்னைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்தது. அதில் நானும் இருந்தேன். ஆகவே வெளியே வரவே முடியவில்லை.
புத்தகங்களை நாம் கூர்ந்து வாசிக்கவேண்டும். வாசிக்கும்போது எதையாவது விட்டுவிட்டோமா என்று திரும்பத்திரும்ப வாசிப்போம். ஆனால் வெண்முரசு போல ஆழமாக உள்ளே சென்று நாமும் கூடவே வாழ ஆரம்பித்துவிட்டோம் என்றால் நமக்கு எந்த திசைதிரும்புதலும் கிடையாது. முழுக்கமுழுக்க நாவலுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பதனால் கூர்ந்து கவனிக்கவேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய கவனமே கூர்மையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு சின்ன விஷயம்கூட நம் கவனத்தைவிட்டு விலகுவதில்லை.
வெண்முரசை வாசித்து முடித்துவிட்டு உங்களுக்கு விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் நடுவே இந்தக்கடிதத்தை எழுதுகிறேன். இதை எழுதக்காரணம் எனக்கு இந்நாவலில் தோன்றிய ஒரு தனிச்சிறப்புதான். அதை இமைக்கணம் வரை வந்த பின்னர்தான் உணர்ந்தேன்.
இமைக்கணம் வரும்போதுதான் நான் பீஷ்மரின் குணாதிசயத்தை தொகுத்துக்கொண்டேன். அவரை ஒரு பெருந்தந்தை என்றுதான் வெண்முரசு சொல்கிறது. மூலமகாபாரதத்தில் பழக்கம் உடையவர்களுக்கு பெரிய சிக்கலாக இருப்பது பீஷ்மர் அத்தனை பெரிய நியாயம் பேசுபவர் எப்படி துரியோதனனுக்கு ஆதரவாக இருந்தார், எப்படி திரௌபதி துகில் உரிவதை ஆதரித்தா என்பதுதான்.
அதற்கு பௌராணிகர்கள் பல விளக்கங்களைச் சொல்வார்கள். அதில் ஒரு விளக்கம் அது அவருடைய ஊழ்வினை, அவருடைய பூர்வஜென்ம பாவம் தொடர்ந்து வந்தது என்பதுதான். அவர் அப்படிச் செய்யவேண்டியிருந்தது என்பார்கள். இன்னொரு விளக்கம் உண்டு. என் ஞாபகம் சரியென்றால் முக்கூரார் இதைச் சொல்லியிருக்கிறார்.
அதாவது, பீஷ்மர் கடைசியில் பீஷ்மநீதி சொல்கிறார். அப்போது விதுரர் கேட்கிறார், இத்தனை நீதிசொன்ன நீங்கள் ஏன் இதுவரை துரியோதனனை ஆதரித்தீர்கள் என்று. அதற்கு அவர் சொல்கிறார். இதுவரை துரியோதனன் தந்த உணவு என் ரத்தமாக இருந்தது. ஆகவே நான் அவனை ஆதரித்தேன். இப்போது அந்த உணவு அர்ஜுனனின் அம்புகளால் ரத்தமாக வெளியேறிவிட்டது. ஆகவே நியாயம் தெரிகிறது என்று
இரண்டுமே வழக்கமான பிராமணப்பார்வைகள். ஊழ் என்றும் பூர்வஜென்ம வினை என்றும் சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகப்போய்விடும். அதேபோல எல்லாவற்றையுமே எதைச்சாப்பிடுவது எவரிடம் சாப்பிடுவது என்று பார்ப்பது. விவேகானந்தர் சொல்வதுபோல சோற்றைக்கொண்டே ஞானம் என நினைப்பது.
மகாபாரதத்தின் மீது வழக்கமான பார்வைகொண்டவர்கள் இந்த பிராமண விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் கொஞ்சம் நிதானமாக யோசிப்பவர்களுக்கு அபத்தமாகத் தோன்றும். ஆனால் வெண்முரசு மிகத்தர்க்கபூர்வமான விளக்கத்தை அளிக்கிறது. வெண்முரசு விரிவாக எல்லா விஷயங்களிலும் தர்க்கபூர்வ விளக்கத்தை அளிக்க முயல்கிறது
பீஷ்மரை ஒரு பெருந்தந்தையாக பார்க்கிறது வெண்முரசு. அவர் ஆரம்பம் முதலே அப்படித்தான் இருக்கிறார். தந்தைக்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். பழிகளையும் விரும்பி ஏற்றுக்கொள்கிறார். வெண்முரசின் கதாபாத்திர உருவாக்கம் கடைசிவரை அந்த கதாபாத்திரம் என்னென்ன செய்கிறது என்பதை முன்னதாகவே கண்டு அதனடிப்படையில்தான் ஆரம்பம் முதலே உருவாக்கப்பட்டிருக்கிறது.
மழைப்பாடலில் அவருக்கும் திருதராஷ்டிரனுக்குமான தந்தை மகன் உறவு சொல்லப்படுகிறது. நான் எந்நிலையிலும் உன்னோடுதான் இருப்பேன் என்று அவர் சொல்கிறார். அந்த வாக்குறுதியை புரிந்துகொண்டால் ஒரு தந்தையாக அவர் துரியோதனனை ஆதரித்தது விளங்கும். அப்பாக்கள் அப்படித்தான். நியாயம் தர்மம் எல்லாவற்றையும் விட திருதராஷ்டிரன் கண் தெரியாதவன், தன் ஆதரவுக்குரியவன் என்றுதான் அப்பாமனம் யோசிக்கும்.
அந்தக்காட்சியை மழைப்பாடலில் எதற்காக புனைந்து அளித்தீர்கள் என்று யோசித்தேன். பீஷ்மரின் காலில் திருதராஷ்டிரன் விழுந்து அழுவதும் உனக்கு எந்நிலையிலும் நான் துணையிருப்பேன் என்று அவர் சொல்வதும் மிக வலுவான காட்சிகள். பின்னர் பீஷ்மரின் கதாபாத்திரம் விரிந்து விரிந்து வரும்போதுதான் உண்மையில் அந்த இடம் எவ்வளவு ஆழமானது, எவ்வளவு அடிப்படையானது என்பது புரிந்தது
இப்படி குந்தி, விதுரர் உட்பட எல்லா கதாபாத்திரங்களும் கடைசியில் அவர்கள் என்னென்ன ஆகிறார்கள் என்பதை ஒட்டித்தான் ஆரம்பம் முதலே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் கதாபாத்திர ஒருங்கிணைவு அப்படித்தான் அமைந்துள்ளது. வெண்முரசை வாசிப்பவர்கள் அவ்வப்போது புனைவாக விரியும் பல சந்தர்ப்பங்களை கண்டு இது ஏன் என்று எண்ணிப்பார்க்கலாம். அந்தச் சந்தர்ப்பங்களிலிருந்து மேலே செல்ல நிறைய இடமிருக்கிறது. அந்த சந்தர்ப்பங்களைக்கொண்டுதான் நாம் அந்தக்கதாபாத்திரங்களை புரிந்துகொள்ள முடியும்
பீஷ்மர் அவருடைய இளமையில் கங்கைக்கு குறுக்காக அம்புகளால் அணைகட்டினார் என்ற கதை அவருடைய வீரத்தைக் காட்டுவதற்காக மகாபாரதத்தில் சொல்லப்படும் ஒரு சிறப்புவர்ணனை மட்டும்தான். ஆனால் அவர் நதியை அம்புகளால் அணைகட்ட முயன்றவர், தொடர்ந்து முயன்றுகொண்டே இருப்பவர் என்று அந்த தருணத்தை ஒரு உவமையாக, ஒரு மெட்டபர் ஆக ஆக்கி விரித்து அவருடைய மொத்த வாழ்க்கையையே காட்டிவிடுகிறது வெண்முரசு.
பீமனுக்கும் துரியோதனனுக்கும் பகைவரும் இடமும் ஓர் உதாரணம். அவர்கள் இருவரும் ஒன்று. ஒரே உடலின் இருபகுதிகள். அதுதான் போராட்டத்துக்கே காரணம். இடையே வருவது ஈகோதான். அந்த ஈகோ உருவாகும் கணம்தான் துரியோதனனை பீமன் கரடியிடமிருந்து காப்பாற்றுவது.
வெண்முரசு புதியபுதிய அர்த்தங்களை அளித்தபடியே விரிகிறது. A complete reading experience
ஆர்.மாதவ்