அஞ்சலி:சோலை சுந்தரப்பெருமாள்

சோலை சுந்தரப்பெருமாள் முற்போக்கு இலக்கிய முகாமில் நிறைய எழுதிய படைப்பாளிகளில் ஒருவர். தஞ்சை மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கைப்புலத்தை முற்போக்குப் பார்வையில் எழுதியவர். ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

நவீன இலக்கியப்பார்வையில் அவருடைய செந்நெல் மட்டுமே குறிப்பிடத்தக்க படைப்பு. கீழ்வெண்மணி நிகழ்வு குறித்த இடதுசாரிப் பார்வை அதில் பதிவாகியிருந்தது. ஆனால் அதையும் ஓர் இலக்கிய ஆக்கமாக கருத்தில்கொள்வது கடினம் – மார்க்ஸியர்களின் தரப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். அதில் வரும் உழைப்பாளி மக்களும் சரி, அப்பிரச்சினையும் சரி , வரையறைசெய்யப்பட்ட அச்சில் வார்த்தவையாகவே அதில் வெளிப்பட்டன.

சோலை சுந்தரப்பெருமாள் பின்னாளில் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் வகுப்புகளில் இருந்து, எளிமையான கட்சிப்பேச்சாளர்களான அருணன் போன்றவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, ஒற்றைப்படையான ஆழமற்ற கருத்துக்களை எடுத்துக்கொண்டு கதைகளை எழுதினார். அவை அவருடைய தோழர்களால் விரும்பப்பட்டிருக்கலாம், பாராட்டும் பெற்றிருக்கலாம். அவர் குறிப்பிடும்படி ஏதும் எழுதவில்லை. தாண்டவபுரம் போன்ற அவருடைய கதைகள் வெறுமே சீண்டும் நோக்கம் மட்டுமே கொண்டவை.

எழுத்து என்பதை ஒருவர் எவ்வண்ணம் வகுத்துக்கொண்டிருக்கிறார் என்பது எப்போதும் முக்கியமானது. சோலை சுந்தரப்பெருமாள் அதை கட்சிப்பணி என்றே புரிந்துகொண்டார். இலக்கியத்தில் செந்நெல் ஒன்றின்பொருட்டு அவர் ஒரு பொதுவான வரலாற்றுச்சித்திரத்தில் இடம்பெறுவார்

சோலை சுந்தரப்பெருமாள் அவர்களுக்கு அஞ்சலி

செந்நெல் ஆசிரியருக்கு அஞ்சலி- முருகானந்தம் ராமசாமி

ரசனைசார் விமர்சன மரபின் முன்னோடியான வெங்கட்சாமிநாதன் தமிழக இடதுசாரி இலக்கியக்குழுக்களால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர். ஆனால் அவர் விடாப்பிடியாக தனது நிலையில் நின்றார். அதில் வினோதம் என்னவென்றால் அவர் அசோகமித்திரனை பெரும்பாலும் நிராகரித்தே வந்திருக்கிறார். அது துவக்ககாலத்தில் அவர் மீது எனக்கு பெரும் மனவிலக்கத்தை உருவாக்கியது.

ஆனால் அவர் தங்களை இடதுசாரிகளாகவே அடையாளப்படுத்திக்கொண்ட கு.சின்னப்பபாரதியின் “தாகம்” மற்றும் சோலை சுந்தரபெருமாளின் “செந்நெல்” இரண்டையும் வெகுவாக கொண்டாடினார். செந்நெல் ஐ அவர் தமிழின் முதல் சிறந்த 10 நாவல்களில் ஒன்றாக குறிப்பிட்டார். கடும் கோபமிருந்தாலும் வெ.சா வின் பரிந்துரைகளை அப்படி என்னதான் கிழிச்சிருப்பாங்க.. பார்ப்போம் என்ற மனநிலையில் படித்த காலம் அது.

அப்படித்தான் செந்நெல் படிக்கப்பட்டது. வெ.சா பரிந்துரைத்தவை பெரும்பாலும் அதற்கு நியாயம் செய்தவை.ஒரு கொந்தளிப்பான வரலாற்று நிகழ்வை எழுதுவது என்பது வெறும் ஆவணப்பதிவாகவே நின்று விடும் துரதிருஷ்டத்தை வெற்றிகரமாக தாண்டி அது வரலாற்றுபுனைவாக எழுந்து நின்றது.

ஜெயகாந்தனுக்கு பிறகு சோலை சுந்தர பெருமாள் தமிழ் முற்போக்கு அழகியலை அடுத்த இடத்திற்கு நகர்த்துவார் என்பதற்கான சான்றாக நின்றது செந்நெல்.. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரின் தொடர்ந்த படைப்புகளில் அது நிகழவில்லை. பல இலக்கியக்கூட்டங்களில் நான் செந்நெல்லையும் சோலை சுந்தரபெருமாளையும் முன்வைத்து எனது மனக்குறையை வெளியிட்டிருக்கிறேன்.

இன்று சோலை சுந்தர பெருமாளின் மறைவுச்செய்தி இனி அது அவர் வழியாக நிகழாது என முடிவாக உரைத்திருக்கிறது. செந்நெல்லுக்காக சோலை எப்போதும் நினைவு கூரப்படுவார்.

அவருக்கு என் அஞ்சலி..!

[இணையத்தில் இருந்து]

 

முந்தைய கட்டுரைவிசையுறு பந்து
அடுத்த கட்டுரைஅஞ்சலி:இளவேனில்