தொ.பரமசிவம்,வைணவம்

அஞ்சலி- தொ.பரமசிவன்

திரு ஜெயமோகன்,

உங்கள் படைப்புக்களை பல காலமாக வாசித்துக் கொண்டிருக்கும்  ஒரு வாசகி.

தொ. பரமசிவம்  அவர்களைப்பற்றி அவர்கள் ஆய்வுகளைப்பற்றிய கலந்துரையாடலில், தொ .பரமசிவத்தின் ஆய்வுகளை நீங்கள் புறந்தள்ளியதாக பேசப்பட்டது. நீங்கள் மிகவும் வைணவத்தோடு சார்ந்து  பேசுவதாக ஆட்சேபிக்கப்பட்டது.

இதைப்பற்றி உங்களுடைய கருத்து அறிய அவா.

சுஜா

***

அன்புள்ள சுஜா,

அறிவுச்சூழலில் நுழைபவர்கள் தங்களைச் சுற்றி எதையுமே தெரிந்துகொள்ளாமல், முழுக்கமுழுக்க உலகியலில் மூழ்கி வாழ்பவர்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் மேல் ஒருவகை விலக்கம் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த சாமானியர்கள் ஆபத்தற்றவர்கள். அவர்கள் தங்களுக்கு இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

ஆபத்தானவர்கள் எதையுமே பொருட்படுத்தும்படி வாசிக்காமல் அங்கே இங்கே அரட்டைகளில் கேள்விப்பட்டவை, வம்புகள் ஆகியவற்றை மட்டுமே கொண்டு அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொண்டு எல்லா அறிவார்ந்த விவாதங்களிலும் வந்து அமரும் வெட்டிகள்தான். இவர்கள் முகநூல் வந்தபின் பெருகிவிட்டார்கள்.

இவர்களை தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் எந்த ஒரு தளத்திலும் நாம் கொஞ்சம் இலக்கிய ஆர்வம்கொண்டவர்கள் வரட்டுமே என நினைப்போம். இவர்கள் வந்துவிடுவார்கள். சரி, பேசட்டுமே என நினைப்போம். எல்லா நேரத்தையும் ஆக்ரமித்து இவர்களே பேசிக்கொண்டிருப்பார்கள்.

எங்கள் விஷ்ணுபுரம் அமைப்புக்களில் ஈவிரக்கமில்லாமல் இவர்களை தவிர்க்க முயல்கிறோம். ஏனென்றால் இந்த வெட்டிகள் உருவாக்கும் திசைதிரும்பலும் அழிவும் சாதாரணமானவை அல்ல. இவர்களுக்கு இலக்கியம்- அறிவியக்கம் சார்ந்து எதுவுமே தெரியாது. எந்த எழுத்தாளையும் , எந்த நூலையும் ஆழமாக படித்திருக்க மாட்டார்கள். எந்த இலக்கியவிவாதத்தையும் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அதற்கான ஆர்வமும் பொறுமையும் பயிற்சியும் இவர்களுக்கு இருக்காது

ஆனால் அறிவுஜீவி- இலக்கியவாசகன் – இலக்கியவாதி என்ற தோற்றங்கள் இவர்களுக்கு தேவையாகின்றன. ஆகவே அரைகுறைச்செய்திகளை கேட்டு சேமித்துக்கொள்கிறார்கள். வம்புகள் வழியாக கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்தக் கருத்துக்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எல்லா இடங்களிலும் வந்து சொல்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையும் மிகுதி

இந்தக் கருத்துக்கள் பெரும்பாலும் மிக மேலோட்டமானவை. சம்பந்தமே அற்றவை. சமகால வம்புகளில் இருந்து இவை வருகின்றன என்பதனால் பெரும்பாலும் எதிர்மறைத்தன்மை கொண்டவை. அரசியல் கசப்பு, தனிப்பட்ட காழ்ப்புகளின் விளைவான திரிபுகள். பெரும்பாலும் கீழ்த்தரமான வெறுப்புப் பிரச்சாரங்கள்.

தொடக்ககால வாசகர்களிடம் இவை மிகப்பெரிய திரிபுகளை உருவாக்கி விடுகின்றன. ஆரம்பமே கசப்பும் கோணலும் கொண்டதாக ஆகிவிடுகிறது. வலுவான தொடர் வாசிப்பும் தனிப்பட்ட தேடலும் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பும் இல்லாவிட்டால் அவர்கள் அந்த வளையத்திலிருந்து மீள்வது மிகக்கடினம்

உங்கள் குழுவில் நீங்கள் சொல்லும் அக்கருத்தைச் சொன்னவர் எவராயினும் கீழ்த்தர வம்பர், இலக்கியச் சூழலில் உலவும் போலி. அவரை முற்றாகவே விட்டு விலகுங்கள். அவருடன் எவ்வகையிலும் ஓர் விவாதத்தை, உரையாடலை நிகழ்த்த வேண்டியதில்லை. குழுமங்கள் அனைத்திலும் அவரை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். ஒரு வைரஸ் அவர்.

ஏனென்றால் அவர் சொல்வது ஒரு பிழைபுரிதலோ, ஒரு மாறான கோணமோ அல்ல. அடிப்படையே தெரியாத உளறல். அதை அத்தனை தன்னம்பிக்கையுடன் சொல்பவர் மிகப்பெரிய அழிவுச்சக்தி.

அந்த மண்டை இந்த ஒன்றாம் வாய்ப்பாட்டுப் புரிதலை எப்படி வந்தடைந்தது என்பது மிகத்தெளிவு.தொ.பரமசிவன் பெரியாரியர் என்று சொல்லப்படுபவர். அவர் அழகர்கோயில் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஆகவே அவர் அதில் பெருமாளை திட்டியிருப்பார். நான் இந்து மத ஆதரவாளன். விஷ்ணுபுரம் என்ற நாவலை எழுதியிருக்கிறேன். ஆகவே எனக்கு தொ.பரமசிவனை பிடிக்காது. நான் அவரை திட்டுகிறேன்– இவ்வளவுதான் இவர்களின் கணக்குவழக்குகள். எல்லா விவாதங்களிலும் இந்த ஆக மொண்ணையான ஒரு குரல் மேலெழுந்து வந்துவிடுகிறது.

தொ.பரமசிவனுக்கும் எனக்கும் நட்பும் கருத்துமுரண்பாடும் எப்போதும் இருந்துள்ளது. அதை தொடர்ச்சியாக நான் என் தளத்தில் பதிவுசெய்து வந்திருக்கிறேன். எனக்கு வைணவம் குறித்த ஆய்வுகளில் அவர் உதவியிருக்கிறார். வைணவத்தின் பரிவாரதேவதைகள், வைணவத்துடன் ஒட்டிய நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆய்வில் அவர் ஒர் அறிஞர். தமிழ் வைணவத்தின்மேல் ஆழமான பற்றும் பயிற்சியும் கொண்டவர்.

அவருடைய  ‘அழகர்கோயில்’ நூல் அவருடைய முனைவர் ஆய்வேடு. அது தமிழுக்கு முக்கியமானது. அதை இணையவெளியில் தொடர்ச்சியாக முன்வைத்து வருபவன் நான். ஏனென்றால் இங்கே நம் நிலப்பிரபுத்துவ சமூகமே கோயில்களை மையமாக்கி கட்டமைக்கப்பட்டது. நில உரிமை, சாதிப்படிநிலை இரண்டுமே கோயில்களை அடிப்படையாகக் கொண்டவை.

தமிழக வரலாற்றில் கோயில்களை மையமாகக்கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் குறைவு. சுசீந்திரம் பேராலயம் பற்றி டாக்டர் கே.கே.பிள்ளையின் ஆய்வு அவ்வகையில் ஒரு முன்னோடி பெருமுயற்சி. சுசீந்திரம் கோயிலை ஒட்டிய நிலவுரிமை முறையை விரிவாக ஆராய்வது அது. அடுத்தபடியாக தொ.பரமசிவனின் அழகர்கோயில் குறித்த நூலும், அ.கா.பெருமாள் அவர்களின் திருவட்டாறு, பறக்கை கோயில்கள் பற்றிய நூல்களும் முக்கியமானவை.

இதுவே இருபதாண்டுகளாக நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் கருத்து. யோசித்துப்பாருங்கள், ஒருவன் இருபதாண்டுகளாக ஒரு கருத்தை முன்வைக்கிறான். அதை என்னவென்றே தெரியாமல், அதற்கு நேர் எதிராக எதையோ கருத்து என சில முட்டாள்கள் பேசுகிறார்கள், அதைச்சார்ந்து அறிமுகவாசகராகிய நீங்கள் கடிதம் எழுதுகிறீர்கள். நான் மறுபடியும் ஆரம்பத்திலிருந்தே விளக்கவேண்டியிருக்கிறது. இத்தகைய ஒரு அபத்தச்சூழல் வேறெங்காவது உண்டா?

தொ.பரமசிவனின் ஆய்வுகள் மேல் எனக்கு உள்ள விமர்சனங்களையும் எழுதியிருக்கிறேன். அவருடைய பிற்கால நூல்கள் உதிரிப் பண்பாட்டுச் செய்திகளால் ஆனவை. அவற்றில் நாட்டாரியல் ஆய்வுக்கான முறைமைகள் [மெதடாலஜி] கடைப்பிடிக்கப்படவில்லை. நாட்டாரியல் ஆய்வில் சில அடிப்படை முறைமைகள் உண்டு. தரவுகள் திரட்டப்பட்ட இடம், காலம்,அளித்த நபரின் அடையாளம் ஆகியவற்றுடன் மட்டுமே தரவுகள் பதிவுசெய்யப்படவேண்டும். அவை ஒன்றுக்கு மேற்பட்ட தரப்புகளிடம் ஒப்பிடப்படவேண்டும். முறையான ஆவணப்பதிவு தேவை. இவை எதுவும அவர் ஆய்வுகளில் இருப்பதில்லை.

நாட்டாரியல் சார்ந்து வரலாற்று- பண்பாட்டு முடிவுகளுக்கு வருவதற்கும் ஒரு ஆய்வுமுறைமை உண்டு. தரவுகள் பிற இலக்கியத்தரவுகளுடன், தொல்லியல் சான்றுகளுடன் முறையாக ஒப்பிடப்படவேண்டும்.ஒட்டுமொத்த பெருஞ்சித்திரத்துடன் உள்ள ஒப்பீடும் மாறுபாடும் விளக்கப்படவேண்டும். தொ.பரமசிவம் அதையும் முறையாகச் செய்பவர் அல்ல. அவருடையவை ஆய்வுகள் அல்ல. களத்தில் கண்ட செய்திகளை தான் புரிந்துகொண்ட வகையில்  தன் கருத்துக்களுடன் சேர்த்து சிறுகுறிப்புகளாகப் பதிவுசெய்து வைக்கும் முயற்சிகள் மட்டுமே.

அவருடைய அரசியல் தரப்புகளுக்கு ஏற்ப கருத்துக்களை ஓங்கிச் சொன்னார். அவருடைய அரசியல் தரப்புகள் என் அக்கறைக்கு உரியவை அல்ல. அவை அவருடைய நம்பிக்கைகள். அவற்றுக்கும் அறிவியக்கத்துக்கும் சம்பந்தமில்லை. அந்த அரசியல் கருத்துக்களுக்காக அவர் தரவுகளை கையாண்டதை நான் அதற்குரிய கவனத்துடன் கருத்தில் கொள்வேன்.இத்தனை நாட்களில் அவருடைய அரசியலை எதிர்த்து ஒருசொல்கூட பேசியதில்லை. அவருடைய ஆய்வுகளிலுள்ள முறைமையின்மையின் பிழைகளை பற்றி மட்டுமே பேசியிருக்கிறேன்.

தொ.பரமசிவனின் ஆய்வுகளிலுள்ள இந்த முறைமையின்மை, அது உருவாக்கும் பிழையான புரிதல்களையே சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதேசமயம் அவரை ஓர் களஆய்வாளர் என்று கொண்டால் இன்னொரு ஆய்வாளருக்கு, இலக்கியவாதிகளுக்கு  உதவியான ஏராளமான செய்திகளை சொல்லிச்செல்பவர் என்றவகையில் அவர் முக்கியமானவரும்கூட. இதுவே அவரைப்பற்றிய என் தரப்பு. இதையே பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு காலத்தில் அவரிடமே நேரில் விவாதித்ததும் உண்டு. என் கட்டுரைகளில் நீங்கள் அதை படிக்கலாம்.

தமிழில் இந்த மொண்ணைக்கும்பல் சூழ்ந்திருக்க எதையாவது சிந்திப்பதும் எழுதுவதும்தான் எத்தனை பெரிய சவாலாக ஆகிவிட்டிருக்கிறது

ஜெ

தொ.ப – ஒரு வினா

தொ.பரமசிவம் குறித்து…

தொ.ப,ஒரு விவாதம்

மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2

முந்தைய கட்டுரைகற்றல்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅகமறியும் ஒளி