சினிமாவுடன் எந்த உணர்வுரீதியான தொடர்பும் கொள்ளக்கூடாது; அதற்கு நான் அந்நியன், விருந்தாளி மட்டுமே என்று எனக்கு நானே எப்போதும் சொல்லிக்கொள்வேன். அதன் எந்தக்கொண்டாட்டத்திலும் நான் இல்லை. அதன் வெற்றிதோல்விகளை கருத்தில்கொள்வதில்லை. அதில் உண்மையான நண்பர்கள் உண்டு, ஆனால் தொழில்முறையாக எந்த நட்பையும் பேணிக்கொள்வதில்லை.
ஆனால் நான் சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகளாகின்றன. 2004ல் கஸ்தூரிமான் படத்துக்காக லோகியால் அழைத்துவரப்பட்டேன். இந்த நாட்களில் ஆண்டுதோறும் படங்களுக்கு எழுதியிருக்கிறேன். படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் எதையுமே செய்யவில்லை என்றாலும் சினிமா என்னை உள்ளே வைத்திருக்கிறது
அதற்கு முதன்மைக்காரணம் ஒரு கருவை கதைக்கட்டமைப்பாக மாற்றும் என் திறமை, அதிலிருக்கும் விரைவு. ஆனால் அதற்கப்பால் நல்லூழும்தான். ஏனென்றால் சினிமாவின் பல்லாயிரம் இணைவுக்கணக்குகளில் ஊழின் ஆடல் மிகுதி.
பதினைந்து ஆண்டுகள் நீளமான காலகட்டம். அறியாமலேயே கடந்தகால நினைவுகளைச் சேர்த்துவிடுகிறது. நிகழ்காலம் பெரிய ஈர்ப்பெல்லாம் உருவாக்குவதில்லை. நான் எழுதிய மூன்று படங்களின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. நான் இங்கே வீட்டில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் கடந்தகாலம் பெரும் உணர்ச்சிக்கொந்தளிப்புடன் வந்து அறைகிறது.
கடந்தகாலத்தை நிலைநிறுத்துவனவற்றில் சினிமாப்பாடல்களுக்கு இருக்கும் ஆற்றல் அளவிறந்தது. இசை காலத்தால் பழையதாவதில்லை, சொல்லப்போனால் நினைவுகளைச் சேர்த்துக்கொண்டு மேலும் ஆற்றல் மிக்கதாக ஆகிறது. காட்சிகள் அந்தக்காலத்தை கல்லில் பொறித்தவை போல அழியாமல் நிறுத்துகின்றன.
தற்செயலாக யூடியூபில் கஸ்தூரிமான் பாடல்களைப் பார்த்தேன். எத்தனைபேர் அதன் மெல்லிசை மெட்டுக்களில் மனம்தோய்ந்திருக்கிறார்கள் என்று எண்ணி வியப்படைந்தேன். அந்தப்பாடல்கள் வெளிவந்தபோது எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை. அது ஏ.ஆர்.ரஹ்மானின் பொற்காலம். இசையின் திசை வெகுவாக மாறிவிட்டிருந்தது.
அதோடு கஸ்தூரிமான் ஒரு தோல்விப்படம். அது வெளியான அன்றே புயல்சின்னம் உருவாகியது. தொடர்ச்சியாக நான்கு புயல்சின்னங்கள். அது ரிலீஸான ஒரு திரையரங்கே இடிந்துவிழுந்தது. அவ்வளவுதான், படம் எழவே இல்லை. தோல்வியடைந்த படத்தின் பாடல்கள் அப்படியே மறக்கப்பட்டுவிடுகின்றன.
இன்றும் அந்த மெல்லிசைமெட்டுக்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்படையச் செய்கிறது. அன்று கேட்கலியோ கேட்கலியோ பாட்டின் மெட்டு என் செல்பேசியின் அழைப்போசையாக நெடுங்காலம் இருந்திருக்கிறது.எனக்கு பிடித்த பாடல் அது. ஒரு பொற்காலம் பிறக்கும் லோகிக்குப் பிடித்தபாடலாக இருந்தது.
கோபிசெட்டிப்பாளையம் ஊரில் தங்கினோம். அமராவதி அணையருகே செட். அங்கேயே பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றது. நான் முழுமையாகவே நின்று ஈடுபட்ட படப்பிடிப்பு. லொக்கேஷன் பார்ப்பது முதல் ஷாட் பிரிப்பது வரை கவனித்தேன். டப்பிங்கில் ஈடுபட்டேன். படம் காகிதத்தில் இருந்து திரையரங்கு வருவதுவரை முழுமையாக உடனிருந்தேன்.
இளையராஜாவை நான் அணுகியறிந்த காலம் அது. இசையமைக்கையில் அவருடனேயே இருந்தேன். அவர் இசைக்குறிப்புகளை எழுதுவது, அவற்றை பாடிப்பதிவுசெய்வது, பாடகர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் சொல்லிக்கொடுப்பது, பதிவுசெய்து இசைசேர்த்து ஒருங்கிணைப்பது அனைத்தையும் அருகிருந்து கண்டேன்.
’இந்த நாள் முதல் இளவேனில்’ என்ற வரியை பாடகருக்குச் சொல்லிக்கொடுக்க இளையராஜா முக்கால்மணிநேரம் எடுத்துக்கொண்டார். திருத்திக்கொண்டே இருந்தார். அதில் என்னதான் எதிர்பார்த்தார், எது அமைந்தது என்று எனக்குப் புரியவேயில்லை. இன்று கேட்கையில் அந்த வரியே இளையராஜா குரலில்தான் ஒலிக்கிறது.
நானறியா ஒரு கலையுலகில் முழுவிசையுடன் நுழைந்த நாட்கள் அவை. லோகியும் நானும் சென்னை விஜய்பார்க்கிலும் பின்பு வளசரவாக்கத்தில் ஒரு வீட்டிலும் இணைந்து தங்கியிருந்தோம். அவருடன் அணுக்கமாகி பேசிப்பேசி இரவுகளை கழித்தேன். அவருடைய அனுபவங்கள் ஒவ்வொன்று அரிதானவை. லோகி தடைகளே அற்ற மனிதர். முற்றிலும் வெளிப்படையானவர்.
நினைவுகள் பெருகிவந்து அறைகின்றன.பாடல்கள் சிலசமயம் காலத்தை கரைத்தழித்துவிடுகின்றன.