லலிதா என்ற யானை

ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பு

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி G.R.சுவாமிநாதன் அவர்கள் யானை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு தொடர்பாக அளித்த தீர்ப்பு  வித்தியாசமானதாகவும், மிக முக்கியமான ஒன்றாகவும் தோன்றியது. விலங்கு உலகை பற்றியும், விலங்கிற்கும் மனிதனிற்கும் உள்ள உறவை பற்றியும் தொடர்ச்சியாக எழுதி வரும் தங்களின் கவனத்திற்கு இத்தீர்ப்பை தெரிவிக்க விழைகிறேன்.

(கடந்த செப்டெம்பரில் நமது கர்நாடகா வனப்பயணத்தை முடித்து திரும்புகையில், பண்ணாரி அருகே பாதையின் ஓரத்தில் நின்ற ஒரு குட்டி யானையை கண்டதும் நீங்கள் அடைந்த பரவசமும், குழந்தைக்குரிய குதூகலமும்,  அதை முழுதும் காண துடித்த உங்கள் ஆர்வமும் நினைவில் எழுகிறது)

“லலிதா” என்ற யானையை ஷேக் முகமது என்பவர் 08.05.2000ல் குஞ்சு முகமது என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார் பின்பு 2002ல் உரிமையாளர் உரிமைமாற்றம் வேண்டி விண்ணப்பித்துள்ளார். இப்போது வனவிலங்குகச் சட்டத்தின் சிக்கல்களல அதை கிடப்பில் போட்டுவிட்டனர். சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உள்ளார்கள் அதிகாரிகள். நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக முகமது உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஜி.ஆர்.சுவாமிநாதன்

அரசு தரப்பிலிருந்து மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.  யானையை காட்டிலாகா பாதுகாப்பில் விடும்படி ஆணையிடப்பட்டுள்ளது.சட்டத்தின் வரையறை படி அரசு செய்தது சரியானதே. ஆனால் அனைத்து தருணங்களிலும் சட்ட விதிகள் சரியான முடிவெடுப்பதற்கு உகந்ததாய் இல்லை. சில நேரங்களில் ஒரு நல்ல தீர்வுக்காக விதிமுறைகளை தாண்டி யோசித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

தீர்ப்பின் ஆரம்பத்திலேயே இதை  குறிப்பிடும் நீதிபதி , ‘out of box’ சிந்தனை என்பதின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் வலியுறுத்துகிறார். நமது அரசு அலுவலக செயல்பாட்டில் ஊழலை காட்டிலும் முக்கிய பிரச்னை என்பது இதுதான். விளைவு எவ்வாறாயினும் அதை பற்றி கருத்தில்கொள்ளாமல் வெறும் காலகாலமாக பின்பற்றும் நடைமுறைகளையும், சட்ட விதிகளின் அடிப்படையிலும்  கண்மூடித்தனமாக செயல்படுவதினால் பல நேரங்களில் பலருக்கு பெரும் பாதிப்புதான் ஏற்படுகிறது.

இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு அரசு செயல்பட்டுள்ளது அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டால் அதனால் ஏற்படும் விளைவு மற்றும் பாதிப்பு என்ன என்பதை நீதிபதி ஆராய்கிறார். பொதுவாக வழக்காடுபவர்களின் நலன் தான் தீர்ப்பிற்கு அடிப்படையாக அமையும். ஆனால் குழந்தை தன் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று தாயோ, தந்தையோ அல்லது மற்ற உறவினர்களோ கேட்கும் வழக்குகளில் மட்டும் வழக்கில் உள்ள நபர்களைவிட வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தையின் நலனையே நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.

தன்னுடைய தரப்பை, நலனை முன்வைக்க முடியாத, ஆனால் வழக்கின் முடிவால் பாதிக்கப்படக்கூடிய, குழந்தையை போலவே இங்கு லலிதாவும் உள்ளதாக நீதிபதி கருதுகிறார். எனவே  லலிதாவின் நலனே இவ்வழக்கை தீர்மானிக்கவேண்டிய காரணி என்றெண்ணி நீதிபதி, யாருக்கும் தெரிவிக்காமல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புதூர் என்ற கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு லலிதாவை காண்கிறார்.

அங்கு லலிதாவிற்கு தேவையான உணவு வழங்கப்பட்டிருந்தது.  அவரை மிகவும் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் படுத்திய விஷயம், லலிதா சங்கலியால் கட்டப்படவில்லை என்பது . உடலில் காயங்கள் ஏதுமில்லை, நல்ல உடல்நலத்துடனும் மகிழ்வுடனும் லலிதா காணப்பட்டாள். இவரே உணவளிக்கிறார், லலிதா இவரிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறது. சில கோவில் மற்றும் தர்காவில் நடக்கும் விழாக்களில் லலிதாவை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது அவளின் கண்ணியத்தை, கம்பீரத்தை எவ்வகையிலும் குறைப்பதில்லை என்று நீதிபதி கருதுகிறார்.

இருபது ஆண்டு காலம் ஒரு குறிப்பிட்ட சூழலில் இருந்து, குறிப்பிட்ட நபர்களிடம் நெருங்கி பழகி வாழ்ந்து வரும் லலிதாவை, அனைத்திலிருந்தும் பிரித்து வனத்துறையின் முகாமுக்கு அனுப்பினால் லலிதா அடையும் மனத்துயரையும், அதன் உளவியல் பாதிப்புகளையும் நீதிபதி கருத்தில்கொண்டு லலிதாவை மனுதாரருடனேயே, இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்துகொள்ள அனுமதிக்கிறார்.

அவர் இந்த முடிவை வருவதற்கு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் கொடுக்காத தெளிவை புகழ் பெற்ற ஜெர்மனிய இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் Peter Wohlleben  அவர்களின்   “The Inner Life of Animals” என்ற புத்தகம் மூலம் தான் அடைந்ததாக  நீதிபதி குறிப்பிடுகிறார். யானை நுண்ணுணர்வு மிக்கதும், தான் என்ற அறிதல் உடையதும் ஆகும் என்றும்; அவை  mirror testல் தேர்வடைந்ததையும் சுட்டிக்காட்டும் நீதிபதி Peter Wohlleben அவர்கள் பலவருட நேரடி அனுபவத்தில் கண்டடைந்து கூறிய உண்மையை ஆப்த வாக்கியமாக எடுத்துகொள்கிறார்.

அது நீங்கள் தொடர்ச்சியாக எப்பொழுதும் சொல்லிக்கொண்டு வரும்,கருத்துதான் “மனிதனுக்கு உள்ள அத்தனை உணர்வுகளும் விலங்குகளுக்கும் உள்ளன.  அன்பு, சோகம், இரக்கம் போன்ற மனிதனின் உணர்வுகள் விலங்குகளிடமும் நிறைந்துள்ளன.”

வி.எஸ்.செந்தில்குமார்

அன்புள்ள செந்தில்,

ஓர் அழகான சிறுகதைபோன்ற நிகழ்வு. உண்மையிலேயே நெகிழ்ச்சியை உருவாக்கியது. இந்த நாளே அழகானதாக ஆகிவிட்டது

பலவகையிலும் முக்கியமான தீர்ப்பு இது. இந்தியாவில் விலங்குகள் பற்றிய சட்டங்கள் எல்லாமே பிரிட்டிஷ் சட்டத்தின் அடியொற்றி அமைந்தவை. பிரிட்டிஷ் சட்டம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவின் அறவுணர்ச்சியும் தத்துவநோக்கும் கொண்டது. மானுடஉரிமைகள் மானுட சமத்துவம் பற்றிய அதன் நோக்கு உலகவரலாற்றின் சாதனைகளில் ஒன்று. முந்நூறாண்டுகள் நீண்ட ஐரோப்பிய மறுமலர்ச்சியின் கொடை அது. பல்வேறு தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த சமூகநோக்கின் விளைவு.

ஆனால் இயற்கைபற்றி, விலங்குகள், உயிர்க்குலங்கள் பற்றி அதன் பார்வை கிறிஸ்தவ மதத் தரிசனமாகிய ’மனிதமைய வாதத்’தை ஒட்டியது. மனிதனின் நலனும் மனிதனின் வசதியுமே எப்போதும் கருத்தில்கொள்ளப்பட்டன. ஹெகல் முதல் ரஸ்ஸல் வரையிலான அத்தனை தத்துவஞானிகளும் இக்கோணத்தில் ஒரே நிலைபாட்டையே கொண்டிருந்தனர். இப்போது இயற்கை பேணப்படவேண்டும், விலங்குகள் பேணப்படவேண்டும், உயிர்ச்சமநிலை பேணப்படவேண்டும் என்று ஐரோப்பா சொல்வதுகூட அது மனிதவாழ்க்கைக்கு இன்றியமையாதது என்னும் கோணத்திலேயே.

ஆனால் அந்த எண்ணத்தை அவர்கள் வந்தடைவதற்குள்ளாகவே ஐரோப்பாவின் பல்லுயிர்பெருக்க நிலையை திரும்ப கொண்டுவராதபடி அழித்துவிட்டார்கள். ஊனுண்ணிகள், நச்சுயிர்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. இன்றுகூட ஐரோப்பாவில் பல இடங்களில் வேட்டையாடுவது அனுமதிக்கப்பட்டிருப்பதை நேரில் கண்டேன். இன்றும் ஆப்ரிக்காவிலும் கீழைநாடுகளிலும் பெருமளவில் இயற்கையை அழிப்பதில் ஐரோப்பிய அமெரிக்க அகழ்வு நிறுவனங்கள் பெரும்பங்காற்றுகின்றன. ஆப்ரிக்கநாடுகளில் வேட்டையை சட்டபூர்வமாக்கி, அதை பயன்படுத்தி வேட்டையாடிக்களிப்பவர்களும் அவர்களே.

ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைகனி மார்க்ஸியம். பலவகையிலும் அது ஐரோப்பிய முதலீட்டியத்தின் எதிர்நகல். ஆகவே அது சென்ற இடங்களிலெல்லாம் இயற்கையை முற்றாக அழித்தது. மனிதனுக்காக இயற்கை, இயற்கையை மனிதன் வென்று நுகரவேண்டும் என்னும் பார்வை மார்க்ஸியத்தின் உள்ளுறை. மார்க்ஸிய இலக்கியங்களே இயற்கைமீதான மனிதனின் ‘வெற்றி’யை பாடுபவைதான். ருஷ்யா உலகின் மாபெரும் இயற்கையழிவை தன் நிலத்தில், குறிப்பாக சைபீரியாவில் நிகழ்த்தியது. அதன் விலையை உலகு அளிக்கவிருக்கிறது. சீனா இன்று உலகிலேயே வனவிலங்குகள் அழிப்பு, இயற்கை அழிப்பு ஆகியவற்றில் முதலிடத்திலுள்ளது.

விலங்குகளை ஆளுமைகளாக பார்க்கும் பார்வை ஐரோப்பாவுக்கு இன்னமும் அயலானதே. ஜேன் குடால், டேவிட் அட்டன்பரோ போன்ற அறியப்பட்ட ஆளுமைகள் சிலரே அந்த பொதுப்புரிதலுக்கு எதிராக விலங்குகளின் ஆளுமையை பொதுவெளியில் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். ஐரோப்பாவின் எண்ணங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் விலங்குகள் ஆன்மாவற்றவை என்ற மதக்கற்பிதமே பொதுப்புத்தியில் ஓங்கி நிலைகொள்கிறது.

இந்தியமரபு தொல்காலம் முதலே விலங்குகளும் ஆத்மா கொண்டவை, ஊழிலும் பிறவிச்சுழலிலும் இருப்பவை, உணர்வுகளும் எண்ணங்களும் கொண்டவை, நன்று தீது அறிந்தவை, மெய்ஞானத்தைக்கூட அடையும் தகுதி கொண்டவை என்று சொல்லிவந்திருக்கிறது. மனிதர்களின் இருப்பும் விலங்குகளின் இருப்பும் வேறுவேறல்ல என்றுதான் இந்திய மதங்கள் நான்கும் சொல்கின்றன. ஆனால் அந்த உணர்வு நம் சட்டங்களில் பிரதிபலிக்கவில்லை. இந்தத் தீர்ப்பு அந்த தொன்மையான தரிசனத்தை முன்வைக்கிறது. அந்த யானையும் இந்தியாவின் ஒரு குடிமகனுக்கு நிகரான வாழ்வுரிமை கொண்டது, அதன் நலனையும் இந்தியச் சட்டம் கருத்தில் கொண்டாகவேண்டும் என்று இந்தத் தீர்ப்பு குறிப்பிடுகிறது

இது ஒரு மிகமுக்கியமான முன்னகர்வு என நினைக்கிறேன். இதிலிருந்து இன்னும் பல புதிய வழிகள் கிளைக்கக்கூடும். இந்த நிலம் இங்கே வாழும் மனிதர்களுக்கு மட்டும் முற்றுரிமைகொண்டது அல்ல. இதை தங்கள் நலனுக்காக என்னசெய்யவும் மனிதர்களுக்கு உரிமை இல்லை. இங்குவாழும் அனைத்து  உயிர்களுக்கும் இந்நிலம் மீது இணையான உரிமை உண்டு. இன்றேகூட வனவிலங்குகளின் எண்ணிக்கையை எடுக்கிறோம், அவற்றின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்கிறது, அவற்றின் வாழ்வுரிமையை அரசு உறுதியளிக்கிறது.

[ஒவ்வொரு வனவிலங்கின் சாவும் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவேண்டும் என்ற கொள்கையை கொண்டுவந்த யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை நினைத்துக்கொள்கிறேன். வளர்ப்பு யானை  மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதும் முக்கியமானது என்று அவர் வாதாடி புத்துணர்ச்சிமுகாம்களை அறிமுகம் செய்தார். அவரே இந்த தீர்ப்புக்கான முன்னோடி]

நாளை குடிமகன் என்ற சொல்லுக்கான இலக்கணத்தையே நாளை நாம் மாற்றிக்கொள்ள நேரலாம். இங்குள்ள ஒவ்வொரு உயிரினமும் வாழ்வுரிமை கொண்டதே, அவற்றை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதனால் அவை ஒருவகை குடியுரிமையும் கொண்டவையே என்று ஒரு பரந்துபட்ட சிந்தனைக்கு நாம் நாளை சென்று சேரக்கூடும். விலங்குகளும் குடிகளே என்று நாம் சட்டம் வகுக்கும் காலமும் வரலாம். அதை நோக்கிய தீர்க்கதரிசனம் கொண்ட காலடி இந்த தீர்ப்பு.

மிகமுக்கியமான தீர்ப்பு. அதில் குழந்தையின் உரிமையையும் யானையின் உரிமையையும் ஒப்பிட்டிருக்கும் இடம் கவித்துவமானது

ஜெ

கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு

முந்தைய கட்டுரைநினைவின் இசை
அடுத்த கட்டுரைவெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்