ஷோபா சக்தி- ஒரு விவாதம்

இணையவசதி இல்லாத இடத்தில் இருக்கும் காரணத்தால் அகழ் என்னும் இதழில் நட்சத்திரன் செவ்விந்தியன் என்பவர் ஷோபா சக்தியின் புதியநாவலான இச்சா பற்றி எழுதியிருந்த ‘மதிப்புரை’- மற்றும் அதன்மீதான ஷோபா சக்தியின் எதிர்வினையை காணநேரவில்லை. அதைப்பற்றி உரையாடலில் ஒருநண்பர் சொன்னார். இன்றுதான் அதை வாசித்தேன். அதன்மேல் என் எதிர்வினையை அனோஜனிடம் தெளிவாக- கடுமையாகவும்- எடுத்துக்கூறிவிட்டேன்.

ஆனால் இது ஒரு பொது விவாதம் என்பதனால் என் தரப்பை எதிர்காலத்திற்கென பதிவுசெய்வதும் தேவை என நினைக்கிறேன். ஆகவே இணையம் கிடைக்கும் இடத்தை தேடி வந்து அமர்ந்து இதை பதிவுசெய்கிறேன்.

நட்சத்திரன் செவ்விந்தியன் என்பவர் எழுதியது மதிப்புரை அல்ல– நேரடியான அவதூறு, மொட்டைவசை. நான் அவர் இதற்கு முன் ஈழத்தவர் பலரைப்பற்றி  எழுதியவற்றை வாசித்திருக்கிறேன். அவருக்கு இலக்கியம், கருத்துச்செயல்பாடு பற்றி எந்த அடிப்படை அறிதலும் இல்லை. எந்தவகையிலும் இலக்கியத்துடன் தொடர்பில்லை. அவரால் இலக்கியம் பொருட்படுத்தும் ஒருவரியையேனும் எழுதுவது இயலாது.

நான் வாசித்தவரை அவர் ஓர் உளம் கலங்கிய நபர். மருத்துவ உதவி தேவையான இடத்தில் இருப்பவர். ஈழப்போர் அத்தகைய பல ஆழ்ந்த உளவியல்சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது. இலக்கியம் பற்றிய எளிய புரிதல் கொண்ட எந்த இதழும் அந்த மனிதர் எழுதிய ஒரு வரியையேனும் பிரசுரிக்காது. சில நாட்களுக்கு முன் இதே உளவியல்சிக்கல்களுடன் எழுதப்பட்ட அருண் அம்பலவாணர் என்பவரின் கட்டுரையை வாசித்து எவரென விசாரித்தேன். இதே மனிதர்தான்.

[இத்தகைய கவனமே இந்த உளச்சிக்கல் கொண்டவரின் இலக்கு. ஆகவே அவர் தன் முரசை கையிலெடுக்கக்கூடும். ஆனால் நானும் இனி மேல் அந்த மனிதர் குறித்து ஒருவரியும் எழுதுவதாக இல்லை]

ஓர் இதழின் ஆசிரியராக இருப்பதென்பது ஒரு பெரும்பொறுப்பு. அதில் வரும் எல்லா வரிகளுக்கும் அதன் ஆசிரியர்கள் தார்மிகமாக பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். அவ்வகையில் அனோஜன் பாலகிருஷ்ணன் சுரேஷ் பிரதீப் இருவரும் அக்கட்டுரையை திரும்பப்பெற்று மன்னிப்பு கோருவதே முறையாக இருக்கும் என்பது என் எண்ணம். இனி அந்த நபர், அல்லது அந்நபருக்கு இணையான உளவியல்சிக்கல்கள் கொண்டவர்களின் எழுத்துக்களை பிரசுரிப்பதில் இருந்து விலகிக்கொள்ளவும் வேண்டும்

ஒருவர் ஒர் இலக்கிய ஆக்கத்தை எழுதிவிட்டார் என்பதற்காக அவரை எவரும் வசைபாடலாம், அதற்கு விமர்சன சுதந்திரம் என்றும் கருத்துச் சுதந்திரம் என்றும் பெயருண்டு என்று நினைப்பதைப்போல அபத்தம் வேறில்லை. எந்த விமர்சனமும், எந்தக் கருத்தும் வாசகனை நோக்கி முன்வைக்கப்படுகிறது. அது வாசகனுக்கு சிந்திக்கவும் மதிப்பிடவும் உதவவேண்டும். ஒரு நெறியை, மதிப்பீட்டை, கருத்துத் தரப்பை நேர்மையாக முன்வைக்கவேண்டும். வாசகனுக்கு அதனால் என்ன பயன் என்பது மட்டுமே அது எழுதப்படுவதற்கான நியாயம்.

வெறும் காழ்ப்புகள், உளச்சிக்கல்களை எழுத்தில்கொட்டுவது வாசகனின் நேரத்தை வீணடிப்பது. அவனுடைய நுண்ணுணர்வை அவமானப்படுத்துவது. அத்தகைய சண்டைகளை ரசிக்கும் மனம்கலங்கிய வாசகர்களும் உண்டுதான். ஆனால் நல்ல நோக்கம் கொண்ட ஒர் இதழ் நல்ல வாசகனை மட்டுமே இலக்காக்கும்.

இணையவெளியின் வணிகம் ஒன்றை ஒவ்வொருவரிடமும் சொல்கிறது– இங்கே எல்லாரும் சமம்தான் என்று. ஆனால் அது ஒரு பாவனை. அது அரட்டைக்கு உதவலாம். எந்நிலையிலும் எல்லாரும் இணை அல்ல. ஒர் அறிவுச்சூழலில் கற்று எழுதி தன்னை நிறுவிய முதன்மைப்படைப்பாளிக்கு சமூகவலைத்தளங்களில் பெயர்பதிவு செய்துகொண்ட எல்லாரும் இணையானவர்கள் அல்ல.

எவர் என்ன எழுதினாலும் சமூக ஊடகம் இடம்கொடுக்கும் என்பதனாலேயே எழுதுபவர்கள் அனைவரும் சமம் அல்ல.  சாதனையாளர் சாதனையாளரே. கற்றவர் கற்றவரே. மற்றவர்கள் அவரவர் நிலைகளில்தான் இருக்கிறார்கள்.அவர்கள் தங்கள் தகுதியை மேம்படுத்திக்கொண்டு மட்டுமே ஒரு பொதுப்பேச்சுத்தளத்திற்கு வரமுடியும்.

அனைவரும் சமம் என்பது சமூக ஊடகம் உருவாக்கும் அசட்டு நம்பிக்கை. எந்த அறிஞனையும் ஒன்றும்தெரியாத முட்டாள் விமர்சனம் செய்யலாம் என அது இடம்கொடுக்கிறது. அதை கொஞ்சமேனும் அறிவும் நுண்ணுணர்வும் உடையவர்கள் நிராகரித்தேயாகவேண்டும். அந்த தரப்பிரிவு இல்லையேல் அறிவார்ந்த உரையாடல் சீரழியும். அறிவியக்கமே அழியும். அதை அனோஜன் போன்றவர்கள் உணரவேண்டும். எல்லாரும் சமம் என்பது ஜனநாயகம் அல்ல, எல்லாருக்கும் வாய்ப்பு என்பதே ஜனநாயகம். ஜனநாயகத்தின் பெயரால் முட்டாள்களின் குரல்களுக்கு இடமளிக்கலாகாது.

எவரும் விமர்சனம் செய்யலாம், ஆனால் ஷோபா சக்தி சமகாலத் தமிழிலக்கியத்தின் தலையாய ஆளுமைகளில் ஒருவர். ஈழம் உருவாக்கிய இலக்கியப்படைப்பாளிகளில் முதன்மையான மூவரில் ஒருவர். [அ.முத்துலிங்கம், மு.தளையசிங்கம்] அதில் ஐயமே இல்லை. எவராயினும் அந்த இடத்தை அவருக்கு அளித்தபின்னரே மேலே பேசமுடியும். அவருடைய கிறுக்குத்தனங்கள்கூட  அவ்வண்ணமே கருதப்படவேண்டும். அந்த மதிப்பு அடுத்த தலைமுறையினரிடம் இல்லை என்றால் அவர்கள் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஒருவகை தற்குறிகள்.

ஷோபாவை ஆராயலாம், விமர்சிக்கலாம், அவரைக் கடந்துசென்று எழுதிக்காட்டலாம். அதற்கான அறைகூவலே இலக்கியச் செயல்பாடு எனப்படுகிறது. சிறுமைசெய்வது நம்மை நாமே சிறுமைசெய்துகொள்வது.

முந்தைய கட்டுரைஎண்ணும்பொழுது [சிறுகதை]
அடுத்த கட்டுரைசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்