[ 1 ]
சிராப்பள்ளியில் உய்யக்கொண்டான் கால்வாய் ஓரமாக இருந்தது சின்ன ரங்கமகால். திருமலைநாயக்கரின் தம்பி ரங்கப்ப நாயக்கரால் மதுரையில் அவர் கட்டிய பெத்த ரங்கமகாலைப் போலவே கட்டப்பட்டது. சுதையாலான பன்னிரண்டு மாபெரும் தூண்கள் அதன் முகப்பில் நின்றன. அது சுதைச்சரிவாலான கூரையைத் தாங்கியது. மாளிகையின் முன்பக்கக் கூடம் இரண்டு அடுக்குகளால் ஆனது. கீழே படைவீரர்கள் நிற்க மேலே உப்பரிகை போன்ற கூடத்தில் அரசகுடியினர் வந்து அமர்ந்து அவர்களின் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள். குடிமக்களிடம் குறை கேட்பார்கள்.
உப்பரிகையில் இருந்து இருபக்கமும் விரிந்து சென்ற அறைகள் அனைத்தும் நடுவே இருந்த திறந்த வெளியை நோக்கிக் கதவுகளும் சாளரங்களும் கொண்டிருந்தன. அந்தத் திறந்த வெளி விரிந்துசென்று கீழே ஒரு பெரிய அங்கண முற்றத்தில் முடிந்தது. அங்கணமுற்றத்தைச் சுற்றிப் பருத்த சுதைத்தூண்கள் மாடியைத் தாங்கி நின்றன. தூண்கள் நின்ற இடைநாழி அடிமரம் பெருத்த காடுபோலிருந்தது. இடைநாழியில் இருந்து பல்வேறு அறைகளுக்கு வழிகள் சென்றன. உக்கிராண அறைகள், அரண்மனையின் உயர்ந்த ஊழியக்கார பெண்கள் தங்கும் கோஷா அறைகள்.
இடைநாழியில் எப்போதும் நடமாட்டம் இருக்கும். அதுதான் அன்னியர்களும் காவலர்களும் திரண்ட முன்பக்கக் கூடத்தையும் பின்பக்கம் வேலைக்காரர்கள் மண்டிய புழக்கடையையும் இணைக்கும் பாதை. புழக்கடை நான்கு கட்டுகளால் ஆனது. சமையற்கட்டும், வேலைக்காரர்கள் தங்குமிடமும் இணையாக இருந்தன. அதற்கு அப்பால் விறகுப்புரை, நெல்புரை, அதற்கான வேலைக்காரர்களின் இடம். அதற்குப் பின்னால் கழிப்பறைகள், குளியலறைகள், எட்டு கிணறுகள். அதற்கும் அப்பால் கழிப்பறையை சுத்தம்செய்யும் ஆட்கள் வந்து செல்லும் வழியும் அதற்கான கொட்டகையும். அந்தப் பாதை அப்படியே சுழன்று சுழன்று ஆற்றுவிளிம்பைச் சென்று சேரும்.
நாகலட்சுமி கொல்லைப்பக்கம் சென்று கைகால் கழுவிவிட்டு சமையலறைக்கு வந்து சமையற்காரி கொடுத்த மூடப்பட்ட பாத்திரத்துடன் கிளம்பினாள். இடைநாழி வழியாக வந்து உள்ளறைகள் இரண்டைக் கடந்து மரத்தாலான படிகளில் ஏறி மாடிக்கு சென்றாள். மாடியறைகளின் வழியாக நடந்து சென்றபோது அங்குள்ள ஒவ்வொரு அறையையும் அவள் கண்கள் ஒருகணம் பார்த்துச் சென்றன. அவற்றில் தங்கியிருப்பவர் எவர் என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் அங்கே என்னதான் செய்கிறார்கள் என்றும் புரியவில்லை. அனைவருமே அரசியின் தோழிகள்.
ஆனால் அரசியின் தோழிகளாக இருப்பவர்களும் அரசகுலத்தவர்தான். வெவ்வேறு பாளையக்காரர்களின் மகள்கள், தொலைவில் செஞ்சியில் இருந்தும் சித்ரதுர்க்கத்தில் இருந்தும் அனந்தபுரியில் இருந்தும் எல்லாம் வந்தவர்கள். அவர்களுக்கு சிலநாட்கள் இங்கே அரசியின் தோழியாக இருப்பது திருமணத்துக்கு முந்தைய ஒரு பயிற்சி. அரசநிகழ்ச்சிகளில் பங்குகொள்வார்கள். கோயில்பூசைகளை நடத்துவார்கள். விழாக்களில் கொலு போவார்கள். அதன்பின்னர் படைத்தளபதிகள், பாளையக்காரர்கள் எவருக்காவது மனைவியாகப் போவார்கள். பெரும்பாலும் இந்நிகழ்ச்சிகளிலேயே அவர்களின் அழகும் தகுதிகளும் புகழ்பெற்றுவிடும், பெண்கேட்டு வந்துவிடுவார்கள்.
மேலே அவர்களுக்கு சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், கன்னடம் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. சங்கீதமும் வியாகரணமும் காவியமும் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாகலட்சுமியும் சங்கீதம், வியாகரணம், காவியம் படித்தவள்தான். தாசிகளுக்கு அதெல்லாம் இளமையிலேயே சொல்லிக் கொடுப்பார்கள். கூடவே நாட்டியமும், ஒப்பனையும், வசிய சாஸ்திரமும் சொல்லிக் கொடுப்பார்கள். கொஞ்சம் மருத்துவமும் உண்டு. அது ஒப்பனைக் கலையின் ஒரு பகுதி. காலப்போக்கில் பிரசவத்துக்கான தாதிகளாக முதிய தாதிகள் மாறுவதுண்டு.
நாகலட்சுமி வசிய சாஸ்திரம் படிக்கும்போது அவளுக்கு வயது எட்டு. முலைகளை எப்படியெல்லாம் ஆண்களுக்கு காட்டலாம், எந்த அளவுக்கு காட்டவேண்டும் என்றெல்லாம் அவளுக்கு சொல்லிக் கொடுத்த முதிய பெண்மணி அவளிடம் அதை செய்து காட்டச்சொன்னபோது அவள் திகைத்து நின்றாள். அவள் மார்பில் இரு துணிப்பந்துகளை வைத்துக் கட்டி அதைக்காட்டி நடிக்கச் சொன்னாள். அவள் தட்டுத்தடுமாறி நடித்ததைக் கண்டு கூட அமர்ந்து படித்த மற்ற சிறுமிகள் வாய்பொத்திச் சிரித்தார்கள்.
நாகலட்சுமி அந்த நீண்ட அறைவரிசையில் கடைசியாக இருந்த சிறிய அறையை அடைந்தாள். அதன் சிறிய, கனத்த சித்திரக் கதவை மெல்லத் தட்டினாள். அந்த அறையின் இரண்டு சாளரங்களுமே மூடியிருந்தன. உள்ளே தாழை விலக்கும் ஓசை கேட்டது. பித்தளைக் குமிழ்களில் ஓசையின்றிச் சுழன்ற கதவு சற்றே விரிசலிட்டு திறந்தது. உள்ளிருந்து சின்ன முத்தம்மாள் எட்டிப்பார்த்து “யாரு?” என்று கேட்டாள். அவள் தமிழில்தான் கேட்டாள், ஆனால் அந்தச் சொல் தெலுங்காக ஒலித்தது.
அவளுக்கு யார் என்று தெரியும். நாகலட்சுமி மட்டும்தான் அங்கே வருவாள். அல்லது மருத்துவச்சிகளை நாகலட்சுமி கூட்டிக்கொண்டு வருவாள். நாகலட்சுமி “நான் நாகலட்சுமி அம்மவரே” என்றாள்.
கதவு திறந்தது. சின்னமுத்தம்மாள் “வா” என்றாள்.
அவள் உள்ளே சென்று பாத்திரத்தை அங்கிருந்த மர மேடையில் வைத்தாள். “மருந்துக்கஞ்சி குடுத்தனுப்பியிருக்காங்க” என்றாள்.
“கஞ்சி வேண்டாம்டி, குமட்டுது” என்றாள் சின்னமுத்தம்மாள்.
“வேண்டாம்னு சொல்லலாமா? நிறைவயிறுல்ல, குழந்தைக்கும் சேத்து சாப்பிடணுமே” என்றாள் நாகலட்சுமி.
“அது என்னை சாப்பிடட்டும்…” என்று சின்னமுத்தம்மாள் சொன்னாள்.
நாகலட்சுமி “அப்படி குழந்தையை பழிக்கக்கூடாது. அதுக்கு என்ன தெரியும்?” என்றாள்.
”யாருக்கும் எதுவும் தெரியாது. ஒவ்வொருத்தர் தலையெழுத்துப்படி வாழ்க்கை. அதோட தலையெழுத்து என்னன்னு இப்பவே பாதி தெரிஞ்சாச்சு” என்றாள் சின்னமுத்தம்மாள்.
அறைக்குள் வெளிச்சமே இல்லை. ஒரு நெய்விளக்கு மட்டும் சுடர்விட்டது. அதற்குப் பின்னால் ஏழுமலர் கொண்ட கண்ணாடிக்கொத்து இருந்தது. சுடர் ஏழாக எழுந்து அசைவிலாது நின்றிருக்க அந்தச் சிவப்பு வெளிச்சம் அறையை சிவந்த தசையாலான சுவர்கள் கொண்டது போல தோன்றச்செய்தது. அதுவே ஒரு கருப்பை போல, சின்னமுத்தம்மாள் அதற்குள் வளரும் கரு போல.
சின்னமுத்தம்மாள் இடையில் கையை ஊன்றியபடி மெல்ல மரப்பீடத்தில் அமர்ந்தாள். பெருமூச்சு விட்டுக்கொண்டு வெண்ணிறப் பருத்தி ஆடையின் முந்தானையால் கழுத்தை துடைத்தாள். பீடத்தில் வயிற்றை கொஞ்சம் சாய்த்து அமர்ந்ததுமே அவள் இறந்தவள் போல ஆனாள். நாகலட்சுமி அவளை பார்த்தபடி நின்றாள்.
சின்ன முத்தம்மாள் மதுரையை ஆண்ட மன்னர் ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் விதவை. ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திடீரென்று அம்மை கண்டு மறைந்தபோது அவளுக்கு நான்கு மாதம் கர்ப்பம். கர்ப்பம் தரித்திருப்பது உண்மைதானா என்று மதுரை நாடு முழுக்க வம்பு பேசிக்கொண்டார்கள். கர்ப்பம் எல்லாம் ஒன்றும் இல்லை, இறந்த ராஜாவுக்கு வேறு குழந்தை இல்லை, நாட்டுக்கு ராஜவாரிசு வேண்டும் என்பதற்காக ராணியை அடைத்து வைத்து நாலைந்து மாதம் கழித்து ஏதோ ஒரு குழந்தையை அவள் பெற்ற இளவரசன் என்று காட்டி பட்டம் சூட்டப்போகிறார்கள் என்று சிலர் சொன்னார்கள். சிராப்பள்ளி மதுரை ராஜ்ஜியத்தில் எப்போதும் ஏதேனும் வம்பு உலாவிக்கொண்டிருந்தது. நாகலட்சுமி கூட அதை நம்பினாள். அரண்மனையைப் பற்றி கெட்டதாக எதைச் சொன்னாலும் அதை உடனே நம்பிவிடத் தோன்றுகிறது.
நாகலட்சுமியை அவள் அம்மாதான் ரங்கமகாலுக்கு அனுப்பினாள். மகாராணிக்கு அருகே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள வேண்டும். சிராப்பள்ளி பெரிய அரண்மனையில் இருந்து மகாராணியை கோஷாப் பல்லக்கில் சின்ன ரங்கமகாலுக்குக் கொண்டு சென்றார்கள். அரண்மனையில் இருந்த வழக்கமான வேலைக்காரிகள் சேடிகள் எவரும் ரங்கமகாலுக்கு போகவில்லை. அங்கே கூடவே தங்கவேண்டியவர்கள் யார் யார் என்பதை பெரியராணி மங்கம்மாளே முடிவு செய்தாள். எல்லாரும் புதியவர்களாகவும், அரண்மனைகளில் ஏற்கனவே எந்தத் தொடர்பும் இல்லாதவர்களாகவும் இருக்கவேண்டும் என்று ஆணையிட்டாள். அவ்வாறுதான் நாகலட்சுமிக்கு வாய்ப்பு கிடைத்தது.
நாகலட்சுமி ஒருவகையான குறுகுறுப்புடன்தான் ரங்கமகாலுக்கு வந்தாள். சின்னமுத்தம்மாள் அழகான பெண் என்று அவள் கேட்டிருந்தாள். அவளுக்கும் நாகலட்சுமிக்கும் ஒரே வயதுதான். நாகலட்சுமிக்கு பத்தொன்பது முடிந்து இருபது நடந்துகொண்டிருந்தது. சின்னமுத்தம்மாள் எப்படி இருப்பாள் என்று நாகலட்சுமி பலவகையாக கற்பனை செய்துகொண்டிருந்தாள். அரசிகள் எல்லாம் ஓங்குதாங்காக, சிவப்பாக, ஏராளமான ஆடை ஆபரணங்களுடன் இருப்பார்கள் என்று நினைத்திருந்தாள். அவள் அணியூர்வலத்திலும் ஸ்ரீரங்கவிஜய யாத்திரையிலும் பெரியமகாராணி மங்கம்மாளை பார்த்திருந்தாள். மங்கம்மாள் அப்படித்தான் இருந்தாள்.
“என்னமா இருக்காங்க பெரியராணி! கண்ணாலே பாத்தே கருங்கல்லை தூக்கி வீசிருவா போல” என்று மச்சின்மேல் நின்று பார்த்த அம்மா சொன்னாள்.
“கூட வாறவன் கஸ்தூரி ரங்கய்யா. பின்னாலே வாறவன். விஜயரங்கையா. அவ ரெண்டுகோல் முரசாக்கும்” என்று முதிய தாசி ஒருத்தி சொன்னாள். நாலைந்து பெண்டுகள் வாய்பொத்திச் சிரித்தார்கள்.
“என்ன பொலிவு” என்று அம்மா மறுபடியும் சொன்னபோது அதையே நாகலட்சுமியும் நினைத்துக்கொண்டாள். பெரிய ராணி மங்கம்மாள் பெண்வேஷமிட்ட ஆண் என்றுகூட அவளுக்குத் தோன்றியது.
இன்னொரு கிழவி “அந்தா பின்னாலே போறானே தளவாய் நரசப்பையன், அவனுக்கு இவதானாம் வெத்தில சுருட்டிக் கொடுக்கா. பொம்புளை நினைச்சா ஆம்புளைங்களை நுகத்திலே கட்டி மொட்டவயலை உழலாமே” என்றாள்.
நாகலட்சுமி கண்மயங்கி, மனம் மறைய மங்கம்மாளின் நிமிர்வையே பார்த்துக் கொண்டிருந்தாள். திறந்த பல்லக்கில் சென்று கொண்டிருந்த மங்கம்மாள் அரைக்கண் பார்வையை திருப்பியதுமே இரண்டு அமைச்சர்கள் பாய்ந்து அருகே சென்று வாய் பொத்தி நடந்தனர். வாயில் தாம்பூலத்தை அடக்கியபடி அவள் ஓரிரு சொற்கள் சொல்லி முடித்ததுமே அவர்கள் தலைவணங்கி சிதறி ஓடினர். கைகளை வீசி ஆணைகளை கூவினர்.
“என்னா நெறம். களுத்திலே எறங்குற வெத்திலச்சாறு வெளியே தெரியும்போல” என்று அம்மா சொன்னாள்.
நாகலட்சுமி மங்கம்மாள் படுக்கையில் எப்படி இருப்பாள் என்று நினைத்துக்கொண்டாள். அவள் ஆண்களை வசியம்செய்யக் கற்றிருப்பாளா? வசியம் செய்வதற்கான தந்திரங்களை அவள் செய்ய வேண்டியிருக்குமா? அல்லது ஆண்களை அப்படி கைசுண்டி அழைப்பாளா?
வடுகச்சிகள் எல்லாமே நல்ல சிவப்புதான். தாசிகள் பெரும்பாலும் கறுப்பு அல்லது மாநிறம். ஆனால் வடுகராஜாக்களும் தளவாய்களும் எல்லாம் தாசிகளின் வீடுகளில் ராப்பகல் அடை கிடந்தார்கள். அவர்களுக்கு கறுப்பு நிறம் பிடித்திருந்ததா? அக்கை ராஜரத்தினம்மா சொன்னாள். “வடுகச்சிக ராஜரத்தம். ஆம்புளைய மதிக்கமாட்டாளுக. நாம காலடியிலே கிடப்போம்.”
அதுவும் உண்மை அல்ல. தேரடித்தெரு முத்துக்காமாட்சி அவளிடம் வருபவர்களை அடிப்பாள், உதைப்பாள். கடிப்பது கீறுவது எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையான அடியோ கடியோ அல்ல. அது ஒரு பாவனை. வளர்ப்புநாய்கள் கவ்வி விளையாடுவதுபோல.
அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, சின்னமுத்தம்மாள் மிகச்சிறிய உடல்கொண்டிருந்தாள். வெளிறிய முகத்தில் ரத்தம்செத்த பெரிய கண்களும், நடுங்கும் சிறிய உதடுகளும், வெள்ளிக்கழிகள் போல எலும்பு மட்டுமேயான கைகளும், வெண்ணிற ஆடையுமாக ஓர் ஆவிச்சுருள் போல ஊதினால் கலைபவளாகத் தெரிந்தாள். முதல்நாள் அவள் தாம்பூலத்தட்டைக் கொண்டுவந்து கதவைத் தட்டியபோது சற்றே திறந்து “யாரு?” என்றாள்.
நாகலட்சுமிக்குப் பின்னால் நின்ற முதிய சேடியான கனகாங்கி அவளைப் பற்றி சொன்னாள். “தாசிகுடியிலே இருந்து வரச்சொல்லியிருக்கு ராணி. சின்னராணிக்கு பேசியும் பழகியும் இருக்க வசதியா இருக்கட்டுமேன்னு பெரிய மகாராணி ஏற்பாடு.”
ஆனால் சின்னமுத்தம்மாள் எந்த நட்புமுகமும் காட்டவில்லை. ஒருசொல்லும் பேசவில்லை. தாம்பூலத்தட்டை வைத்துவிட்டு நாகலட்சுமி பேசாமல் நின்றாள். சின்னமுத்தம்மாள் தன்னுடைய பீடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். வழக்கம் போல சுவரில் ஏதோ ஒரு புள்ளியை கூர்ந்து பார்த்துக் கொண்டு ஓவியம்போல அசைவில்லாதவளானாள். இமைகள் சரிந்து பார்வை கீழ்நோக்கி இருந்தது. முகம் ஒரு நீர்த்துளிபோல அசைந்தால் அப்படியே கீழே சொட்டி விடும் என்று தோன்றியது.
நாகலட்சுமி சின்னமுத்தம்மாளை பார்த்துக்கொண்டே நின்றாள். அவளை அழைத்துப் பேசிக் கலைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு அழைப்பதும் கலைப்பதும் முறைமீறல். வயதில் தோழியாக இருக்கலாம், ஆனால் அரசி என்ற முறையில் மட்டுமே அவளிடம் உரையாட முடியும். மரியாதை வார்த்தைகளெல்லாம் தேவையில்லை, ஆனால் ஓர் எல்லை உண்டு. அவள் மெலிதாகக் கலைந்து சற்று அசைந்தமையும்போது பேச ஆரம்பிக்கவேண்டும். அவள் காத்திருந்தாள்.
ஊன்றிய கை வலித்து அதை எடுத்தபடி சின்னமுத்தம்மாள் அசைந்தபோது “என் கிட்ட பெரிய மகாராணி உங்களைப் பற்றி கேட்டாங்க” என்றாள்.
சின்ன முத்தம்மாள் நிமிர்ந்து பார்த்தாள். அவள் விழிகளில் எந்த ஆர்வமும் தெரியவில்லை.
“பெரியராணி மருத்துவச்சிகளை தினசரி வரவழைச்சுப் பாக்கிறாங்க. உங்களைப் பத்தியும் கருவிலே இருக்கிற குழந்தையப் பத்தியும் கேட்டுத் தெரிஞ்சுகிடுறாங்க. அதுக்கு மேலே எங்கிட்ட என்ன கேக்கிறாங்கன்னு எனக்கு புரியல்லை. நான் அவங்க கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னேன்.”
சின்னமுத்தம்மாள் வெற்றுப்பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நீங்க வாயைத் திறந்து பேசுறீங்களான்னு கேட்டாங்க. ஆமா, பேசுறாங்கன்னு சொன்னேன். நான் அதை கேக்கல்லை, கேட்டகேள்விக்கு பதில் சொல்றா, அது எனக்கு தெரியும். அவளே எதையாவது வாய் திறந்து பேசறாளா, எதையாவது கேக்கிறாளான்னு கேட்டாங்க. எனக்கு அதுக்கு சரியா பதில் சொல்ல முடியல்லை. அப்பப்ப சின்னதா பேசுவாங்கன்னு சொன்னேன். எதைப்பத்தின்னு கேட்டாங்க. பொதுவா உடம்புபத்தின்னு மட்டும் சொன்னேன்.”
சின்னமுத்தம்மாள் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
நாகலட்சுமி “அப்ப பெரியமகாராணி இன்னொரு மாதிரி கேக்க ஆரம்பிச்சாங்க. அவ சாப்பாட்டைப் பத்தி எதையாவது சொன்னாளான்னு கேட்டாங்க. இல்லேன்னு சொன்னேன். சரி, துணி, நகை, நல்ல வாசனை பத்தி எதாவது சொன்னாளான்னு கேட்டாங்க. அதுக்கும் இல்லேன்னு சொன்னேன். அப்ப கேட்டாங்க—”
சின்னமுத்தம்மாள் நிமிர்ந்து பார்த்தாள். புருவங்கள் மட்டும் வளைந்தன.
“அவ சிரிக்கிறதுண்டான்னு கேட்டாங்க. நான் அதெப்டி சிரிப்பாங்கன்னு சொன்னேன். சரி, சும்மா மந்தஹாசமாவது முகத்திலே வருமான்னு கேட்டாங்க. அதுக்கும் இல்லேன்னு சொன்னேன். கொஞ்சநேரம் கழிச்சு, அவ கொஞ்சமாவது பேசினா உங்கிட்டதான் பேசணும்னு சொன்னாங்க. நான் ஒண்ணும் சொல்லலை.”
சின்னமுத்தம்மாள் மீண்டும் முகம் திருப்பிக்கொண்டாள்.
“சாப்பிடுங்க ராணி” என்றாள் நாகலட்சுமி.
“வேண்டாம்டி… குமட்டுது.”
“கொஞ்சமாவது சாப்பிடுங்க. இல்லேன்னா உடனே அதுக்கு மருத்துவச்சிகளை அனுப்புவாங்க… மறுபடி அது ஒரு பெரிய தொல்லை.”
சலிப்புடன் “ஆமா” என்றாள் சின்னமுத்தம்மாள். “கொண்டா” என்று கைநீட்டினாள்.
அவள் பாத்திரத்தைத் திறந்து சின்னமுத்தம்மாளின் முன் குட்டிப்பீடத்தில் வைத்தாள். தாலத்தில் இருந்த நீரை சின்னமுத்தம்மாளின் கையருகே கொண்டுசென்று நீட்டினாள். சின்னமுத்தம்மாள் அதில் கைகளை கழுவிக்கொண்டாள். நாகலட்சுமி வெள்ளித்தாலத்தை வைத்து அதில் பருப்புசாதத்தையும் வெண்டைக்காய் பொரியலையும் அள்ளி வைத்தாள்.
“போதும்டி” என்றாள் சின்னமுத்தம்மாள்.
“கொஞ்சம் ராணி” என்றாள் நாகலட்சுமி. ஆட்டுக்கால்சாறும் ஆட்டிறைச்சித் துருவலும் இருந்தது. அவற்றையும் சிறு கரண்டியால் அள்ளி வைத்தாள்.
சின்னமுத்தம்மாள் சாப்பிட ஆரம்பித்தபோதுதான் அவளுக்கு பசி இருப்பது அவளுக்கே தெரிந்தது. அவள் அள்ளிச் சாப்பிடுவதைக் கண்டபோது அது நாகலட்சுமிக்கும் தெரிந்தது. ஆனால் கொஞ்சம் சாப்பிட்டதுமே அவளுக்கு மூச்சடைத்தது. மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. கையை தட்டிலேயே உதறிவிட்டு நீட்டினாள். நாகலட்சுமி அவள் கையைப் பற்றி ஏனத்தில் கழுவினாள்.
வாயைக் கொப்பளித்துத் துப்பிவிட்டு சின்னமுத்தம்மாள் எழுந்து படுக்கையை நோக்கி சென்றாள். நாகலட்சுமி ஓடிப்போய்ச் சிறிய தாழ்வான கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த வெண்ணிறமான விரிப்பை நீவி சரிசெய்தாள். தலையணையை எடுத்து வைத்தாள்.
சின்ன முத்தம்மாள் நன்றாக வியர்த்து மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள். அந்த அறையின் கூரை மிகக்கனமானது. சுவர்களும் கனமானவை. ஆகவே அங்கே வெளிவெப்பமே வருவதில்லை. ஆனாலும் சாளரங்கள் மூடியே இருந்தமையால் வெப்பம் இருந்தது.
கையை ஊன்றி மெல்லப் படுத்துக்கொண்டு சின்னமுத்தம்மாள் பெருமூச்சுவிட்டாள். அவள் இமைகளுக்குள் கருவிழிகள் உருள்வதை நாகலட்சுமி பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் உதடுகள் சுருங்கி ஒட்டியிருந்தன. கழுத்தில் நீல நரம்பு ஒன்று மெலிதாகச் சுண்டி அசைந்து கொண்டிருந்தது. குவிந்த சிறிய உதடுகளுக்குமேல் வியர்வை பனித்திருந்தது.
நாகலட்சுமி அவளைச் சற்றுநேரம் பார்த்து நின்ற பின்னர் மெல்ல வெளியே சென்று கதவை தனக்குப் பின்னால் மூடிக்கொண்டு நடந்தாள்.
[ 2 ]
நாகலட்சுமி அறைகளின் வழியாக நடந்தபோது இடப்பக்கத்துச் சிற்றறையில் பேசிக்கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி எழுந்து கைநீட்டி அவளை அழைத்தாள். அவள் நின்றதும் அவள் வளையல்களும் கொலுசும் மற்றநகைகளும் ஓசையிட அவளை நோக்கி வந்தாள்.
“எப்டிடி இருக்கா உங்க சின்னமுத்தா?” என்றாள்.
அவள் தியாகதுர்க்கம் பாளையக்காரரின் மகள் பத்மினி. பெரிய வம்புக்காரி என்று ஏற்கனவே வேலைக்காரிகள் பலர் நாகலட்சுமியிடம் சொல்லியிருந்தார்கள். அவள் அதுவரை நாகலட்சுமியிடம் பேசியதே இல்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் அவள் அவ்வழி கடந்து செல்லும்போது பேச்சை நிறுத்திவிட்டு கண்களில் கூர்மையும் சிரிப்புமாக பார்ப்பாள். கடந்துசென்ற பின்னரும் அவள் பார்வை நாகலட்சுமியின் முதுகில் எஞ்சியிருக்கும்.
“சின்னராணியம்மா நல்லா இருக்காங்க”
“வயித்துப்பிள்ளை என்னமோ சரியா வளர்ச்சி அடையல்லன்னு சொன்னாங்க?”
“இல்லியே” என்றாள் நாகலட்சுமி.
“சரி, அது பிள்ளைதானா? ஏன்னா, ஊரைக்காட்டுறதுக்காகச் சுட்டி சும்மா துணியை வைச்சு சுத்திக் கட்டியிருக்காங்கன்னுகூட ஒரு பேச்சு இருக்கு”
நாகலட்சுமி ஒன்றும் சொல்லவில்லை.
அவளுக்கு பின்னால் வந்து நின்ற செஞ்சிக்கோட்டை படைத்தலைவன் ராமப்ப நாயக்கனின் மகள் செல்லியம்மா “வயித்துப்பிள்ளைக்கு எத்தனை மாதமிருக்கும்? ஒரு நாலு மாசம் வளர்ச்சி இருக்குமா? நான் ஒருவாட்டிதான் அவ வெளியே வாறதைப் பாத்தேன். மூணுமாசம்னுகூட தோணிச்சு” என்றாள்.
“அதெப்டி, ராஜாவுக்கு அம்மைவந்து படுத்தே நாலுமாசமிருக்குமே?” என்றாள் பத்மினி.
“அதெல்லாம் நாம கேக்கக்கூடாது… ராஜத்துரோகம்” என்றாள் செல்லியம்மா.
“ராஜான்னா படுத்தாலே போதும், மத்தவங்க வேண்டியதை பாப்பாங்களே” என்றாள் இன்னொருத்தி, அவள் யாரென்று தெரியவில்லை.
“நான் போறேன்… எனக்கு வேலைகெடக்கு” என்று நாகலட்சுமி நகர்ந்தாள்.
“ஏண்டி, புள்ளையப்பெத்து அதுக்கு முலையுறிஞ்சுற மாதிரி ஆனதும் இன்னொரு முலைக்காரிகிட்டே புள்ளையை ஒப்படைச்சுக்கிட்டு சின்னமுத்தம்மா உடன்கட்டை ஏறணும்னு சொல்லுறாங்களே, நெஜம்மாவா?” என்றாள் செல்லியம்மா.
பலமுறை சொல்லிக்கேட்டது, அதைவிட பலமடங்கு நினைத்துக்கொண்டது. ஆனாலும் நாகலட்சுமிக்கு உடம்பு தூக்கிப்போட்டது.
“உடன்கட்டை ஏறினாத்தான் அவளுக்கு பட்டத்துராணீங்கிற மதிப்பு. அவ பிள்ளைக்கு நாளைக்கு அட்டியில்லாம கிரீடம் கிடைக்கும். இல்லேன்னா நரம்பில்லா நாக்குகள் நாலுபக்கமும் சுத்திப்பேசும்ல? இப்பவே என்னென்னமோ பேசிக்கிடுறாங்க” என்று பத்மினி சொன்னாள்.
“ஆமா, சிதையேறிட்டாள்னா யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாளுக. வாயெல்லாம் மண்ணைக்கொட்டினா மாதிரி அடைஞ்சிரும்” என்றாள் செல்லியம்மா. “சதிதேவின்னா ஏழுதலைமுறையை எரிச்சு அழிச்சுப்போடுற தெய்வமாக்கும்.”
“நான் வாறேன் அம்மிணி” என்று நாகலட்சுமி முன்னால் காலெடுத்து வைப்பதுபோல அசைந்தாள்.
“இருடி, இருடி” என்றாள் செல்லியம்மாள். “உடன்கட்டை ஏறுறதைப்பத்தி சின்னமுத்தம்மா என்ன சொல்லுறா? அவளுக்கு சம்மதம்தானா? இல்லை, பெரியராணி சொல்லுறதனாலே சம்மதிச்சு உக்காந்திட்டிருக்காளா?”
சட்டென்று நாகலட்சுமி ஓட ஆரம்பித்தாள்.
“உடன்கட்டை ஏற நெறைய வெறகு வேண்டாம். சின்னமுத்தம்மாளே வெறகாத்தான் இருக்கா” என்ற குரலும் சிரிப்பும் பின்னால் கேட்டது.
“உடன்கட்டை ஏறுறதுக்கு கத்துக்கிட்டிருக்கா போல”
நாகலட்சுமி மூச்சிரைக்க அடுக்களைக்கு வந்தாள். தாலத்தை வைத்துவிட்டு தரையில் அமர்ந்து முழங்கால்களை மடக்கி அதன்மேல் தலையை வைத்துக்கொண்டு அமர்ந்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. மூசுமூசென்று அழுகை வந்தது.
கமலாம்மாள் வந்து குனிந்து “ஏண்டி, ஏண்டி அளுறே? என்னாச்சு?” என்றாள்.
அவள் நிமிர்ந்து கண்களைத் துடைத்து “ஒண்ணுமில்லை மாமி” என்றாள்.
“என்ன அளுவுறே? ராணி என்னவாவது சொன்னாளா? சரி விடுடி. ராணிகிட்டே பேச்சுக் கேக்கிறதுதானே நம்ம தொழிலே.”
“அதில்ல”
“பின்ன? ராணி நல்லாத்தானே இருக்கா?”
“ஆமா”
“பின்ன என்னடி?”
“இவளுக… இந்த பாளையக்காரங்க வீட்டு பொண்ணுக”
“ஏட்டி, அவளுகள்லாம் இங்க எதுக்கு வாறாளுக? ஆம்புளை புடிக்கத்தானே? வலைவிரிச்சு நடுவிலே பொச்சுவிரிச்சு வைச்சு உக்காந்திருக்காளுக மிண்டைக. நாலு ஊர்வலத்திலே நகையும் நட்டுமா நின்னா எவனாவது பாளையக்காரனோ படைத்தலைவனோ கட்டிக்கிட்டு கூட்டிட்டுப்போவான். ஒரு அரண்மனையும் நாலு வேலைக்காரிகளும் கிடைப்பாளுக… அதுக்காகத்தானே? ராணி சின்னமுத்தம்மா அப்டியே ரங்ககிருஷ்ண ராஜாவுக்கு ராணியா ஆயிட்டா. இவளுகளுக்கு எரியுமா எரியாதா?”
“ஏன் மாமி, ராணி உடன்கட்டை ஏறியே ஆகணுமா?”
“ஆகணும்னுதான் சொல்றாங்க. அதனாலேதான் இங்கே கொண்டுவந்து தங்க வச்சிருக்காங்க… கர்ப்பம் காத்தா, உடன்கட்டை ஏறுனாங்கிறதுக்கு சாட்சி வேணும்னுதான் இத்தனை இளவரசிகளையும் கொண்டுவந்து தங்கவச்சிருக்காங்க.”
“எதுக்கு உடன்கட்டை ஏறணும்?” என்று நாகலட்சுமி கேட்டாள்.
“ராஜாவை கல்யாணம் பண்ணிக்கிடுறதுன்னா சும்மாவாடி? பட்டத்துராணி உடன்கட்டை ஏறணும்கிறது வளமொறை… அதுதான் கௌரவம்….”
”அது எதுக்கு?” என்று நாகலட்சுமி மீண்டும் கேட்டாள்.
“இங்கபாரு, இந்த நாயக்க ராஜ்ஜியத்திலே ராஜா எந்த பாளையக்காரர் மகளை கட்டிக்கிட்டாலும் மத்த அத்தனை பாளையக்காரப் பெண்டுகளும் வாய்க்கு வந்தபடி அழுக்கு பேசுவாங்க. பண்டு பாண்டி ராஜ்ஜியத்திலே ராஜகுடும்பம்னாலே ஒரு நாலஞ்சுதான். அதுக்குள்ளதான் பெண்ணெடுப்பாங்க. இல்லேன்னா சோள ராஜ்ஜியத்திலோ சேர ராஜ்ஜியத்திலோ பெண்ணெடுப்பாங்க. அவங்களிலே ராஜகுடும்பம் மட்டும்தான் சத்திரியனுங்க. இங்க அப்டி இல்லை. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. பத்து குடும்பத்தைச் சேத்து ஒரு கம்மாயை வெட்டிக்கிட்டா அவன் பாளையக்காரன். அவனும் தன்னை ராஜான்னே நினைச்சுக்கிடுவான். அத்தனை மத்த ராஜாக்களையும் பாத்து பொறாமைப்படுவான். ராஜா இருந்து இவன்தாண்டா என் மகன்னு சொல்லுறது வேற. ராஜா இருந்தாலே ராணி பெத்தது ராஜாவோட வித்து இல்லேன்னு வாய் அலம்புவானுக. ராஜா இல்லேன்னா அது ராஜாவுக்க பிள்ளையே இல்லைன்னு தொடங்கிருவாங்க.. அவனுக வாயை அடைக்கணுமானா உடன்கட்டை ஏறிடணும்… சதிமாதாவா மாறி ஊரூரா பொம்புளையாளுக பச்சைமாவுலே நெய்வெளக்கேத்தி கும்புடுத அம்மனா ஆயிடணும்…”
“அப்பமட்டும் சொல்லமாட்டாங்களா?”
“அதுக்குமேலே சொல்லமுடியாது. நாயக்கச்சாதியிலே வெளியேதான் இவனுக மீசையை முறுக்கிட்டு அலையுதானுக. வீட்டிலே எல்லாம் நாயக்கரச்சிதான் தீர்மானம் பண்ணுவா… ஒவ்வொரு வீட்டிலேயும் ஒரு தொட்டவ்வா இருப்பா. அவ சொல்லிட்டாள்னா அவ்ளவுதான், முடிஞ்சுது”
நாகலட்சுமி பெருமூச்சுவிட்டாள்.
“ராஜா அம்மையிலே போறப்ப ராணிக்கு வயிறு நாலுமாசம் ஆகியிருக்கும். மூணுமாசமா குமட்டல், தலைச்சுத்து. அதனாலே உடம்பு எலும்பா ஆயிடுச்சு. வயிறு காட்டல்லை. இப்ப எட்டாம் மாசம். பத்துமாசம் களிச்சு பிள்ளை பெறந்தாக்கூட அது நரம்பாத்தான் இருக்கும். அது குறைமாசப் புள்ளை, அவ ராஜா செத்த பின்னாலே எங்கிட்டோ இருந்து வயித்திலே வாங்கிக்கிட்டதுன்னு சொல்லிருவானுக பாளையக்காரனுக.”
நாகலட்சுமி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது.
கமலாம்மாவின் குரல் தழைந்தது “இப்ப ராஜாவும் இல்லை. ராஜா செத்துப்போயி நாலுமாசமாகுது. வாற சித்திரையிலே மருதை அழகர் விழாவிலே கிரீடம் வைச்சு ஆனைமேலே போறதுக்கு ராஜா வேணும். அழகர் முன்னாலே வாளோட ராஜா நடக்கணும்… பாளையக்காரங்களிலே ஒருத்தரை ராஜாவாக்குங்கன்னு எல்லாருமா சேந்து சொல்லப்போறாங்க. அதுக்காகத்தான் இந்த வாயிநாத்தமெல்லாம்… அதுக்குள்ள சின்னராணி ஆம்புளைப்பிள்ளை பெத்தா அதையே ராஜாவாக்கிடுவா பெரியராணி மங்கம்மா…”
“ஆம்பிள்ளைப்பிள்ள பெறக்கணுமே”
“எந்தப் புள்ளை பெத்தாலும் ஆம்புளைதான்… அதெல்லாம் பெரியராணிக்கு கணக்கு இல்லாமலா போயிடும்?”
நாகலட்சுமி பெருமூச்சுவிட்டாள்.
“அந்தப்புள்ளைய அத்தனை தொட்டவ்வாக்களும் ஏத்துக்கிடணுமானா சின்னமுத்தம்மா உடன்கட்டை ஏறித்தான் ஆகணும்… வேற வழியே இல்லை… அவ இருந்தா நடக்காது.”
“அப்றம்?”
“அப்றமென்ன? அந்தச்சின்னப்புள்ளை கையிலே ஒரு தாழம்பூ வாளைக்குடுத்து சிம்மாசனத்திலே இருத்தி பெரியராணி கையிலே பெரிய வாளை கையிலே எடுத்துக்கிடுவா… தளவாய் நரசிப்பையன் அதுக்குப்பிறகு பாளையக்காரனுகளுக்கு எது புரியுமோ அதை சொல்லிக்குடுப்பாரு… அரைமொந்தை ரத்தம் குடிச்சா அவனுக அடங்கி பாறைக்குள்ளே தேரை மாதிரி ஒண்டி இருப்பானுக.”
நாகலட்சுமி “மாமி” என்றாள் மெல்லிய குரலில்.
“சொல்லுடி”
“இல்ல, பெரியராஜா சொக்கநாதநாயக்கர் செத்தப்போ மகாராஜா ரங்ககிருஷ்ணருக்கு மூணுமாசம்தான் பிராயம். மகாராணி மங்கம்மா ஏன் உடன்கட்டை ஏறல்லை?”
“மூணுமாசப் பிள்ளையை விட்டுட்டு உடன்கட்டை ஏறினா அந்தப்பிள்ளையையும் கொன்னிருவானுகளே”
“மங்கம்மாத்தாயாரை மட்டும் ஏன் ஏத்துக்கிட்டாங்க?” என்றாள் நாகலட்சுமி.
”அவங்க மகாராணி”
“அவங்களும் ஒண்ணும் நேரடி ராஜகுடும்பம் இல்லியே. அவங்களும் சின்னக்குடும்பம்தானே? அவங்கப்பா தப்பள லிங்கம நாயக்கர் பாளையக்காரர்கூட இல்லை.”
“ஏண்டி, நீ அந்தம்மாவை பார்த்திருக்கே இல்ல?”
“ஆமா”
“அவங்க மகாராணி இல்லேன்னு யாராவது சொல்லமுடியுமா? கொல்லையிலே சோளம் விதைச்சுக்கிட்டு நின்னாலும் அவங்க மகாராணிதான்… அது பிறப்பிலேயே வாறது. அதுக்குக் குலக்கணக்கு இல்லை. அந்தம்மா சின்னப்பெண்ணா வந்தப்பவே நான் பாத்திருக்கேன். அப்பவே அவங்க மகாராணிதான்… சொக்கநாத நாயக்கரே அவங்க கிட்ட கொஞ்சம் பணிஞ்சுதான் பேசுவாங்க. அவங்க குரல் தணிஞ்சு பேசி, உடம்புகுழைஞ்சு நடந்து நான் பாத்ததில்லை…. மதங்க லட்சணம்னும் நம்ம சாஸ்திரத்திலே சொல்லுவாங்க. கஜராஜவிராஜித கதின்னு சொல்லு இருக்கு… யானை மாதிரி… யானையிலே பொம்புளைதான் தலைமை. ஒத்தயான யானையா இருந்தாலும் அண்டமுடியாது… ஏன்னா அது அப்டித்தான்.”
கொஞ்சம் பேசியதுமே நாகலட்சுமிக்கு நெஞ்சடைப்பு அகன்றது. எழுந்து சென்று தண்ணீர் குடித்தாள். தளிகை ராமய்யன் வேலை சொன்னார். அதைச் செய்ய ஆரம்பித்தாள். அரைக்கப்பட்ட தேங்காய் விழுதை எடுத்துச்சென்று சமையலறையில் வைத்தாள். புதிய தேங்காய்களை எண்ணி எடுத்து கைப்பள்ளிகளுக்கு கொடுத்தாள். சமையலறை அவ்வேளையில் கோயில்முக்கு சந்தையடி போல இருக்கும்.
அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் அவளுக்குப் பதற்றமாக இருந்தது. என்ன பதற்றம் என்று அவளே யோசித்தும் பிடிகிடைக்கவில்லை. தளிகை சுப்பையன் விறகுக்காரிகளிடம் மேலும் விறகை அடுக்கும்படி சொல்லச்சொல்லி அனுப்பினான். அரண்மனையில் அடுப்புகள் மட்டும்தான் சமையலறைக்குள் இருந்தன. நூறு பெரிய கோட்டையடுப்புகள். உள்ளே விறகு வருவதில்லை. வெளியே பெரிய சூளைபோல செங்கல் அடுக்கி கட்டப்பட்டிருந்தது. அதில்தான் விறகையும் கரியையும் அடுக்கி தீபோட்டுக்கொண்டே இருப்பார்கள். தீக்கொழுந்துகள் மண்ணாலான குழாய்கள் வழியாக பெருகி வந்து நூறு அடுப்புகளிலும் எழுந்து எரிந்து மேலெழும். நீலத்தழல் செந்தழல் மட்டும்தான் வரும், புகை வராது. விறகை கூட்டவும் குறைக்கவும் உள்ளிருந்து கயிறை இழுத்து மணியை அடிக்கவைப்பார்கள்.
நாகலட்சுமி விறகுப்புரைக்கு போனபோது விறகை அடுக்கும் கந்தனும் குருவனும் மண்ணனும் நின்று வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
“கந்தா, மணிச்சத்தம் கேக்கலையா? அய்யன் கோவிச்சுக்கறான்” என்றாள் நாகலட்சுமி.
“அவனுக்கென்ன? கோச்சுக்கிட்டா கோமணத்தை எடுத்து தலையிலே கட்டிக்கிடட்டும்… ஒரு பாக்கு கடிக்கிறதனாலே அரண்மனைச் சோத்திலே உப்பு குறைஞ்சிராது” என்றான் கந்தன்.
“எனக்கென்ன? நான் சொல்றதை சொல்லியாச்சு… மேக்கொண்டு ரெட்டைவெறகு அடுக்கணுமாம்”
“ரெண்டாம்குண்டு போட்டாச்சு சாவடியிலே. இன்னமுமா அய்யன் சமைக்கான்?” என்று கேட்டபடி கந்தன் எழுந்து வந்து பெரிய விறகுக்கட்டைகளைத் தூக்கி சூளைத்துளைக்குள் போட்டான். ஒவ்வொன்றும் ஒரு முதலைபோல தோன்றின. அவற்றை உள்ளே எரிந்த தழல்வந்து அணைத்துக்கொண்டது.
அப்பால் துருத்திமேடை மேல் அமர்ந்திருந்த கண்ணப்பனும், வீரையனும், குருசாமியும், மந்திரமும் மிதிக்கோல்களை மாறிமாறி அழுத்தி மிதித்து நெம்புகோல்களை எழுந்து அமரச்செய்து துருத்திகளை இயக்கினர். பெரிய எருமைகளைப்போல நான்கு துருத்திகள் வயிறு உப்பி அழுந்தி காற்றை உலைக்குள் சீறவிட்டன. காற்றுக்கு ஏற்ப தீ சிவந்து, வெளிறி, பொன்னிறமாகியது. வெண்ணிறமும் நீலநிறமும் ஆகி உறுமியது. அவள் தீயை பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வையை விலக்க முடியவில்லை.
சட்டென்று அவள் கைகால்கள் குளிர்ந்தன. உடம்பு தூக்கிப் போட்டது. அவள் உதைபட்டவள் போல அப்படியே பக்கவாட்டில் விழுந்தாள். கைகால்கள் இழுத்துக்கொண்டன.
அவள் விழித்துக் கொண்டபோது கந்தன் அவள் முகத்தில் நீர் தெளித்துக் கொண்டிருந்தான். குருவன் அவளைத் தூக்கிப் பிடித்திருந்தான். கூச்சத்துடன் அவள் மாராப்பை சரிசெய்துகொண்டாள்.
“எந்திரிக்காதே, படுத்துக்கோ… தலையச்சுத்தும்” என்றான் கந்தன்.
அவள் எழுந்து நின்றாள். “இல்ல ஒண்ணுமில்லை” என்றாள்.
“சோறு தின்னியா?” என்றான் கந்தன்.
“இல்லை” என்று அவள் சொன்னாள்.
“பாவம் வளரும்புள்ளை… நேரத்துக்கு சோத்தப்போட்டா என்ன இந்த அய்யனுக்கு?” என்றான் குருவன்.
மேலிருந்து குருசாமி “வயத்திலே புள்ள வளருதோ என்னமோ?” என்றான்.
“வாய மூடுலே” என்றான் குருவன்.
அவள் திரும்பிச் சென்றபோது கடைசியாக தீயில் கண்ட உருவெளித் தோற்றம் நினைவிலெழுந்து திடுக்கிட்டு உடலதிர்ந்து மீண்டும் விழப்போனாள். நிலையைப் பிடித்துக்கொண்டு சமன்படுத்திக்கொண்டு நின்றாள்.
[ 3 ]
ரங்கமகாலில் அனைவருக்கும் வேறுவேறு இடங்களில்தான் சாப்பாடு. வேலைக்காரிகளுக்குக் கொல்லைப்பக்கம் ஓலைக்கொட்டகை போடப்பட்டிருந்தது. தாசிகளுக்கு உள்ளே பெரிய இடைநாழி இருந்தது. அதிலும் கூட எவர் எங்கே என்ற கணக்கெல்லாம் உண்டு. சாப்பாட்டுத்தட்டுடன் நாகலட்சுமி வழக்கமான தூணருகே போய் அமர்ந்துகொண்டாள்.
அவள் உண்ணத் தொடங்கியபோது செல்லம்மாள் வந்து அருகே அமர்ந்தாள். “என்னடி, நேரமே சாப்பிட வேண்டியதுதானே?” என்றாள்.
அவள் “பிந்திப்போச்சு, வேலை இருந்திச்சு” என்றாள்.
“என்ன வேலையோ? அரமனை வேலை எப்ப ஒழியுது?” என்றாள் செல்லம்மாள்.
செல்லம்மாளிடம் நாகலட்சுமி ஓரிருமுறை சில சொற்கள் பேசியதுடன் சரி. அவளை நாகலட்சுமிக்கு தெரியாது என்றுதான் சொல்லவேண்டும். அவள் பொதுவாகப் புன்னகை செய்தாள்.
“சின்னராணியம்மா எப்டி இருக்கா?”
“நல்லாத்தான் இருக்காங்க” என்றாள் நாகலட்சுமி.
“அப்டித்தான் மருத்துவச்சிகளும் சொன்னாங்க” என்றாள் செல்லம்மாள். பிறகு குரலைத் தாழ்த்தி “உடன்கட்டை ஏறுற முடிவிலேதான் இருக்காளாமா?” என்றாள்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது” என்றாள் நாகலட்சுமி, எதையாவது சாக்கிட்டு எழுந்து போகலாமா என்று பார்த்தாள்.
“நான் உங்கிட்ட வம்பு பேச வரலையடியம்மா…” என்றாள் செல்லம்மாள். “நான் சும்மா கேட்டேன். மகாராணி வயசுதான் என் மகளுக்கும். மகாராணியை நாலஞ்சு தடவை பாத்திருக்கேன். பால்வடியற முகம்… தீயிலே பாயறதுன்னா…”
நாகலட்சுமி திடுக்கிட்டாள். அவளால் சோற்றை அள்ள முடியவில்லை. கை நடுங்கியதனால் தட்டில் கையை வைத்துக்கொண்டாள்.
“எரிஞ்சு உருகி… அய்யோ நினைக்கவே பயம்மா இருக்கு… என்னாலே முடியலைம்மா… அதான் கேட்டேன்.”
நாகலட்சுமி மூச்சுத்திணறியதனால் இடக்கையால் நெஞ்சை அழுத்திக்கொண்டாள்.
“சரி, அதெல்லாம் ராஜகாரியம். நாம பேசப்பிடாது. கிரீடத்துக்காக கொல்லுறதும் சாகுறதும் அவங்க சாதிக்குரிய விஷயம்” என்று செல்லம்மாள் சொன்னாள். “அப்டி இருக்கக்கொண்டுதானே இம்மாம்பெரிய சிராப்பள்ளி மருதை ராச்சியத்தை வடுகராஜ்ஜியத்திலே இருந்து வந்து அடக்கி ஆட்சிபண்ணுறாங்க. தேவரும் மறவரும் நின்னு சேவுகம் பண்ணுறாங்க”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. தட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
செல்லம்மாள் தொடர்ந்தாள். “சின்னமுத்தம்மாவை எப்டி ரங்ககிருஷ்ணனுக்கு கட்டிவைச்சாங்க? சின்னமுத்தம்மா யாரு? சித்ரதுர்க்காவோட ராஜா சிக்கண்ண நாயக்கரோட மகள். அவளோட அப்பா சிக்கண்ண நாயக்கர் அவளை சித்ரதுர்க்காவிலே இருந்து ஒருமுறைகூட சிராப்பள்ளிக்கு அனுப்பலை. ஆனா அவளை மூணுவாட்டி அனந்தபூருக்கு அனுப்பினார். அங்க குடுக்கணும்னு அவருக்கு ஆசை. சித்ரதுர்க்கா நாயக்கருங்களுக்கு எப்பவுமே மதுரைமேலே ஒரு வெலக்கம்தான். குறைஞ்சது தெலுங்குநாட்டிலே ஏதாவது நல்ல ராஜகுடும்பத்திலே பெண்ணை அனுப்பணும்னு நினைச்சாரு..”
குரலைத்தாழ்த்தி “அவங்களுக்கு அங்க பல கணக்குகள் இருந்தது. அதுக்கேத்த மாதிரி கேளாடியிலே இருந்து இக்கேரி நாயக்கர் குடும்பத்திலே கேளாடி சென்னம்மா தாயாருக்கு பொண்ணு புடிச்சிருக்குற சேதி வந்தது. சென்னம்மா தாயாருக்கு பிள்ளை இல்லை. ஒரு நல்ல குடும்பத்திலே பையனை சுவீகாரமா எடுக்கலாம்னு நினைச்சாங்க. அவனுக்கு பாளையப்பட்டுக்களிலே அங்கீகாரம் வேணும்னா இன்னொரு நல்ல ராஜ குடும்பத்திலே பொண்ணு வரணும்… சித்ரதுர்க்காவுக்கும் இக்கேரிக்கும் கொள்வினை கொடுப்பினை உண்டு….”
அதையெல்லாம் ஏன் தன்னிடம் சொல்கிறாள் என்று நாகலட்சுமி யோசித்தாள். வேறு எவராவது அவர்கள் பேசிக்கொள்வதை கேட்கிறார்களா என்று சுற்றும் பார்த்தாள்.
“சின்னமுத்தம்மாளோட அப்பா சிக்கண்ண நாயக்கரு செத்துப்போய் அவரோட தம்பி மதகரி நாயக்கர் அப்ப ஆட்சிக்கு வந்துட்டார். அவரு மதம்புடிச்ச யானை மாதிரியேதான். அவரும் இக்கேரி சென்னம்மாவும் சேந்துட்டா வடக்குராஜ்ஜியம் கையிலே இருந்து போனமாதிரி மட்டுமில்லை, தெக்குமேலே வடக்கு வந்து விழுறதும் நடக்கும்… அதனாலே மங்கம்மா அவ்வா உடனே சின்னமுத்தம்மாவை ரங்ககிருஷ்ணனுக்கு குடுத்திரணும்னு சொல்லி தூதனுப்பினா. கஸ்தூரி ரங்கய்யா அவரே நேரிலே போயி பேசி கல்யாணத்துக்கு வெத்திலை பாக்கு மாத்திக்கிட்டுதான் வந்தார். எப்டி பொண்ண குடுக்காம இருப்பான்? கஸ்தூரி ரங்கய்யா இங்கேருந்து போறப்பவே தியாகதுர்க்கம், பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம் மூணுபாளையத்திலே இருந்தும் பட்டாளம் சித்ரதுர்க்காவை பாத்து கெளம்பியாச்சே…”
நாகலட்சுமி “நான் வாறேன்… அய்யரு கூப்பிடுறாரு” என்றாள்.
“இருடி… சொல்லுறதக் கேளு. அப்டி தூக்கிட்டு வந்து தாலிகெட்டி ராணியாக்கினவதான் இவ. சின்னமுத்தம்மாள் ஏன் உடன்கட்டை ஏறணும்னு பெரியராணி மங்கம்மா சொல்றா? அவளோட வயித்திலே பிறந்த மகன் ராஜாவா வேணும். அது ஒண்ணு, ஆனா அவ இருந்தா சித்ரதுர்க்காக்காரன் மதகரிநாயக்கன் மதுரைக்கு சொந்தம்கொண்டாட ஆரம்பிச்சிருவான்… அதான் இன்னமும் முக்கியம்”
“நான் போறேன்” என்றாள் நாகலட்சுமி.
“இதை கேட்டுட்டுப்போ… புருஷன் செத்து பொஞ்சாதிக்குத் தாளமுடியாம துக்கமிருந்தா உடன்கட்டை ஏறலாம். புருஷனுக்காக சாவுற குலமுறை இருந்தாலும் சாகலாம். ரெண்டுமே இல்லை. இது வெறும் கிரீடச்சண்டை. இதிலே இந்தச் சின்னப்பொண்ணு ஏன் சாகணும்? அதுவும் உயிரோட தீயிலே விழுந்து எரிஞ்சு உருகணும்? அதுவும் அவன் செத்து இந்தா நாள் கழிச்சு? ஒரு நியாயம் வேணுமே?”
நாகலட்சுமிக்கு மீண்டும் அந்த உடல்துடிப்பு வந்தது. அவள் கையில் எடுத்த தட்டை கீழே வைத்தாள்.
“இங்கபாரு, சின்ன முத்தம்மாள் சாகணும்னு ஒரு அவசியமும் இல்லை. அவளை கொல்லப் பாக்கிறாங்க. வயித்துப் பிள்ளையோட ஒருத்தி தீயிலே குதிக்கிறதுக்காக நாலுமாசமா காத்திருக்கான்னா அவ எப்டிப்பட்ட நரகத்திலே இருக்கா… எதுக்காக? இது அவளோட நாடு இல்லை. இங்க அவ விரும்பி வரவும் இல்லை. இதனாலே அவளுக்கோ அவ குடும்பத்துக்கோ ஒரு நன்மையும் இல்லை. அநியாயமா அவளை கொல்லப்பாக்கிறாங்க”
“அதுக்கு நாம என்ன செய்யமுடியும்?”
”நீ இதையெல்லாம் அவகிட்ட சொல்லு. உன்னாலே மட்டும்தான் சொல்லமுடியும். அவ தப்பிக்க ஒரு வழி இருக்கு… ஒரே வழிதான் இருக்கு”
“என்ன வழி?”
”அந்த புள்ளை சாபிள்ளையாகணும்… பிள்ளை கலங்கிட்டுதுன்னா அவளை விட்டிருவாங்க. அவளோட பிள்ளை இருந்து அவன் முடிசூடினாத்தான் சித்ரதுர்க்கா மதகரி நாயக்கன் மதுரைக்குச் சொந்தம் கொண்டாடமுடியும். பிள்ளை இல்லேன்னா சின்னமுத்தம்மாளுக்கு மதுரைமேலே எந்த உரிமையும் இல்லை. என்னோட ஊருக்குப் போறேன்னு சொன்னா போக விட்டிருவாங்க. மறுக்கமுடியாது. உடன்கட்டை ஏற விருப்பமில்லைன்னு சொன்னாப் போரும்… அதை நாலாள் முன்னாலே சபையிலே சொல்லிட்டா மங்கம்மாவேகூட ஒண்ணுமே சொல்ல முடியாது…”
“ஆனா புள்ளை அழியணுமானா…”
“வழி இருக்கு” என்றாள். செல்லம்மாள் குரலை மேலும் தழைத்து “நான் ஒரு மருந்து தாறேன். பாத்தா வாசனைப் பன்னீர் மாதிரித்தான் இருக்கும். ஒரு அஞ்சுநாள் வெறும் வயித்திலே ஒரு ஒரு சங்கு குடிச்சாப்போரும். ஒண்ணுமே ஆகாது. வலியிருக்காது. ரெத்தப்போக்கும் இருக்காது. ஒரே மட்டா புள்ளை சறுக்கி அப்டியே வெளியே போயிரும்”
“அய்யோ” என்றாள் நாகலட்சுமி.
“அய்யோன்னு யாரைச் சொல்லுறே? மகராசியா இப்பவும் வாழுற சின்ன ராணியையா, இன்னும் முழுசா உண்டாகாத புள்ளையையா?”
“இல்ல…”
”ராணி தப்புறதுக்கு வேற வழியே இல்லை. புள்ளைமட்டும் உருப்படியா பொறந்ததுன்னு வையி, பெரியராணி கஸ்தூரி ரங்கய்யா ரெண்டுபேரும் சேர்ந்துட்டு அவளை உடன்கட்டை ஏத்தாம ஓயமாட்டாங்க”
நாகலட்சுமி அவளை திகைப்புடன் பார்த்தாள்.
“இங்கபாரு ராணி சின்னமுத்தம்மாளுக்கு என்ன வயசு? உன் வயசு… இப்ப அவ சாகணும்னு என்ன? …அவ சித்ரதுர்க்காவுக்கு போகட்டுமே. அப்பனாத்தாகூட சந்தோஷமா இருக்கட்டுமே…”
“அதுக்காக புள்ளைய…”
“இல்லேன்னா அவ சாகணும்… ரெண்டுலே எதுன்னு அவ முடிவுசெய்யட்டும்… அப்பாலே நாம ஒண்ணும் செய்யமுடியாது. இதோபாரு, எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. இப்ப இதிலே நான் தலையிட்டது வெளியே தெரிஞ்சா என் தலை அப்பவே சாவடியிலே உருளும். நீயே கூட உளறி என்னைய மாட்டிவிட்டிருவே. சின்னக்குட்டி நீ. ஆனாலும் ஏன் சொல்லுறேன்? என் பொண்ணு மாதிரி இருக்கா சின்னராணி… அவ எரிஞ்சு சாகிறத பாக்கிற தெம்பு எனக்கு இல்லை… அவ்ளவுதான்.”
செல்லம்மாள் தட்டுடன் எழுந்துகொண்டு “சொல்றதை சொல்லிட்டேன்… இந்தா இந்த மருந்தை இங்க வைக்கிறேன். உன் மனசாட்சிப்படி செய்யி… வேண்டாம்னு தோணிச்சுதுன்னா அப்டியே கொண்டுபோயி சாக்கடையிலே கொட்டிட்டு சம்புடத்தை தூர எறிஞ்சிரு” என்றாள்.
அவள் ஒரு சிறு பித்தளைச் சம்புடத்தை அருகே வைத்துவிட்டுச் சென்றாள். நாகலட்சுமியின் தொண்டை அடைத்துக்கொண்டது. அவளிடமிருந்து வார்த்தையே வரவில்லை. அதைத் தொடமுடியாது என்று தோன்றியது.
அவள் எழுந்து விலகி ஓடினாள். வேறு ஒரு சேடிக்கூட்டம் கையில் சாப்பாட்டுத் தட்டுகளுடன் வருவதைக் கண்டாள். திக்கென்றது. ஓடிப்போய் அந்த சம்புடத்தை எடுத்து இடுப்பில் செருகி முந்தானையால் மறைத்துக்கொண்டாள். மிகப்பெரிய எடையை எடுத்துக்கொண்டதுபோல கால்கள் தெறித்தன. உடல் தள்ளாடியது.
மூச்சுத்திணறலுடன் கைகளைக் கழுவி, பாத்திரத்தையும் கழுவி அடுக்கிவிட்டுச் சென்று ஒருமூலையில் அமர்ந்துகொண்டாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. கைகள் உதறுவன போல நடுங்கியதனால் ஒரு கையை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டாள். கையில் அணிந்திருந்த பித்தளை வளையல்களை மாறி மாறி உருட்டிக்கொண்டே இருந்தாள். நெஞ்சு அடைத்திருப்பது போலிருந்தது. பின்னர் அங்கேயே படுத்துக்கொண்டாள்.
முத்துமாரி வந்து “என்னடி?” என்றாள்.
“தலைய வலிக்குது” என்றாள் நாகலட்சுமி.
“காய்ச்சலாடி?” என்று அவள் தொட்டுப்பார்த்தாள். “ஆமா காயுதே” என்றாள். ”படுத்திரு, நான் பெரியநாச்சிகிட்டே சொல்லிடறேன்.”
அவள் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். கூர்மையான ஒரு வாள்முனை அவள் வயிற்றைத் தொட்டுக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. அல்லது நச்சுப்பாம்பைப் பிடித்துச் சுருட்டி வைத்திருப்பதுபோல. அது நஞ்சு. குழந்தையைக் கொன்றுவிடும். ஒரு குழந்தையை. இன்னும் பிறக்காத குழந்தையை.
ஆனால் அந்தக்குழந்தை அவன் அம்மாவை கொல்லப் போகிறான். பெண்ணாகப் பிறந்தால் அந்தக் குழந்தையும் சாகநேரிடும். எதையும் எண்ணக்கூடாது என்று அவள் புரண்டு படுத்தாள். ஆனால் அவள் மனதுக்குள் துளித்துளியாக அந்த ஒரே எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ ஒரேவகையான சொற்களுடன்.
முத்துமாரி வந்து “ராணிக்கு சுக்குநீரும் பருப்பு உருளையும் கொண்டுபோயி குடுக்கணும். நானே கொண்டுபோயி குடுத்திரவா?” என்றாள்.
“இல்ல, வேண்டாம்” என்று நாகலட்சுமி எழுந்தாள். அதை அனிச்சையாகவே செய்தாள். உடனே முத்துமாரியையே அனுப்பியிருக்கலாமோ என்றும் தோன்றியது. ஆனால் வேறு எவரும் போக அனுமதி இல்லை.
அவள் பெருமூச்சுவிட்டாள். எத்தனை பெருமூச்சு விட்டாலும் மனசில் இருந்த எடை கரையவில்லை. இப்போது என்ன செய்வது? இந்த மருந்தை ராணியிடம் கொடுத்துவிடலாமா? கூடாது. அவளே எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அம்மாவிடம் ஒருவார்த்தை கேட்டுக்கொள்ளலாம். ஆனால் அம்மா என்ன சொல்வாள் என்பதில் சந்தேகமே இல்லை. அம்மா அரண்மனைக்கு விரோதமாக நினைக்கக்கூட மாட்டாள்.
எதற்கும் இருக்கட்டும். இதை கையிலேயே வைத்திருக்கலாம். மனம் தெளியட்டும். அதன்பிறகு கொண்டுபோய்க் கொடுக்கலாம். அந்த எண்ணம் அவளுக்கு ஆறுதலை அளித்தது. எதுவும் இப்போது இல்லை. இன்னும் நேரமிருக்கிறது. இப்போது அதைப்பற்றி யோசிக்கவே வேண்டாம்.
சுக்குநீரும் பருப்புருளையும் அடங்கிய பாத்திரத்தை அவளிடம் அருக்காணி கொண்டுவந்து தந்தாள். அவள் ஆடையை சீர்படுத்தியபின் உள்ளறைக்குப்போய், படிக்கட்டில் ஏறி, மேலே சென்றாள். ஏனோ அவளுக்கு மூச்சிளைத்தது. முகம் நன்றாகவே வியர்த்துவிட்டது. அதை துடைக்க முடியாமல் தாலம் இரு கைகளிலும் எடையாக இருந்தது.
அவள் ராணியின் அறைக்கதவைத் தட்டியபோது குரல் எழவில்லை. ஆனால் சின்னமுத்தம்மாள் சட்டென்று திறந்துவிட்டாள். அதே வெளிறிய முகம். தூங்கிக் கொண்டிருந்தாள்போல. கண்ணிமைகள் வீங்கியிருந்தன.
“சுக்குநீரும் பருப்புருளையும் இருக்கு ராணி” என்றாள் நாகலட்சுமி.
“அங்கே வை” என்று முகம்சுளித்தபடி சொல்லி சின்னமுத்தம்மாள் சென்று அமர்ந்துகொண்டாள்.
அந்த முகச்சுளிப்பு நாகலட்சுமியை குத்தியது. ஏனென்றறியாமல் ஒருகணம் எரிச்சல் வந்தது. அவள் எதையும் நினைக்காமலேயே சொன்னாள் “இங்க ஒரு மூத்ததாசி இருக்கா. செல்லம்மான்னு பேரு. அவ ஒரு மருந்து குடுத்தா”
அதை சொன்னதுமே அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவள் முகம் வலிப்புகொண்டது போல இழுபட்டது. அதை சின்னமுத்தம்மாள் திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தாள்.
“அதைச் சாப்பிட்டா எல்லா பிரச்சினையும் தீந்திரும், நீங்க ஊருக்கு போய் உங்க அம்மாகூடவே இருக்கலாம்னு செல்லம்மா சொன்னா.”
“எப்டி?” என்று சின்னமுத்தம்மாள் கேட்டாள்.
“உங்களுக்கு பிள்ளை பெறந்தா உங்களால உடன்கட்டை ஏறாம இருக்கமுடியாது. உடன்கட்டை ஏறினாத்தான் அந்தப்புள்ளையை நாய்க்கர் பாளையங்க ஏத்துக்கிடும். அதனாலே பெரிய ராணியும் கஸ்தூரி ரங்கய்யாவும் உங்களை உடன்கட்டை ஏறாம விடமாட்டாங்க. பொம்புளைப் புள்ளையா இருந்தா அந்தப் புள்ளையும் சாகணும். ஆம்புளைப் புள்ளையை கிரீடம் சூட்டாம அவங்க விடமாட்டாங்க…. ஏன்னா புள்ளை பொறக்கலைன்னா பாளையக்காரனுக அவங்களிலே ஒருத்தனுக்கு கிரீடத்தை குடுக்கணும்னுதான் சொல்லுவாங்க. அதுக்கு பெரியமகாராணி ஒருநாளும் விடமாட்டாங்க.”
“அதுக்காக?” என்றாள் சின்னமுத்தம்மாள். அந்த முகச்சுளிப்பு மேலும் ஆழமானதாக ஆகியது.
“செல்லம்மை சொன்னா, இந்த மருந்தை தினசரி வெறும் வயித்திலே ஒரு சங்குவீதம் நாலுநாள் குடிச்சா பிள்ளை நழுவிரும்னுட்டு… பிள்ளை இல்லேன்னா உங்களை உடன்கட்டை ஏறச்சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஊருக்குப் போகணும்னு சொன்னா தடுக்கவும் முடியாது… வேணுமானா பாளையக்காரங்களுக்கும் சொல்லலாம், ஊருக்குப்போக இஷ்டம்னுட்டு. விட்டிருவாங்க”
அவள் சின்னமுத்தம்மாளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். சொல்லச் சொல்ல அவளுக்குள் குடியேறி வலுப்பெற்றது சின்னமுத்தம்மாள் என்னமுடிவை எடுக்கப் போகிறாள் என்ற ஆவல்தான். சொல்லி முடித்ததும் இனி முடிவெடுக்கும் பொறுப்பு தனக்கில்லை என்ற எண்ணம் அவளை மேலும் எளிதாக்கியது.
அவள் நினைத்ததுபோல சின்னமுத்தம்மாள் உடனடியாகச் சீற்றம் கொள்ளவில்லை. அவள் சொன்னதைக் கேட்டதுபோலவே தெரியவில்லை. அப்படியே சரிந்த விழிகளுடன் அமர்ந்திருந்தாள்.
“மருந்தைக் கொண்டுவந்து தாறது என் கடமைன்னு தோணிச்சு. ஒருவழியும் இல்லாம நீங்க தீப்பாயக்கூடாது. ஒரு வழி இருக்கணும். முடிவை நீங்களே எடுக்கணும்…”
அதையும் சின்னமுத்தம்மாள் கேட்கவில்லை என்று தோன்றியது.
“முடிவை நீங்களே எடுத்தா பிறவு யார்மேலேயும் பழியில்லை. என்மேலேகூட பழி இல்லை. ஏன்னா நான் உங்களை உளவுபாக்குறதுக்காக அனுப்பப்பட்ட தாசி… இந்தா இருக்கு மருந்து. நீங்க முடிவெடுங்க. வேண்டாம்னு சொன்னா உடனே கொண்டு போயிடறேன். எல்லாத்தையும் மறந்திருதேன்… செல்லம்மாகிட்ட சொல்லிடுறேன்”
சின்னமுத்தம்மாள் மெல்ல அசைந்து அமர்ந்து “இந்தச் செல்லம்மா யாரு?” என்றாள்.
“இங்க தாசியா இருக்காங்க, வயசானவங்க.”
“அவ எந்த கூட்டம்? பாளையக்காரங்க ஆளா?”
அப்படி நாகலட்சுமி யோசிக்கவே இல்லை. “தெரியல்லை. இப்ப நீங்க சொல்லுறப்ப பாளையக்காரங்க ஆளோன்னு எனக்கும் தோணுது. இல்லை அரண்மனையிலேயே கஸ்தூரிரங்கய்யாவை பிடிக்காதவங்களோட ஆளா இருக்கலாம்.”
“என் புள்ளை அழிஞ்சதுமே என்னை கொல்லமாட்டாங்கன்னு எப்டி தெரியும்?”
“செல்லம்மா தனியாளு இல்லேன்னு இப்ப தெரியுதே… அப்டீன்னா அவங்க கவனிச்சுகிட்டுதானே இருப்பாங்க? பிள்ளை அழிஞ்சதை ரகசியமா வைக்கமுடியாது. வயற்றாட்டிகளிலேயும் அவங்க ஆளுங்க கண்டிப்பா இருப்பாங்க. பிள்ளை அழிஞ்சா மூணாம்நாள் சாங்கியம் உண்டுல்ல, அப்ப நீங்க வெளிப்படையா ஊருக்குப் போகணும்னு சொல்லுங்க. அங்க பாளையக்காரங்களோட பெண்டுகள் எல்லாரும் வந்திருப்பாங்க. அதுக்குமேலே உங்களை ஒண்ணும் செய்யமுடியாது. பாளையக்காரங்க பாத்துக்கிடுவாங்க. சித்ரதுர்க்காவிலே உங்க சித்தப்பனுக்கும் செய்தி போயிரும்…”
சின்னமுத்தம்மாள் உதடுகளைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவள் உடல் உலுக்கிக் கொண்டது. மெல்லிய விம்மலோசை எழுந்தது. தலைதூக்கி “மறுபடி நான் சித்ரதுர்க்கா கோட்டையை பாப்பேனாடி?” என்றாள்.
“நீங்க நினைச்சா பாக்கலாம்” என்றாள் நாகலட்சுமி. ஆனால் அவளுக்கு ஏதோ ஒரு ஏமாற்றமும் சலிப்பும் ஏற்பட்டது.
“அந்த மண்ணை பாக்கணும்…. என் அம்மாவை பாக்கணும்டி…” என்றாள் சின்ன முத்தம்மாள் நெஞ்சில் கைவைத்து விம்மியழுதபடி. “என்னாலே சாகமுடியாது… சாக எனக்கு மனசில்லைடி…. நான் தீப்பாய மாட்டேன். இத்தனை மாசமா அல்லும்பகலும் அதைத்தான் நினைச்சிட்டே இருக்கேன். நினைப்புக்குள்ள ஆயிரம்தடவை தீயிலே பாய்ஞ்சிட்டேன். தீயிலே வெந்து உருகி எரிஞ்சு… யம்மா யம்மா.”
நாகலட்சுமி பாய்ந்து சின்னமுத்தம்மாளின் கைகளைப் பற்றிக்கொண்டு அருகே அமர்ந்தாள். “பயப்படாதீங்க ராணி… நீங்க நினைச்சா தீப்பாய வேண்டாம். யாரும் ஒண்ணும் சொல்லமுடியாது. அப்டி ஒண்ணும் சாஸ்திரம் கெடையாது. எல்லாம் கிரீடத்துக்கான சூழ்ச்சிதான்… நாம பொம்புளைங்க. யாரு ஆண்டா நமக்கு என்ன? நாம இவங்களுக்காக ஏன் சாகணும்? நீங்க சாகவே வேண்டியதில்லை” என்றாள்.
அவளுக்கும் அழுகை வந்தது. அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் சின்ன முத்தம்மாளின் கைகள்மேல் சொட்டியது.
“எனக்கு நினைக்கவே பயமா இருக்குடி… தீயிலே விழுறதை நினைக்கவே முடியலைடி. ஆனா வேற நெனைப்பே இல்லை. சொப்பனமும் அதுதான் வருது… தீயிலே விழமாட்டேன்… யம்மா யம்மா நான் தீயிலே விழமாட்டேன்.”
சின்னமுத்தம்மாள் நாகலட்சுமியின் கைகளை இறுகப்பற்றியபடி அதை மூர்க்கமாக உலுக்கியபடி கழுத்தில் நீல நரம்புகள் புடைக்க அழுகையால் பதறும் குரலில் சொன்னாள் . “நான் சாகமாட்டேன்…நான் சாகமாட்டேண்டீ”
“வேண்டாம், நீங்க போயிடுங்க.. சித்ரதுர்க்காவிலே போயி அம்மாகூட தீர்க்காயுசா இருங்க. இந்தப் புள்ளை வேண்டாம். இது உங்கமேலே இந்த மதுரை ராஜ்ஜியம் தூக்கிவைச்ச அழுக்குமூட்டை. இதை விட்டிருங்க. இது இல்லேன்னா உங்களுக்கும் மதுரைக்கும் சம்பந்தமே இல்லை…” என்றாள் நாகலட்சுமி உறுதியாக.
“அப்டியாடி சொல்றே?” என்றாள் சின்னமுத்தம்மாள்.
“ஆமா, அது மட்டும்தான் செய்யவேண்டியது. மத்த நெனைப்பே வேண்டாம். இந்தப்புள்ளை உங்க மேலே மத்தவங்க ஏவிவிட்ட பேயி. நீங்க அந்தப்பேயிங்களைப் பாத்து த்தூ பேயே, போயிடுன்னு சொன்னா அதுக ஓடிரும்…” என்றாள் நாகலட்சுமி. ”மகாராணி எங்க தாசி சாஸ்திரத்திலே ஒண்ணு சொல்லிக்குடுப்பாங்க. பெண்ணை குழந்தையை வச்சு கட்டிப்போடுறாங்க, ஆணை பெண்ணை வைச்சு கட்டிப்போடுறாங்கன்னுட்டு. குழந்தைங்கிற சங்கிலிய அத்துட்டா அதுக்குப் பின்னாலே பொம்புளைங்களுக்கு தெய்வசக்தி வந்திரும்… என்ன வேணுமானாலும் செய்யமுடியும். இன்னொருத்தருக்கு அடிமையா இருக்கவே மாட்டாங்க… இதுதான் செய்யவேண்டியது.”
“அதைக் கொண்டா” என்றாள் சின்னமுத்தம்மாள்.
நாகலட்சுமி அந்த சம்புடத்தை எடுத்துக் கொண்டுவந்து சின்ன முத்தம்மாளின் கையில் கொடுத்தாள்.
“இருக்கட்டும்டி… நான் இதை குடிக்கிறேன். இந்த நாலுசுவருக்குள்ளே இருந்து தினம் தீயாலே எரிஞ்சு கடைசியிலே செதையிலே சாம்பலா போகணும்னு எனக்கு விதியில்லே”
“ஆமா ராணி”
”அய்யோ, நினைச்சு நினைச்சு செத்துட்டிருந்தேண்டி… தீயைப் பாத்தாலே பயம். வெளிச்சத்தையே தீயா நினைக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த நெய்வெளக்கக் கண்டாலே பயம். இதையும் எப்பவும் அணைச்சோ மூடியோதான் வைப்பேன்”
”இனி பயப்படவே வேண்டியதில்லை ராணி, எதையும் பயப்படவேண்டியதில்லை”
சின்னமுத்தம்மாள் பெருமூச்சுவிட்டாள்.
”சுக்குநீர் குடியுங்க… பருப்புருளை இருக்கு.”
“கொண்டாடி, நல்லாவே பசிக்குது”
சின்னமுத்தம்மாள் பருப்புருளைகள் நான்கையுமே சாப்பிட்டாள். சுக்குநீரை முழுக்க குடித்து தாலங்களை கீழேவைத்தபோது அவள் முகம் மலர்ந்திருந்தது.
“நான் வாறேன் ராணி” என்று நாகலட்சுமி தாலங்களை எடுத்துக்கொண்டாள்.
[ 4 ]
நாகலட்சுமி கீழே வரும்வரைதான் நிதானமாக இருந்தாள். வரும்வழியில் அவளை மறித்த தியாகதுர்க்கம் பத்மினி “ஏண்டி, எப்டி இருக்காடி உன்னோட தீப்பாய்ஞ்ச அம்மன்?” என்றபோது அவள் புன்னகை மட்டுமே செய்தாள்.
பின்னால் வந்த செல்லியம்மா “என்ன, காய்ஞ்சு விறகா ஆயிட்டிருப்பா. நல்ல நெய்யா குடு. உள்ள நெய்யிருந்தா ஊதுவத்தி மாதிரிப் பத்தி எரிவா” என்றாள்.
ஆனால் கீழே வந்து தாலங்களை வைத்துவிட்டு, வண்டிக்காரன் சேர்வைராயனுக்கு சத்தம்காட்ட தளிகை வரதையன் சொன்னதனால் வெளியே சென்றபோது எதுவோ தீயது நினைவுக்கு வந்ததுபோல, அரியது எதையோ மறந்துவிட்டதை நினைத்துக் கொண்டதுபோல நெஞ்சுக்குள் ஒரு நடுக்கம் ஓடி அவள் அப்படியே நின்றுவிட்டாள். மெய்யெல்லாம் வியர்வை பூத்துவிட்டது. படபடப்பில் அப்படியே அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
“என்னடி?” என்று மகாரத்தினம்மாள் கேட்டாள்.
“ஒண்ணுமில்லை… காலையிலே இருந்தே உடம்பு சரியில்லே” என்றாள் நாகலட்சுமி.
மகாரத்தினம்மாள் தொட்டுப்பார்த்து “கொஞ்சம் காயிற மாதிரி இருக்கே… சரி வீட்டுக்குப்போயி படுத்திரு. காய்ச்சல் குறைஞ்சபின்னாடி வா” என்றாள்.
“சரி” என்று அவள் எழுந்து சேர்வைராயனைப் பார்க்கப்போனாள். நாலைந்து நாளில் குழந்தை நழுவிவிடும். அது ஏன் என்று மருத்துவச்சிகள் கண்டுபிடிப்பார்களோ? ஒருவேளை கண்டுபிடித்தால் அந்தத் திரவத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தவள் அவள்தான் என்பதைக் கண்டுபிடிக்க அதிக நேரமாகாது.
நாகலட்சுமிக்கு உடலே பதற ஆரம்பித்தது. மதுரை நாயக்க ராஜ்ஜியத்தில் சாதாரணமாகப் பெண்களுக்கு கொலைத்தண்டனை இல்லை. மிகப்பெரிய தவறு செய்தவர்களை ரகசியமாகக் கொண்டுசென்று தலைவெட்டுவார்கள் என்று கேள்வி. திருப்பரங்குன்றத்துக்குமேல் கொற்றவை சன்னிதியில் அப்படி நாலைந்துபேர் தலைவெட்டப்பட்டது என்று அறிந்திருந்தாள். மற்றபடி பெண்களைப் பிடித்து ஒரு முலையை சீவிவிட்டு புழுக்கைக்காரிகளாக விற்றுவிடுவதுதான் வழக்கம்.
கண்கள் புகைந்துகொண்டே இருந்தன. அவள் மகாரத்தினம்மாளிடம் “நான் வீட்டுக்குப் போறேன் ஆச்சி” என்றாள்.
“சரிடி… போயிட்டு நாளைக்கு வா…” என்றாள் மகாரத்தினம்மாள்.
அவள் வீட்டுக்கு நடந்தபோது உடல் ஓய்ந்திருந்தது. மெய்யாகவே காய்ச்சல் வந்துவிட்டதா? நடக்க நடக்க நடுக்கம் கூடிக்கொண்டே இருந்தது.
அம்மா “ஏண்டி?” என்றாள்.
“காயலா இருக்கு” என்றபடி அவள் உள்ளே சென்று தன் பாயை எடுத்துப்போட்டு படுத்துக்கொண்டாள்.
“ஏண்டி? என்ன பண்ணினே? குளத்திலே குளிச்சியா?” என்றபடி வந்து நெற்றியை தொட்டுப்பார்த்தாள் அம்மா.
“ஒண்ணுமில்லை, கொஞ்சம் காயலா இருக்கு. நீ போ” என்றாள் எரிச்சலுடன்.
“ஏன் எங்கிட்ட எரிஞ்சு விழுறே? சுக்குவெந்நி எடுக்கவா?”
“ஒண்ணும்வேண்டாம்… சித்த சும்மா இருக்கியா?”
“என்னமோ, எல்லாத்துக்கும் எங்கிட்டதான் எரிஞ்சுவிழுறே? குலத்திலே பிறந்த தாசின்னா மூஞ்சியிலே ஒரு சிரிப்பு இருக்கணும். எப்பவும் சிரிச்சாத்தான் மூஞ்சியிலே நிரந்தரமா சிரிப்பு இருக்கும். வலிச்சு வலிச்சு வைச்சுக்கிட்டிருந்தா மூஞ்சி வாழைப்பூ மாதிரி தொங்கிரும்”
அம்மா பேசிக்கொண்டே இருப்பது கேட்டது. அவள் அதிலிருந்து விலகிவிட்டாள். மீண்டும் அதே நினைப்பு. கிளம்பிச்சென்று ராணியிடமிருந்து அந்த திரவத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு வந்தாலென்ன? அவள் தரவில்லை என்றால் திருடிக்கொண்டு வந்துவிடவேண்டும். அதுதான் வழி. ராணி உடன்கட்டை ஏறுவதென்றால் அது அவளுடைய தலையெழுத்து. அப்படி எத்தனையோ பேர் சாகிறார்கள். பாளையக்காரர்களின் ஆசைமனைவிகளை அவர்கள் அடித்தும் உதைத்தும் கொல்லும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. சிறிய சந்தேகம் வந்தால்போதும் கொலைதான். சாமானியப் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. வாளுடன் வந்தவன் கூப்பிட்டால் மறுக்கக்கூட முடியாது.
அவள் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். ஆனால் பெண்களுக்காவது நீண்ட ஆயுளுக்கு வாய்ப்புண்டு. ஆண்களில் நாற்பதைத் தாண்டுவதே அதிசயம். போர் நடந்துகொண்டே இருக்கிறது. எங்கெங்கோ போருக்கு செல்கிறார்கள். போரிலேயே வெட்டிக் குவிக்கிறார்கள். பீரங்கிகள் வந்தபின் யார் யாரை கொல்கிறார்கள் என்றே யாருக்கும் தெரியாது. கொள்ளிக்கட்டையால் எறும்புக்கூட்டத்தை அழிப்பதுபோலத்தான் பீரங்கிகள் படைகளைச் சிதைக்கின்றன. போரில் சாகாமல் வந்தால்கூட காயங்கள் அழுகிச் சாகவேண்டும். ஊனமுற்றால் சோறில்லாமல் பிச்சை எடுத்துச் சாகவேண்டும். இங்கே யாருக்குத்தான் உயிருக்கு பாதுகாப்பு இருக்கிறது? ஒரு ராணி செத்தாலென்ன, இருந்தாலென்ன?
அவள் எழுந்துவிட்டாள். அம்மா வந்து “என்னடி, படு… காயல்னா அப்டித்தான் மனசு மயங்கிட்டே இருக்கும். நல்லா தூங்கினா சரியாப்போயிரும்… படு” என்றாள்.
அவள் படுத்ததும் “கொஞ்சம்போல சாராயத்திலே சுக்கு மிளகு திப்பிலி பொடிச்சுபோட்டு தேனோட கலந்திருக்கேன். அப்டியே விழுங்கிரு… காலையிலே நெஞ்சடைப்பு போயிரும்” என்றாள்.
அவள் அதை விழுங்கிவிட்டு அம்மா கொடுத்த வெந்நீரையும் குடித்தாள். “அப்டியே படுத்திரு” என்றாள் அம்மா.
வெந்நீர் குடித்தமையால் வியர்த்தது. ஆனால் வியர்வை குளிர ஆரம்பித்தபோது கொஞ்சம் கொஞ்சமாக உடலின் தசைகள் தளர ஆரம்பித்தன. விழுந்துகொண்டே இருக்கும் உணர்வு. கொஞ்சம் குமட்டல். கூடவே இனிமையான சோர்வு. நா வறள்வதுபோலவும் இருந்தது. எண்ணங்கள் கோவையாக எழாமல் உதிர்ந்து விழத்தொடங்கின. ஒருகட்டத்தில் அவள் தரையில் புதைந்துகொண்டே இருந்தாள்.
காலையில் ஓரிரு முறை விழிப்பு வந்தது. உதிரிக் கனவுகள் வழியாக அந்த விழிப்பைக் கடந்தாள். எங்கெங்கோ போய்க்கொண்டிருந்தாள். ஒருமுறை தஞ்சாவூர் சென்றிருந்தபோது அங்கே கண்ட மாபெரும் இடிந்த கோயில். அதன்மேல் ஏறியிருந்த காட்டுச்செடிகள். அவள் ஒரு பெரிய ஏரியின்மேல் நடந்துகொண்டிருந்தாள். அவளுக்கு முகம் தெரியாத, ஆனால் நன்கறிந்த ஓர் ஆண் கூடவே வந்துகொண்டிருந்தான்.
அவள் விழித்து எழுந்து உள்ளே கல்தொட்டிக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தாள். கரிக்கனல் போட்டு நெருப்போட்டின்மேல் மூக்குச்செம்பில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. நெருப்போட்டில் கரி எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தாலும் தண்ணீர் வெம்மையாக இருந்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.
தூங்கிச்செல்லும்போது அந்தக் கனவு வந்தது. அத்தனை துல்லியமாக ஒரு கனவு அவள் அதற்கு முன் கண்டதில்லை. காய்ச்சலிருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட கனவுகள் வருகின்றன. அவளை கைகளை பின்னுக்குக் கட்டி நிறுத்தியிருக்கிறார்கள். அருகே சின்னமுத்தம்மாள் நின்றுகொண்டிருக்கிறாள். சின்னமுத்தம்மாள் கையில் துணியில் சுற்றிய குழந்தை இருக்கிறது. சுற்றிலும் படைவீரர்கள். எதிரில் ஒரு பெரிய பள்ளம். அதில் விறகை அடுக்கி சிதை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆமணக்குநெய் நிறைந்த கலயங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன. சாம்பிராணிக் கட்டிகள் கரித்துண்டுகள்போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அரக்கும் தேன்மெழுகும் கட்டி கட்டியாக பனம்பாயில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
யாரோ ஏதோ சொல்கிறார்கள். அவள் சிதையையே பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கோ சங்கு ஊதுகிறது. கொம்பும் குழல்களும் குறுமுரசும் சேர்ந்து முழக்கமிடுகின்றன. சிதையை அடுக்கியபின் அதன்மேல் ஆமணக்குநெய்யை நிறைய ஊற்றுகிறார்கள். அதன் விறகு அடுக்கின் இடைவெளிகளில் சாம்பிராணிக்கட்டிகளையும் அரக்கு, தேன்மெழுகுக் கட்டிகளையும் செருகிவைக்கிறார்கள். அதன்மேல் பிணமெல்லாம் ஏதுமில்லை. ஒருவர் வந்து ராணியின் கையில் இருந்து அந்த சிறுகுழந்தையை பிடுங்கி கொண்டுசென்று சிதையில் வைக்கிறார். அந்தச் சிதைக்கு எந்தச் சடங்கும் இல்லாமல் தீமூட்டுகிறார்கள்.
தீ சரசரவென்று எழுந்து கரும்புகையுடன் மேலே தெறித்து சுழன்றாடுகிறது. விறகுகள் பற்றிக்கொள்கின்றன. புகை குறைந்து அரக்கு எரியும் மணம் எழுகிறது. விறகுகள் வெடிக்கின்றன. தீயின் நிறம் வெளிறுகிறது. அது பட்டுத்துணியை உதறுவதுபோல ஓசை எழுப்புகிறது. யாரோ இரண்டு படைவீரர்கள் வந்து சின்னமுத்தம்மாளை கைபிடித்து இழுக்கிறார்கள். அவள் துள்ளித் திமிறி அலறுகிறாள். ஆனால் ஓசையே இல்லை. கண்ணாடி பிம்பத்தில் பார்ப்பதுபோல இருக்கிறது அந்த அசைவு. வெறித்த கண்கள், அலறியபடி திறந்த வாய், அவிழ்ந்து பரவிய தலைமுடி. இரண்டு சவண்டி பிராமணர்களும் வந்து அவளைப் பிடித்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் அவளை தூக்கிச் சென்று சுழற்றி சிதைக்குள் எறிகிறார்கள். சிதையில் சென்று விழுந்ததுமே அவள் ஆடைகளெல்லாம் எரிகின்றன. அவள் அலறியபடி எழ முயலும்போது நீண்ட கழிகளால் அவளைப் பிடித்து தீயில் தள்ளுகிறார்கள். அவள் கதறிக்கொண்டே எரிகிறாள். ஆனால் தீயின் ஓசை மட்டும்தான். அவள் முகம் உருகி சதை சொட்டுகிறது. மூக்கெலும்பு புடைக்கிறது. பற்கள் புடைக்கின்றன. நாகலட்சுமி கதறிக்கொண்டே இருந்தாள். இரண்டு பேர் வந்து அவளைப் பிடித்துத் தூக்கி கொண்டுசென்றனர். அவள் கால்களை உதறிக்கொண்டாள். அவளைத் தூக்கி தீயில் வீசினார்கள். அவள் சென்று சின்னமுத்தம்மாள்மேல் விழுந்தாள்.
சின்னமுத்தம்மாளின் உடல் ஏற்கனவே நன்றாக எரிந்து உருகிவிட்டது. அவள் முகமும் நெஞ்சும் எலும்பு வடிவாக இருந்தன. ஆனால் அவள் கண்கள் உயிருடன் இருந்தன. அவை அவளை பார்த்தன. கீழே அந்தக்குழந்தையும் எலும்புருவாக இருந்தது. ஆனால் அதன் கண்களும் உயிருடன் அவளை பார்த்தன. சின்னமுத்தம்மாளின் தசைகள் எரிந்து விழுது விழுதாக அவள் மேல் ஒட்டிக்கொண்டன. அவள் தசைகளை அவை எரித்தன. தன் தசை வெந்து எரியும் நாற்றத்தை அவள் அறிந்தாள். அவள் உடல் கொதித்து பற்றி எரிந்தது.
நாகலட்சுமி உளறி கூச்சலிட்டபடி பாயில் புரண்டு படுத்தாள். அம்மா எழுந்துவந்து “என்னடி? என்ன உனக்கு? சும்மா படு” என்றாள்.
அவள் விழித்துக்கொண்டாள். கண்களிலிருந்து நீர் வழிந்தது.
“என்னடி? சொப்பனம் கண்டியா?”
ஆமாம் என்று அவள் தலையாட்டினாள்.
“நீறு போட்டுக்கோ… மீனாட்சி துணையிருப்பா” அம்மா திருநீறை அவள் நெற்றியில் போட்டுவிட்டாள். அவள் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். கண்களில் இருந்து நீர் வழிந்து காதுகளில் சொட்டிக்கொண்டிருந்தது.
[ 5 ]
நாகலட்சுமி கிளம்பிக்கொண்டிருந்தபோது அம்மா வந்து “என்னடி, எங்கபோறே?” என்றாள்.
“ரங்கமகாலுக்கு” என்றாள் நாகலட்சுமி.
“அதான் காயலா கெடக்கே? இப்ப எதுக்கு போறே? ஒருநாள் போகட்டும்” என்றாள் அம்மா.
“ராணிக்கு துணையா ஆருமில்லை” என்றாள்.
“அங்க மருத்துவச்சிக இருப்பாளுக… ராணி வயித்துப்புள்ளைய ஒண்ணும் பண்ணிரக்கூடாதுன்னுதான் உன்னைய அனுப்பிச்சது. இப்பதான் புள்ளை நல்லா வளந்தாச்சே. பத்துப் பதினைஞ்சுநாளிலேகூட வந்திரும்னு பேச்சு இருக்கு”
அவள் முந்தானையை போட்டுக்கொண்டு வெளியே சென்றாள்.
“ராணி எப்டியும் தீயிலே குதிக்கப்போறா… அவளுக்கு இனிமே என்ன பணிவிடை? நீ எதுக்கு இப்ப போகணும்?” என்றாள் அம்மா.
“சும்மா இரு” என்று திரும்பிச் சீறிவிட்டு அவள் தெருவழியாக நடந்தாள்.
அந்தத் தெருவே தாசிகளுக்குத்தான். எல்லா வீடுகள் முன்னாலும் பல்லக்கோ குதிரைகளோ மாட்டுவண்டிகளோ நின்றன. ராத்திரி வந்தவர்கள் இன்னும் கிளம்ப ஆரம்பிக்கவில்லை. காலையில் பிந்தி எழுந்து, குளித்து நாமம் தரித்து, பூசைகளை முடித்து, சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்புவார்கள். காலைச்சாப்பாடு தாசிவீடுகளில் தடபுடலாக இருக்கும். தாசிவீட்டில் காலையுணவு சாப்பிடுவதென்பது ஒரு கௌரவம்.
எதிரே வந்த சம்பூரணத்தம்மாள் “ஏண்டி இந்தா காலையிலேயே போறே?” என்றாள். அவள் கோயிலில் இருந்து எதையோ கொண்டுபோய்க் கொண்டிருந்தாள். “மீனாட்சி பிரசாதம்டி… நெத்திக்கு இட்டுக்கோ” என்றாள்.
பிரசாதத்தை பாம்புவிரலால் தொட்டு நெற்றியில் போட்டுக்கொண்டாள். “நீயும்தான் அரண்மனைக்கு போய்ட்டு வாறே. நல்ல ஒருத்தன் வந்து உன்னை எடுத்து வச்சுக்கிட்டான்னா மானமா பொளைக்கலாம்” என்றாள் சம்பூரணத்தம்மாள்.
அவள் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டாள்.
“ஒத்த ஆம்புளைன்னா உடம்பு நிக்கும்டி. கண்டவனும் வந்துபோனா ஆறேளு வருசத்திலே ஆத்துமணல் வண்டி மாதிரி உடம்பு இக்குவிட்டுப்போயிரும் பாத்துக்கோ”
அவள் வழக்கமாக அதற்குக் காட்டும் முகத்தை காட்டிவிட்டு முன்னால் சென்றாள்.
தாசிகளுக்கு ரங்கமகாலில் தனி வழி இருந்தது. அவள் உள்ளே சென்றபோது மகாரத்தினம்மாள் இருந்தாள். “என்னடி, காய்ச்சல் விட்டிடுச்சா?” என்றாள்.
“இப்ப பரவாயில்லை… அதான் வந்திட்டேன்” என்றாள்.
“சாப்பிட்டியா?” என்றாள் மகாரத்தினம்மாள்.
“சக்கரைக்கூழ் குடிச்சேன்”
“சரி, இங்க இன்னிக்கு அரிசியுருண்டை… அது இப்பதான் உருட்டிக்கிட்டிருக்காளுக… அவிஞ்சு வாறதுக்கு ரெண்டுமூணு நாழி ஆயிடும்… நீ சின்னக்கருப்பன் கிட்ட எத்தனை வண்டிக்காரனுக வந்திருக்கானுகன்னு கேட்டுட்டு வா”
அவள் வெளியே போய் சின்னக்கருப்பனிடம் அன்றைக்கு அதுவரை வந்த வண்டிக்காரர்கள் எத்தனைபேர் என்று கேட்டுவிட்டு வந்து மகாரத்தினம்மாளிடம் சொன்னாள்.
மகாரத்தினம்மாள் “சின்ன ராணி எந்திரிக்கிற நேரம்டி… காலம்பற மருத்துவச்சிக வந்தாச்சு. அவளுக மேலே போறதுக்குள்ள நீ இந்த சக்கரைக்கூழை கொண்டுபோய் குடு. பல்தேய்ச்சதுக்குமேலே ஒருவாய் குடிச்சுக்கிடட்டும்” என்றாள்.
சின்னமுத்தம்மாளை ஒவ்வொருநாளும் மருத்துவச்சிகள்தான் மருந்துபோட்ட கொதிக்கும் வெந்நீரால் குளிப்பாட்டினார்கள். அதற்குமுன் எண்ணை போட்டு உடலை நீவி வழித்தார்கள். அவள் உள்ளேயே ஏனத்து நீரில் வாய்கழுவி, அங்கேயேயே கல்தொட்டியில் காலைக்கடன்களையும் கழித்துவிடுவாள்.
அவள் ஏனத்துடன் மேலேறிச் செல்லும்போது உள்ளம் நிதானமாக இருந்தது. உண்மையில் வழியில் பத்மினியோ செல்லியம்மாவோ வரவேண்டும் என்று விரும்பினாள். அவர்களின் கண்களைப்பார்த்து புன்னகைக்கவேண்டும். அவர்கள் என்ன ஏது என்று குழம்பி நிற்கையில் கடந்து செல்லவேண்டும்.
அவள் கதவைத் தட்டியபோது ஓசையில்லை. இருமுறை கதவைத்தட்டி “ராணியவரே, இது நாந்தான், நாகலட்சுமி” என்றாள்.
கதவு திறந்தது, சின்னமுத்தம்மாள் புத்துணர்ச்சியுடன் இருப்பதுபோல தெரிந்தது. முகமே கொஞ்சம் சிவந்துவிட்டதுபோல. “வாடி” என்று உள்ளே அழைத்தாள்.
“இனிப்புத்தண்ணி கொண்டாந்திருக்கேன் ராணி” என்றாள் நாகலட்சுமி.
“அங்கே வை” என்றாள் சின்னமுத்தம்மாள். “நான் ராத்திரி ஒரு சொப்பனம் கண்டேண்டி”
அதைச் சொல்ல அவள் காத்திருந்தாள் என்று தோன்றியது.
“விடியக்காலையிலே தூங்கி எந்திரிச்சு கால்கழுவிட்டு வந்து படுத்தேண்டி. ஒரு சொப்பனம். சொப்பனம்னு சொல்லமுடியாது, அப்டியே உண்மையா நடக்கிற மாதிரி”
“என்ன சொப்பனம்?”
”ஒரு காட்டிலே சிதை மூட்டியிருக்காங்க. ஆழமான குழியிலே பெரிய சிதை. நல்லா வெறகெல்லாம் அடுக்கி, அதுமேலே ஆமணக்குநெய் குளுக்க ஊத்தி. கட்டிகட்டியா அரக்கும் சாம்பிராணியும் தேன்மெழுகும் எடுத்து வைக்கிறாங்க. என்னை அலங்காரம் பண்ணி தீப்பாயறதுக்கு கொண்டுபோயி நிப்பாட்டியிருக்காங்க. அதிலே படுத்திருக்கிறது யாருன்னு பாத்தேன். யாருமே இல்லை. வெறும்சிதை”
நாகலட்சுமி வெறுமே பார்த்துக்கொண்டிருந்தாள். சின்னமுத்தம்மாளின் மகிழ்ச்சி வினோதமாக இருந்தது.
“அதுக்கு தீமூட்டினாங்க. நாலஞ்சு பிராமணங்க, அப்றம் ஈட்டிதாங்கிக்காரனுக. நான் நடுங்கிட்டிருந்தேன். அப்ப சிதைக்கு அப்பாலே இருந்து ஒரு சின்னக்குழந்தை வந்தது… ரொம்ப சின்னக்குழந்தை. அய்யோடி, இது எப்டி நடக்குதுன்னு ஆச்சரியமா இருக்கும். அது என்னைப்பாத்து சிரிச்சுட்டே ஓடி வருது. வாயிலே மேலண்ணத்திலே ஒத்தைப் பல்லு. சிரிச்சப்ப ரெண்டு கன்னத்திலேயும் குழி. வாய் அப்டியே நீளமா இருக்கு. பெரிய குண்டு கண்ணு… வான்னு சொல்லி என் கையை புடிச்சு இழுத்துது. நான் கூடப்போனேன். இந்தா இதிலே ஏறுன்னு சிதையை காட்டி சிரிச்சுட்டே சொல்லிச்சு. சரிடா கண்ணான்னு குனிஞ்சு அதோட ரெண்டும் கன்னத்திலயும் முத்தம் குடுத்திட்டு அப்டியே தீயிலே ஏறிட்டேன்”
“இதான் சொப்பனமா?”
“ஆமாடி… இதுக்கு என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தமா? ஏண்டி, என் புள்ளை எங்கிட்ட சொல்றது அது. அவன் பூமியிலே பொறக்கணும்னு விரும்புறான். ஏண்டி, சொல்ல மறந்துட்டேனே. அந்த குழந்தை இடுப்பிலே வைர அரைநாண் போட்டிருந்தது. கையிலெ காப்பு, கழுத்திலே மகரகண்டி. அதோட தலையிலே பொன்னாலே செஞ்ச கிரீடம் இருந்தது… ஆமாடி, கிரீடம். தங்கக்கம்பியாலே செஞ்ச கிரீடம்… நடுவிலே நெத்திக்குமேலே ஒரு எலைமாதிரி. அதிலே அப்டியே நெறைய வைரக்கல்லு பதிச்சிருந்தது. தீயோட வெளிச்சம் பட்டு அந்த வைரமெல்லாம் தகதகன்னு ஜொலிச்சிட்டிருந்தது”
நாகலட்சுமி பெருமூச்சுவிட்டாள்.
“அவன் ராஜா… ராஜாவாகவே பொறக்கப்போறான். என் புள்ளை ராஜாவாகணும். இந்த மதுரை ராஜ்ஜியத்தையே அவன் ஆட்சி பண்ணணும்… சித்ரதுர்க்காவையும் அனந்தபூரையும் கேளாடியையும் எல்லாம் அவன் புடிச்சு சேத்துக்கணும். துங்கபத்ரா ஆறு வரை அவன் கொடி பறக்கணும்… பெரியநாயக்கர் கிருஷ்ணதேவராயர் மாதிரி அவன் பேரு நிக்கணும்… ஆமாடி, அந்த சொப்பனத்துக்கு அதாண்டி அர்த்தம்?”
“அப்ப உடன்கட்டை ஏறுறதா தீர்மானிச்சாச்சு?”
“என் புள்ளை சக்கரவர்த்தியாகணும்… திருமலைநாயக்கரைவிட பெரிய ராஜாவா ஆகணும். கிருஷ்ணதேவராயர் மாதிரி ஆகணும்”
நாகலட்சுமி மீண்டும் பெருமூச்சுவிட்டாள்.
“நெனைச்சு நெனைச்சு எனக்கு கொப்பளிச்சுட்டே இருக்குடி. நான் பொறந்ததுக்கு வேற என்ன அர்த்தம்? சித்ரதுர்க்காவிலே போயி கைம்பெண்ணா மாளிகைக்குள்ள முடங்கிக்கிடந்தா என் நெஞ்சு ஆறாது. என் பிள்ளை வந்து நாடாண்டா அவன் அம்மான்னு என் பேரையும் சொல்லுவாங்க… நானும் சொர்க்கத்திலே இருந்து சந்தோசப்படுவேன்”
“உங்க முடிவு ராணி, நான் என்ன சொல்ல?” என்றாள் நாகலட்சுமி.
“மருத்துவச்சிங்க எப்ப வருவாங்க? நேத்து ஒருக்களிச்சே படுத்தேனா, இடப்பக்கம் வயிறு வலிக்குது. புள்ளைக்கு ஒண்ணும் ஆகியிருக்காதுல்ல? அதோட கையோ காலோ மாட்டியிருக்குமோன்னு நினைச்சு பயந்துட்டேன்”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, மருத்துவச்சிங்க இப்ப வந்திருவாங்க”
“குங்குமப்பூ வேணும்டி… நெறைய வேணும். எம்புள்ளை என்ன நெறம்கிறே? தாமரைப்பூ நெறம்… செந்தாமரைவண்ணன்னு பெருமாளைச் சொல்றதுண்டே”
“ஆமா”
“புள்ளை வயித்திலே இருக்கிறப்ப அதோட தீர்க்காயுசுக்காக அம்மாக்காரி விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்லணும்ல? எனக்கு மறந்துட்டுது. அய்யங்காரம்மா யாராச்சும் இருந்தா வரச்சொல்லு”
“சரி” என்றாள் நாகலட்சுமி. அங்கிருந்து கிளம்பினால்போதும் என்று தோன்றிவிட்டது.
“என் புள்ளை தீர்க்காயுளா இருக்கணும். மதுரை மீனாட்சிக்கும் சீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயிக்கும் நேந்திட்டிருக்கேன்… அதெல்லாம் ஒழுங்கா பண்ணணும். ஸ்ரீரங்கத்திலேயும் நேந்திட்டிருக்கேன்”
“பண்ணிடலாம் ராணி, நான் சொல்றேன்”
“என் புள்ளை வந்து செங்கோல் எடுப்பான். அந்த திமிரு புடிச்ச பெரிய மகாராணிக்கு ஆம்புளைன்னா என்னான்னு காட்டுவான்”
நாகலட்சுமி திகைப்புடன் சின்னமுத்தம்மாளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நூத்தெட்டு பிராமணங்களுக்கு பொன்னும் வெள்ளியும் பட்டும் பூவும் கனியுமா பஞ்சதிரவிய தானம் பண்ணணும்… அதுக்கும் ஏற்பாடு செய்யணும். அமாத்யரோட ஆளுங்க யாரையாவது வந்து என்னை பாக்கச்சொல்லு.”
“சொல்லிடறேன் ராணி” என்றாள் நாகலட்சுமி.
அறையிலிருந்து ஏனத்துடன் திரும்பும்போது அவள் நடைதளர்ந்திருந்தாள். ஆனால் களைப்பு இல்லை, ஒருவகையான வெறுமைதான் எஞ்சியிருந்தது. படிகளில் இறங்கும்போது அந்த மருந்து ஞாபகம் வந்தது. அதை திரும்பப்போய் கேட்டாலென்ன என்று தோன்றியது. ஆனால் உடனே அதையெல்லாம் நினைப்பில் இருந்து ஒதுக்கிக் கொண்டாள். இனிமேல் இங்கே வரப்போவதில்லை. இப்படியே இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடவேண்டியதுதான் என எண்ணிக்கொண்டாள்.
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை]