எண்ணும்பொழுது [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
நூறு கதைகளுக்குப் பிறகும் நீங்கள் கதைகள் எழுதமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா கதைகளையும் எழுதிவிட்டீர்கள், எழுதுவதற்கு மேற்கொண்டு கருக்களே இல்லாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். அதிலும் எழுதிய கதை முற்றிலும் புதியதாகவும் இருப்பது திகைப்பை அளிக்கிறது.
இந்தகதை உங்கள் தலைமுறையில் இல்லாத ஒரு பிரச்சினை, இந்த தலைமுறையின் பிரச்சினை. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்தப்பிரச்சினையை கொஞ்சம் கோடிகாட்டி நான் ஒரு கடிதம் எழுதினேன் என்று ஞாபகம். வேறு சிலரும் உங்களுக்கு எழுதியிருக்கலாம். அதை பழைய ஒரு கதையுடன் இணைத்து எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். விடைதேட அந்த பழைய கதைக்குள் செல்கிறீர்கள். ஆனால் விடைக்குப்பதிலாக ஒரு cosmic question தான் அந்த பழைய கதையிலிருந்து எழுந்து வருகிறது.
கணவன் மனைவி நடுவே ஈகோ பிரச்சினை எப்போதுமே இருந்திருக்கும். ஆனால் அறிவு சார்ந்த ஈகோ பிரச்சினை முன்பு இல்லை என்று நினைக்கிறேன். கணவன் கொஞ்சம் கூடுதலான அறிவு கொண்டவனாக இருந்தால் அதை சாதாரணமாக ஏற்றுக்கொண்டார்கள். அல்லது வெளியுலக அறிவு என்பதே ஆண்களின் ஏரியா என்ற எண்ணம் இருந்தது.அதில் போட்டி ஏதும் இல்லை.
ஆனால் இன்றைக்கு அதிலும் கடுமையான ஈகோ உள்ளது. கணவனின் அறிவுலகம் பற்றி ஒன்றுமே தெரியாதவளாக இருந்தாலும் மனைவி அது ஏதோ தனக்கு எதிரானது, தன்னை மட்டம்தட்டுவது என்று நினைக்கிறாள். அதை திருப்பி மட்டம்தட்டுகிறாள். அதற்கு பலவகையான பாவனைகள் உண்டு. அதிலொன்று அதை ஒரு விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு கேலியாகவே அணுகுவது. ஆரம்பத்தில் அது விளையாட்டாகவே இருக்கும். ஆனால் அந்த கேலி ஒரு டிஃபென்ஸ் என்று தெரியும்போது, அதை உடைக்கவே முடியாது என்று தெரியும்போது நாம் பயங்கரமாக எரிச்சலடைவோம்
அதை பொருட்படுத்தாமல் இருந்துவிடலாம் என்று சொல்லலாம். ஆனால் அது வாய்பேசாத-காதுகேளாத ஒருவருடன் புழங்குவதுபோலத்தான். என் நண்பர் ஒருவர் சொல்வார் ‘மண்மாண்புனைபாவை’யுடன் வாழ்வது என்று.உங்கள் வாசகர்தான் அவரும். அது பழையகாலத்தில் இயல்பாக இருந்தது. பலர் அப்படித்தான். என் அப்பாகூட அப்படித்தான். பேச்சுவார்த்தையே கிடையாது. உறுமல், ஒற்றைவார்த்தை மட்டும்தான். இன்றைக்கு அது சாத்தியமில்லை. அதைவிட இன்றைக்கு இந்த கேலியும் புறக்கணிப்பும் உள்ளது. ஈகோ மோதல் ஒவ்வொருநாளும் நடக்கிறது.
அவர்கள் நடுவே என்னென்ன நாடகம் நடக்கிறது என்பதை மிக நுட்பமாக எழுதிச்செல்கிறீர்கள். அவள் அவன் ஒரு அறிவார்ந்த ரொமாண்டிக்கான மூடில் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டே சாதாரணமான உலகவிஷயங்களைப் பேசுகிறாள். வேண்டுமென்றே கீழே கீழே இழுக்கிறாள். எல்லா ரொமாண்டிக் மூடுகளையும் கீழே கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று குறியாக இருக்கிறாள். அவனுடைய சிந்தனைகளை ‘தலைசூடாகி ஃப்யூஸ் ஆகிவிடும்’ என்று சொல்லி கேலி செய்கிறாள். அந்தக்கேலியை நிலையான ஒரு கவசம் மாதிரி வைத்திருக்கிறாள்.
அவனால் நேரடியாக ஒரு விஷயத்தைச் சொல்லமுடியாது. ஆகவேதான் அவன் அந்தக்கதையைச் சொல்கிறான். அந்தக்கதையில்கூட அவன் சொல்ல வருவது இல்லை. மாறிமாறி எண்ணிக்கணக்கிட்டுக்கொண்டிருந்தால் விரிசல் பெரிசாகிவிடும் என்கிறான். நடுவே முடிவில்லா தூரமும் மடங்காத காலமும் வந்துவிடும் என்கிறான். அவள் அதையும் கேட்பதே இல்லை.
இந்த பதிலே இல்லாத முடிச்சை மட்டும் சொல்லிவிட்டு நின்றுவிடுகிறது கதை. உண்மையில் இதற்கு பதிலென்று ஒன்றும் இல்லை. எண்ணும்பொழுது வரும் சிக்கல். எண்ணாமலிருந்தால்போதும்
எம்.சந்திரசேகரன்
அன்புள்ள ஜெ
எண்ணும்பொழுது ஒரு கூர்மையான கதை. நான் அந்தக்கதையை வாசித்துமுடித்து பலவகையான சிந்தனைகளுடன் அதை மீண்டும் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு நுட்பமான விஷயம் என் கவனத்துக்கு வந்தது. போம்பாளர் தெற்குதிருவீட்டில் கன்னியை நீர்ப்பிம்பத்தில்தான் முதலில் பார்க்கிறார். அதைப்பார்த்துத்தான் ஆசைப்பட்டு அடைகிறார். அதன்பிறகு கூட அவளை கண்ணாடியில்தான் விரும்பிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அதேபோல கதைசொல்லியும் தன் மனைவியை கண்ணாடியில்தான் பார்க்கிறான். கண்ணாடியில் அவளுடைய நகைகள் இருக்கும்போது அவளே இருக்கும் தோற்றம் உருவாகிறது. கண்ணாடியின் ஆழத்திலிருந்து அவள் தோற்றமளித்து அருகே வருகிறாள். அவர்கள் பெண்ணைப்பார்க்கிறார்களா அல்லது பெண்ணைப்பற்றிய தங்கள் எண்ணத்தை பார்க்கிறார்களா?
அந்த பிம்பம் கலைவதுதான் இந்தக்கதையின் சாராம்சம் என்று சொல்லமுடியுமா? அவன் அவளுடைய பிம்பத்துடன் தான் உறவுகொள்கிறான். அவள் கண்ணாடியிலிருந்து விலகிச்சென்றபின் கண்ணாடியில் தோன்றுவது அவளுடைய பிம்பம்தான் என்று சொல்லலாமா?
உறவுபிரிவு பற்றியெல்லாம் நிறைய எழுதப்பட்டுள்ளது. ஆனால் உறவை கணக்கிட்டுப்பார்த்தாலே பிரிவுதான் மிஞ்சும் என்ற பார்வை கொஞ்சம் துணுக்குற வைக்கிறது. எண்ணி எண்ணிப்பார்த்தால் எண்ணியவை குறைந்துவிடும் என்பதை நினைக்கையில் ஆம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
ஆர்.செந்தில்குமார்