ஆ.மாதவன் -அஞ்சலி
அன்புள்ள ஜெ
ஆ.மாதவன் அவர்களின் மறைவு என்னை துயரத்தில் ஆழ்த்தியது. நான் பத்தாண்டுகளாக இலக்கியம் வாசித்துக்கொண்டிருந்தவன். ஆனால் விஷ்ணுபுரம்விருது வழியாகவே அவரைப்பற்றி அறியவந்தது. ஏனென்றால் சிற்றிதழ்களின் சூழலிலோ பொதுவெளியிலோ அவரைப்பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் இருக்கவில்லை.
பிறகுதான் ஆ.மாதவனை நான் அணுக்கமாக புரிந்துகொண்டேன். ஆ.மாதவனின் புனைவுலகம் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் என் அப்பா சிதம்பரத்தில் ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார். நான் சின்னவயசில் அந்த கடைவீதியை பார்த்தே வளர்ந்தேன்.
ஆ.மாதவனின் கதையுலகத்திற்கு அதற்குப்பிறகும் தொடர்ச்சி இல்லை. தமிழில் ஒரு நகரத்தின் குப்பைக்கூடையை மட்டுமே கதையுலகாக எழுதிய இன்னொருவர் இல்லை
எஸ்.ராமநாதன்
அன்புள்ள ஜெ
நாற்பதாண்டுகளாக சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகின் சகபயணி. வாசககன். 1973ல் ஆ.மாதவனை அவருடைய இல்லத்தில் சென்று பார்த்தேன். அப்போது ஷண்முகசுப்பையாவையும் சந்தித்ததாக நினைவு. அன்று அவர் ஆவேசமான உணர்வுகளுடன் இருந்தார். நிறைய எழுதவேண்டுமென்ற துடிப்பு கொண்டிருந்தார். அதன்பிறகும் நாலைந்து முறை போய் பார்த்திருக்கிறேன். சாலைதெருவில் உள்ள செல்வி ஸ்டோரின் உள்ளே மச்சுக்குள் இருந்து மோகபல்லவி என்ற சிறுகதை தொகுதியை எடுத்து கையெழுத்திட்டு அளித்தார்.
எழுபதுகளில் கவனிக்கப்பட்ட எழுத்தாளராக இருந்த ஆ.மாதவன் எண்பதுகளின் தொடக்கத்தில் எழுதுவதை மட்டுப்படுத்திக்கொண்டார். அவருடைய மகன் தவறிப்போனது அவரை மிகவும் சோர்வுக்கு தள்ளியது. அந்தச் சலிப்பில் இருந்து அவர் வெளிவரவே இல்லை. தமிழிலும் நீங்கள் கோணங்கி போன்ற அடுத்த அலை எழுத்தாளர்கள் வந்து இலக்கியத்தின் அடிப்படைகள் மாற்றம் அடைந்தன. ஆ.மாதவனைப்பற்றிய கவனம் இல்லாமலாகியது அதனால்தான்.
அதன்பின் ஆ.மாதவனை இலக்கியச்சூழலுக்கு திருப்பிக்கொண்டுவந்தது தமிழினி வெளியீடாக வந்த ஆ.மாதவன் கதைகள் என்ற அழகான புத்தகம். அதன் அட்டையில் நீங்கள் இப்போது அஞ்சலியுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அந்த நூலுக்கு வேதசகாயகுமார் முன்னுரையும் நீங்கள் மிக நீளமான ஓர் ஆய்வுரையும் எழுதியிருந்தீர்கள்.
தமிழில் ஒரு படைப்பாளியை எடுத்துக்கொண்டு அவ்வாறு ஒட்டுமொத்தமாக ஓர் ஆய்வுரை எழுதுவது பெரும்பாலும் நடைபெற்றதில்லை. புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளுக்குக்கூட அப்படி ஓர் ஆய்வுக்கட்டுரை இலக்கியச்சூழலில் இருந்து வெளிவந்ததில்லை. ப.சிங்காரம், ஆ.மாதவன் இருவருக்கும் எழுதப்பட்ட ஆய்வுரைகள் அவர்கள் மேல் புதிய வாசிப்பை தொடங்கிவைத்தன
அதன்பிறகு விஷ்ணுபுரம் விருது தொடர்ச்சியாக சாகித்ய அக்காதமி விருது. மாதவன் கடைசிக்காலத்தில் அவர் விரும்பிய அங்கிக்காரத்தை பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆச்சரியம் என்னவென்றால் அறுபதுகளில் திராவிட இயக்க இதழ்களில் ஓரிரு கதைகளை எழுதிய அவர் எழுபதுகளில் திராவிட இயக்கத்து ஞாபகத்தையே கசப்புடன் காறி உமிழ்பவராக இருந்தார். லா.ச.ராவின் உபாசகர். அவருடைய ஆதர்ச எழுத்து தி.ஜானகிராமன் லா.ச.ரா தான். ஆனால் அவர் எழுதிய உலகம் சௌந்தரியத்தால் ஆனது அல்ல. ஆரியசாலை குப்பைகளில் இருந்து அவர் கதைகளை எடுத்தார்
அஞ்சலி
என்.கே.குமாரசாமி
இனிய ஜெயம்
எழுத்தாளர்ஆ .மாதவன் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் செய்தி சற்று முன்பு அறிந்தேன். உடனடியாக நினைவில் எழுந்தது 2010ஆ.மாதவன் அவர்களுக்கான முதல் விஷ்ணுபுர விருது விழா நினைவுகளின் இனிமையே.
எப்படி ஒரு விழாவை அதற்கான விருந்தினர் வாசகர் வருகை நிர்வாகம் சார்ந்து திட்டமிடுவது என்று கூட தெரியாமல் அன்று துவங்கினோம். வந்த வாசகர்கள் இரவில் கிடைத்த இடத்தில் உறங்க, நாம் ஒரு பதினைந்து பேர் கட்டையை சாய்க்க இடமின்றி இரவெல்லாம் உறங்காமல் இலக்கியம் பேசியபடி கோவை சாலைகளில் நடந்து நடந்தே இரவை விடிய வைத்தோம். இரவெல்லாம் டீயாளந்த தெய்வம் கோபி “ஒரே கடைல இத்தனை பேர் திரும்ப திரும்ப போய் டீ குடிச்சா அவங்களுக்கு சந்தேகம்வரும்” என்று சொல்லி கடை கடையாக அழைத்து சென்று டீ வாங்கி தந்தார். ரயில்வே காண்டீனை கூட நாம் விட்டு வைக்கவில்லை.
அறைக்குள் சொற்ப நாற்காலிகள் மட்டும். அவ்வளவுதான் வருவார்கள் என்று ஒரு நம்பிக்கை. அறை நிரம்பி வழிய, சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் நாற்காலி வசதி தந்து விட்டு எல்லோரும் தரையில் அமர்ந்து இலக்கியம் பேசினோம். நம்மோடு நமக்கான தயிர் சோறு பொட்டலத்தை பகிர்ந்து கொண்டு நம்முடன் தங்கி இருந்தார் இயக்குனர் மணி ரத்னம்.
ஆ மாதவன் கதைகளை வாசித்து விட்டு வந்திருந்தார். நான் இருட்டுல படம் எடுக்குறேன்னு சொல்லுவாங்க, ஆ மாதவன் இருட்டையே கதையா எழுதுறார். மனுஷங்க கிட்ட இருக்க இருட்டை எழுத்தால வெளிச்சம் போட்டு காட்டுறார் என்று ஆ மாதவனின் எழுத்து அழகியலை தனது சினிமா அழகியல் வழியே கச்சிதமாக வரையறை செய்து பேசினார்.
அன்றைய நாளின் உணவுப் பொழுதொன்றில் நானும் நாஞ்சிலும் மட்டும் தனியே பேசிக்கொண்டிருந்தோம், மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட உணவு வகை ஒன்று எவ்வாறு தயாரிக்கப்படும் என்று இப்பவே சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் எழும் வண்ணம் நுணுக்கமாக விவரித்தார். அங்கிருந்தது அந்த நிலத்தின் விவசாயம், அங்கே கழிந்த தனது வாழ்வு, மிதவை நாவல் என்று பலதும் பேசினார். ஆ மாதவன் பெரிதும் எவராலும் கவனிக்கப்படாமல் குறிப்பாக இடது சாரி எழுத்தாளர் முகாமில் இவரை யாரும் அங்கீகரித்த சுவடே இல்லை . கேட்டால் அப்படி எல்லாம் இல்லை ஆ மாதவன் கதை எல்லாம் தாமரைலதான் வந்தது என்பார்கள். அவர்களுக்கு எதையும் சொல்லி புரிய வைத்து விட முடியாது என்றார்.
விழா நாளில் விழாவின் சிறப்பு விருந்தினர்கள் நாஞ்சில் நாடன், இக்கா இருவருக்கும் இடையே அமர்ந்து ஆ மாதவன் அவர்களுடன் சாளை பட்டாணி குறித்து பேசியது இனிய நினைவுகளில் ஒன்று. ஆ மாதவன் உலகின் சரியான அல்லது முதன்மைப் பிரதிநிதி எட்டாவது நாள் கதையின் சாளை பட்டாணி. விழுமியங்களால் கட்டுப்படுத்தப்படாத , குற்ற உணர்வால் போர்த்தப்படாத தூய தீமையின் வெளிப்பாடு ஊர்தியே மனிதனும் அவன் கொண்ட வாழ்வும் சாவும் என்று சொல்லும் கதை.( இன்று எனக்குள் சாளை பட்டாணி பின்வாங்கி பாச்சி முன் வந்து விட்டிருக்கிறது)
அந்தக் சாளை பட்டாணி யுடன் இக்காவின் பூக்கோயா தங்கள் குணாதிசயம் இணையும் வேறுபடும் இடங்கள் குறித்து சொன்னேன். நண்பர் ஆங்கிலப் படுத்தினார்.
என்னை காண்ணாடிக்குள் உருளும் கோலிகுண்டு விழிகளால் நோக்கி ”என் கதையையும் படிச்சிருக்கியே உன்னைப் பாத்தா பாவமா இருக்கு” என்று ஆங்கிலத்தில் சொல்லி உச்சி கொட்டினார் இக்கா.
என் ஊர் குறித்து கேட்டார். சொன்னேன்.
”அது எங்க இருக்கு?”
”பாண்டிச்சேரி பக்கத்துல”
”ஹய்யா” என்று நிஜமாகவே உட்கார்ந்த வாக்கிக்கில் துள்ளி குதித்து சிரித்தார் .கடுக்கன் அரைக்கணம் மின்னி மறைந்தது. மேஜை ஓரத்தில் கைகளை உயர்த்தி பகீரிட்டு சிரித்து நிற்கும் குபேர புத்தர் உயிர் கொண்டு வந்தது போல இருந்தார்.
”அப்போ பாண்டி சேரில (குடி போல கட்டை விறல் காட்டி) நிறைய கவிஞ்சர்கள் இருக்கணுமே.?”
”ஆமா சார் தடுக்கி விழுந்தா கவிஞ்சர் மேலதான் விழணும். அப்டி தடுக்கி விழறவரும் கவிஞ்சனாதான் இருப்பார்.”
முக்கி முக்கி உடைந்த ஆங்கிலத்தில் சொன்னேன்.
கஷ்டப்படாத, ஜோக்குன்னு எனக்குப் புரியுது என்று விட்டு சிரித்தார் இக்கா.
அங்கே அந்த மூவர் வசம் வாங்கிய கையெழுத்து.
இக்கா மட்டும் எனது முகத்தை வரைந்து கையெழுத்து போட்டு தந்தார்.
கிளம்பும் முன்பாக எங்கே என்று தேடி “கடலூர் ச்சீனு வரட்டுமா” என்று தோளில் தட்டி விடை பெற்றார் மாதவன். இனிய நினைவுகளால் பொதியப்பட்ட நாளொன்றினை, அது என்னை வந்து சேர காரணமானவர்
கடலூர் சீனு
ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010
விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்