ராஜாம்பாள்

ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியில் ஒரு நாடகவிளம்பரம் வரும். ”ராஜாம்பாளே ராஜாம்பாளாக நடிக்கும் ராஜாம்பாள்! நவீன நாடகம்!!!” ராஜாம்பாள் என்ற அக்கால நாடகநடிகை ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதிய ராஜாம்பாள் என்ற நாவலைத் தழுவி எழுதப்பட்ட ராஜாம்பாள் என்னும் நாடகத்தில் கதைநாயகி ராஜாம்பாளாக நடிக்கும் விளம்பரம் அது. அந்நாடகத்துக்கு சென்னையில் இருந்து கும்பகோணத்துக்குச் சிறப்பு ரயில் விடப்பட்டதாம்.

ஜே.ஆர்.ரங்கராஜு தமிழில் புனைகதை தொடங்கிய காலத்தில் எழுதிய முக்கியமான நான்கு எழுத்தாளர்களில் ஒருவர். வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி அம்மாள் ஆகியவர்களை பிற மூவராகச் சொல்லலாம். மூவருமே அன்றைய ஆங்கிலப் பொழுதுபோக்கு எழுத்தை நகலெடுத்தவர்கள். அதிலும் ஜே.ஆர்.ரங்கராஜு எழுத்தில் ரெய்னால்ட்ஸ் மற்றும் ஆர்தர் கானன்டாயிலின் செல்வாக்கு மிகுதி

ஜே.ஆர்.ரங்கராஜு இயற்பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு. 1875ல் பிறந்தவர் 1920கள் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். மோகனசுந்தரம் (1911), ஆனந்தகிருஷ்ணன் (1921), வரதராஜன் (1925), சந்திரகாந்தா (1936), ராஜேந்திரன், பத்மராஜு, ஜெயரங்கன் போன்ற இவருடைய நாவல்கள் புகழ்பெற்றவை. இதில் சந்திரகாந்தாதான் பின்னர் சவுக்கடி சந்திரகாந்தா என்றபேரில் நாடகமும் சினிமாவுமாக ஆகியது

ராஜாம்பாள் இருமுறை சினிமாவாக ஆகியிருக்கிறது. 1935ல் வெளிவந்த படத்தை கோயம்பத்தூர் டாக்கீஸ் பட நிறுவனம் தயாரித்தது. ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி.எஸ்.ஸ்ரீனிவாசராவ் கதைநாயகனாக நடித்திருந்தார். கே.என்.ராஜலட்சுமி ராஜாம்பாளாக நடித்தார்

1951ல் வெளிவந்த இரண்டாவது ராஜாம்பாள் படத்தில்தான் துப்பறியும் கோவிந்தனாக ஆர்.எஸ்.மனோகர் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கிய இந்தப்படத்திற்கு வசனம் எ.டி.கிருஷ்ணசாமி. எம்.எஸ்.ஞானமணி இசையமைத்திருந்தார். பாடல்கள் மருதகாசி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் எழுதப்பட்டன.

1951 ராஜாம்பாள்

ஜே.ஆர். ரங்கராஜு பெரும்பாலான நாவல்களை ஆங்கிலநாவல்களை தழுவித்தான் எழுதினார்.1930 வாக்கில் அவருடைய வரதராஜன் என்றநாவலின் முதற்பாகம் வெளிவந்தபோது அது தன் நாவலின் திருட்டு என்று ஆங்கில எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடுத்தார். திருட்டு நிரூபிக்கப்பட்டு ஜே.ஆர்.ரங்கராஜு சிறைசெல்ல நேரிட்டது. அதன்பின் அவர் இலக்கியப்படைப்புக்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டார். இதேபோல வடுவூர் துரைசாமி அய்யங்காரும் இலக்கியத் திருட்டுக்காக தண்டிக்கப்பட்டபின் நாவல்கள் எழுதுவதை நிறுத்திக்கொண்டு தென்னகத்துச் சாதிகள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்

உண்மையில் அன்று இந்நாவல்களுக்கு மிகப்பெரிய சந்தை இருந்தது. நாவல்களை இவர்களே அச்சிட்டு வெளியிட்டனர். பல பதிப்புகள் கண்டவை இவை. இவற்றின் விலையும் அன்றைய கணக்கில் மிக அதிகம். ஆகவே லாபமும் மிகுதி. நாடகவாழ்க்கை நினைவுகளை எழுதும் ஔவை டி.கே.சண்முகம் அவர்கள் ஜே.ஆர்.ரங்கராஜுவுக்கு அவருடைய நாடகத்திற்கான ‘ராயல்டி’யாக ஒரு காட்சிக்கு ஐம்பது அறுபது ரூபாய் என்னும் கணக்கில் பல ஆயிரங்கள் கொடுத்ததாகவும், ஒரு கட்டத்தில் அது கட்டுப்படியாகாமல் நிறுத்திக்கொண்டதாகவும், ஆனால் ஜே.ஆர்.ரங்கராஜுவின் நாடகங்களுக்கு இருந்த மக்கள் ஈர்ப்பு பிறவற்றுக்கு இல்லாததனால் வசூல் குறைந்ததாகவும் சொல்கிறார்.

இந்நாவல்களின் தரம் என்னவாக இருந்தாலும் இவை ஆங்கிலேய ஆட்சியின் ஊழலையும் சுதேசிக்கருத்துக்களையும் சொல்கின்றன. அதனாலேயே ஆங்கிலேயரின் கசப்புக்கு ஆளாகியிருக்கலாம். பதிப்புரிமை பிரச்சினையை காரணம் காட்டி இவர்களின் எழுத்தை ஆங்கிலேய அரசு ஒடுக்கியது என்பதுதான் உண்மை.

நான் ராஜாம்பாள் நாவலை நாகர்கோயிலில் தெருக்கடையில் ஒரு பிரதி வாங்கியிருக்கிறேன். பழைய பிரதி. 1926 ல் வெளியானது. அட்டை இல்லை. ஆழ்வார் ரெட்டியார் ,ஓய்வுபெற்ற தபால்அதிகாரி, 5- ஜெகன்னாதன் தெரு, ராமவர்மபுரம், நாகர்கோயில் என்று விலாசம் ரப்பர் ஸ்டாம்பாக அடிக்கப்பட்டிருக்கிறது. பழைய ஆப்டோன் படங்கள் இருக்கின்றன. அன்றைய கணக்கில் மிக செலவேறிய பதிப்பாக இருக்கவேண்டும். நூறாண்டுகள் ஆகப்போகின்றன, காகிதம் அப்படியேதான் இருக்கிறது. தரமான காகிதம், அழகான அச்சு , பிழையற்ற மொழிநடை

நீளநீளமான நாடகத்தனமான உரையாடல்கள்தான் இந்நாவலின் பாணி. எல்லாமே ஒருவர் இன்னொருவரிடம் சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளன. ஆகவே இவை எளிதாக நாடகமாக ஆகியிருக்கின்றன. நிகழ்ச்சிகள், சாகசங்கள் எல்லாமே காட்சிவடிவாக அல்லாமல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பேச்சுக்கள் எல்லாம் அச்சுத்தமிழில் உள்ளன. பத்தி பிரிக்கப்படாமல் பல பக்கங்கள் ஒரே ஒழுக்காகச் செல்லும் நடை. ஆனால் உரையாடல்கள் பத்திகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதியவை பெரும்பாலும் துப்பறியும் நாவல்கள். துப்பறியும் நாவல் என்றால் அப்படிச் சரியாகவும் சொல்லிவிடமுடியாது. அன்றைய பொதுமக்களுக்கு தெருக்கூத்து மற்றும் நாட்டார்க்கதைப்பாடல்களில் இருந்து என்னென்ன பிடித்தமானவையாக இருந்தனவோ எல்லாமே கலந்து துப்பறிதலில் கொண்டுபோய் கோத்துச் சமைத்த கதைகள். சீமான் வீட்டுப்பெண் கதைநாயகி. அவளை காதலிப்பவன், அவளை கல்யாணம் செய்ய விரும்பும் கெட்டவர்கள். அரண்மனைச்சதிகள், அடுக்களைச் சதிகள், மாற்றாந்தாய்க்கொடுமைகள், தாசிகள். கூடவே போலீஸ்,  துப்பறிதல், நீதிமன்ற விசாரணை, சில்லறைச் சாகசங்கள். சாகசங்கள் பெரும்பாலும் மாறுவேடமிட்டு ஏறிக்குதிப்பது என்ற அளவிலேதான் இருக்கும்.

ராஜாம்பாளும் அதே அமைப்புப்படி எழுதப்பட்ட ஒரு கதைதான்.ராஜாம்பாள் பணக்காரரான சாமிநாத சாஸ்திரியின் மகள். அவளுடைய சிற்றன்னைதான் கனகவல்லி. அவள் படிப்பறிவில்லாதவள்,பேராசை கொண்ட தீயவள். அவளுடைய தம்பி நடேச சாஸ்திரி. நடேசன் கெட்டவன். அவனுக்கு ராஜாம்பாளை கட்டிவைக்க கனகவல்லி முயல்கிறாள். ராஜாம்பாள் கோபாலன் என்ற நல்லவனை காதலிக்கிறாள். கோபாலனுக்கே ராஜாம்பாளை கொடுக்கவேண்டும் என்று சாமிநாத சாஸ்திரி நினைக்கிறார்

இத்தருணத்தில் சப்மாஜிஸ்ட்ரேட் நீலமேக சாஸ்திரிகள் உள்ளே நுழைகிறார். அவர் மனைவியை இழந்த ஐம்பதுவயதுக்காரர். அவருக்கு இளம்பெண்ணான ராஜாம்பாளை திருமணம் செய்ய ஆசை. ராமண்ணா என்ற கொடிய சூழ்ச்சியாளரை கனகவல்லி அழைத்து சாமிநாத சாஸ்திரி மகளுக்கு ஜாதகம் பார்க்க அழைக்கும் சோதிடர்களை பணம்கொடுத்து பொய்சொல்லும்படி கேட்டுக்கொள்கிறாள். கோபாலனின் ஜாதகம் தப்பானது என்றும், அவனுக்கு ராஜாம்பாளை கொடுக்கக்கூடாது என்றும் சொல்லவேண்டும். அதே ராமண்ணாவை கூப்பிட்டு தனக்கு ராஜாம்பாளை ஏற்பாடுசெய்தால் பணம் தருவதாக நீலமேக சாஸ்திரி சொல்கிறார்

ராமண்ணாவின் ஏற்பாட்டின்படி சாமிநாத சாஸ்திரி திருட்டுவழக்கில் சிக்கவைக்கப்படுகிறார். அதிலிருந்து விடுதலையாகவேண்டும் என்றால் ராஜாம்பாளை நீலமேக சாஸ்திரிக்கு கொடுக்க அவர் சம்மதிக்கவேண்டும். வேறுவழியில்லாமல் அவர் சம்மதிக்கிறார். ராஜாம்பாளும் அப்பாவின் கௌரவத்தைக் காக்க அதற்கு சம்மதம் சொல்கிறாள். நீலமேக சாஸ்திரியை திருமணம் செய்யவேண்டும் என்றால் அவர் காஞ்சீபுரம் நகருக்கே சோறுபோட்டு தடபுடலாக கல்யாணம் செய்யவேண்டும் என்கிறாள்.

நீலமேக சாஸ்திரி சாமிநாத சாஸ்திரியின் சொத்தெல்லாம் தனக்குத்தானே என்ற நினைப்பில் அவ்வாறே செலவுசெய்கிறார். அவருடைய பணமெல்லாம் காலியாகிறது. ஆனால் திருமணம் நடப்பதற்கு முன்னரே ராஜாம்பாள் காணாமலாகிறாள். அவள் எழுதிப்போட்ட ஒரு துண்டுத்தாள் கிடைக்கிறது. அதிலிருந்து விசாரித்துச்சென்று கோபாலனை இன்ஸ்பெக்டர் மணவாள நாயிடு கைதுசெய்கிறார்.ராஜாம்பாளின் எரிந்து கருகிய சடலம் கிடைக்கிறது

ராஜாம்பாளை கொன்றது உண்மையிலேயே கோபாலன் தானா? விசாரிப்பதற்காக துப்பறியும் கோவிந்தன் வருகிறார். மணவாளநாயிடு, நீலமேக சாஸ்திரி ஆகியோரின் ஜோடனைகளைக் கடந்து துப்பறிந்து உண்மையைக் கண்டடைகிறார். இதை வாசிக்கும் எவரும் இந்நாவலை படிக்கப்போவதில்லை என்பதனால் முடிவைச் சொல்லிவிடலாம். ராஜாம்பாள் சாகவில்லை. செத்தது வேறொரு தாசி. கொன்றவன் நடேச சாஸ்திரி. கேஸ் முடிகிறது, ராஜாம்பாளை கோபாலன் திருமணம் செய்துகொள்கிறான்.

இந்நாவலில் இன்று ஆர்வமூட்டுபவை அன்றைய சமூகச் செய்திகள். சாமிநாத சாஸ்திரியை அன்றைய கணக்கில் முற்போக்கான, சுதேசி எண்ணம்கொண்ட, பிராமணராகவே ஜே.ஆர்.ரங்கராஜூ காட்டுகிறார். அவர் தன் மனைவியிடம் தன்னைப்பற்றிப் பேசும்போது இப்படிச் சொல்கிறார்:

சோஷியல் ரிபார்மில் சேந்தவர்கள் அநேகம்பேர் மேற்படி கூட்டங்களில் வந்து பேசும்போது மாத்திரம் சிறுவயதில் கலியாணம் செய்யக்கூடாதென்றும் பால்யவிதவைகளுக்கு மறுகல்யாணம் செய்யவேண்டுமென்றும் எல்லா ஜாதியையும் ஒரேமாதிரியாக பாவிக்கவேண்டுமென்றும் ஜாதிவேற்றுமையை வேரோடு கருவறுத்துவிடவேண்டுமென்றும் தாசிகள் கச்சேரிக்கு போகக்கூடாதென்றும் சாராயம் முதலிய லாகிரி வஸ்துக்களை குடிக்கக்கூடாதென்றும் பிரமாதமாய் தங்கள் முழுசாமர்த்தியங்களோடும் பிரசங்கம் செய்கிறார்கள். ஆனால் அவரவர்கள் சொந்தத்திற்கு மேற்படி காரியாதிகள் வரும்போது மாத்திரம் நாம் ஏன் முதலில் செய்யவேண்டும், யாராவது நாலைந்துபேர் முதலில் மேற்படி காரியங்களை நடத்திக்காட்டினால் அப்போது யோசிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு மாமூல் பிரகாரம் நடத்திக்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொருவரும் தேசவிருத்தி தங்களால்தான் ஆகவேண்டும் என்று நினைத்து அதற்கு வேண்டிய காரியாதிகள் செய்யும் வரையும் நமது தேசம் விருத்தியாதாகையால் நான் என்னால் கூடியவரையில் எப்படி நடப்பேன் என்று ஒப்பி மேற்படி சங்கத்தில் கையொப்பமிட்டிருக்கிறேனோ அப்படித்தான் நடப்பேன்.

அப்படிப்பட்ட சாமிநாத சாஸ்திரி அதே உரையாடலில் கனகவல்லியின் தம்பி நடேசனைப்பற்றிச் சொல்லும்போது  ”உன் தம்பி நடேசன் படிக்காமல் மாத்திரம் இருந்தாலும் போனால்போகிறதென்று கொடுக்கலாம். அவன் சென்னையில் தேவடியாள்களை வைத்துக்கொண்டு செலவுகள் செய்வதாகவும் ஸ்பென்ஸர் கம்பெனியில் ஏராளமாய் சீமைச்சாராயங்கள் வாங்கிக் குடிப்பதாகவும் பறையர்கள் வீட்டிற்கூட தாரளமாய் சாப்பிடுவதாகவும் என் வக்கீல் எழுதியிருக்கிறாரே” என்கிறார்

நாவல் வெளிவந்த 1913 வாக்கில் சென்னையில் பறையர் உள்ளிட்ட அடித்தள மக்களுக்கான விடுதலை இயக்கங்கள் தொடங்கி வலுப்பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன என்பது வரலாறு. ஆனால் அந்த கருத்துக்கள் பொதுப்புத்திக்குப் போய்ச் சேரவே இல்லை என்பதற்கான சான்று இது.

அன்றைய உபசரிப்புக்கள் , வம்புப்பேச்சுக்கள், நையாண்டிகள் போன்றவற்றை நாவலில் சாதாரணமாக காணலாம். கனகவல்லி ராமண்ணாவை உபசரிக்கிறாள்:

”இராமண்ணா வாரும் வாரும் உட்காரும். பாவம் எங்கிருந்து நடந்து வந்தீரோ. அதிக சிரமமாயிருக்கும் .கொஞ்சம் தாகசாந்தி செய்துகொள்ளும்” என்று சொல்லி எட்டு தோசை, பத்து இட்டிலி, பன்னிரண்டு தையிர்வடை, பன்னிரண்டு சுகியன், ரவாலட்டு ஆறு ஜிலேபி ஏழு பூந்திலட்டு எட்டு ஆகிய இவைகளை ஒரு பெரிய தட்டில் வைத்து தாகசாந்திக்காக சுமார் இரண்டுபடி காப்பித்தண்ணீரும் கொண்டுவந்து அவர் பக்கத்தில் கனகவல்லி அமர்ந்தாள்.

அன்றைய எல்லா நாவல்களிலும் இராமண்ணாவைப்போல தீமையே உருவான, சூழ்ச்சிசெய்கிற, கூட்டிக்கொடுக்கிற பிராமணர்கள் வருகிறார்கள். மாதவையா நாவலிலும் இவர்களைக் காணமுடிகிறது. இவர்கள் அன்று ஒரு சமூகநிகழ்வாகவே நிறைந்திருந்தார்கள் என்று தோன்றுகிறது. பெண்ணுக்கு கணவன் பார்த்தல், சொத்துக்களை விற்று வாங்குதல், பல்வேறு வழக்குகளில் சமரசம் செய்துவைத்தல் ஆகியவற்றை இவர்கள் செய்கிறார்கள். கொழுத்த லாபம் பார்க்கிறார்கள்.

அதற்கு முன்னரே அரசசபைகளில் இந்த சூழ்ச்சிப் பிராமணர்கள் நிறைந்திருந்ததை நாம் நாயக்கர், மராட்டியர் வரலாறுகளில் பார்க்கிறோம். அவர்களின் இன்னொரு வடிவம் இவர்கள். சென்னை, காஞ்சிபுரம், கும்பகோணம் போன்ற ஊர்கள் உருவாகி அங்கே ஒர் உயர்நடுத்தரவர்க்கம்  திரண்டு  வந்த காலத்தில் அதற்குரிய தரகர்கள் தேவைப்பட்டிருக்கலாம்

ராமண்ணா தன் திறமையைச் சொல்கிறார் “மேலவீட்டு சுப்பையர் பெண்ணை யாருங்கல்யாணம் செய்துகொள்ளாமல் கழித்துவிட்டார்களே. சுப்பையர் பத்து பை வெளியே கிளப்பினார். பெண்ணையும் சொத்துக்காரன் வீடுசேரும்படி செய்துவிட்டேன். இராம சுப்பய்யர் மகனுக்கு விழி கண் குருடு என்று யாரும் பெண்கொடுக்கமாட்டேன் என்றார்களே .பன்னிரண்டு பை வெளியே கிளம்பவே ஜட்ஜ் கோபாலய்யர் பெண்ணை கல்யாணம் பண்ணிவைத்தேன்” [பை என்பது ஐநூறு நூபாய் என அடிக்குறிப்பு உள்ளது]

இந்நாவலிலும், அக்கால நாவல்கள் அனைத்திலுமுள்ள முக்கியமான பேசுபொருளாக இருப்பது அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிமுறையில் மலிந்திருந்த ஊழல். நீதிமன்றங்கள் ஊழலாலேயே இயங்குகின்றன. நீதிபதிகள் வெளிப்படையாகவே பேரம்பேசி பணம் வாங்கி தீர்ப்பு சொல்கிறார்கள். குமாஸ்தாக்கள், தாசில்தார்கள், கலெக்டர்கள் அத்தனைபேரும் ஊழலில் திளைக்கிறார்கள்.

ஜே.ஆர்.ரங்கராஜூ இப்படி நீலமேக சாஸ்திரிகளை அறிமுகம் செய்கிறார். ”காஞ்சிபுரம் கஸ்பா சப் மஜிஸ்ட்ரேட் நீலமேக சாஸ்திரிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளின் ஏக குமாரர்.  நீலமேக சாஸ்திரிகளும் வாலாயமாய் யூனிவர்சிடி பரீட்சை கேள்விகளை பரீட்சைக்கு சிலநாட்களுக்கு முன்னாலேயே வரவசைத்து அதை வேண்டுபவர்களுக்கு விற்று பணம் சம்பாதித்து கேள்விகளை கொடுக்கும்படி யூனிவர்சிடி உத்தியோகஸ்தர்களுக்கு பாதியை கொடுத்துவிட்டு மற்றபாதியை வைத்து ஜீவனம் செய்துகொண்டிருக்கும் ஸ்ரீனிவாசய்யங்காராவர்கள் வீட்டில் வருஷம் பூராவும் வேலைசெய்வதும் பரீசை காலங்களில் மட்டும்போய் ஸ்ரீனிவாசய்யங்கார் சொல்லுகிறபடி எழுதி வந்துவிடுவார். அவர் பரீட்சையில் முதன்மையாகவே தேறி வந்தார்”

அன்றைய சென்னைப் பல்கலையில் தேர்வுமுறையில் இதெல்லாம் சாதாரணமாக நடந்திருக்கிறது. கேள்வித்தாள் திருட்டுக்கு சிண்டிக்கேட்டே இருந்திருக்கிறது. ஜே.ஆர்.ரங்கராஜூ நீதிமன்றம் பற்றிச் சொல்கிறார் “இப்படியே பீ ஏ பரீட்சையிலும் தேறினவுடனே சப்ஜட்ஜ் நரசிம்ம சாஸ்திரி பெண்ணை ஐயாயிரம் ரூபாய் வரதக்ஷிணை வாங்கிக்கொண்டு கலியாணம் செய்துகொண்டார். நமது நீலமேக சாஸ்திரிகள் அவருடைய மேலதிகாரிகளை பொன்னாலும் பெண்ணாலும் திருப்தி செய்து காஞ்சீபுரம் சப்மாஜிஸ்ட்ரேட் வேலை பெற்றார்”

இருபத்தைந்தாண்டுக்கால நீதிபதி வாழ்க்கையில் நீலமேகம் பத்துலட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.ஆகவே ராஜாம்பாளை கல்யாணம் செய்ய் விரும்புகிறார்.பத்துலட்சம் என்றால் பத்து லட்சாதிபதிகளுக்குச் சமம். சாமிநாத சாஸ்திரியின் சொத்தும் அவ்வளவுதான். இது குமாஸ்தாக்களுக்கு மாதச்சம்பளம் முப்பதுரூபாய் இருந்த காலம் என்பதை நினைவில்கொள்ளவேண்டும்

போலீஸும் நீதிமன்றமும் இணைந்து செயல்படுகிறது. நீலமேக சாஸ்திரிகள் நேரடியாகவே போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்துப்பேசுகிறார். இன்ஸ்பெக்டர் மணவாள நாயிடு எல்லாவகை ஊழலையும் செய்பவர். அதில் உச்சம் அவர் தீவட்டிக்கொள்ளையரை போற்றி வளர்க்கிறார் என்பது. அவ்வப்போது திருட்டுக்களை பிடித்து பாதி திருட்டுச் சொத்தை போலீஸே பிடுங்கிக்கொள்கிறது. திருட்டு நகைகளை கொண்டுவந்து சாதாரணர்கள் வீட்டில் போட்டு அவர்களை குற்றவாளியாக்கி மிரட்டி பணம் பறிக்கிறார் மணவாளநாயிடு. திருட்டிலும் பணம் நிரபராதிகளை மாட்டிவிடுவதிலும் பணம். அக்கால போலீஸே இப்படித்தான் செயல்படுகிறது.

இதில் என்ன நுட்பம் என்றால் கதையாசிரியரே இதை பெரிய குற்றம், பாவம் என்றெல்லாம் நினைக்கவில்லை என்பதுதான். இந்த குற்றங்களைச் செய்த போலீஸ்காரர்கள் நாவலில் தண்டிக்கப்படவில்லை. ஊரிலே உலகத்திலே நடப்பதுதானே என்றுதான் நாவல் சொல்லிச் செல்கிறது.

கனிஸ்டேபில் என அடிக்கடி வருகிறது. போலீஸ்காரர்களுக்கான பெயர். நீதிபதியே கான்ஸ்டபிளை பிரம்பால் அடிக்கிறார். அதன்பின் சமாதானப்படுத்த பக்ஷீஸ் சில்லறை கொடுக்கிறார். ‘கனிஸ்டேபில்’ எஜமானின் கருணையால் மகிழ்ச்சி அடைகிறார்

அதன்பின் நீதிமன்ற விசாரணை. அது ஒரு நாடகத்தனமான காட்சி. பாரிஸ்டர் கொக்குத்துரை அரசுத்தரப்பு வக்கீல். எதிர்ப்பக்கம் துரைசாமி அய்யங்கார் கோபாலனுக்காக வாதாடுகிறார். துப்பறியும் கோவிந்தன் கோர்ட்டிலேயே வந்திருந்து துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி வழக்குக்கு உதவுகிறார்.அசிஸ்டெண்ட் சர்ஜன் காவன்னாத்துரையை துரைசாமி அய்யங்கார் கோர்ட்டில் காய்ச்சி எடுக்கிறார்.

அதன்பின் கதை மோகினிகள், லோகசுந்தரிகள் என்று தாசிகளின் உலகுக்குள் சென்றுவிடுகிறது. அன்றெல்லாம் அவர்கள் இல்லாவிட்டால் கதையை படிக்கமாட்டார்கள் போல. கடைசியில் எல்லாம் சுபம்.

இந்நாவலை வாசிக்கையில் எப்போதும் நான் சொல்லிவருவதுதான் மீண்டும் தோன்றியது. அதை இந்திய பிரிட்டிஷ் ஆட்சியைப்பற்றி எழுதிய ராய் மாக்ஸ்ஹாம் முதல் சமீபத்தில் சசி தரூர் வரை அனைவருமே வெவ்வேறு வகையில் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி 1750 வாக்கில் வேரூன்றியது. நூறாண்டுகளில் அவர்கள் உலகிலேயே மிகப்பெரிய அதிகார வர்க்கத்தை இங்கே உருவாக்கிவிட்டனர். அதை அத்தனை எளிதாக உருவாக்க முடிந்தது ஊழலுக்கு அவர்கள் அளித்த அனுமதியாலும் ஊக்கத்தாலும்தான்.

பழைய பிரிட்டிஷ்ராஜில் கவர்னர்ஜெனரல் முதல் கவர்னர்கள் கலெக்டர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவருமே வரம்பற்ற ஊழலில் திளைத்தனர். வெள்ளைக்காரர்கள் இந்தியா வந்து பணியாற்ற தூண்டில்பொறியாக இருந்ததே பிரமிக்கவைக்கும் ஊழல்செல்வம்தான். இந்தியர்கள் வெள்ளையர்களிடம் சேவையாற்ற முண்டியடித்ததே அதனால்தான். நீதித்துறை, கல்வித்துறை எங்கும் அன்றிருந்த ஊழலை இன்றுகூட காணமுடியாது

இந்திய சுதந்திரப்போராட்ட காலம்தான் தூயநிர்வாகம், மக்கள்நலம்நாடும் அதிகாரவர்க்கம்  என்னும் கனவை முன்வைத்தது. அது ஒரு குறுகியகாலக் கனவு, அவ்வளவுதான். இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திரத்திற்கு முன்னும் சுதந்திரம் கிடைத்தபின் இருபதாண்டுகளிலும் அப்படிப்பட்ட ஓர் அரசை உருவாக்கவும், ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்கவும் முயன்றது. அதன்பின் அனைத்தும் வழக்கமான பாதைக்கு திரும்பின. நாம் ‘வெள்ளைக்காரன் ஆட்சிபோய் கொள்ளைக்காரன் ஆட்சி வந்தது’ என்கிறோம்.அதைச் சொல்பவர்கள் பெரும்பாலும் வெள்ளைக்கார ஆட்சியில் கொள்ளையடித்தவர்களின் வாரிசுகளே

இந்நாவல் உட்பட ஆரம்பகாலத் தமிழ்நாவல்களில் அத்தனைவகையான ஊழல்களையும் செய்பவர்கள் பிராமணர்கள், நாயிடுக்கள், முதலியார்கள், வேளாளர்கள். வேறெந்த சாதியும் அதிகாரத்தில் இல்லை. அப்படியென்றால் இன்று நாம் காணும் மாற்றம் என்பது ஊழல்செய்வதற்கான வாய்ப்பை அடுத்தகட்ட சாதியினர் ஜனநாயகம் வழியாக எடுத்துக்கொண்டது மட்டும்தானா?

தாசியும் பெண்ணும்
தமிழ்நாவலின் முதல்படிகளில் ஒன்று…
——————————————————————————-
ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய “ராஜாம்பாள்” சிலிக்கான் ஷெல்ப்
ஜே.ஆர். ரங்கராஜு – கிருஷ்ணன் வெங்கடாச்சலம்
ஜே.ஆர்.ரங்கராஜு -கல்கி- பசுபதிவுகள்
முந்தைய கட்டுரைஇரவு- கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு இருகடிதங்கள்