இரவுமழை- கடிதங்கள்

சுகதகுமாரி- இரவுமழை

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் தளத்தில் சுகதகுமாரியின் ‘ராத்ரி மழா’ கவிதை கேட்டேன். உங்கள் மொழிபெயர்ப்பையும் வாசித்தேன். உண்மையில் உருகி விட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டும் வாசித்துக் கொண்டுமிருக்கிறேன்.

விம்மும் விசும்பும் அந்த இளம் பித்தியும், நோய் படுக்கையின் துயரமும், காலையானவுடன் முகம் துடைத்து, ரகசியப் புன்னகையோடு திரும்பிச் செல்லும் இரவு மழையின் நாட்டியமுமென கவிதை பித்துக் கொள்ள வைக்கிறது.

சித்ராவின் குரலினிமையும், ‘நடுங்கி’ என்ற இடத்தில் ஒரு நொடி கேட்கும் அந்தத் தாளமும் தலையைச் சுழல வைக்கின்றன.

அம்மைக்கு வணக்கமும் அஞ்சலியும்.

அன்புடன்

கல்பனா .

அஞ்சலி- சுகதகுமாரி

அன்புள்ள ஜெ

இந்த ஆண்டு டிசம்பர் முழுக்க அஞ்சலிகள்தான். இத்தனை அஞ்சலிகள் எழுதநேர்வதை கவனிக்கிறோமா? இதையும் ஒரு நியூநார்மல்சி என்று எடுத்துக்கொண்டு சென்றுகொண்டே இருக்கிறோம் இல்லையா?

சுகதகுமாரியை நான் முன்பு வாசித்ததில்லை. நீங்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரையும் அதனுடன் இணைந்துள்ள கவிதையும் என் மனதை மிகவும் கசக்கி பிழிந்தன. அது ஒரு பெண்மனக்கவிதை. பெண்ணின் தவிப்பும் தனிமையும் உள்ள கவிதை.

சுகதகுமாரி எவ்வளவுபெரிய ஆளுமை. எவ்வளவு புகழ் பெருமை அங்கீகாரம். எவ்வளவு சாதித்திருக்கிறார். ஆனாலும் அந்த நோய்ப்படுக்கையின் தனிமை பயங்கரமாக இருக்கிறது. என்னைப்போன்ற ஒரு சாதாரணப்பெண்ணுக்கு என்ன வாழ்க்கையின் முடிவு அமையப்போகிறது?

ஆனால் அந்த கவிதை அந்த துயரத்தை பதிவுசெய்வது அல்ல. அந்தத் துயரத்தை கடந்துசெல்வதுதான். அந்த துயரத்தை கவிதை வழியாக அவர்கள் வென்றுவிட்டார்கள். அதுதான் உச்சநிலை.

அற்புதமான கவிதை. சித்ரா அதைச் சொல்லியிருக்கும் விதமும் அழகானது. பாடல்வடிவும் அழகானது

எஸ்.சித்ரா

முந்தைய கட்டுரைஅணுக்கம்- கடிதம்
அடுத்த கட்டுரைநவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்