இந்திய சிந்தனை மரபில் குறள் 4

ஈ. குறள்நீதி என்னும் அழியாத கவிதை

குறள் ஒரு ஸ்மிருதியா இல்லை சுருதியா? இந்திய ஞானமரபின் விவாதங்களில் இந்த வினா முக்கியமானது. இந்திய மெய்யியல் நூல்களை ஆராயும்போது நடராஜகுரு இந்தவினாவை எப்போதும் எழுப்பிக்கொள்கிறார். நெறிகளை அறிவுறுத்தும் நூல் ஸ்மிருதி. அடிப்படையான தரிசனங்களை முன்வைக்கும் நூல் சுருதி. பகவத்கீதையைப்பற்றி பேசும்போது அது ஒரு ஸ்மிருதி அல்ல சுருதிதான் என்று நடராஜகுரு தன் பகவத்கீதை உரையில் விவரிக்கிறார். ஏனென்றால் கீதை நெறிகளை அறிவுறுத்தவில்லை, நெறிகளுக்கு ஆதாரமாக உள்ள தத்துவப்பிரச்சினைகளை ஆராய்கிறது. அவற்றைச்சார்ந்து தன் முரணியக்க தரிசனத்தை முன்வைக்கிறது.

குறளை ஒரு வெறும் நீதிநூலாக அதாவது ஸ்மிருதியாக பார்க்கும் பார்வையே நம்மில் மேலோங்கியிருக்கிறது. குறளின் தத்துவ, தரிசன தளங்கள் குறைவாகவே பேசப்பட்டுள்ளன. குறள் ஒரு ஸ்மிருதியா என்றால் ஆம் என்ரே சொல்லவேண்டியிருக்கும். ஆனால் அது ஒரு சுருதியும் கூட என்று அந்நூலின் மீதான விரிவான வாசிப்பனுபவத்தைச்சார்ந்து கூறமுடியும் என்பதே என் கருத்தாகும்.

குறள் ஓர் ஆயுதமேந்திய பிரதி அல்ல. அது தனக்குப்பின்னால் ஓர் அதிகாரத்தை நிறுத்திக்கொண்டு அதன் குரலாகப்பேசவில்லை. அடக்குமுறையையோ ஆதிக்கநோக்கோ அதன் கூற்றில் இல்லை. குறளின் குரல் அறத்தின் அதிகாரத்தையே முன்னிறுத்துகிறது. அறம்சார்ந்த ஒரு விவாதத்தை உருவாக்கி அதில் கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்தை அடைந்து தன்னை நிறுவிக்கொள்ள அது முயல்கிறது என்று மேலும் திட்டவட்டமாகச் சொல்லலாம். அதற்கான காரணங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன. அது கருத்தியலாதிக்கம் தேவைப்பட்ட இனக்குழுத்தொகுப்புக் காலகட்டத்தை தன் உருவாக்கப்பின்னணியாகக் கொண்டது.

அத்துடன் குறள் சமண-பௌத்த மதங்களின் தத்துவார்த்தமான பின்னணி கொண்டது. ஆகவே குறளில் வன்முறையம்சம் இல்லாமல் இருப்பதும் அதன் அறன் வலியுறுத்தல்கள் தனிமனித அகத்தை நோக்கிய அறைகூவல்களாக இருப்பதும் இயல்பானதே. இக்காரணங்களால் குறளை ஒரு மென்மையான ஸ்மிருதி என்று சொல்ல முடியுமே ஒழிய அதை ஒரு சுருதி அதாவது மெய்ஞானநூல் என்று கூற முடியாது.

குறள் சுருதியாக ஆவது அதில் உள்ள ஆசிரியன் கவிஞனாக இருப்பதனால்தான் என்பதே என்னுடைய எண்ணமாகும். ஏற்கனவே ‘குறள்- கவிதையும் நீதியும்’ என்ற கட்டுரையில் இந்த மையக்கருத்தை நான் விவாதித்திருக்கிறேன். ஸ்மிருதிகள் எனப்படும் நீதி நூல்களில் எப்போதுமே ஆசிரியனின் ஆளுமை வெளிபப்டுவதில்லை. ஒரு தொகுப்பாளனாக மட்டுமே அவனுடைய குரல் அவற்றில் வெளிப்படுகிறது. மனுஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

மனு புராணங்களில் சுட்டபப்டும் ஒரு தனித்த ஆளுமை. ஆனால் யாக்ஞ வல்கிய ஸ்மிருதியின் ஆசிரியராகச் சொல்லப்படும் யாக்ஞவால்கியர் பிருஹதாரண்யக உபநிஷதத்தின் ஆசிரியரான யாக்ஞவால்கியராக இருக்க வாய்ப்ப்பில்லை. பிரகதாரண்யக உபநிஷதத்தின் ஆசிரியர் வேதாந்தி. அவருக்கு ஒரு ஸ்மிருதியை உருவாக்கும் மனநிலை இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதுடன் யாக்ஞவால்கிய ஸ்மிருதியின் நீதிகள் அவர் உபநிஷதத்தில் முன்வைக்கும் தரிசனங்களுடன் முரண்படவும் செய்கின்றன. யாக்ஞவால்கியரின் பெயர் அந்த ஸ்மிருதிக்கு ஒரு கனத்துக்காக அளிக்கப்பட்டிருக்கலாம் என்றே படுகிறது. யம ஸ்மிருதி நாரத ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, போன்றவையும் இவ்வாறு கற்பிதமான ஆசிரியன் கற்பிக்கப்பட்ட நூல்களே.

அதாவது ஸ்மிருதிகள் பெரும்பாலும் ஒரு சமூகத்தில் நிகழ்ந்த நீதிசார்ந்த உரையாடலின் விளைவாக ஒரு சமரசப்புள்ளியாக தொகுக்கபப்ட்டவை. அந்தப்பணியில் பலர் ஈடுபட்டிருக்கலாம். ஓர் தர்மசபை, அல்லது ஓர் அரச சபை, அல்லது ஒரு குருமரபு. அவை பலகாலங்களிலாக திருத்தியமைக்கப்பட்டும் செப்பனிடப்பட்டும் அவற்றின் இறுதிவடிவத்தை அடைந்திருக்கலாம். பின்னர் ஓர் ஆசிரியன் அவற்றுக்குத் தேவை என்னும் நிலை ஏற்பட்டபோது ஏற்கனவே அங்கீகாரமும் மதிப்பும் பெற்ற ஒரு ரிஷியின் பெயர் அந்நூலின் ஆசிரியராக அறிவிக்கப்படுகிறது. நம்பூதிரி சமூகத்தில் பதினாறாம் நூற்றாண்டில் உருவான ஸ்மிருதியான சங்கர ஸ்மிருதிக்கு எட்டாம் நூற்றாண்டு அத்வைத ஆசிரியரான சங்கரர்தான் ஆசிரியர் என்று சொல்லப்பட்டது.

ஏன் ஸ்மிருதிகளில் ஆசிரியரின் இருப்பு முக்கியமல்லாதாகிறது என்றால் அவற்றில் ஆசிரியனின் கற்பனைக்கும் ஞானத்துக்கும் பங்களிப்பே இல்லை என்பதனால்தான். அவன் அவற்றில் தொகுப்பாளனும் விளக்கக்காரனும் மட்டுமே. வலுவான ஆசிரியன் குரல் கொண்ட ஸ்மிருதி என்றால் அது அர்த்த சாஸ்திரம்தான். ஆனால் அதில்கூட நூலுக்குள் ஆசிரியனின் முகம் பெரிதாகத்தென்படுவதில்லை, அவனைப்பற்றிய தொன்மங்களே அவனை நமக்குக் காட்டுகின்றன. மிக அபூர்வமாக சில இடங்களில் நாம் சாணக்யனின் தொலைநோக்கையும் கூர்மையையும் அவன் சொற்கள் வழியாகக் காண்கிறோம். ஸ்மிருதியாசிரியர்களில் மனுவும் சாணக்யனுமே பெரிய ஆளுமைகள்.

ஆனால் திருக்குறளில் ஆரம்பம் முதலே ஆசிரியனின் இருப்பு வெளிப்பட்டபடியே இருக்கிறது. ஆசிரியனின் கற்பனைத்திறன், நுண்ணுணர்வு,  அவனுக்கே உரிய தரிசனம் ஆகியவற்றை நாம் குறளில் காணமுடிகிறது. ஆகவேதான் குறள் ஒரு மாபெரும் நீதிநூல் என்பதுடன் மாபெரும் கவிதைநூலாகவும் நம் மனங்களில் பதிந்திருக்கிறது. தன் மகத்தான கவித்துவத்தின்மூலமே குறள் சுருதியாக ஆகிறது. மானுடத்தின் மகத்தான மூலநூல்களுள் ஒன்றாக ஆகிறது.

குறள்பாக்களை நாம் வாசகன் நோக்கில் இரண்டாகப்பிரிக்கலாம். வாழ்க்கையின் ஓரு தருணத்தைச் சார்ந்து சாத்தியமான ஒரு சிறந்த நீதியைச் சொல்லக்கூடிய குறள்கள். மற்றும் அத்தருணத்தில் இருந்து கவித்துவத்தின் எழுச்சியுடன் மேலெழுந்துசென்று தன்னிச்சையான வெளிப்பாடு நிகழும் இடங்கள். இருவகை குறள்பாக்களும் மாறிமாறி நம் பார்வைக்கு வந்தபடியே இருக்கின்றன. முதல்வகைக்குறள்களை நாம் பெரும்பாலும் தனித்த நீதிக்கருத்துக்களாகக் கண்டு விவாதிக்கிறோம். சிறப்பான அழுத்தமில்லாமல் வரக்கூடிய பல குறள்களை எளிய கூற்றுகளாகக் கண்டு ஒதுக்கிவிட்டு மேலே செல்கிறோம்.

குறளை வாசிப்பதற்கான சிறந்த முறை என்பது அதை தனிக்கூற்றுகளாக வாசிக்காமல் ஒரு எடுத்துரைப்பாக அல்லது தொடர் விவாதமாக வாசிப்பதே. ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரு கட்டுரை போல தொடர்ச்சியான கருத்துக்களாக எடுத்துக்கொள்ள்ளலாம். ஒரு குறளுக்கும் அதற்கு அடுத்த குறளுக்கும் இடையேயான உறவை கவனித்து பொருள்கொள்ள வேண்டும். அவ்வாறாக ஒட்டுமொத்த குறளையே ஒரு பெரும் விவாதமாக வாசிக்கலாம். அப்போது எளிமையாக நமக்குத்தோன்றும் பலவரிகள் முழுமையில் முக்கியமான பங்காற்றுவதை நாம் காண்போம்
 
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.

‘ஊக்கம் இல்லாதவர் இந்த உலகத்தில் பெருமிதமாக நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பைபெறமாட்டார்’ என்ற எளிய நீதிக் கருத்தைச் சொல்லும் குறள் இது. குறளின் மென்மையான நீதிக்கூற்று முறைக்குச் சிறந்த உதாரணம். ஊக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் வருவது இக்குறள்.

நான் வலியேன் என்ற செருக்கு என்பது பெரும்பாலும் எல்லா நீதிநூல்களிலும் கடிந்து விலக்கப்பட்டிருக்கக் காணலாம். ஆனால் தண்டனைகளைப் பற்றிப் பேசும் நீதிநூல்கள் அதை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக முன்வைக்கின்றன. சமயச் சார்புடைய நூல்கள் அதை ஒரு பாவமாக கூறுகின்றன. இறைவனால் தண்டிக்கப்படக்கூடிய ஒரு பிழையாக அதைச் சொல்கின்றன. குறைந்தபட்சம் வள்ளியம் என்னும் செருக்கு நம்மை அழித்துவிடும் என்ற கடும் எச்சரிக்கையாவது அதில் இருக்கும்.

ஆனால் ஊக்கம் உடையவர்களுக்கு கிடைக்கும் ஒரு வெகுமதியாகவே வள்ளுவர் அதைச் சொல்கிறார் என்பது வியப்புக்குரியது. ஆனால் இக்குறளை ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் தொடர்ச்சியில் வைத்து நோக்கும்போது இதன் பொருள் மேலும் விரிவதைக் காண்கிறோம். ‘ஊக்கம் உடையவரே உடையவர்கள், பிறர் எது இருந்தாலும் இல்லாதவரே’ என்று தளர்விலாத செயலூக்கத்தைச் சொல்லி மேலே பேச ஆரம்பிக்கிறது இந்த அதிகாரம். ‘ஊக்கம் கொண்ட உள்ளம் உடைமையே உடைமை ,பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும்’ என்று மேலும் விளக்குகிறது. இவ்வாழ்க்கையில் வாழவேண்டுமென்ற ஊக்கமும் வெல்லவேண்டுமென்ற துடிப்பும் கொண்டவர்களுக்கே செல்வமும் வெற்றியும் அமைகிறது என்று வலியுறுத்திச் செல்கிறது வள்ளுவரின் கூற்று. செல்வமும் வெற்றியும் ஊக்கமுடையவனை நோக்கி வழிகேட்டுச்செல்லும்.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு

என்று ‘ஊக்கம் எந்த அளவுக்கு உள்ளதோ அந்த அளவுக்கே மனிதர்களின் உயர்வும் அமைகிறது’ என்று வலியுறுத்தும் குறள் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என அறிவுறுத்தியபின் மேலும் முன்னால்சென்று இன்னும் தீவிரமான ஒரு படிமத்தை அளிக்கிறது

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு.

‘தன் தசையின் அம்பு புதைந்தபோதும் அஞ்சாமல் முன்னால் பாயும் மதயானையைப்போல நெஞ்சுரம் கொண்டவர் வீழ்ச்சியிலும் கூட அஞ்சாமல் முன்செல்வார்’ என்று சொல்லி அதற்கு அடுத்தபடியாகவே முதலில் சொல்லபப்ட்ட குறளை முன்வைக்கிறார் வள்ளுவர்.

ஊக்கத்தின் எல்லையில்லாத வல்லமையைச் சொல்லிவந்த அதிகாரம் இது. மானுடவாழ்க்கை என்பது மன ஊக்கம் என்னும் நீரில் மிதக்கும் மலர் மட்டுமே என்ற மென்மையான உவமைக்குப் பின்னர் உயிர்கொல்லும் தாக்குதலுக்கு ஆளாகியும்கூட கொம்புகுலுக்கி, துதிக்கை சுழற்றி, பிளிறி அம்பு எய்தவனை நோக்கியே பாய்ந்துசெல்லும் யானையின் மூர்க்கத்தையும் வேகத்தையும் உவமையாக ஆக்குகிறார். அந்த உச்சகட்டச் சித்தரிப்புக்குப் பின்னர்தான் இவ்வரி வருகிறது. ஊக்கம் இல்லாதவர்களுக்கு வலியவன் என்னும் நிமிர்வு கிடையாது.

ஆனால் அடுத்த குறள் அவ்வெண்ணத்தின் அடுத்த தளத்தை விரிவாக்கம் செய்கிறது

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்

‘கனத்தது கூரிய கொம்புள்ளது என்றாலும் புலி தாக்கவந்தால் யானை அஞ்சும்’.  நான் வலியவன் என்னும் செருக்கின் எல்லையைச் சுட்டிககட்டுகிறதா? அஞ்சுவதஞ்சாமை பேதமை என்ற நீதியைச் சொல்லவருகிறதா? அல்லது இயற்கை ஒவ்வொருவருக்கும் வைத்துள்ள இயல்பான எல்லைகளைப் பற்றிச் சொல்ல வருகிறதா?

மீண்டும் ஊக்கமுடைமையை தொகுத்துச் சொல்லி குறள் முடிகிறது. ஊக்கம் என்பதே அறிவு. அதில்லாதவர்கள் மரம்போன்றவர்கள். அறிவார்ந்த ஊக்கத்தை அல்லது நுண்ணறிவாக மாறும் தன்மை கொண்ட தளராத ஊக்கத்தை தன் விவாதத்தின் சாரமாகச் சொல்லி வள்ளுவர் நிறுத்துகிறார் என்று சொல்லலாம்.

இந்த ஒட்டுமொத்த விவாதத்தில் உள்ள நுண்ணிய ஆழ்பிரதிகளை நாம் நம் அனுபவங்களுடன் இணைத்து மிக விரிவாக வாசித்தெடுக்கலாம். குறள் மீதான அத்தகைய வாசிப்பு என்பது ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டிய ஒன்றாகும். குறள்பாக்களின் நடுவே எப்போதுமே நீண்ட இடைவெளிகள் உள்ளன. ஒரு கருத்தைச் சொல்லியபின் அதைச்சார்ந்த நீண்ட விவாதத்தின் அடுத்த உச்சிக்கு சென்று நின்று அதன் மையத்தை மட்டும் சொல்லி மீண்டும் முன்னகர்வது குறளின் வழி. ஒவ்விரு குறள்பாடலும் ஒரு கருத்துநிலையின் சிகரநுனி மட்டுமே. நடுவே சிந்தனையின் பெரும்பள்ளத்தாக்குகள் விரிந்திருக்கின்றன.

இந்த அம்சத்தால்தான் குறள் ஒரு நீதி நூலாக மட்டும் இல்லாமல் ஒரு தத்துவ நூலாகவும் ஆகிறது. குறள் கூறும் நீதிமொழிகளை அறீவுறுத்தல்களாகக் கொள்ளாமல் ஒரு பெரும் தொடர்விவாதத்தின் படிகளாகக் காணும் ஒருவர் அதன் பிரம்மாண்டமான தத்துவ விவாதத்தை எளிதில் சென்றடைய இயலும்.

உதாரணமாக

கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

‘கேட்டவரை பிணித்துவைக்கக்கூடியதாய் கேளாதவர்கள் ஏங்கக்கூடியதாய் இருப்பதே சிறந்த உரையாடல்’ என்று சொல்லும் குறள் பேச்சாற்றலின் கவற்சியையும் தீவிரத்தையும் விவரிக்கிறது. தங்குதடையற்ற பேச்சின்மூலம் கேட்பவரை பிற சிந்தனை இல்லாமல் பிணிக்கும் ஆற்றலைப்பற்றியது இந்த வருணனை. ஆனால் அடுத்து வரும் குறள் இந்தக்கருத்தின் மறுபக்கமாக அமைகிறது

திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கில்லை.

‘ஒவ்வொரு சொல்லையும் அதன் வலிமையையும் உட்பொருளையும் அறிந்து சொல்லுக. அறம் பொருள் இரண்டையும் அடைய அதைவிட சிறந்த வழி ஏதுமில்லை’. இங்கே சொல்லின் மீதான ஆழ்ந்த பிரக்ஞையின் கட்டுப்பாட்டை வள்ளுவர் சொல்கிறார். கேட்டார் பிணிக்கும் சொல்லின்பத்தின் மறுபக்கம் இது. இவ்வாறு குறளின் போக்கில் ஒவ்விரு குறளுக்குப் பின்னரும் எழும் ஏராளமான வினாக்களை விவாதித்து அதன் முடிவில் அமைக்கப்பட்டதாகவே அடுத்த குறள் அமைந்திருக்கிறது.

குறளை வாசிக்கும்போது அந்தத் திறப்புக்காக முயல்வதே சிறந்த வாசிப்பு. குறள்பாக்களுடன் நம் அனுபவத்தைச் சார்ந்து விவாதிக்க ஆரம்பித்தாலே நாம் நுட்பமான தத்துவ விவாதங்களுக்குள் நுழைய ஆரம்பித்துவிடுவோம். ‘கேட்பவரை மனம் மயங்கச்செய்து அடிமைப்படுத்துவது மட்டும்தானா சொல்?’ என்ற வினாவை வள்ளுவரை நோக்கி எழுப்புபவனை நோக்கியே ‘திறன் அறிந்து அறமும் இன்பமும் அளிக்கக்கூடிய விதத்தில் அது சொல்லப்படவும் வேண்டும்’ என்ற பதிலை அவர் சொல்கிறார்.

ஒவ்வொரு குறள்பாடலில் இருந்தும் நாம் செல்லக்கூடிய தூரம் மிக அதிகம் என்பதற்கும் இக்குறளே உதாரணம். சிறந்த சொல் மூலம் அறமும் பொருளும் அமையும் என்று சொல்லும் வள்ளுவர் இன்பத்தையும் வீடுபேற்றையும் விட்டுவிட்டார் என்பதைக் காணலாம். அறம்பொருள் இரண்டையும் அளிக்கும் சொல்திறன் இன்பத்துக்குரிய வழியல்ல. இன்பம் சொல்லின்மையால் அடையப்படுவதல்லவா? வீடுபேறு சொல்லுக்கு அப்பாற்பட்ட அறத்தாலும் பேரறிவாலும் அடையப்படுவதென வள்ளுவர் கூறக்கூடும். அதற்கு நாம் ஒட்டுமொத்த குறளின் செய்தியை நோக்கி மேலும் செல்லவேண்டியிருக்கும்.

முதல் நோக்கில் ஒரு நீதிநூலாக இருப்பினும் குறள் ஒரு மாபெரும் தத்துவமூலநூல் என்பதில் ஐயமில்லை. அதன் தத்துவதளம் மிக விரிவானது. அதை நாம் ஆசீவக,சமண, பௌத்த மதங்களின் அடிப்படை அறத்தரிசனங்களுடன் இணைத்துப்பார்க்கலாம். ஊழ்வினை, கொல்லாமை,பிறவிச்சுழற்சி, அறச்சக்கரம் போன்ற பல தத்துவப்புள்ளிகளை வள்ளுவர் அம்மதங்களில் இருந்து பெற்றுக்கோண்டிருக்கிறார். ஆனால் குறள் ஒரு மதநீதிநூலாக இல்லை.

குறளின் இறைவணக்கப் பாடல்களில் தண்டிக்கும் தெய்வம் இல்லை என்பது இயல்பானதே. சமண பௌத்த மதங்களின் இறையுருவகம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள இறைமையின் மானுட உருவகம் மட்டுமே. ஆனால் தான் சொல்லும் நீதிகளுக்கு ஒரு தெய்வீக அடிக்கோடு போடுவதற்குக் கூட இறைவணக்கத்தை வள்ளுவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. குறள் தான் சொல்லும் நீதியை தன் விவாதத்தின் மூலமலாவே நிலைநாட்ட விழைகிறது. வாசகனின் தர்க்கத்துடனும் நுண்ணுணர்வுடனும் உரையாடலை நிகழ்த்தி தன்னை நிறுவிக்கொள்கிறது.

குறளின் அடிப்படை அறங்களாக முன்வைக்கப்படுபவை கொல்லாமை, ஈகை, பொறையுடைமை போன்றவையே. அவையும்கூட மிக மென்மையாக மனசாட்சியை நோக்கிப் பேசப்படும் தொனியிலேயே வலியுறுத்தப்படுகின்றன.

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும்
ஈதல் இயையா கடை

சாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று வகுக்கிறது சமண மரபு. அப்படிக் கொடுக்க முடியாதபோது சாவதே மேல் என்று ஆணையிட வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறியமைகிறது.

ஒரு மாபெரும் தத்துவநூலாக குறளைக் கண்டு பிற தத்துவ நூல்களுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் விரிவான விவாதத்தை நாம் இனிமேல்தான் தொடங்கவேண்டியிருக்கிறது. இந்திய சிந்தனை மரபு அளிக்கும் அளவீடுகளின்படிப் பார்த்தால் குறள் ஒரு ஸ்மிருதி என்பதுடன் ஒரு சுருதியும்கூட என்று கூறுவதற்கு குறளின் இந்த நுண்ணிய விரிவான தத்துவ விவாதத்தன்மையே போதுமானதாகும்.

ஆனால் இதனினும் முக்கியமான ஓர் அம்சத்தால் குறள் மேலே செல்கிறது. குறளில் உள்ள மகத்தான கவித்துவத்தை ஏற்கனவே சொன்னோம். அக்கவித்துவம் மூலம் குறள் அது முன்வைக்கும் நீதியின் விவாதக்களத்தின் எல்லைகளை மிகச்சாதாரணமாகத் தாண்டிச்செல்கிறது. கால்பந்தாட்டக்களத்தில் சிறகுகளுடன் ஆட வந்த தேவதை போல அப்போது அது தோற்றம் அளிக்கிறது. கவித்துவம் மிக்க குறள்கள் தத்துவத்தின் தளத்தில் இருந்து கவித்துவத்தின் வானில் எழுந்து மெய்த்தரிசனத்தின் பேரொளியுடன் மின்னுகின்றன.

இருவகையில் குறளின் கவித்துவம் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று நீதியைச் சொல்லும் விதத்தில் உள்ள கவித்துவமான நெகிழ்ச்சியும் எழுச்சியும். ஒரு நீதியைச் சொல்ல வரும்போதே ஆசிரியனின் உள்ளம் குழைகிறது. அவனுடைய சொற்களில் கவித்துவத்தின் உணர்வெழுச்சி கைகூடி அது ஒரு கூற்று என்பதற்கு மேலாக ஒரு வெளிப்பாடு ஆக மாறுகிறது

துறத்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றையவர் தவம்

‘துறந்தவர்களுக்கு ஈந்து அவர்களைப் பேணவேண்டும் என்பதற்காகவே மற்றவர்கள் தங்கள் தவத்தை மறந்தார்கள் போலும்!’. கிளிகள் கைதவறி உதிர்க்கும் நெல்மணிகளை மட்டுமே உண்டு ஒரு முனிவர் தவம்செய்தாரென்றும் அவர் முக்திபெற்று இறையுலகு சென்றபோது அங்கே அவருக்கு கதிர்மணிகள் உதிர்த்த பறவைகளும் இருக்கக் கண்டாரென்றும் ஒரு கதை உண்டு. தவம் செய்யும் முனிவன் தன் வீடுபேறுக்காக அதை ஆற்றுகிறான் என்றால் அவனுக்காக உலகியல் துயரங்களை ஏற்று அறமியற்றுவோர் அவனினும் மேல் அல்லவா என்று இக்குறள் வினவுகிறது.

தர்க்கம்சார்ந்து நோக்கினால் இது தவறானதே. துறந்தொர் தங்கள் உளவல்லமையால் விட்டுச்சென்ற உலக இன்பங்களில் இருந்து விடுச்செல்ல இயலாமையினால்தான் இல்லறத்தார் அங்கிருக்கிறார்கள். அவர்கள் தெரிவு செய்துகொண்ட வழி அல்ல அது, அவர்கள் கிடந்துழலும் வழி. ஆகவே அவர்கள் ஆற்றுவது தவமல்ல. துறந்தோரின் தவத்துக்கு அவர்களின் இல்லறம் ஒருபோதும் இணையும் அல்ல. ஒரு நீதிநூலில் துறந்து தவமியற்றுபவருக்கு இணையானவரே அவருக்கு உதவி செய்வோரும் என்று சொல்லியிருந்தால் அந்த நீதிக்கு என்ன பொருள்? துறவை உச்சத்தில் நிறுத்தும்  ஆசீவக,சமண, பௌத்த ஞானமரபுகளின் பின்னணியில் வந்த வள்ளுவர் உண்மையில் சொல்லவரும் கருத்தும் அதுவல்ல.

இங்கே இவ்வரி அக்கணத்தின் கவித்துவ மன எழுச்சிக்காகவே நிலைகொள்கிறது. கவித்துவத்தாலேயே தன் பொருளை அளிக்கிறது இது. இவ்வாறு முக்கியமான நீதிமொழிகளைச் சொல்லும்போது கவிஞனின் நேரடியான அகஎழுச்சி அதில் கைகூடியிருப்பதைக் காட்டும் குறள்கள் ஏராளமாக உண்டு.

இன்னொரு வகையான கவித்துவம் என்பது நுண்பொருள் அளிக்கும் சொற்சேர்க்கையால் கவிஞன் உருவாக்கும் ஆழ்பிரதிமூலம் உருவாவது.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

‘வஞ்சமனத்தவன் தன்னுள்ளே ஒளித்து ஆற்றும் பொய்யொழுக்கத்தைக் கண்டு ஐம்பூதங்களும் உள்ளூரச் சிரித்துக்கொள்ளும்’ இக்குறளுக்கு அளிக்கப்பட்டுள்ள மரபான உரைகளில் இருந்து நெடுதூரம்செல்லும் தன்மை கொண்ட வரிகள் இவை. ஒருவன் பிறருக்குத் தெரியாமல் செய்யும் தீயொழுக்கத்துக்கு ஐம்பெரும்பூதங்களும் சாட்சியாதலால் அவன் பெறப்போகும் தண்டனையை எண்ணி அவை நகைத்துக்கொள்ளும் என்று பரிமேலழகர் உரைசொல்கிறது. பூதங்கள் என்று குறள் சொல்வது பூதங்களை அறியும் ஐம்பொறிகளை என்று மணக்குடவர் உரை வகுக்கிறார்.

இக்குறளுக்குப் பொருள் காண நாம் தத்துவத்துக்குச் செல்வதைவிட வாழ்க்கைக்குச் செல்வதே பொருத்தமானதாகும். ஒருவனின் உண்மையான ஒழுக்கத்தை அவனே அறிவான். உலகின் கண்களில் இருந்து முழுமையாகவே தன் தீயஒழுக்கத்தை ஒருவன் மறைத்துவிடமுடியும். அந்நிலையில் தீய ஒழுக்கத்தின் எந்த சமூக விளைவையும் அறியாமல் அவனால் வாழ்ந்துவிட முடியும். அப்படியானால் அவன் தப்பிவிடமுடியுமா? அவன் ஒழுக்கங்களை அறியக்கூடிய, அதன் இன்பதுன்பங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அவனுடன் உள்ளது. அவன் உடல். அது அறியும். அது அச்செயல்களின் எல்லா எதிர்விளைவுகளையும் அது அனுபவிக்கும்.

ஆசீவக, சமண மரபுகளின் மானுட உடல் ஐம்பூதங்களின் கலவை மட்டுமே என்று சொல்லப்பட்டிருப்பதை இங்கே நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். பூதங்கள் ஐந்தும் உடலெனும் வடிவிலிருந்து அடையும் விடுதலையையே மரணமென்று சமண மரபு சொல்கிறது. பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் என்ற சொல்லாட்சி மூலம் நாம் ஒவ்வொருவரும் உள்ளூர அறியும் ஓர் உண்மையைச் சென்று தொடுகிறது இக்குறள். இத்தகைய நுண்பிரதியின் கவித்துவம் கொண்ட பல குறள்களை நாம் காணமுடியும்.

நீதியை எளிமையான உவமையின் கவித்துவம் மூலம் சொல்லும் குறள்கள் பல உள்ளன.

சினத்தைப் பொருள் எனக்கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று

‘சினத்தை தன் வலிமை என்று எண்ணுபவன் நிலத்தில் கையால் அறைந்துகொள்பவன் போன்றவன்’ பாறையின் முட்டிக்கொள்பவன் என்று நம் நாட்டார் வாய்மொழி. எளிமையால் ஒரு பழமொழியின் கவித்துவத்தை அடையும் இக்குறளுக்கு மேலதிக நுண்பொருள் ஒன்றும் உண்டு. நிலம் என்பது பொறுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது. அகழ்வாரையும் தாங்குவது, தன்னை அறைபவனையும் கூடத்தான்! சினத்தின் பொறுமையின்மைக்கு எதிராக பொறுமையின் அலகிலா வல்லமையை நிறுத்துகிறது இக்குறள்.

நயம்பட உரைத்தலின் அழகை குறளில் கண்டபடியே செல்லலாம்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

‘வேண்டும் என்றால் பிறவா வரம் வேண்டும். பிறவாமையோ எதையும் வேண்டாமென்றில் வந்து சேரக்கூடியது’. இத்தகைய எழில்மிக்க கூற்றுகளை கவித்துவத்தின் ஆரம்பப் படிநிலை என்று சொல்லலாம். கவித்துவச்சாயல் இல்லாதவையும் நேரடிப்பொருளின்மூலம் முற்றாக கூறி நிறுத்துபவையுமான குறள்கள் மிகமிகச்சிலவே.

இரண்டாவது வகையான கவிதைக்குறள்கள் நீதிக்கும் அப்பாற்பட்டு கவிஞனின் தனியனுபவத்தில் கிளைத்த தரிசனத்தின் வெளிப்பாடாக மட்டுமே நிலைகொள்ளும் வரிகள். உச்சகட்ட கவித்துவ வெளிப்பாட்டை மட்டுமே கொண்டவை. அவற்றை மானுட ஆழ்மனத்தின் மொழிப்பதிவுகள் எனு மட்டுமே கொள்ள முடியும். அவற்றில் உள்ள அனுபவமோ நீதியோ அல்லது மெய்ஞானமோகூட இரண்டாம்பட்சமானதே. அவை அவற்றுக்கும் அப்பால் காலந்தோறும் புதிய நீதிகளையும் புதிய அனுபவங்களையும் புதிய ஞானங்களையும் அளித்தபடி நின்றுகொண்டிருக்கின்றன.

உச்சகட்ட கவிமொழிவெளிப்பாட்டை அரவிந்தர் supreme poetc utterance என்று சொல்கிறார். உச்சகட்ட கவித்துவ வெளிப்பாடு பல சமயம் பொருளின் துணையில்லாமலேயே மொழியை தொடர்புறுத்தச் செய்துவிடுகிறது. பொருளை உதறிவிட்டு கவித்துவம் வெகுதூரம் முன்னால்சென்றுவிடுகிறது. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற ரிக்வேதவரியை அரவிந்தர் உதாரணமாகக் காட்டுகிறார். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற வரியை தமிழில் இருந்து முதன்மை உதாரணமாகச் சொல்லலாம்.

உச்சகட்ட கவிமொழிகள் அனைத்துமே ஆப்தவாக்கியங்கள் அல்லது தியானமந்திரங்களும் கூட. அவற்றை ஒரு வாசகன் தனக்குள் சொல்லிக்கொண்டே இருப்பானாகில் அவன் மனதின் ஆழ்தளங்கள் திறந்துகொண்டே செல்வதைக் காண்பான். சுருதிகள் என்னும் நூல்களில் உள்ள  மொழிச்சேர்க்கைகளே அவ்வாறு ஆப்த வாக்கியங்களாக அல்லது தியான மந்திரங்களாக ஆகும் வல்லமை கொண்டவை. திருக்குறள் அத்தகைய ஒரு நூலாக எப்போதும் கருதப்பட்டுவந்திருக்கிறது. அதன் சொற்சேர்க்கைகளை அவ்வாறு உபதேசித்த ஞானாசிரியர்களை நான் அறிவேன்.

குறள் அத்தகைய உச்சகட்ட வெளிப்பாடாக ஆகும் பல வரிகளை நமக்களிக்கிறது. அவை சிலசமயம் பொருள் என்ற வகையில் எளிமையான உடனடித்தளம் மட்டுமே கொண்டவை. நாவில் ஒரு சொற்சேர்க்கையாகக் கிடந்து தியானிக்கும்தோறும்  வளர்பவை. உதாரணம்

‘துஞ்சுவது போலும் சாக்காடு’

தூங்குவதே மரணம் என இச்சொல்லாட்சியை விளக்கலாம். ஆனால் ‘தூங்குவது போன்றது மரணம்’ ‘தூங்குவதுதான் மரணம் போலும்’ ‘தூக்கமும் ஒரு மரணம்’ என்று இந்த வரியின் அர்த்த தளங்கள் பெருகும்.

பலகுறள்கள் தூய அனுபவத்தின் தளத்திலிருந்து கவித்துவத்துடன் மேலெழுகின்றன.

‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்’

என்ற பெரும்புகழ்பெற்ற வரி ஒரு நீதியோ கருத்தோ எண்ணமோ ஏதுமல்ல. ஓர் அனுபவத்தின் உச்சகட்ட அகஎழுச்சி மட்டுமே. எண்ணப்புகுந்தால்  பாற்கடலை தேவரும் அசுரரும் அளாவித் திரட்டிய அமுதத்துடன் சின்னஞ்சிறு கை அளாவும் அமுதம் ஒப்புமைப்படுத்தப்பட்டிருப்பதன் நுட்பம் நம்  கண்ணுக்கு வரக்கூடும்.

அதேபோல் அமுதம் என்றால் அ+மிருதம் என்று பிரிவுபட்டு இறவாமை என்றே பொருள்படும். சிறுகை தொட்ட கூழ் உண்ணும் தந்தையும் அக்கணத்தில் உணர்வது மூதாதை மரபில் இருந்து தன் வரை வந்து தன்னையும் கடந்துசெல்லும் இறவாமையை அல்லவா? ஆனால் இச்சிந்தனைகள் அச்சொற்கள் மேல் ஒழுகிச்செல்வன மட்டுமே. அத்தகைய சிந்தனைகளின் முடிவிலாப் பெருக்கின் ஊற்றுமுகமாக இருக்கிறது அக்கவிதை வரி.

அனைத்தையும் விட மேலாக நிற்பவை குறளாசிரியனின் அறச்சீற்றமாக நெருப்பு எரியும் வரிகள்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்

என்று சீறும் குரல் நீதிநூலாசிரியனுடைய்தோ தத்துவசிந்தனையாளனுடையதோ அல்ல , அது கவிஞனின் குரல்.

குறள் தமிழ்ச்சமூக உருவாக்கம் நிகழ்ந்த காலத்தின் வெளிப்பாடு. இனக்குழு நெறிகள் பெருநீதியால் தழுவப்பட்டு ஒன்றான ஒரு மாபெரும் விவாதக்களத்தின் உச்சம் அது. குடிமரபுகளும் திரண்டு வந்த அரசதிகாரமும் 

குறள் முழுமையான நீதி என்றோ எக்காலத்துக்கும் உரிய நீதி என்றோ உலகப்பொதுமறை என்றோ சொல்லும் மிகைக்கூற்றுகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. முழுமையான நூல் என்றோ எக்காலத்துக்கும் உரிய நூல் என்றோ உலகப்பொதுமறையாகிய நூல் என்றோ ஒருநூல் இருக்க முடியாது. எல்லா நீதிநூல்களும் அச்சமூகங்களின் வளர்ச்சியின் ஒரு முக்கியமான காலகட்டத்தில் அக்காலகட்டத்தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவையே. ஆகவே எல்லா நீதி நூல்களும் காலாவதியாகும் தன்மை கொண்டவையே.

குறளில் பல நீதிகளை நாம் இன்று மறுபரிசீலனை செய்வோம். ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்’ என்று இன்று பெண்ணை நாம் வரையறை செய்ய முடியாது. குறள் துறவுக்கு அளிக்கும் அதீதமான முக்கியத்துவத்தை நாம் இப்போது அளிக்க மாட்டோம். அவையெல்லாம் குறளின் தத்துவப்பின்னணியாக இருந்த சமண மரபில் இருந்து வந்த¨வை. அதேபோல குறள் நீத்தாருக்கு – தென்புலத்தாருக்கு-  அளிக்கும் முக்கியத்துவம்  இன்றைய நோக்கில் ஒரு நம்பிக்கையே ஒழிய ஆசாரமோ நீதியோ அல்ல. அத்தகைய விஷயங்கள் குறள் தமிழ்நிலத்தின் தொல்நெறிகளில் இருந்து பெற்றுக்கொண்டது.

இப்படிச் சொல்லலாம். ஸ்மிருதிகள் காலந்தோறும் மாறக்கூடியவை, மாற்றப்படவேண்டியவை என்றே நம் மரபு சொல்லிவந்துள்ளது. குறளை ஒரு தமிழ்-சமண ஸ்மிருதி என்று கொண்டால் அதில் உள்ள ஸ்மிருதிக்கூறுகள் அனைத்தும் காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளக்கூடியவையே. ஆனால் அது ஒரு சுருதியும் கூட. சுருதியாக அதை ஆக்கும் கூறுகள் என்றும் அழியாதவை. ஏனெனில் அவை ஆதி மானுட சாரத்தில் இருந்து எழுபவை. குறளின் கவித்துவநீதியே அந்த மையக்கூறு.

சுருதி என்றால் ‘முன்பு இல்லாதது, புதிதாக கண்டடையப்பட்டது’ என்ற பொருள் இந்திய ஞான மரபில் காணப்படுகிறது. சுருதி என்றால் ‘எப்போதும் உள்ளது, என்றும் அழியாதது’ என்ற பொருளும் கூடவே கிடைக்கிறது. இந்த இருபொருளுக்கும் ஒரேசமயம் பொருந்துவது உன்னதமான கவிதையே. ஆகவேதான் சுருதிகள் என்று சொல்லப்படும் நூல்கள் அ¨னைத்துமே தூயகவிதைகளாக உள்ளன. குறளும் அதில் ஒன்று.

29-ஜனவரி- 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு பகுதி 4

முந்தைய கட்டுரைஇசை, நீடிக்கும் விவாதம்
அடுத்த கட்டுரைஇந்திய சிந்தனை மரபில் குறள் 5