மொழியிலாக் கலை- கடிதம்

அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்

அன்புள்ள ஆசிரியருக்கு

புனேவில் இருக்கும் எங்களுக்கு சென்ற வாரம் கித்ராப்பூரை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. உங்களுடைய அருகர்களின் பாதை புத்தகத்தின் வழியாக கோபேஸ்வர் கோவில் மேலும் அதன் சிற்பக்கலை பற்றியும் அறிந்துகொண்டு பயணப்பட்டோம். சிறிதும் ஏமாற்றம் இல்லாமல் எங்களை முழுதாய் ஆக்கிரமித்தது அந்த சிற்பக்கோவில்.

முக்கியமாக இக்கோவிலில் எங்களை வியப்பில் ஆழ்த்தியவரை பற்றி உங்களுடன் பகிரவே இந்த கடிதம்.

அவர் பெயர் சந்தீப் , அங்கு கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் உள்ளார், இவருக்கு பேசும்பொழுது மொழி அதிகம் ஓசையாக வருகிறது, ஆனால் புரிந்து கொள்ள முடிகிறது. உள் மண்டபத்தின் பெரும் பகுதி இருளாக இருந்ததால் பல சிற்பங்கள் எங்கள் கண்களுக்கு புலப்படவில்லை. எங்களை பார்த்து வந்த அவர் ஆலயத்தின் உள்மண்டபத்தில் பல தூண்களில் உள்ள சிற்பங்களின் விவரத்தை மிக நேர்த்தியாக விளக்கினார். சப்தமாதா, ராமர் ,ஹனுமான் மற்றும் பஞ்ச தந்திர கதையில் வரும் முயல் ஆமை இவைகளின் சிற்பங்கள் உள்மண்டபத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இவர் எடுத்துரைக்கவிட்டால் நாங்கள் நிச்சயம் இச்சிற்பங்களைத் தவற விட்டிருப்போம்.

சந்தீப் மன்மதன் கதையில் வரும் ராஜுவை நிறைய நினைவு கூர்ந்தார்.மன்மதனில் வரும் கண் தெரியாத நாயகன் கோவிலின் சிற்பங்களின் அழகை கால் நகம் தொட்டு கண் பார்வை வரை விவரிக்கும் காட்சி வந்து சென்றது.இவர்களுக்கான ஒற்றுமை புறக்கண்ணை விடுத்து அகக்கண்ணில் நோக்கும் கூர்மை.ஐம்புலன்களின் மூலம் நோக்கும் புற நோக்கினை விடுத்து உண்மையான அக தரிசனத்தை வெளிப்படுத்துவதன் மூலம் இருவருமே ஒன்று படுகிறார்கள். ஓசையாக வெளிப்பட்டாலும் மொழியின் சாராம்சத்தை எங்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் மிளிர்ந்தார்.

“அவனுக்கு அந்தச்சிலைளைப்பற்றி தெரிந்தவற்றை பலநூறு பக்கங்கள் கொண்ட ஒருநூலாக எழுதிவிடலாமென தோன்றியது. கிருஷ்ணன் அந்த ஐயங்காரை நினைத்துக் கொண்டான். மூளை நிறைய சிற்பசாஸ்திர ஞானத்துடன் குடும்பத்தாலும் ஊராலும் உதாசீனப்படுத்தப்பட்டு இந்த கோயிலில் வந்து அமர்ந்திருப்பார் போல. கோயிலில் அலைந்த பிச்சைக்காரக்குழந்தையில் அனைத்தையும் ஏற்றிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் ஒருவகையில் தகுதியான சீடனுக்குத்தான் வித்தையை கொடுத்திருக்கிறார்”.மன்மதன் [சிறுகதை]

கதையில்வருவதை போலவே தகுதியான சீடனுக்கு தான் அந்த யாரோ ஒருவர் விளக்கியிருப்பரோ என்று மனம் மகிழ்ந்தது. உங்கள் கதையின் நாயகனை கண்டுபிடித்த சந்தோஷம் என்னையும் எழுத உந்தியது.

சிற்பங்களை அவர் விவரித்த அழகினை தாண்டி குறிப்பிட வேண்டிய மற்றொன்று அவரின் புகைப்படம் எடுக்கும் திறமை, எங்கள் போனை வாங்கி பல இடங்களில் நிற்கவைத்து கோவிலின் சிற்ப அழகுடன் எங்களையும் இணைத்து அவர் எடுத்த விதத்திலிருந்தே தெரிந்தது அவர் இந்த கோவிலை எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்று.

மீண்டும் கரும்புத்தோட்டங்களுடன் நிறைவான பயணம்.

அன்புடன்

இந்து & கோபால்

புனே

 

அன்புள்ள இந்து,

நாங்கள் செல்லும் பயணங்களில் அவ்வப்போது இவ்வாறு சரித்திரங்களுடன் தங்களைப் பிணைத்துக்கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். சிலர் வழிகாட்டிகளாக பணிபுரிகிறார்கள். மிக விரும்பி, ஈடுபாட்டுடன் இடங்களைச் சுட்டி அவற்றின் கலையையும் வரலாற்றையும் விளக்குபவர்கள் உண்டு.

ஆதிச்சநல்லூர் சிதம்பரம் ஓர் உதாரணம். சித்ரதுர்க்கா, ஹாத்திகும்பா, பிம்பேட்கா குகைகள் போன்ற பல ஊர்களில் மிக அருமையான வழிகாட்டிகள் அமைந்திருக்கிறார்கள். பொதுவாக ஆரம்பத்தில் வழிகாட்டிகளை தவிர்ப்போம். ஏனென்றால் எங்கள் நோக்கம் சுற்றுலா அல்ல என்று அவர்களுக்கு புரியவைக்க முடியாது. ஒரு தொகை பேசியபின் சரசரவென்று ஒப்பித்து சுருக்கமான வழி வழியாக திரும்பக்கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். அந்தப்பயணத்தையே குலைத்துவிடுவார்கள். ஆகவே நாமே சுற்றுலா வழிகாட்டுநூலை வைத்துக்கொண்டு பார்ப்பதே உகந்தது என்பது எங்கள் எண்ணமாக இருந்தது

ஆனால் பல அனுபவங்களுக்குப்பின் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டோம். ஏனென்றால்  சுற்றுலா வழிகாட்டிகளிலேயே இப்படி முத்துக்கள் அமைவதுண்டு. ஆகவே இப்போதெல்லாம் ஒரு வாய்ப்பு கொடுத்துப்பார்ப்பதுண்டு. இந்த மனிதரையே நீங்கள் பைசாவுக்காக வந்து தொந்தரவு செய்பவர் என விரட்டிவிட்டிருக்க வாய்ப்பு உண்டு அல்லவா? பலர் அப்படிச் செய்பவர்கள் தான். ஆனால்  இவர் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு முகமாக ஆகிவிட்டார்

ஜெ

மன்மதன் [சிறுகதை]

அருகர்களின் பாதை வாங்க

முந்தைய கட்டுரைஒரே ராகம்
அடுத்த கட்டுரைகற்றல்- ஒரு கடிதம்